
ஆட்டோவிலிருந்து இறங்கிய, தன் தங்கையைப் பார்த்ததும், 'வா கமலா வா'என்று வரவேற்றார் ராமபத்ரன்.
'இவரோட நண்பரோட பொண்ணுக்குக் கல்யாணம். ரிஷப்ஷன் போயிட்டு உன்னையும், மன்னியையும், வசுமதியையும் பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.'
பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு வசு கல்யாணத்தைப் பற்றி வந்தது.
'கமலா உன் மகன் ஸ்ரீராமுக்கு உரிமை இருக்குற மாதிரி மன்னியின், அண்ணா பையன் வாசுவுக்கு உரிமை இருக்கா இல்லையா?'
'இதுல எங்களுக்கு ஏதுமில்ல? வசுமதிக்கு யாரை புடிக்கிறதோ அவ இஷ்டம்..'
'பெருமாள் , வசு மனசுலே புகுந்து யாரை ஓ.கே. சொல்கிறாள் என்பதுதான் இப்ப உள்ள பிரச்னை. அதுவரைக்கும் வெய்ட் பண்ணிதான் ஆகணும்.'
ஆபிஸிலிருந்து அப்போதுதான் திரும்பிய வசு, 'ஹாய் அத்தை! எப்படி இருக்கீங்க? ஸ்ரீராம் எப்படி இருக்கான்? வாட்ஸ் ஆஃப்ல கூட இப்ப பேசறது இல்லை. அவ்வளவு பிசியாய்ட்டானா?'
'இதோ பக்கத்திலே இருக்கிற அசோக் நகரில் இருக்கிற, எங்களைப் பார்க்க வர்றதே இல்லை?'
'கோபிச்சுக்காதீங்க அத்தை சந்தர்ப்பம் வரும். அப்போது உங்க வீட்டிலிருந்தே, நான் ஒரு வாரம் தங்கி ஆபிஸ் போயிட்டு வரேன். இப்ப சந்தோஷமா?'
கமலா கிளம்பிப் போயிருந்த அடுத்த அரை மணியில் வசுவின் மாமாவும், மாமியும் வந்திருந்தார்கள்.
'வாங்க மாமா, வாங்க மாமி ஏது இவ்வளவு தூரம்? வாசு எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா?'
'பாம்பே ஞானத்தின் 'ராமகிருஷ்ண பரமஹம்சர்' டிராமா கிருஷ்ணகான சபாவில் பார்க்க வந்தோம். ரொம்ப நாளாச்சா உன்னையும், பத்மாவையும் மாப்பிள்ளையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்'என்றார் மாமா.
ராமபத்ரன் தன் தங்கை வந்துவிட்டு போனதையும் தன் தங்கைக்குச் சொல்லியிருந்த பதிலையே இவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.
'கரெக்ட் மாப்பிள்ளை.. நீங்க சொல்றது சரிதான் வசுவுக்கு யாரை பிடிக்கறதோ பண்ணிக்கட்டும். எதுக்கும் ஒரு முடிவு வேண்டும்.'
'இன்னிலிருந்து ஒரு மாதம் டயம் கொடுக்கிறேன் வசு.. நீ என் பையன் வாசுவை விரும்பினாலும் சரி, இல்லை. உங்க அத்தை பையன் ஸ்ரீராமை விரும்பினாலும் சரி, இந்தப் போட்டியிலிருந்து ஒருவர் விலகிடலாம். தாய் மாமாங்கிற பொறுப்பும்,அக்கறையும் எனக்கு இருக்கு என்பதனால் சொல்றேன். சரியா?'
'ஓ.கே. மாமா , சந்தர்ப்பம் வரும். கட்டாயமா ஒரு வாரம் தங்கி, உங்க வீட்டிலிருந்தே ஆபிஸ் போயிட்டு வரேன்.'
