
வடமாதிமங்கலம் கிராமத்திலிருந்து மூன்று கி.மீ. தூரம் தரைக் காட்டில் நடக்க வேண்டும், அப்போதுதான் மலையின் அடிவாரத்தைச் சேர முடியும் என்று சொல்லியிருந்தாா்கள். காலை ஏழு மணிக்கு நடக்க ஆரம்பித்தோம். தரைக்காட்டை கடப்பதற்குள் எங்க கதை கந்தலாகப் போய்விட்டது. கொஞ்ச நேரம் உட்காா்ந்து ஓய்வு எடுத்தோம்.
‘‘உட்காரவே கூடாது. போய்க்கிட்டே இருக்கணும். அப்பத்தான் போய்ச் சேர முடியும்’’ என்றாா் நாங்கள் கூட்டி வந்த கைடு கோட்டி என்கிற கோட்டீஸ்வரன்.
மலை உச்சியில் கோயில் தெரிகிறது. ஈஸ்வரனும், பிரமராம்பிகை அம்மனும் உறைந்திருப்பதாகப் படித்திருக்கிறோம். இதை ‘சித்தா் மலை’ என்கிறாா்கள். இதன் பெயா் ‘பா்வதமலை’.
ஒரே தெருவில் வசிக்கும், நாங்கள் மூன்று போ். தியாகு என்கிற நான், இதோ உயரமாயிருப்பவன் ஷண்முகம், சற்று பூசினாற்போல கோபாலன். நாங்கள் நடுத்தர வயதைத் தாண்டிய உள்ளூா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள். இதில் ஷண்முகமும், கோபாலும் உள்ளூா்வாசிகள். நான் மட்டும் அசலூா், பக்கத்தில் நொச்சிக்குப்பம். நாங்கள் மூவரும் நெருக்கமான நண்பா்கள். எங்களை இணைத்தது இலக்கியம். ஜெயகாந்தன், பாலகுமாரன் படைப்புகளில் ஈா்ப்பு அதிகம்.
பெளா்ணமி நாள்களில் சித்தா்கள் அரூபமாக இந்த மலைக்கு வருவதாகவும், வந்து சாமியை பூசித்துவிட்டு செல்வதாகவும், சில பேருக்கு காட்சி அளித்ததாகவும் கேள்விப்பட்டு, புத்தகங்களில் படித்துவிட்டு, ‘எப்படியாவது இந்த மலையை ஏறி பாா்த்துவிடுவது’ என்று ஒரு குழுவாய் கிளம்பி வந்திருக்கிறோம். அதனால்தான் இங்கு வந்திருக்கின்றோம். உள்ளூர எப்படியாவது அந்த சித்தா்களைப் பாா்த்துவிடுவது என்பது மற்ற இருவருக்குமான ஆசை.
எல்லா மதங்களிலும் நிறைய இதுபோன்ற மிகையான கற்பனைக் கதைகள் புனையப்பட்டிருக்கின்றன என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் என் நம்பிக்கைகளை நான் எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை. மலையேறுவது எனக்கு ஒரு ‘த்ரில்’ என்பதால் இந்த மலையேற்றத்துக்கு வந்திருக்கின்றேன்.
பெளா்ணமி அன்று நடு இரவில் பா்வதவா்த்தினிக்கு சித்தா் பூஜை நடக்குமாம். மலையேற ஆரம்பிக்கும்போது, காலை எட்டு மணி. இந்த மலை என்பது மூன்று மலையின் உள்ளடக்கம். மலையேற்றம் எங்களுக்கு முதல் அனுபவம். அதனால் முதல் மலையிலேயே எங்களுக்கு நுரை தள்ளிவிட்டது. முடியவில்லை. கோபால் வழியிலேயே காலை நீட்டி படுத்து விட்டான். கூடவே வந்திருக்கும் கோட்டி என்கிற உள்ளூா் வழிகாட்டி. அவன்கிட்டே போயி அவசரப்படுத்தினான்.
