

யாருமே எதிர்பார்க்காத அந்தச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பரும், சோனியா காந்தியின் உறவினருமான குவாத்ரோச்சியைக் கைது செய்வதற்காக சிபிஐ குழுவினர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றிருக்கும் செய்தியை சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தபோது, அது இந்தியாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
திடீரென்று யாருக்கும் தெரியாமல், மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் இப்படியொரு அதிரடி நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமல்ல, அந்நிய நாட்டுக்குச் சென்று எளிதாக ஒருவரைக் கைது செய்து கொண்டு வர முடியுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்குமே எழுந்தது.
சிபிஐ அலுவலகத்தின் உயரதிகாரிகள் சிலரைத் தனிப்பட்ட முறையில் நான் தொடர்பு கொண்டபோது, அவர்கள் பேசுவதற்குத் தயங்கினர். மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நான் தெரிந்து கொண்ட உண்மைகளை செய்தியாக்கினேன்.
சிபிஐ சிறப்பு நீதிபதி அஜீத் பரிஹோக்கே பிறப்பித்திருக்கும் கைது வாரண்ட்டுடன் சிபிஐ இணை இயக்குநர் ரேவண்ணா சித்தையா தலைமையிலான குழுவினர் மலேசியா சென்றிருந்தனர். குவாத்ரோச்சியைக் கைது செய்வதற்கான ஆவணங்களை அவர்கள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து, தங்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டனர்.
குவாத்ரோச்சியை உடனடியாகக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மிகவும் சிக்கலானது. எந்தவொரு நாடும் அவ்வளவு சீக்கிரத்தில் அதை அனுமதிக்காது. மேலும், அந்த நாட்டு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத் தான் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதனால், கைது நடவடிக்கை சாத்தியம் இல்லையென்றால் குவாத்ரோச்சியை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மலேசிய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
சிபிஐ அதிகாரிகள் மலேசியா சென்றிருப்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள நான் சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் கே.மாதவனைத் தொடர்பு கொண்டேன். யாருக்கும் பயப்படாத நேர்மையாளர் என்று பரவலாக அறியப்படுபவர் கே.மாதவன். போபால் விஷவாயுக் கசிவு, போஃபர்ஸ், ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை முறைகேடு உள்ளிட்ட பல விசாரணைகளில் மாதவனுக்குப் பங்கு உண்டு.
'இவர்கள் மலேசியாவுக்குச் சென்றிருப்பது வீண் வேலை. வெறும் பரபரப்புக்காகவும், தாங்கள் ஏதோ மிகவும் முனைப்புடன் போஃபர்ஸ் பேர வழக்கை விசாரிப்பதாகக் காட்டுவதற்குத்தான் மலேசியா சென்றிருக்கிறார்கள். வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரை, இந்திய நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கைது செய்யவோ, விசாரிக்கவோ முடியாது என்பது சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியாதா?' என்று கோபமாகக் கேட்டார் மாதவன். அவரே தொடர்ந்தார்.
'சுவிஸ் வங்கி ஆவணங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவர்களில் இத்தாலிய இடைத்தரகர் குவாத்ரோச்சியும் ஒருவர். இதை இந்திய அரசிடம் சுவிஸ் அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும், அவரை இந்தியாவில் இருந்து மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது அங்கே போய் கைது செய்யப் போவதாகச் சொல்வது ஏமாற்று வேலை...'
'நீங்கள் அப்போது சிபிஐயில் இணை இயக்குநராக இருந்தீர்களே.. நீங்கள் ஏன் அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை?'
'நான் முயற்சிக்காமல் இல்லை. குவாத்ரோச்சி இந்தியாவைவிட்டு வெளியேறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். அதற்கு முன்னால் அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்புமாறும், அவர் வெளியேறாமல் இருக்க உத்தரவிடும்படியும், அப்போது சிபிஐ இயக்குநராக இருந்த எஸ்.கே.தத்தாவுக்குக் கடிதம் எழுதினேன்.'
'அப்படி இருந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?'