'இதோ பாரு வசு நான் உன்னை கட்டாயப்படுத்தலை. உனக்கு இஷ்டமில்லைன்னா சொல்லிடு. இவங்க இரண்டு பேரையும் வேண்டாமுன்னு சொல்லிவிட்டு, வேற இடத்திலே மாப்பிள்ளை பாக்கறேன். அவங்க புரிஞ்சுப்பாங்க?'
'எனக்கென்று சில குறிக்கோள்கள் மனசில் இருக்கு. யாருடன் என் மண வாழ்க்கை என்பது கூடிய சீக்கிரம் எனக்குத் தெரிஞ்சுடும். எனக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கும்ன்னு நம்பறேன்.'
'வசுமதியின் பிளான் என்ன? என்ன தீர்மானிக்கப் போகிறாள்? அவள் போடும் புதிர் புரியாத புதிராக இருக்கிறதே?' என்று அவளது பெற்றோர் ராமபத்ரனும், பத்மாவும் விசனபட்டுக் கொண்டார்கள்.
வசுமதி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஜி.எம். ஹெச். ஆர். என நல்லதொரு பணி. நல்ல அழகு, அதே சமயம் புத்திசாலியும் கூட. ஸ்ரீராம் யு.எஸ்.-இல் எம்.எஸ். முடிச்சுட்டு அங்கேயே வேலை பார்த்துவிட்டு, சமீபத்தில் இந்தியா திரும்பியிருந்தான்.
சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பெரிய போஸ்டில் உள்ளான். வாசுவும் எம்.எஸ். யு.எஸ்.-இல் முடித்துவிட்டு; சென்னை சாப்ட்வேர் கம்பெனியில் பெரிய போஸ்டில் இருக்கிறான். மூன்று பேருக்கும் சொந்தம் என்பதை மீறி நல்ல நட்புணர்வு இருந்தது.
இரண்டு நாள் கழித்து அசோக் நகரில் அத்தை வீட்டுக்கு வசுமதி காரில் போயி இறங்கவே அத்தையும் அவர் கணவரும் வரவேற்றார்கள்.
ஸ்ரீராம் ரூமிலிருந்தான் வசு அவன் ரூமுக்கே வலிய போயி,'ஹாய் ஸ்ரீராம் எப்படி இருக்கே' என்றாள்.
'ஹாய் வசு நீ வருவேன்னு சுத்தமா நினைக்கலை. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே என்ஜாய் பண்ணு. அம்மா வசுவுக்கு நல்ல சமையல் பண்ணிபோடும்மா?'
'சாரி வசு. நான் குளிச்சிட்டு உடனே ஆபிஸ் கிளம்பணும்..'
இரண்டு, மூன்று நாள் ஸ்ரீராம் காலையில் சீக்கிரம் போவதும், இரவு லேட்டாக வருவதையும் கவனித்த வசு, 'பாவம் அத்தை, ஸ்ரீராம் இப்படி வேலை, வேலைன்னு இருக்கானே'இப்படியே போனா உடம்பு என்னதுக்கு ஆகும்?'என்றாள்.
அன்று காலையில், போர்வெல் மோட்டார் திடீரென ரிப்பேர் ஆகியிருந்தது.
'ஸ்ரீராம்.. உடனே பிளம்பரை கூப்பிட்டு வாடா?'வசு குளிச்சிட்டு ஆபிஸ் போகணும். நான் சமைக்கணும். அப்பா பசி தாங்கமாட்டார்'என்று அத்தை சொல்லவும்,
'என்னம்மா என் தகுதி என்ன? பிளம்பரை போயி நான் கூட்டிட்டு வந்தா, எனக்குக் கெளரவக் குறைச்சல். ஒரு போன் பண்ணு வந்துடுவான்.'என்றான் ஸ்ரீராம்.
'டேய்... அப்பாகிட்டதான் போன் நம்பர் இருக்கு. அப்பா வாக்கிங் போயிருக்காருடா இப்ப நேரமில்லைடா.'