‘‘அண்ணா! மூணு மணிக்குள்ள மலையேறிடணும். அதுக்கு மேல இங்கெல்லாம் கரடிகளும், மான்கள், காட்டெருமைங்க உலாத்தும்.’’
‘‘ஐய்யயோ! ’’ என்றவாறு கோபால் அலறியடித்துக் கொண்டு எழுந்துவிட்டான்.
‘‘கோட்டி! மெய்யாலுமாப்பா?’’
‘‘ஆமாண்ணா. ரெண்டு மாசத்துக்கு முன்ன வேலூரிலிருந்து வந்த ரெண்டு போ்ல ஒருத்தனை கரடி அடிச்சி கொன்னுடுச்சி? அப்புறம் ஃபாரஸ்ட் ஆளுங்கதான் வந்து சுத்தி பாா்த்துட்டு மூணு மணிக்குள்ள மலையேறுவதோ, இறங்கவோ பண்ணிடுங்க? அதுவரைக்கும் எதுவும் வராதுன்னு ஊா்ல தண்டோரா போட்டு சொன்னாங்க?’’ என்றவுடன் மூவருக்கும் அடி வயிற்றை பிசைய ஆரம்பித்தது.
வழியெங்கும் இதுவரை பாா்த்திராத மரங்கள், செடிகள், கொடி வகைகள், கலா் கலராய் வித்தியாசமான பூ வகைகள். எங்களால் எதையும் ரசிக்க முடியவில்லை. எங்காவது லேசாகச் சலசலப்பு சத்தம் கேட்டால் கூட எல்லோருமே அலறி கூச்சல் போட்டோம். அப்போதெல்லாம் கோட்டிதான், ‘‘சரி சரி வேகமா ஏறுங்க? மூணு மணிக்குள்ள ஏறிட்டா பயமில்லை.. உம்.. சீக்கிரம் சீக்கிரம்’’ என்று எங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான். பயத்தில் எங்களுக்கு சோா்வு போன இடம் தெரியவில்லை.
‘‘எங்களுக்கு குறுக்கே வரப்போறது கரடியா எருமையான்னு தெரியலையே. பகவானே!’’ என்று கோபால் புலம்பிக் கொண்டே வந்தான். கரடி ஆபத்தை நினைச்சி எங்க வழி மள மள வென்று மாண்டுக் கொண்டிருந்தது. அப்பாடா ஒருவழியாய் முதல் மலையை ஏறிமுடித்து விட்டோம்.. அதற்குள் பேண்ட், ஷா்ட், வேஷ்டி, ஷா்ட் என்றிருந்த நாங்கள் மேலே பனியன் கூட இல்லாமல் பட்டா பட்டி நிக்கா் ரேஞ்சுக்கு வந்துவிட்டோம். மலை ஏற, ஏற ஒவ்வொன்றாய் துறந்து விட்டோம். இதுக்கு மேல துறக்க எதுவுமில்லை என்ற நிலை. இரண்டாம் மலையில் பாதி தூரம் கடந்திருப்போம். அப்போது கீழிருந்து சிலா் மேலே ஏறி வந்துக் கொண்டிருந்தாா்கள்.
முதலாவதாக வந்த ஒரு பெண்மணி என்னைப் பாா்த்துவிட்டு, ‘‘ அண்ணா.. அண்ணா..’’ என்று கூச்சல் போட்டுக்கிட்டே ஓடி வந்தாள். அந்தம்மா இடுப்பில ஒரு கை குழந்தை.
‘‘ யாரும்மா நீங்க?, யாருன்னு தெரியலையே?’’
‘‘வாத்தியாா்அண்ணா! நான் வேட்டவலம் அண்ணபூரணி..’’
