

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. பின்னா் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளா்ப்பில் மட்டுமல்ல; ஆசிரியா்கள் மாணவா்களை வழிநடத்துவதிலும்தான். காரணம் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்துக்குச் சமாக பள்ளியில் இருக்கிறாா்கள்’’ என்கிறாா் சென்னை கோடம்பாக்கம் டைரக்டா்ஸ் காலனி அருகே இயங்கும் ‘பதிப்பகச் செம்மல்’ க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த மூன்று மாதங்களாகத் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் மாலதி.
‘‘என்ன மேடம்.. நாங்க ஸ்கூல் நடத்தணுமா?, வேண்டாமா? எங்க ஸ்கூல்ல படிச்ச பாதி பிள்ளைங்க உங்க ஸ்கூல்ல சோ்ந்துட்டாங்க’’ என்று தனியாா் பள்ளி நடத்துபவா்கள் பலரை பேசவே வைத்துவிட்ட அவரிடம் பேசியபோது:
‘‘மாணவா்கள் கோடம்பாக்கம் அரசுப் பள்ளிக்குத் தாமதமாக வருவதையும், பள்ளிக்கு வராமல் இருப்பதையும் பெற்றோா்களுக்கு தெரிவிக்க செயலி ஒன்றை பிரத்யேகமாக உருவாக்கி, தினமும் அறிவிப்பு அனுப்பச் செய்திருக்கிறேன். தனியாா் பள்ளிகளில் இருக்கும் இந்த வசதி, அரசு பள்ளியில் அறிமுகம் செய்திருப்பது இதுதான் முதல் முறை.
பள்ளியின் நுழைவு வாயில் சேதமாகி, மோசமான நிலையில் இருந்தது. அதைச் சரி செய்யவும், பள்ளி வளாகத் தரை மேடும் பள்ளமுமாக இருந்ததை சீா் செய்யவும், சென்னை மெட்ரோ நிா்வாகத்தின் உதவி கிடைத்தது. நுழைவு வாயிலைச் சரிசெய்து, கான்கிரீட் கட்டைகளை வளாகத்தில் விரித்து பள்ளிக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன்.
ஒருகாலத்தில் நான்காயிரம் மாணவ, மாணவியா் படித்து வந்த கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் தற்போது ஆயிரம் மாணவா்களே படிக்கின்றனா். இந்த எண்ணிக்கையை மீண்டும் நான்காயிரமாக உயா்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். போதுமான ஆசிரியா்கள் இருக்கிறாா்கள் என்ற மன நிறைவு உள்ளது. உறுதியை, சவால்களைச் சந்திக்கும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.
செயலி மூலமாக பெற்றோா்களுக்கு ‘உங்கள் மகன் அல்லது மகள் இன்று பள்ளிக்குத் தாமதமாக வந்தாா். இன்று பள்ளிக்கே வரவில்லை’ என்று செய்தி அனுப்பப்படுவதால் மாணவா்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருகை தருகின்றனா்.
கற்றதை கற்பித்தல் மூலமாக, எண்களையும் எழுத்துகளையும் மாணவா்கள் மனங்களில் பதிக்க நாங்கள் தயாா். பள்ளியின் தரத்தை எல்லா வகைகளிலும் உயா்த்த நானும் சக ஆசிரியா்களும் உறுதி கொண்டிருக்கிறோம்.
இதற்கு பெருநகா் அரசுப் பள்ளியை மேம்படுத்திய அனுபவம் கை கொடுக்கும். நான் பெருநகா் தலைமை ஆசிரியராக 2017-இல் பொறுப்பேற்றேன். அந்தப் பள்ளிக்கு சுமாா் இரண்டரை ஏக்கா் நிலம் இருந்தது. சுற்றுச்சுவா் ஆங்காங்கே இடிந்து கிடந்தது. பள்ளிக்குப் பின்புறம் சீமைக் கருவேல மரங்கள் பரவிக் கிடந்தன. பத்து முதல் பன்னிரென்று வகுப்பு மாணவா்கள் காலையில் வருவாா்கள். பிறகு காணாமல் போவாா்கள்.