முகத்தை மட்டும் கழுவிக் கொண்டவுடன், தன் மேல் பெர்ஃப்யூம் போட்டுக் கொண்டு பதிலுக்குக் காத்திராமல் தன் காரை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீராம்.
மாமா வந்த பிறகு பிளம்பரை கூட்டி வந்து மோட்டார் ரிப்பேர் சரி பார்க்கப்பட்டது.
அன்று சனிக்கிழமை லீவ் அத்தை செம லஞ்ச் தயார் பண்ணியிருந்தாள்.
லஞ்ச் சாப்பிடும் போது, 'சாரி வசு.. அஞ்சாறு நாளா உங்கிட்ட பேச எனக்கு நேரமில்லாமல் போச்சு. அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். அம்மா, நீ இரவு சமைக்க வேண்டாம் நீ, நான், வசு, அப்பா.. எல்லோரும் ஆஞ்சநேயர் கோயில் போயிட்டு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுப் படம் பார்க்க போறோம் சரியா? நைட் ஷோவுக்கு நாலு டிக்கெட் ரெடி.'என்றான் ஸ்ரீராம்.
மாலை ஆறு மணி அத்தையும் வசுவும் தயாராக இருந்தபோது, 'எனக்கு முக்கியமா ஒரு யு.எஸ். கால் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு. அதனால படம் பார்க்க வரலை. நீங்க போயிட்டு வாங்க?'என்றான் ஸ்ரீராம்.
'ஏன் ஸ்ரீராம்? அந்த போனை நாளைக்கு பேச முடியாதா?'
'இல்லை வசு. அது ரொம்ப முக்கியமான போன்.. நீங்க போயிட்டு வாங்க?'என்று சொல்லி தன் ரூமுக்கு போய், லேப் டாப்பில் மூழ்க ஆரம்பித்தான்.
பாவம் அத்தை, நிலைமையைப் புரிந்து கொண்டு, வசுவிடம் சாரி கேட்டாள்.
'ஒரு நாள் கூட வசுவை உன் கார்ல அழைத்துப் போகலை.. இன்னிக்காவது அழைச்சிட்டு போடா..'
'இல்லம்மா பில்லர்கிட்ட என் பாஸ் காத்துட்டிருப்பார். அவரைப் பிக்கப் பண்ணனும், சாரிம்மா ,
சாரி வசு..'
'இது கேசுவல் விசிட் தானம்மா.. நீ அவளுக்குப் பட்டுப் புடவை கொடுக்கப் போறேன்னு சொன்னீயே...'அதுபோதும் கல்யாணம் ஆகட்டும் பெரிய கிஃப்ட்தரேன்..'
'என்னம்மா அத்தை வீட்டில் ஒரு வாரம் எப்படி இருந்திச்சு?'
'நல்லா இருந்துச்சுப்பா?'
மறுவாரம் மாமா வீட்டுக்குப் போனபோது மாமா, மாமியுடன், 'ஹாய் வசு.. என்ன ஆச்சரியம்.. நீ வரப் போறதா அம்மா சொன்னதாலே நானும் ஆபிஸிலிருந்து சீக்கிரம் வந்துட்டேன்.'என்றார்.
'எனது வீட்டுக்கு அன்புடன் வரவேற்கிறேன்'என்று வாசு வரவேற்றான்.
இரவு டின்னர் முடித்த கையோடு, இரவு தன் யு.எஸ். பிராஜெக்ட் போது பாஸ்டன் துறைமுகம் போனதையும், அதன் போட்டோக்களையும் காட்டினான்.
'வசு பாஸ்டன்னு சொன்னதும் உனக்கு என்ன ஞாபகம் வருது?'
'ஞாபகமில்லையே வாசு..'