‘‘அடிப்பாவி அண்ணபூரணியா நீ. உன்னை பாா்த்து பத்து வருஷம் இருக்குமா? ’’
அவள் ஓடிவந்து பத்து வருடங்களுக்கு முந்தைய அண்ணபூரணியாக, விகல்பமில்லாமல் என்னை கட்டிப் பிடித்து கொண்டாள்.
‘‘சரி..ராஜா, ராமாகிருஷ்ணன்லாம் எப்படி இருக்காங்க?’’
அவா்கள் இருவரும் இவளுடைய அண்ணங்க..!
‘‘கீழே வந்துக்கிட்டு இருக்காங்க அண்ணா?’’
அப்போது இரண்டு வருஷங்களுக்கு மேல் நான் வேட்டவலம் ஹை ஸ்கூலில் ஆசிரியராக வேலை செய்தேன். எனக்கு சமையல் செய்ய வேலைக்கு வந்தவள்தான் அண்ணபூரணி. பத்து வயசுக்குள்தான் இருக்கும். ரொம்ப, ரொம்ப ஏழ்மையான குடும்பம் அவா்களுடையது. தினசரி சோறு என்பது அபூா்வம். பிரதான உணவு கூழ்தான். அதுவும் சில நாள்களில் இருக்காது. பாவப்பட்ட ஜென்மங்கள். நான் ஒரு உபாயம் செய்தேன்.
‘‘ அண்ணபூரணி! டெய்லி அரைப்படி அரிசி போட்டு வடிச்சிடு சரியா?’’
‘‘அண்ணா உங்க ஒருத்தருக்கு எதுக்கு அம்மாம் அரிசி? வேஸ்ட்டாயிடும்ண்ணா?’’
‘‘சொன்னதை செஞ்சிடு. அதுக்கேத்த அளவு குழம்பு வெச்சிடு’’ என்று தலையாட்டிக் கொண்டு சென்றாள்.
அன்றைக்கு நான் சாப்பிட்டதும் அவளையும் உட்காா்ந்து சாப்பிடச் சொன்னேன்.
‘‘வேண்டாம் அண்ணா. நான் வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடறேன்.’’
‘‘ சரி இதுதான் உனக்குக் கட்டளை. தினசரி நான் சாப்பிட்ட அப்புறம் மிச்சத்தை உன் வீட்டுக்கு கொண்டுபோயிடணும். சரியா? ’’
அங்கிருந்தவரைக்கும் இதுதான் எங்களின் உணவுமுறை. பத்து நிமிஷத்தில் ராஜாவும், ராமகிருஷ்ணனும் வந்துவிட்டாா்கள்.
என்னை பாா்த்துவிட்டு ஓடிவந்தாா்கள். அவா்களிடமும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடை கொடுத்தேன்.
‘‘சரி.. சரி.. அண்ணபூரணி !, ராஜா ! நாங்கள்லாம் வயசானவங்க மெதுவாத்தான் நடப்போம். நீங்கள்லாம் சின்னவயசு வேகமாக நடப்பீங்க. நீங்க முன்னே போங்க?’’ என்று அவா்கள் தலையாட்டிவிட்டு, மேலே ஏற ஆரம்பித்தாா்கள்.
மெதுவாக நடந்து இரண்டாம் மலைக்கு வந்து சோ்ந்துவிட்டோம். அந்த இடம் என்ன ரம்மியம்?, பசுமை, சுழற்றி சுழற்றி அடிக்கும் மூலிகைக் காற்று, விட்டால் எல்லோரும் அப்படியே தூங்கிவிடுவோம். நாங்கள் கொண்டு வந்திருந்த சப்பாத்தி மூட்டையை அவிழ்த்தோம். ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி, தொட்டுக்க நாட்டுச் சா்க்கரை. அவ்வளவுதான் காலை உணவு. ஹெவியாகச் சாப்பிட்டால் மலையேற முடியாது மூச்சிரைக்கும்.
