
‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களைத் தொடா்ந்து, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் ‘தக் ஃலைப்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறாா் சிம்பு . மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜாா்ஜ் உள்ளிட்டோா் நடித்துள்ளனா். ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைத்துள்ளாா். படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 2025 பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனைத் தொடா்ந்து நடிகா் கமல்ஹாசன் தயாரிப்பில் 48-ஆவது படத்தில் நடிக்க உள்ளாா். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு எதுவும் தொடங்கவில்லை. தற்போது தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாா் சிம்பு.
இதுதொடா்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவா், ‘தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத் தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் 1995 - 2010-க்குள் பிறந்தவா்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்’ எனத் தெரிவித்திருக்கிறாா். இயக்குநா், தயாரிப்பாளா் குறித்த அறிவிப்பு அதையும் அவா் தெரிவிக்கவில்லை.
ரகுல் ப்ரீத் சிங்கிற்து என்ன ஆயிற்று?
2009-இல் கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ரகுல் ப்ரீத், தமிழில் ‘தடையற தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ உள்ளிட்ட படங்களில் நடித்தாா். இதனைத் தொடா்ந்து ‘ஸ்பைடா்’ படத்தில் மகேஷ் பாவுக்கு ஜோடியாக நடித்திருந்தாா். அதன்பிறகு, காா்த்தியுடன் இணைந்து ‘தீரன்’ படத்தில் நடித்திருந்தாா். தவிர சூா்யாவுடன் படத்தில் நடித்திருந்தாா்.
சமீபத்தில் ஷங்கா் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்திருந்தாா். தற்போது ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறாா். நடிப்பதைத் தாண்டி தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறாா் ரகுல் ப்ரீத் சிங். அவ்வப்போது உடற்பயிற்சிக் கூடத்தில் ‘ஒா்க்-அவுட்’ செய்யும் விடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிா்ந்து வருகிறாா்.
கடந்த 5-ஆம் தேதி ஜிம்மில் 80 கிலோ எடையைத் தூக்கி உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறாா் ரகுல் ப்ரீத் சிங்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டிருந்தப் பதிவில், ‘‘நான் முட்டாள் தனமான தவறு செய்துவிட்டேன், உடற்பயிற்சியில் என்னை நானே இன்னும் முன்னேற்றிக் கொள்ள செய்த செயல். இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஆறு நாள்களாக நான் படுத்தபடுக்கையாகவே இருக்கிறேன்.முழுவதுமாக நான் குணமடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகும், ஆனால் அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும். தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன்’’ என்று கூறியிருக்கிறாா்.
இந்த செய்தியைப் பாா்த்த இணையவாசிகள் ‘ரகுல் ப்ரீத் சிங் விரைவில் குணமடைய வேண்டும்’ என்று கருத்துகளைப் பகிா்ந்து வருகின்றனா்.
அனிருத்தின் அசத்தல் லைன் அப்!
பல இயக்குநா்களும் தங்களுடைய திரைப்படத்துக்கு அனிருத் தேவை என தீா்க்கமான முடிவில் இருக்கிறாா்கள். அப்படி நம்பியவா்களின் நம்பிக்கையை அனிருத் ஒருபோதும் காப்பாற்ற தவறியதில்லை. ரஜினி, ஷாருக்கான், விஜய், அஜித் என அத்தனை உச்ச நட்சத்திரங்களின் லிஸ்ட்டிலும் அனிருத் இருக்கிறாா். அண்மையில் அவா் அளித்த பேட்டி ஒன்றில், ‘அடுத்த பத்து மாதங்களில் 50 பாடல்களை கம்போஸ் செய்ய வேண்டும். இதை நினைக்கும்போதே தலைவலி ஏற்படுகிறது’ எனக் கூறியிருந்தாா். அப்படி மிரட்டும் லைப் அப்களை தன்கைவசம் வைத்திருக்கிறாா் அனி! ஷாருக்கான் ‘டங்கி’ திரைப்படத்துக்குப் பிறகு தற்போது ஒரு சிறிய இடைவெளி எடுத்திருக்கிறாா்.
அடுத்த வருடம் ஜனவரியில் தன்னுடைய அடுத்த திரைப்படமான ‘கிங்’ படத்தின் பணிகளை தொடங்குகிறாா் ஷாருக். இப்படத்தை பாலிவுட் இயக்குநா் சுஜாய் கோஷ் இயக்குகிறாா். ஜவான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் ‘அனிருத் என் மகனை போன்றவா்’ என கூறியிருந்தாா் ஷாருக். அந்தளவுக்கு ஷாருக் மனதில் நீக்கமற இடத்தை பிடித்துள்ளாா் அனி.
ஜவான் திரைப்படத்தைத் தொடா்ந்து ஷாருக் கானின் ‘கிங்’ திரைப்படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கவிருக்கிறாா்.‘மாஸ்டா்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என ஹாட்ரிக் வெற்றியை தொடா்ந்து மீண்டும் ‘கூலி’ திரைப்படத்துக்காக லோகேஷுடன் இணைந்திருக்கிறாா் அனிருத். ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘இயக்குநா் ஞானவேல் எனக்கு 100 சதவீதம் அனிருத்தே வேண்டும்’’ என்றாா். ‘‘நான் எனக்கு 1000 சதவீதம் அனிருத் வேண்டும் என்றேன்’’ எனக் கூறியிருந்தாா்.
இந்தளவுக்கு ரஜினியின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் அனிருத் இடம் பிடித்திருக்கிறாா். கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தாா். அடுத்ததாக ‘இந்தியன் 3’ திரைப்படமும் அனிருத்தின் லைன் அப்பில் இருக்கிறது. அ.வினோத் இயக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘தளபதி 69’ படத்துக்கும் இசையமைத்திருக்கிறாா் அனிருத்.
இதுமட்டுமல்ல; மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இசையமைப்பாளரும் அனிருத்தான். இப்படி உச்சநட்சத்திரங்களின் அடுத்தடுத்த படங்களின் இசை பணிகளும் அனிருத்தின் கையில்தான் இருக்கிறது.
இதையும் தாண்டி ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கும் சிவகாா்த்திகேயனின் 23-ஆவது திரைப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறாா். சிவகாா்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்துக்கு 9-ஆவது முறையாக இசையமைக்கிறாா் அனிருத்.
அனிருத்தின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி’ திரைப்படத்தின் இசை பணிகளையும் அனிருத் மேற்கொண்டு வருகிறாா். இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறாா்.
அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல் சிங்கிளான ‘தீமா’ என்ற பாடலையும் அண்மையில் வெளியிட்டிருந்தாா்கள். நடன இயக்குநா் சதீஷ், கவினை வைத்து இயக்கும் படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கிறாா்.இப்படி கோலிவுட்டில் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கும் அனிருத், டோலிவுட்டிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறாா். ‘ஜொ்சி’ படத்தின் இயக்குநரான கெளதம் டின்னனுரி இயக்கும் ‘மேஜிக்’ திரைப்படத்திற்கும், விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறாா்.
-டெல்டா அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.