'நாம எட்டாம் கிளாஸ் படிக்கும்போது, சோஷியல் சைன்ஸ் டீச்சர் பாஸ்டன் டீ பார்ட்டி பத்தி பாடம் நடத்தறப்போ, நீ சொன்னே, என்னிக்காவது ஒரு நாள் அந்தப் பாஸ்டன் துறைமுகத்தை நேரில் பார்க்கப் போறடான்னு.'அது பலிச்சுடுச்சு வசு..'
'பயங்கர மெமரிடா வாசு.. உனக்கு என்னிக்கோ நான் சொன்னதை இன்றும் ஞாபகம் வைத்திருக்கே!'
புன்முறுவலை மட்டும் பதிலாய் அளித்தான் வாசு.
திங்கள்கிழமை ஆபிஸ் கிளம்பத் தயாராக இருந்த வாசு, 'ஏன் வசு, எதுக்கு உன் காரை எடுத்துட்டு ஆபிஸ் போகணும்? உன் ஆபிஸ் கடந்துதானே நான் தினமும் போறேன். பேசாம என்னோட என் காரில் வந்துடு. இதுலே உனக்கு எதுவும் ஆட்சபணை இல்லையே. மாலை வேலை முடிஞ்சா உன்னை கூட்டிட்டு வந்துடறேன். நான் வர முடியாம போனா ஓலா புக் பண்றேன். நீ வீட்டுக்கு வந்துடு. நீ பத்துநாள் வண்டி பக்கம் போகாதே!'
சொன்னபடியே வசுவை டிராப் செய்தான் வாசு அந்த வாரம் முழுவதும்.
அன்று மாலை ஏழு மணி வீட்டில் கரண்ட் இல்லாமல் இருந்தது. ப்யூஸ் போயிருந்தது. வாசுவும் வசுவும் ஆபிஸிலிருந்து திரும்பியிருந்தனர்.
'ஆமாம் வாசு! எலக்டரிஷியன் வந்துடுவான். அப்பா கூப்பிட போயிருக்கார்.'
அம்மா சொன்னதை வாசு காதில் போட்டுக் கொள்ளாமல், மள மளவென்று ப்யூஸ் கேரியர் எடுத்துப் போட்டுக் கரண்டை திரும்பக் கொண்டு வந்திருந்தான்.
'ஏம்மா நம்ம காரியத்தை நாமதான் செய்யனும். இதுல கெளரவம் பார்க்கக் கூடாது. எலக்டிரிஷியன் வருகிற வரைக்கும் ஏன் வெயிட் பண்ணணும்?'
'நல்ல வேலை செஞ்சே வாசு எலக்டிரிஷியன் வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகுமாம்.என்னப்பா இது சிம்பிள் ஒர்க்! இப்ப உங்களுக்கு வயசாயிடுச்சு! சின்ன வயசிலே நீங்க எவ்வளவு தடவை ப்யூஸ் கேரியர் போட்டிருப்பீங்க? அதை நான் பாத்து இருக்கேன் .அப்படிப் பார்த்தது இப்போ யூஸ் ஆச்சு.'
'ஆல்ரைட் உள்ளே வாங்கப்பா.'
இரவு டின்னரின்போது அம்மா , 'அப்பாவுக்கு சுகர் மாத்திரையைக் கொடுத்தியா?'என்று கேட்ட வாசுவின் சமயோசிதப் புத்தியும் வேலை திறமைûயும்,குடும்ப அக்கறையும் வசுக்குப் பிடிந்திருந்தது. ஆக்கபூர்வமான விஷயங்களைப் பற்றி நிறையவே பேசினான்.
'இதோ பாரு வசு.. அம்மா சொல்லிகிட்டு இருந்தா, நீ காலை டிபன் சாப்பிடுறதில்லைன்னு... நீ காலை உணவைத் தவிர்த்தால், உடம்புக்கு கெடுதல், இதன் மூலம் அல்சர், மன உளைச்சல் வர்ற வாய்ப்பு அதிகம்.