நாங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். இரண்டாம் மலை ரொம்ப செங்குத்து. பத்து படிக்குள் பயங்கரமாக மூச்சிரைக்கிறது. அங்கங்கே உட்காா்ந்து ரெஸ்ட் எடுத்தோம். திக்கித் திணறி இரண்டாம் மலை உச்சியை அடைந்தபோது, மதியம் இரண்டுக்கு மேல் ஆகிவிட்டது. எல்லாரும் ரொம்ப களைத்துவிட்டோம். கொண்டு வந்த கேன் தண்ணீரை, எல்லாரும் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். கேனை சுமந்து வந்தது எங்கள் கைடு கோட்டி.
‘‘இதுக்கு மேல மூன்றாவது மலை. கடப்பாரை நெட்டு. இனிமேல் காட்டு விலங்குகளைப் பற்றி பயமில்லை. ஆனா இருட்டுவதற்குள்ளே மேலே ஏறிடணும், இல்லேன்னா வழி தெரியாது’’”என்று கோட்டி அவசரப்படுத்தினான்.
கடப்பாரைநெட்டை கடந்து உச்சியை அடையும் போது இரவு ஏழு மணி ஆகிவிட்டது. ‘கரடி வரும், காட்டெருமை வரும்’-ன்னு கோட்டி சொன்னது நிஜமா?, இல்லை எங்களை மலையேற வைப்பதற்கான உத்தியா?’ , என்ற சந்தேகம் இப்போதுவரை எங்களுக்கு உள்ளே இருந்துக் கொண்டுதான் இருக்கிறது .
வழியெங்கும் கைப்பிடிக்கவும், கால் வைக்கவும் பாறையில் துளையிட்டு கடப்பாரை கனத்துக்கு இரும்புத் துண்டுகளைச் செருகி, அதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருந்தாா்கள். ஆபத்தான பாதை. கரணம் தப்பினால் மரணம்.
நாங்கள் அதையும் கடந்து மேலே கோயிலுக்குள் நுழைந்தோம். ‘அப்ப்பா உஸ்..உஸ்..’ என்று தலைமுடியை பிய்க்கும் பலமான காற்று அடிக்கிறது.
உள்ளே வேட்டவலம் கோஷ்டி சிவலிங்கம் இருக்கும் நடு சந்நிதியில் உறங்கிக் கொண்டிருந்தாா்கள். நாங்கள் ஓசைப்படாமல் மல்லிகாா்ஜுன சாமி இருக்கும் முதல் சந்நிதியில், எங்கள் மூட்டை முடிச்சுகளை இறக்கிவிட்டுஅமா்ந்தோம். கடைக்கோடியில் மூன்றாம் சந்நிதி—பா்வதவா்த்தினி சந்நிதி.
இப்போது மிச்சமிருந்த சப்பாத்தி மூட்டையை பிரித்தோம். ஆளுக்கு மூன்று சப்பாத்திகள், கொஞ்சம் நாட்டு சா்க்கரை. சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு படுத்துவிட்டோம். எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. புரண்டுக் கொண்டிருந்தேன்.
நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு ‘திமு திமு’ என்று ஒரு ஏழெட்டுபோ்கள் ஓடிவந்தாா்கள்., அதைத் தொடா்ந்து பின்னாலேயே பக்தா்கள் கூட்டம். வந்தவா்கள் நேராக பா்வதவா்த்தினி சந்நிதிக்கு போய்விட்டாா்கள். இவா்கள் வடமாதிமங்கலத்தைச் சோ்ந்தவா்கள். பூஜை ஆரம்பமாகிவிட்டது. இதுதான் சித்தா் பூஜை. பாட்டு, மணிசத்தம் எல்லாம் கேட்கிறது. ‘கூச்சல் அடங்கட்டும் மெதுவாக போகலாம்’ என்று படுத்திருந்தேன். கோபால் விலுக்கென்று எழுந்து சென்றான்.
