

நாங்கள் எல்லோரும் சரத் பவார் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். தனது வழக்கமான புன்னகையை உதிர்த்த பவார், விரக்தி மேலிட்டவராகப் பேசத் தொடங்கினார்.
'என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் காங்கிரஸூம் இருக்கிறது. ஐக்கிய முன்னணி அரசைத் தொடர்ந்து ஆதரித்தால், காங்கிரஸ் தனது தனித்தன்மையை இழந்து, இனிமேல் ஒருபோதும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற முடியாது. ஆதரவை விலக்கிக் கொண்டால், தேர்தல் வரும். பாஜக தனித்து வர முடியாவிட்டாலும் கூட்டணி ஆட்சியாவது அமைத்துவிடும். அப்போதும் பாதிப்பு காங்கிரஸூக்குத்தான்.''
எல்லோரும் மெளனமாக இருந்தனர். தேவிலால், சந்திரசேகர்ஜியைப் பார்த்து, 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
'தேவே கெளடாவையும் ஐக்கிய முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களையும் அழைத்து, காங்கிரஸின் தலைமையை ஏற்றுக் கொண்டால்தான் ஆதரவு என்று திட்டவட்டமாகச் சொல்ல வேண்டும். கம்யூனிஸ்டுகளும், சில மாநிலக் கட்சிகளும் அதற்கு உடன்படாவிட்டாலும் பரவாயில்லை. வாஜ்பாய் துணிந்து ஆட்சி அமைத்ததுபோல அமைத்து, பெரும்பான்மையை நிருபிக்கும் சாமர்த்தியம் சரத் பவாருக்கு உண்டு!''
சரத் பவார் சிரித்துவிட்டார். 'நான் பிரதமர் பதவிப் போட்டியில் இல்லை, என்னை விட்டுவிடுங்கள். ஐக்கிய முன்னணியில் உள்ள கட்சிகளைக்கூடச் சமாளித்து விடலாம். எங்கள் கட்சியில் உள்ள கோஷ்டிகளைச் சமாளிக்க முடியாது.''
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் விவாதம் நடந்தது. ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். எல்லோருக்கும் தனித்தனியாக 'லோக் சக்தி' கட்சியின் தொடக்க விழாவுக்கான அழைப்பை ஜீவராஜ் ஆல்வா கொடுத்தார். நான் அருகில் நின்று கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் காலையில் ஜீவராஜ் ஆல்வாவுடன் தில்லியில் இருந்து சுமார் 20 பத்திரிகையாளர்கள் விமானத்தில் பெங்களூருக்குப் பயணமானோம். இரவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருந்ததால், 'லோக் சக்தி' கட்சியின் தொடக்க விழா முடிந்ததும், விமானத்தில் தில்லி திரும்பிவிடுவது என்று ஏற்பாடு.
உடன் வந்த ஏனைய பத்திரிகையாளர்கள் விடுதியில் தங்கிவிட, நான் மட்டும் இரா.செழியன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றேன். கட்சி தொடங்குவது என்னவோ ஹெக்டே என்றாலும், அந்தக் கட்சியின் பின்னணியில் இருந்து எல்லா அடிப்படை வேலைகளையும் திட்டமிட்டது இரா.செழியன்தான்.
பெங்களூரில் உள்ள 'குமரகிருபா' அரசினர் விடுதியில் தங்கி இருந்தார் இரா.செழியன். நான் வரப்போகிறேன் என்று ஜீவராஜ் ஆல்வா ஏற்கெனவே தெரிவித்திருந்ததால், அவர் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 'லோக் சக்தி' கட்சியின் கொள்கைகள், சட்டத்திட்டங்கள், குறிக்கோள்கள் அடங்கிய புத்தகத்தை என்னிடம் தந்தார்.
'இந்தக் கட்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''
'அதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. நல்ல எண்ணத்துடன், நல்ல அரசியல் கட்சி வேண்டும் என்று தொடங்குகிறோம். அதனால் நன்மைகளே நடக்கும்.''
'திராவிட இயக்கச் சிந்தனையாளராக
அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமாக இருந்த நீங்கள் இப்போது தேசியக் கட்சியில் இருப்பது உங்களுக்கே ஆச்சரியமாக இல்லையா?''
'நான் இளைஞராக இருந்தபோது, அண்ணா திமுகவைத் தொடங்கியது இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஹெக்டேயையும் எல்லோரும் 'அண்ணா' என்றுதான் அழைக்கிறார்கள். அவரைப் போலவே இவரும் பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை, எளிமை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்.''