அதுவும் நீ பார்க்கற வேலை ஹெச். ஆர். ஜாப் எனர்ஜியா இருக்க வேண்டியது அவசியம். உனக்குத் தெரிஞ்சிருக்கலாம். இருந்தாலும் சொல்றேன். அப்புறமா கொஞ்சம் சாதம், நிறைய காய்கறிகள், சால்ட் , பழங்கள் எடுத்துக்கோ? எனக்காக சாலட் மட்டும் நான்தான் தினமும்; தயார் பண்ணுவேன். இன்னொரு விஷயம் தெரியுமா? நீ உன் வேலையில் முன்னேறி ஒரு வெற்றியாளரா மாறனும்னா, நீ ஒரு குழந்தையா மாற வேண்டும்..'
'வாசு என்ன சொல்றே..'
'ஒரு இரண்டு வயசு குழந்தை என்ன பண்ணும்? தன்னைச் சுத்தி உள்ள உலகத்திலே இருக்கிற எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்க ஆசைப்படும். அந்தக் குழந்தை,. தான் முழுமையாகக் கத்துகற வரைக்கும் தடுமாற்றம், கீழே விழும், அழகை, விரக்தி எல்லாம் அதுகிட்ட இருக்கும். ஆனா அது கத்துக்கிட்ட மறுநிமிடமே, உடனே தன் ஆக்ஷனில் கொண்டு வரும். பாரு.. அப்ப அந்தக் குழந்தையின் முகத்திலே ஒரு பிரகாசமான சந்தோஷம் தெரியும்.; கிளாப் பண்ணும். நம்மளையும் பண்ணச் சொல்லும்.
ஆபிஸில் இருக்கிற ஒவ்வொரு ஊழியரும், தான் குழந்தை மாதிரிதான். தடுமாற்றதுடன் இருப்பாங்க! குழந்தை தட்டு தடுமாறி எப்படியோ மேலே ஏறுவதற்கு முயற்சிக்கும் அப்புறமா ஜெயிக்கும். ஊழியரும் அப்படித்தான். அவர்களுடைய தோல்வி அவர்களுக்கு ஒரு டீச்சர் மூலம் கிடைக்கற படிப்பினை மாதிரி, தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு உயரத்துக்குச் செல்வான்.தன் வேலையை அங்கீகரிக்கச் சொல்லுவான்.
நாம சின்னப் பசங்களா இருந்தப்ப தோல்வி அடைஞ்சாலும் ஜெயிக்கணும்ங்கற வெறி வரும். சூழ்நிலைக்குத் தடுத்தாற் போல் நாம் மாறிவிடுவோம். ஆனால் துரதிஷ்ட வசமாக நாம் வளர்ந்தபின்பு ,நம்ம கொள்கையிலே ரிஜிட் ஆக இருப்போம். மனசு நல்ல விசயத்தைக் கூட ஒத்துக்க முடியாம தயங்கும்.
ஆனால் சாம்பியன்ங்ன்னு சொல்லபடற ஐ.டி. ஊழியர்கள் குழந்தைகள் மாதிரி. குழந்தைகள் புதுசு புதுசா கண்டுபிடிப்பது போன்று, நம் ஊழியர்கள் புதுப் புதுசா கண்டு பிடித்துத் தன் வேலை செய்யும் கம்பெனியை டாப் லெவலுக்குக் கொண்டு வராங்க? எவ்வளவு பெஸ்ட் நீ கொடுக்கிறேயோ அந்த அளவு கம்பெனியின் இதயத்தில் நீ இருப்பே இது உறுதி.'
'வாவ் !வாட் ஏ குட் லெக்சர். அமேசிங் ! ஒரு ஹெச். ஆர். சொல்ல வேண்டிய விஷயங்களைத் தெளிவாகச் சொன்னதோடு, ஒரு ஊழியரை ஒரு குழந்தையுடன் ஒப்பிட்டு சான்úஸ இல்லை, வாசு யூ. ஆர் ரியலி úத்ரட்..'
'ஒ.கே. வசு! டேக் ரெஸ்ட் நாளைக்கு ஒரு புரோகிராம் வைச்சுருக்கேன்.'
