நூறு வயது வாழ்வது எப்படி?

நண்பர்களை உறவினர்களாக்கிக் கொள்ளுங்கள். உறவினர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
நூறு வயது வாழ்வது எப்படி?
Published on
Updated on
1 min read

நண்பர்களை உறவினர்களாக்கிக் கொள்ளுங்கள். உறவினர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு இருந்தால், நமக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழலாம். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் நூறு வயது வரை வாழலாம்.

நாம் வாழ்க்கையில் மேலே செல்ல, செல்ல கீழ்படிய கற்றுகொள்ள வேண்டும். சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையை எடுத்துகொள்ள வேண்டும். பொதுநலத்தோடு இருந்தால், நாம் நற்சிந்தனைகளோடு இருப்போம். இதயத்தை நல்ல முறையிலும் பாதுகாக்கலாம்.

'இதயம் காப்போம்' என்ற நூலை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சொல்ல நான் எழுதினேன். இதை முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

பெரியார் ஈ.வே.ரா., அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி போன்றோருக்கு மருத்துவச் சிகிச்சையை அளித்தவன் என்ற பெருமை எனக்கு உள்ளது.

உயிருள்ள வரையில் நாம் உழைத்துகொண்டே இருக்க வேண்டும். சோர்வு என்பதே இருக்கக் கூடாது. இப்படி உழைப்பு..

உழைப்பு என்று இருப்பதே நோயின்றி வாழ வழிவகை செய்யும். செய்யும் தொழிலை மகிழ்ச்சியாகவே செய்ய வேண்டும்.

தலைமுறை என்பது என்ன தெரியுமா? நம் வயதையும், முதல் குழந்தையின் வயதையும் கழித்தால் வருவதே ஆகும். பல தலைமுறைகளைக் காண, வாழ்வாங்கு வாழ, உழைப்பு அவசியம்.

நம்மிடம் உள்ள அறிவை, உழைப்பை, பணத்தைப் பிறருக்குக் கொடுக்கவோ, சொல்லித் தரவோ தயங்கக் கூடாது.

கொடுப்பது மகிழ்ச்சி என்றால், அதைவிட மகிழ்ச்சி என்ன தெரியுமா? விட்டுக் கொடுத்து வாழ்தல். குடும்பத்தினர், நண்பர்கள் என உடனிருப்போரிடம் விட்டுக் கொடுத்து வாழ்தல் மிகவும் நன்மையைப் பயக்கும்.

நம்பிக்கையும் தன்னம்பிக்கையையும் நாம் அதிகமாக வைத்திருத்தல் வேண்டும். மூட நம்பிக்கையை விட்டொழிதல் நல்லது.

'உணர்வு, உணவு, உடற்பயிற்சி' ஆகிய மூன்றையும் நாள்தோறும் வழக்கமாக்கிக் கொண்டால், நல்ல வளமான வாழ்க்கையை வாழலாம். உணர்வு என்பது நல்ல எண்ணங்களையே நினைக்க வேண்டும். உணவாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும். நாள்தோறும் ஓரிரு மணி நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

எனக்கு எண்பது வயதாகிறது. இன்று வரையில் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டதில்லை.

வாழ்க்கையை வானவில் போல எடுத்துகொள்ள வேண்டும். 'அமைதி, அன்பு, அறிவு, அடக்கம், ஆற்றல், அரவணைப்பு, ஆதரவு' ஆகிய ஏழு விஷயங்களையும் வாழ்க்கையின் தாரக மந்திரங்களாகக் கொள்வது நல்லது.

'நடத்தல், நீந்துதல், ஓடுதல்' போன்றவை நம் உடலைக் காக்க ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான செயல்களாகும். நல்லதொரு வாழ்க்கை வாழ, தவமும் தியானமும் அவசியம்.

நாள்தோறும் ஆறு மணி நேரம் தூங்குவது அவசியம். நான்கு மணி நேரத்துக்கு குறைவாகவோ, பத்து மணி நேரத்துக்கு அதிகமாகவோ தூங்குவதும் கூடாது.

'மருந்தில்லா மருத்துவம்' என்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே ஆயுளை நீட்டிக்கும் அற்புதச் செயலாகும்.

பெண்கள் தங்கள் வீடுகளில் பொன் நகைகளோடு இல்லாமல், புன்னகையோடு வலம் வாருங்கள். உங்கள் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கும்.

(வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பிரபல இதய மருத்துவர் வி.சொக்கலிங்கம்பேசியது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.