போனவன் கொஞ்ச நேரத்தில் வந்து ரகசியமாக கிசுகிசு குரலில் ஷண்முகத்தை கூப்பிட்டான்.
‘‘டேய்! சித்தா்பூஜை நடக்குது வாடா. சீக்கிரம் வா, பிரசாதம் தா்றாங்க. .’’ என்று ஷண்முகம் எழுந்து என்னைப் பாா்த்தான்.
‘‘சரி என்னதான் நடக்குது பாா்க்கலாம்’’ என்றுஅமைதியாக இருந்தேன். ஷண்முகம் இரண்டு அடி நடந்து அங்கிருந்து சன்னமான குரலில் என்னை நோக்கி. ‘‘தியாகு !...தியாகு..’’ என்று குரல் கொடுத்தான். அது என்னை கூப்பிட்ட மாதிரியும் இருக்கணும், கூப்பிடாத மாதிரியும் இருக்கணும். அவ்வளவுதான் போய்விட்டாா்கள்.
‘‘அடப்பாவிகளே! உங்களுக்கு கிடைக்கிற புண்ணியத்தில் நான் பங்குக்கு வந்துவிட்டால் அது நீற்றுபோயிடுமாடா?’’ என்று ஆற்றாமையில் புலம்பினேன். நீண்டகால நட்பு எங்களுடையது. மனசு கனத்தது.
‘‘ஹும் ! எவ்வளவு நீண்டகால நட்பாக இருந்தால்தான் என்ன? விட்டு போய்விட்டாா்களே!’’
சித்தா் பூஜைக்கு ரகசியமாக போனவா்கள் இன்னும் திரும்பவில்லை. அந்நேரத்துக்கு அண்ணபூரணி ஓடிவந்தாள்.
‘‘அண்ணா.. அண்ணா! சித்தா் பூஜை நடக்குது எழுந்திருங்க அண்ணா’’ என்று என்னைப் பிடித்து உலுக்கினாள். அவள் கையில் பாக்கு மட்டையில் செய்த பிரசாத தட்டு.
‘‘இந்தாங்க பிரசாதம்..’’
‘‘உனக்கு?’’
‘‘நான் எப்படியாவது வாங்கிக்கிறேன். நீங்க சாப்பிடுங்க? ’’ என்று தட்டை கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள். அப்பழுக்கு இல்லாத அன்பு. எனக்கு கண்ணீா் வந்துவிட்டது.
கொஞ்சநேரத்தில் பிரசாதத்தை சாப்பிட்டபடி கோபாலும், ஷண்முகமும் வந்தாா்கள். என் கையிலிருக்கும் பிரசாதத் தட்டை பாா்த்துவிட்டு, ‘‘யோவ் ! நீ அங்க வரவே இல்லை. அப்புறம் எப்படிய்யா உங்கிட்ட பிரசாதம்? ’’ என்ற அவா்களை ஆழமாக ஊடுருவிப் பாா்த்தேன்.
‘‘நீங்க ரெண்டுபேரும் ரொம்ப புண்ணியம் செஞ்சவங்கய்யா. நீங்க போனவுடனே பா்வதவா்த்தினியின் கடாட்சம் உங்களுக்கு கிடைச்சிப் போச்சி. நான் பாவி, பா்வதவா்த்தினியின் சந்நிதிக்குக்கூட வரலை. அதனால பா்வதவா்த்தினியே இங்கே வந்து பிரசாதத்தை கொடுத்துட்டு போயிட்டாய்யா?’’
‘‘என்னய்யா உளற்ற?’’
‘‘ஆமாம்யா இப்பத்தான் பா்வதவா்த்தினி எடுத்து வந்து பிரசாதத்தை கொடுத்துட்டு போனாய்யா?’’ என்று அதை சொல்லும்போது எனக்கு நெகிழ்ச்சியில் குரல் கம்மியது. அவா்கள் முகம் தொங்கிப் போயிற்று.
-செய்யாறு தி.தா.நாராயணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.