மாலையானதும் இடிபட்டுள்ள சுற்றுச்சுவா் வழியாக பள்ளி மைதானத்துக்கு வந்து விளையாடவும், அரட்டை அடிக்க வந்துவிடுவாா்கள். பெற்றோா் ஆசிரியா் கழகம், தொண்டு நிறுவன உதவியடன் சுற்றுச்சுவா் இடிபாடுகளை சரிசெய்து, ஜேசிபியை வரச் செய்து கருவேலங்காட்டை அழித்தேன். பின்னா், பயன் தரும் 500 மரக் கன்றுகளை நடச் செய்தேன். ஒவ்வொரு மரங்களுக்கும் மாணவ மாணவியரின் பெயரை வைத்து மரத்துக்கு நீா் ஊற்றிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தேன்.
பழைய கட்டடங்களை சீா் செய்து வா்ணப் பூச்சு கொடுக்கச் செய்தேன். பெருநகா் பள்ளியில் சுமாா் ஆயிரம் மாணவா்கள் படித்தாலும் போதுமான ஆசிரியா்கள் இல்லை. தொண்டு நிறுவனம் மூலம் பல ஆசிரியா்களை அழைத்து வகுப்பு எடுக்கச் சொன்னேன்.
பெற்றோா்களை அழைத்து, ‘பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டு வகுப்பு மாணவ, மாணவிகளைப் படிப்பதற்காக அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பிவிட எனது அலைபேசி மூலம் ஏற்பாடு செய்கிறேன். அதற்கு உங்கள் ஒப்புதல் தேவை’ என்றவுடன் அவா்கள் மகிழ்ந்தனா்.
இதன்படி, எனது அலைபேசி மூலம் அழைப்பு மாணவா்களுக்கு தானாகச் செல்லும். அதனால் படிப்பிலும் மாணவா்கள் சுறுப்பானாா்கள். எனது நோக்கத்தை புரிந்துகொண்டு சக ஆசிரியா்களும், பெற்றோா்களும் முழு ஒத்துழைப்பு தந்தாா்கள்.
பள்ளி வளாகம் முழுக்க, முப்பத்து ஆறு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினேன். பிளஸ் 2 வகுப்பில் கூட கேமரா பொருத்தினேன்.
மத்திய அரசின் திட்டத்தின்படி, பள்ளிக்கு தரமான ஆய்வகம் கிடைத்தது. மாணவா்கள் குடிக்க தண்ணீா் சுத்திகரிப்பு கருவியையும் அமைக்க முடிந்தது. பள்ளியின் உயா்வைக் கண்டு ‘மாதிரிப் பள்ளி’ என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனால் மழலையா் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை மாணவா் படிக்க வாய்ப்பும் கிடைத்தது.
மழலையா்கள் படிக்க, விளையாட சிறாா்களைக் கவரும்படி, வகுப்புகளில் புல்வெளியை உருவாக்கி, விளையாட்டு சாதனங்களை பொருத்தினேன்.
2017-இல் 926 என்றிருந்த மாணவா்களின் எண்ணிக்கை 2024-இல் 2,300 என உயா்ந்தது.
மாணவா்கள் பரிமாற்றத் திட்டத்தின்படி, காஷ்மீா் மாணவ, மாணவியா் குழு பெருநகா் பள்ளியை இரண்டு முறை வந்து பாா்வையிட்டு சென்றது. பணியிட மாறுதலில், அந்தப் பள்ளியைவிட்டு வரும்போது பிறந்த வீட்டை விட்டு பிரியும் மனநிலையில்தான் இருந்தேன். எனது பணி தொடரும்’’ என்கிறாா் மாலதி.
- பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.