பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 215

ஐக்கிய முன்னணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதற்கும், மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தந்ததற்கும் ஒரு வேறுபாடு இருந்தது.
பிரணாப்
பிரணாப்
Published on
Updated on
4 min read

ஒருபுறம் ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழு; இன்னொருபுறம் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்; காங்கிரஸ் காரிய கமிட்டியின் தீர்மானத்தை விவாதிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் சரத் பவார் வீட்டில் கூடுவதாக அறிவிப்பு - இந்தப் பரபரப்பு எல்லாம் போதாதென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வேறு கூடியிருந்தது.

ஐக்கிய முன்னணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதற்கும், மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தந்ததற்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஐக்கிய முன்னணியைக் கட்டமைத்தது, அதற்குக் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியது, ஒன்றுக்கொன்று முரண்பட்ட கட்சிகளைச் சமாதானப்படுத்தி இணைத்தது எல்லாமே மார்க்சிஸ்ட் கட்சித் தலைமைதான். சொல்லப்போனால், ஐக்கிய முன்னணியைப் பின்னாலிருந்து இயக்குவதே மார்க்சிஸ்ட் கட்சிதான் என்று எல்லோராலும் வெளிப்படையாகவே பேசப்பட்டது.

ஆனால், ஐக்கிய முன்னணி அரசு முன்னெடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள், மார்க்சிஸ்ட் கட்சியினரைக் கடுமையான கோபம் கொள்ள வைத்தன. முந்தைய நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனியார்மயத்துக்குக் கதவைத் திறந்தது என்றாலும்கூடப் பொதுத் துறை

நிறுவனங்கள் தனியார்மயமாவதை அனுமதிக்க வில்லை. ஆனால், ஐக்கிய முன்னணி அரசின் நடவடிக்கைகள் அப்படி இருக்கவில்லை.

காப்பீட்டுத் துறை தனியார் மயமாக்கலும், கனிம சுரங்கங்களைத் தனியார் ஏலத்தில் எடுக்க அனுமதிப் பதும், பொதுத் துறை நிறுவங்களில் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாக்கப்படுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாயின.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்தது என்பது மட்டுமல்ல, அதன் இரண்டு மூத்த தலைவர்கள், இரண்டு முக்கியமான துறைகளின் அமைச்சர்களாகவும் இருந்தனர். உள்துறை அமைச்சராக இந்திரஜித் குப்தாவும், வேளாண்துறை அமைச்சராக சதுரானன்

மிஸ்ராவும் தேவே கெளடா அமைச்சரவையில் இருந்ததால், அவர்களாலும் நிதியமைச்சகம் எடுக்கும் முடிவுகளை எதிர்க்க முடியவில்லை.

தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்தால், மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் கட்சித் தலைமை மீது அதிருப்தி ஏற்படும் என்கிற அச்சம் இடதுசாரிக் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்பட்டதில் வியப்பில்லை. தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விட்டுவிட்டு, போஃபர்ஸ் போன்ற பிரச்னைகளில் இடதுசாரிகள் குரலெழுப்பத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மத்தியக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்தார் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித். கோல் மார்க்கெட் அருகில் உள்ள கட்சியின் தலைமையிடமான ஏ.கே.ஜி.பவனில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்துக்கு, தில்லியில் உள்ள அநேகமாக எல்லா பத்திரிகை நிருபர்களும் ஆஜராகி இருந்தனர். அப்படியொரு கூட்டம்.

ஐக்கிய முன்னணி அரசின் செயல்பாடுகள் குறித்தோ, பொருளாதாரக் கொள்கை குறித்தோ மத்தியக் குழு விவாதித்திருக்கும் என்று எதிர்பார்த்த நிருபர்களுக்கு, தோழர் சுர்ஜித் அளித்த அறிக்கை மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அறிக்கை போஃபர்ஸ் குறித்தது. இது குறித்து விவாதிக்கவா மூன்று நாள் மத்தியக் குழு கூடியது என்று அவரிடம் கேட்க வேண்டும் போலிருந்தது.

'போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பான சுவிஸ் வங்கியின் ரகசிய ஆவணங்களை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும். அந்தப் பேரத்தில் லஞ்சம் வாங்கியவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், செல்வாக்குள்ள நபர்களின் தொடர்புகள் அவர்களுக்கு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மத்தியக் குழு கோருகிறது'- இதுதான் பொதுச் செயலாளர் சுர்ஜித் நிருபர்களுக்கு வழங்கிய தீர்மானம்.

நிருபர் கூட்டத்தில் நிசப்தம் நிலவியது. அந்த மெளனத்தைக் கலைத்து கேள்வியை எழுப்பியது, அமெரிக்க ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் பெண் நிருபர்.

'போஃபர்ஸ் பிரச்னையை மட்டுமே விசாரிப்பதற்காகவா உங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூடியது? இதையா நீங்கள் மூன்று நாள்கள் விவாதித்தீர்கள்?'

ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஏனைய நிருபர்களுடன் இணைந்து சிரித்துவிட்டார். அந்த நிருபர் தொடர்ந்தார்.

'காங்கிரஸ் தனது நிபந்தனையற்ற ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறது. இனிமேல் பிரச்னைகளின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு என்று தெரிவித்திருக்கிறது. நீங்களும் ஐக்கிய முன்னணி அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கிறீர்கள். என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?'

'வகுப்புவாதக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களது முக்கியக் கவலை. அதனால் எங்களது ஆதரவு தொடரும்.'

'ஐக்கிய முன்னணி அரசைத் தொடர்ந்து குறை கூறிவரும் இடதுசாரிக் கட்சிகள், அதே நேரத்தில் அந்த ஆட்சிக்கு ஆதரவும் தெரிவிப்பது முரணாகத் தெரியவில்லையா?'

'இது குழப்பமான சூழ்நிலை. தற்போது மத்தியில் இருப்பது இடதுசாரிகளின் ஆட்சியல்ல. பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை ஐக்கிய முன்னணி அரசின் வரம்பு எங்களுக்குத் தெரிந்திருந்ததால்தான் நாங்கள் அந்த அரசில் பங்கு பெறவில்லை. தேவே கெளடா அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் திருத்த சி.பி.எம். முயலும்.'

'முயலும் என்றால் எப்படி?'

'அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் இருந்து விலகாமல், அதை அமல்படுத்த தேவே கெளடா அரசுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறோம்.'

'உங்களுடைய முயற்சிகள் எடுபடவில்லை என்று தோன்றுகிறதே...'

'அதை நான் மறுக்கவில்லை. குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கெளடா அரசு இதுவரையில் எடுக்கவில்லை. சர்வதேசச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலக வங்கி ஆகியவை அறிவுறுத்துவதுபோல அந்நிய முதலீடுகளை வரவேற்றல், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றல், காப்பீட்டுத் துறையைத் தனியார்மயமாக்கல் போன்றவற்றில் எங்களது கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐக்கிய முன்னணி அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.'

'அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?'

'அனைவரையும் பாதிக்கும் ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த கட்சி முடிவெடுத்திருக்கிறது. தனியார்மயத்தைக் கைவிட்டு, மாற்றுப் பொருளாதாரக் கொள்கை வகுக்குமாறு கோரிப் போராடவும் முடிவெடுத்திருக்கிறோம்.'

ஐக்கிய முன்னணி அரசின் செயல்பாடுகளை ஆதரிக்கவும் முடியாமல், ஆதரவை விலக்கிக் கொள்ளவும் முடியாமல் மார்க்சிஸ்ட் கட்சி தர்ம சங்கடத்தில் இருக்கிறது என்பதை, பொதுச் செயலாளர் சுர்ஜித்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வெளிப்படுத்தியது. அவரை மேலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாமல் நாங்கள் அனைவரும் கலைந்தோம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தைப்போலவே, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டமும் சீதாராம் கேசரி தலைமையில் சுமார் 3 மணி நேரம் நடந்தது. என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள எல்லா நிருபர்களும் கூடியிருந்தோம். கெளடா அரசு பட்ஜெட் கூட்டத் தொடரைத் தாண்டுமா, இல்லை அதற்கு முன்பே கவிழுமா என்பதுதான் அனைவரின் மனதிலும் மேலோங்கி நின்ற கேள்வி.

கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களை சீதாராம் கேசரியோ, சரத் பவாரோ சந்திக்கவில்லை. நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களான பிருத்விராஜ் சவானும், மிருத்யுஞ்சய நாயக்கும் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டனர்.

'ஐக்கிய முன்னணி அரசு எதைச் செய்தாலும் ஆதரிப்பது என்றில்லாமல், அதன் கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவை காங்கிரஸின் கொள்கைகளுடன் ஒத்துப்போகுமா என்று பார்த்து ஆதரிப்பது என்கிற காரிய கமிட்டியின் முடிவை நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சி வழிமொழிந்தது.

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலிருந்தே ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் செயல்படும். விலைவாசி உயர்வு, பிரசார் பாரதி மசோதா, காப்பீட்டுத் துறையில் தனியாரைஅனுமதிக்க எடுத்த முடிவு, உர விலை உயர்வு போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது'என்று பிரித்விராஜ் சவான் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

'ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்களா?'

'அப்படித் தீர்மானம் கொண்டுவரும் யோசனை எதுவும் இப்போதைக்கு இல்லை.'

'பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாகத் தெரிவிக்கிறது. நீங்கள் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்தான் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. அதை ஆதரிப்பீர்களா?'

'பாஜக கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கும் உத்தேசம் இல்லை.'

அதற்கு மேல் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தழுவிவிட்டார் பிரித்விராஜ் சவான். மார்க்சிஸ்ட் கட்சியைப்போலவே, ஐக்கிய முன்னணி அரசை ஆதரிக்கவும் முடியாமல், ஆதரவை விலக்கிக்கொள்ளவும் முடியாமல் காங்கிரஸூம் தவிப்பது புரிந்தது.

நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் முடிந்து கிளம்பிய ஸ்ரீகாந்த் ஜிச்கருடன் அவரது காரில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்தேன். யாரோ ஒரு நண்பரை சந்திக்க வந்த ஜிச்கரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன். நாங்கள் காரில் வரும்போது ஜிச்கர் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது-

'அரசியலில் திறமையையும், செல்வாக்கையும்விட முக்கியமானது

அதிருஷ்டம். தேவே கெளடாவிற்கு அது நிறையவே இருக்கிறது. இல்லை யென்

றால், அவர் பிரதமராகத் தொடர முடியுமா?'

'இப்போதைக்கு அவரது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறீர்களா?'

'இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் வரை எந்த ஆபத்தும் இல்லை. அவர் தொடர்வதும், தொடராமல் போவதும் அவர் கையில் இல்லை. அதிருஷ்டத்தின் கையில் இருக்கிறது.'

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது ஐக்கிய முன்னணியின் அலுவலகம். காங்கிரஸ் தலைமையகம் 10, அக்பர் ரோடு என்றால், ஐக்கிய முன்னணி அலுவலகம் 7, அக்பர் ரோடு. ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அது குறித்துத் தெரிந்துகொள்ள ஒரு நடை போய் பார்த்துவிடலாம் என்று தோன்றியது.

நான் சற்றும் எதிராபார்க்காமல், ஐக்கிய முன்னணியின் அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது. வெளியில் பல கார்கள் நின்று கொண்டிருந்தன. உள்ளே சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, அங்கே சில தலைவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது. அதுவும் ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்திருப்பது தெரிந்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ரகுவன்ஷ் பிரசாத் சிங், மத்திய ரயில்வேத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியின் எர்ரன் நாயுடு ஆகிய மூவரும்தான் அந்தத் தலைவர்கள்.

அமைச்சரவை விரிவாக்கம், பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவது உள்ளிட்ட முக்கியமான நேரத்தில் இவர்கள் ஏன் சந்திக்கிறார்கள் என்கிற நியாயமான கேள்வி என்னில் எழுந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com