'ஆஞ்சநேயரை பாத்துட்டு, ஓட்டலில் டின்னர்,அப்புறமா பலாசோவில் 'லப்பர் பந்து'படம்.. 'ஆர். யூ. ஓகே, ஆர் யூ கம்பர்ட்டபுள்.'
வாசுவின் அழைப்பில் ஒருவித பாசமும், அன்பும் இழையோடியதை கவனித்த வசுமதி, தலையாட்டினாள்.
படம் பார்த்துவிட்டு காரை எடுக்கும் சமயத்தில் நாலைந்து பசங்க, ஜாடை மாடையாக வசுவை ஏதோ கிண்டல் செய்ய, காரைவிட்டு சட்டென்று இறங்கிய வாசு, அவர்களிடம் சண்டைக்குப் போனான் வசு வந்து சமாதானப்படுத்தினாள்.
'நாளைக்கு நீ உன் வீட்டுக்கு கிளம்பிடுவே நாளைக்கு ஒனக்கு ட் ரீட் காத்திருக்கு..'
திங்கள்கிழமை வசு ஆபிஸ் கிளம்பும் முன், 'வசு நீ எங்க வீட்டுக்கு வந்து எங்களைக் கெளரவப்படுத்தியதற்காக இந்தப் பரிசு. பிரிச்சு பாரு! நான் தாய்லாந்து போயிருந்தபோது, இந்தப் புத்தர் சிலை வாங்கினேன். இந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் உன்னுடைய மன உளைச்சல் குறையும். உனக்கு பிடிச்சிருக்கா?'
'வாசு ரொம்பவே நேர்மறைச் சிந்தனைகள்.. எல்லா விஷயத்ûதையும், பத்தியும் பேசற உன்னை பாத்தா எனக்கு ரொம்பப் பொறாமையா கூட இருக்குடா?'
'என்ன வசு இதைபோய்ப் பெரிசா பேசிண்ட்டு, உங்கிட்டேயும் நிறைய நேர்மறையான விஷயங்கள் இருக்கே..'
'எல்லோரும் உலகில் புத்திசாலிகள்தான்.. வாழ்த்துகள் வசு..'
'உன் திறமைகளுக்கும், அறிவுரைகளுக்கும் என் வாழ்த்துகள்..'
அத்தை கொடுத்த மாதிரியே மாமியும் பட்டு புடவையுடன், மஞ்சள் குங்குமம் கொடுத்து அனுப்பினாள்.
நடந்த விஷயங்கள் தெளிவாக ஒன்றுவிடாமல், தன் பெற்றோரிடம் சொல்லியிருந்தாள் வசுமதி.
'என்னம்மா என்ன முடிவு பண்ணிருக்கே?'
'சொல்றேன்ப்பா வர ஞாயிறு லஞ்சுக்கு நீங்க அத்தையையும், அத்திம்பேரையும் கூப்பிடுங்க; அதே மாதிரி மாமாவையும் மாமியையும் மட்டும் பேச கூப்பிடுங்க. வாசுவையும், ஸ்ரீராமையையும் கூப்பிட வேண்டாம்.'
அன்றைய தினம்லஞ்ச் முடிந்ததும் வசு, 'நீங்க இரண்டு குடும்பமே என்னை மன்னிக்கனும். இரண்டு குடும்பமும் நான் சொல்ல போகிற கருத்துகளை ஜீரணிக்கத் தயாராக இருக்க வேண்டும். தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் இப்ப சொல்ற முடிவு இறுதியானது. கல்யாணம் நடப்பதற்கு முன், ஒரு ஆண், தன் மனைவி எப்படி எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்ப்பில் இருப்பான். அந்த எதிர்பார்ப்பு இப்போது பெண்களிடம் நிறையவே காணப்படுது இல்லையா?'என்றாள்.
'ஆமாம்'என்றனர் எல்லோரும்..