மாலையில் நடக்க இருக்கும் கட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சோ சார் வருகிறார் என்கிற தகவலை என்னிடம் இரா.செழியன் பகிர்ந்து கொண்டார். நான் அவருடன் அதிக நேரம் இருக்கவில்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பிவிட்டேன்.
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடந்த பிரமாண்டமான தொடக்க விழா மேடையில் சோ சார் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. சாதாரணமாக அவர் இதுபோன்ற அரசியல் மேடைகளில் தோன்றிவிட மாட்டார்.
1971 தேர்தல் நேரத்தில் ஸ்தாபன காங்கிரஸசுக்கு ஆதரவாகவும், அவசரநிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் மேடையேறிய பிறகு இப்போது அவர் வெளிப்படையாகத் தனது ஆதரவை ராமகிருஷ்ண ஹெக்டேக்கும் 'லோக் சக்தி' கட்சிக்கும் தெரிவித்திருக்கிறார் என்பதை என்னுடன் வந்திருந்த வடநாட்டு சக பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
ஆச்சரியம் என்னவென்றால், 'லோக் சக்தி' கட்சிக்கான அடிப்படைப் பணிகள் அனைத்தையும் செய்த இரா.செழியன், தொடக்க விழா மேடையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான். இயல்பாகவே, அமைதியாக, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணியாற்றுவது என்பதுதான் இரா.செழியனின் பெருந்தன்மை.
'மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முன்னணி என்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிகார மோகத்தில், மக்களவையில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லாத, ஒன்றுகொன்று கொள்கை அளவிலும், செயல்பாட்டிலும் தொடர்பே இல்லாத கட்சிகள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்துகின்றன.
அதை இரண்டு தேசியக் கட்சிகளும் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன. முரண்பாட்டின் மொத்த வடிவமான ஐக்கிய முன்னணி அகற்றப்பட்டு, மக்களின் புதிய, தெளிவான ஆணையைப் பெறும் வகையில் மக்களவையைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்'' - இதுதான் 'லோக் சக்தி' கட்சியின் தொடக்க விழா விடுத்த செய்தி.
விமானத்துக்கு நேரமாகிவிட்டதால் கூட்டம் முடிவதுவரையில் நாங்கள் காத்திருக்காமல் கிளம்பிவிட்டோம்.
கால் நூற்றாண்டுக்கு முன்னால்வரை, காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் பெரும்பாலும் மாலையில் தொடங்கி நடுநிசிக்குப் பிறகும்கூடத் தொடரும். அதை ஒரு மினி அமைச்சரவைக் கூட்டம் என்றுகூடக் கூற முடியாது. அதைவிட மேலே..
அநேகமாக இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் காரிய கமிட்டியில் (செயற்குழு) இடம் பெறுவார்கள். அவர்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்கள் என்பது மட்டுமல்ல, நிர்வாகத் திறமை பெற்றவர்களாகவும் இருந்தனர்.
காரிய கமிட்டிக் கூட்டங்களில் மாநிலப் பிரச்னைகளில் தொடங்கி, தேசிய, சர்வதேசப் பிரச்னைகள் விவாதிக்கப்படும். காரசாரமான விவாதம் அடிக்கடி நடக்கும். கருத்து வேறுபாடுகள் எழும். கடைசியில், முடிவு எடுக்கப்பட்டு அனைவரும் நண்பர்களாகக் கலைவார்கள்.
ஐக்கிய முன்னணி அரசுக்கு இப்போதுபோல ஆதரவு தொடருமா, இல்லையா என்று தீர்மானிக்கக் காரிய கமிட்டி கூடியிருக்கிறது என்பதால், எங்களில் சிலர் அக்பர் ரோடு அலுவலகத்துக்கு ஒரு நடை கூட்டம் முடிந்துவிட்டதா என்று பார்க்கச் செல்வது என்று முடிவெடுத்தோம். விமான நிலையத்தில் இருந்து வாடகைக் கார் வைத்து காங்கிரஸ் அலுவலகம் நோக்கி விரைந்தோம்.
நாங்கள் அங்கே போவதற்கு அரை மணி நேரம் முன்புதான் காரிய கமிட்டிக் கூட்டம் முடிந்திருந்தது. பெரும்பாலான தலைவர்கள் கிளம்பிவிட்டனர். பிரணாப் முகர்ஜி, கருணாகரன், ஜெ.பி.பட்நாயக், சரத் பவார் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பெரும்பாலான காரிய கமிட்டி உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டதாக எங்களிடம் அங்கிருந்தவர்கள் தகவல் சொன்னார்கள்.
மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங்கும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் ராஜீந்தர் கெளர் பட்டலும் கலந்து கொள்ளவில்லை என்று சொன்னார்கள். கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் தெரிவிக்க முக்கியமானவர்கள் யாரும் இருக்கவில்லை. காலையில்தான் அறிக்கை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டதால், நாங்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம்.
அதிகாரபூர்வத் தகவல் கிடைக்க வேண்டும் என்பதால், செய்தித் தொடர்பாளர் வி.என்.காட்கில் வீட்டுக்குக் காலையில் சென்றுவிட்டேன். பத்திரிகைகளுக்கு வழங்க அவர் தயாரித்து வைத்திருந்த அறிக்கையின் பிரதியை அங்கேயே பார்த்துவிட்டேன்.
'நிபந்தனையற்ற ஆதரவு என்ற பெயரில் ஐக்கிய முன்னணி அரசு எதைச் செய்தாலும் ஆதரிக்காமல் கொள்கைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு தப்படும். மக்கள் நலனுக்கு எதிராக அரசு நடப்பதாகக் கருதினால், ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் கட்சித் தலைவருக்குத் தரப்படுகிறது'' என்பதுதான் காரிய கமிட்டியின் முடிவு.
'உத்தரப் பிரதேசம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸூடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய முன்னணி கட்சிகள் தயாராக இல்லை. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கட்சிகள், தங்களது வழக்கமான காங்கிரஸ் எதிர்ப்பைக் கைவிடுவதாக இல்லை. காங்கிரஸின் தயவில் ஆட்சி அதிகாரம் பெறுவதில் தயக்கம் காட்டாத கட்சிகள், காங்கிரஸூக்கு ஆதரவு தருவதற்கு மறுக்கின்றன. ஐக்கிய முன்னணியின் அலட்சியப் போக்கை சகித்துக் கொண்டு ஆதரிக்க வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு இல்லை'' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிந்தது.
சற்று நேரம் அங்கே காத்திருந்தேன். கட்சி அலுவலகத்துக்கு வி.என்.காட்கில் கிளம்பியபோது, என்னையும் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார்.
'என்ன இப்படி ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று பயமுறுத்தி இருக்கிறீர்கள், அது சாத்தியமா?''
'உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். அதை ஆதரிக்க ஜனதா தளமும், சமாஜ்வாதி கட்சியும் தயாராக இல்லை. ஐக்கிய முன்னணியின் தயவு எங்களுக்குத் தேவையில்லை. ஐக்கிய முன்னணிக்குத்தான் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதியிலேயே எங்களுடைய ஆதரவு எட்டு முறை தேவைப்படும்'' என்றார் காட்கில்.
'போஃபர்ஸ் விவகாரம் விவாதிக்கப்பட்டதா?''
'விவாதிக்கப்பட்டது. காங்கிரஸை பயமுறுத்துவதற்காக போஃபர்ஸ் பூச்சாண்டி காட்டுகிறது தேவே கெளடா அரசு என்று சிலர் வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.''
'என்ன விமர்சித்தார்கள்?''
'வெளிநாட்டில் போய் ஒருவரை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு முன்பு எத்தனை முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியாதா? குவாத்ரோச்சியையும் அவரது மனைவியையும் விசாரிக்க, மலேசிய அரசிடம் முன் அனுமதி பெறாமல் இவர்கள் சென்றது போஃபர்ஸ் குறித்த பரபரப்பை ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர வேறென்ன? இப்போது எதுவும் செய்யாமல் திரும்பி இருக்கிறார்கள். யாரை பயமுறுத்த நினைக்கிறது கெளடா அரசு?''
அதற்குள் அக்பர் ரோடு அலுவலகம் வந்துவிட்டது. அவர் உள்ளே சென்றார். நான் எனது அலுவலகத்துக்கு ஆட்டோ பிடித்துத் திரும்பினேன்.
காங்கிரஸ் காரிய கமிட்டியின் முடிவு ஐக்கிய முன்னணி அரசையும், கூட்டணியையும் கதிகலங்கச் செய்திருந்தது. அவசர அவசரமாக, ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழு கூட முடிவெடுத்தது. குழுவின் 18 உறுப்பினர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் ஆட்சி செய்யும் 10 மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அந்தப் பரபரப்பான சூழலில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரும் தொடங்க இருந்தது...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.