'யாரோ ஒருவர் குவாத்ரோச்சிக்குத் தகவல் கொடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், அவர் தப்பிச் செல்ல அனுமதிக்கும்படி சிபிஐ இயக்குநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இப்போது நாம் மலேசியாவிடம் அவரைப் பிடித்துத் தரும்படி கெஞ்ச வேண்டியிருக்கிறது.'
'குவாத்ரோச்சி கைது செய்யப்படுவாரா, மாட்டாரா?'
'அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது மட்டுமல்ல, போஃபர்ஸ் வழக்கு முடித்துவைக்கப்படுமே தவிர, முறையாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பது நடக்கப்போகிற ஒன்றல்ல!'
முன்னாள் இணை இயக்குநர் மாதவன் சொல்வது போலத்தான் நடந்தது. மலேசியாவில் குவாத்ரோச்சி இருக்கும் இடத்தை இந்தியாவில் இருந்துபோன சிபிஐ குழுவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிபிஐ அதிகாரிகள் மலேசியாவில் குவாத்ரோச்சியை வலைபோட்டுத் தேடிக் கொண்டிருக்கும்போது, அவர் இந்தியப் பத்திரிகைகளுக்கு கோலாலம்பூரில் இருந்து ஒரு அறிக்கை அனுப்பித் தந்தார் என்பதுதான் சிரிப்பை வரவழைக்கும் தகவல்.
'இந்திய ஊடகங்கள் எனது பெயரை போஃபர்ஸ் விவகாரத்துடன் இணைத்துப் பேசுகின்றன. செய்திகள் வெளியிடுகின்றன. எந்தக் காலத்திலும் போஃபர்ஸ் நிறுவனத்துடனோ, அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எந்தவொரு இந்தியப் பிரஜையுடனோ எனக்கு எந்தவிதமான நட்போ, தொடர்போ, உறவோ இருந்ததில்லை' - இதுதான் குவாத்ரோச்சி வெளியிட்ட அந்த அறிக்கை.
குவாத்ரோச்சியைப் போலவே, போஃபர்ஸ் நிறுவனத்திடம் கமிஷன் பெற்றதாகக் கூறப்படும் வின் சட்டாவையும் கைது செய்து, விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வர சில நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டது. அவையும் பலனளிக்கவில்லை.
போஃபர்ஸ் விசாரணை குறித்த பிரச்னை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இன்னொருபுறம், பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலிலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருந்தது. மக்களவைத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி, நரசிம்ம ராவுக்கு எதிராக அணிதிரண்டு அவரைத் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியவர்கள் இப்போது கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வந்தது. கடந்த முறை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது ஏன் என்று விவாதிப்பதற்காகக் காரிய கமிட்டியைக் கூட்ட வேண்டும் என்பது ராவ் ஆதரவாளர்களின் கோரிக்கை.
சுரேஷ் கல்மாதி வீட்டிலும், பல்ராம் ஜாக்கர் வீட்டிலும் ராவ் ஆதரவாளர்கள் கட்சியின் வருங்காலம் குறித்துப் பேசக் கூடினார்கள். நரசிம்ம ராவைப் பதவியில் இருந்து அகற்றியதுபோல, இப்போதைய தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று சீதாராம் கேசரி விலக வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
நரசிம்ம ராவ் ஆதரவாளர்கள் தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்குக் காங்கிரஸ் அளித்துவரும் ஆதரவு தொடர வேண்டும் என்றும், கேசரியின் ஆதரவாளர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்தனர். தொடர்ந்து கெளடா அரசை ஆதரித்தால், காங்கிரஸ் செல்வாக்கை முழுமையாக இழந்துவிடும் என்பது கேசரி ஆதரவாளர்களின் கருத்து.
மாதவ்ராவ் சித்தியாவையும், அர்ஜுன் சிங்கையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டதால் எந்த அளவுக்குக் காங்கிரஸ் வலிமை பெற்றுவிட்டது என்று ராவ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அர்ஜுன் சிங்கைப் பேட்டி எடுக்க நான் விழைந்தேன். நேரம் கேட்டுத் தொலைபேசியில் அழைத்தவுடன், மாலையில் வரும்படி பதில் வந்தது.
காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர் என்பதால் அர்ஜுன் சிங் கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும், முடிந்தால் கட்சித் தலைவராக உயர வேண்டும் என்கிற ஆசையுடன் இருந்த நேரம் அது. நரசிம்ம ராவால் ஓரங்கட்டப்பட்டதால், பிரதமர் பதவி கைநழுவியதைக் கடைசிவரை அவர் மறக்கவில்லை.
'பஞ்சாப் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலிலும் சரி, இடைத் தேர்தல்களிலும் சரி காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விகளுக்கு பி.வி.நரசிம்ம ராவ்தான் காரணம்' என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் அர்ஜுன் சிங்.
'எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'
'நரசிம்ம ராவின் பொருளாதாரக் கொள்கைகளால், இதுவரையில் இந்தியா கடைப்பிடித்து வந்த சோஷலிசம் தகர்ந்துவிட்டது. அவரது மெத்தனத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, காங்கிரஸின் மதச்சார்பற்ற நிலைப்பாடும் தகர்ந்துவிட்டது. அதனால் மக்கள் காங்கிரஸை வெறுக்கத் தொடங்கிவிட்டனர்.'
'நரசிம்ம ராவ்தான் கட்சித் தலைமை பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுவிட்டார். அவர் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் இல்லை. அப்படி இருந்தும் அவரையே பழி சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்?'
'அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும், அவரது ஆதரவாளர்கள் இப்போதும் செல்வாக்குடன்தான் வளைய வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க சிறப்பு மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்கிற ராவ் ஆதரவாளர்களின் கோரிக்கை அபத்தமானது. சீதாராம் கேசரி பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையும் அநாவசியமானது.'
'அப்படியானால் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'
'ஒருவருக்கொருவர் பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான யோசனையை எவரும் இதுவரையில் தெரிவிக்கவில்லை. கட்சியை மீண்டும் வலுப்படுத்த எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...'
'அது என்ன வழி?'
'சோனியா காந்தி காங்கிரஸில் சேர்ந்து, கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அது சிறுபான்மை மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும். கட்சியில் சேர்வது குறித்து முடிவெடுக்க வேண்டியவர் சோனியா காந்திதான்.'
முதல் முறையாக வெளிப்படையாக சோனியா காந்தியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அர்ஜுன் சிங்தான். ஆனால், எந்த அளவுக்கு சோனியா காந்தி அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பது கடைசிவரை சந்தேகமாகத்தான் தொடர்ந்தது.
தில்லி வந்திருந்தார் ராமகிருஷ்ண ஹெக்டேயின் வலதுகரமாகத் திகழ்ந்த ஜீவராஜ் ஆல்வா. அவரை சந்திக்கச் சென்றபோது, பெங்களூரில் நடைபெற இருக்கும் ஹெக்டேவின் புதிய கட்சியான 'லோக் சக்தி' தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும்படி என்னை அழைத்தார். தில்லியில் இருந்து இன்னும் சில பத்திரிகையாளர்கள் வருவதாகவும், அவர்களுடன் நானும் இணைந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
ஜீவராஜ் ஆல்வாவுடன் முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்திக்க நானும் சென்றிருந்தேன். போன்சி பண்ணை வீட்டின் புல்வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருத்தவர்களை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அங்கே தேவிலாலும், சரத் பவாரும், சந்திரகேசர்ஜியுடன் பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சில தலைவர்களும் அமர்ந்திருந்தனர். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.
சரத் பவாரைப் பார்த்து தேவிலால் ஹிந்தியில் கேட்டார் - 'இன்று மாலையில் கூட இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஐக்கிய முன்னணி அரசுக்கு வழங்கும் ஆதரவைத் தொடரப் போகிறீர்களா இல்லை விலக்கிக்
கொள்ளப் போகிறீர்களா?'
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.