'ஒரு வீட்டில் உள்ள ஆண்கள் குணமும், பெண்கள் குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். அந்தக் குணத்தை அவர்களால் ஒருவருக்காக மாற்றிக் கொள்ள முடியாது.அது அந்தக் குடும்பத்தின் மரபை ஒட்டியே வரும். காலங்காலமாக நாம சொல்லிட்டு வருகிற விஷயம், ஒரு பெண் கல்யாணமாகி, அடுத்த வீட்டுக்குப் போனபிறகு அந்தப் பெண் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்குத் தகுந்தவாறு தன்னுடைய குணத்தை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்கிறார்கள். ஏன் அப்படி?
அந்தப் பெண்ணும் தன் தலைவிதியை நொந்து, மாமியார் நாத்தனார் பிடுங்கல், கணவரிடம் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியாமல் சண்டை சச்சரவு.. 'நம்ம இரண்டுபேருக்கும் வேவ் லெங்த் ஒத்து போகலை'என்று சொல்லி கணவன், மனைவிக்குள் விவாகரத்து வரைக்கும் போயிட்டு இருக்கு - இதைச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் ஆதரிக்கிறாங்க? உறுதுணையாக இருக்காங்க? ஏன் ஒரு பெண் கல்யாணம் ஆவதற்கு முன் வரபோகிற கணவன் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய குணம் பண்பு போன்றவற்றை தெரிஞ்சுக்கக் கூடாது? என்று மாத்தி யோசித்தேன்.
இதற்காகத்தான் உங்க இருவர் வீட்டுக்கும் வந்தேன். இதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன். விட்டுக் கொடுத்தல் அல்லது கேட்டுப் பெறுதல் என்ற பண்புகள் யாரிடம் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். பணம், காசு, வீடு, வாசல், சொத்தை நான் எதிர்பார்க்கலை! ஸ்ரீராமும் சரி, வாசுவும் சரி, அவரவர்கள் அவர்கள் குணத்தில் இயல்பாக இருந்தார்கள். எனக்காக நடிக்கவில்லை. யாருக்காகவும் அவர்கள் தங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். வரும் பெண்ணுக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்தது. வருகிற கணவன் கலகலப்பாகப் பேசிக் கொண்டும் குடும்பப் பொறுப்புகள் தானே முன் வந்து எடுத்துகொள்வது, நமக்காக எதையும் செய்வான் என்கிற ஆளுமை, எதிர்காலதிட்டம், விருந்தோம்பல் பெற்றவர்களிடம் மதிப்பு இவையெல்லாம் ஸ்ரீராமைவிட வாசுவிடம் நிறையவே இருந்தது. நான் விசிட் செய்த முதல் நாளிலே இருவருடைய குணமும் புரிந்தது. இருவரும் அவரவர் இயல்பில் இருந்தனர். 'ஒருவருடைய குணம் செயல் மற்றவருக்காக மாறாதது'என்று இரண்டு பேருமே யதார்த்தமாக இருந்தார்கள்.
உங்க மனசு புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க அத்தை. இந்தக் காரணங்களுக்காக எனக்குச் சரியான பார்ட்னர் வாசு என்று முடிவு எடுத்தேன். அதே சமயம் ஸ்ரீராம், என்னிடத்தில் ஒரு நல்ல நண்பனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.'என்று வசுமதி பேசி முடித்தாள்.
'வாழ்த்துகள் வசு,நீ சரியான முடிவுதான் எடுத்திருக்க! நீ ஸ்ரீராம் பத்தி சொன்ன கருத்துகள் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை.'
'ஐ விஷ் யூ ஆல் த பெஸ்ட்..'
நீண்ட நாள் பிரச்னை வசுமதியின் தீர்க்கமான அதே சமயம் உறுதியான முடிவினாலும்,இதமாகச் சொன்ன விதத்தாலும் ,நிம்மதி அடைந்தனர் ராமபத்ரன் தம்பதியினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.