அர்ப்பணிப்பு..!

அந்த சிற்றுண்டியகத்தின் உள்ளே சென்று அமர்ந்த தேவிகாவின் மனதில் உணர்ச்சி அலைகள் பொங்கி வந்தன.
Published on
Updated on
8 min read

அந்த சிற்றுண்டியகத்தின் உள்ளே சென்று அமர்ந்த தேவிகாவின் மனதில் உணர்ச்சி அலைகள் பொங்கி வந்தன. கண்களில் கண்ணீர்த் திவலைகள் தோன்றி, தாற்காலிக முகப் பருக்களாக அலங்கரித்தன. அவளுக்கு ஆச்சரியம்தான். அவளது கடைசி தங்கைக்கு ஒரு மாதம் முன்பு திருமணம் நடந்தது.

அவளுடைய ஒரு தம்பிக்கும், இரண்டு தங்கைகளுக்கும் வேலைகளும் கிடைத்து, திருமணங்களும் நல்லவிதமாக நடந்துவிட்டன. பெரிய தங்கைக்கு ஒரு பெண் குழந்தை, தம்பிக்கு ஒரு பையன் என குழந்தைகளெல்லாம் கூட பிறந்துவிட்டன. இதையெல்லாம் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டிருந்த தேவிகாவின் மனதில் கட்டுக்கடங்காத சந்தோஷம்தானே இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக ஒருவித இயலாமை. லேசான சோகம் இழையோடியதை அவள் கவனிக்காமல் இல்லை. கண்ணாடி எதிரில் நின்று தன்னையே கண்டவளுக்கு அப்படித்தான் தென்பட்டது. எந்த ஒரு பணி செம்மையாகச் செய்து முடித்தாலும் அது மன நிறைவைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அவளுக்கும் இருந்தது என்றாலும், அதையும் மீறிய ஒரு தோல்வி மனப்பான்மை அவள் மனதை நிறைத்திருந்தது. அந்த உணவகத்தில் வந்து அமர்ந்தவள் மனதில் உணர்ச்சி வெள்ளம் எங்கிருந்து இவ்வளவு வேகமாக வந்து அவள் மனதை நிறைத்ததோ என அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவள் சில வருடங்களுக்கு முன்னால் இந்த உணவகத்தில் வந்து அமர்ந்தது இதே இடத்தில்தான்...

அலுவலகத்திலிருந்து கிளம்பியவள் தலைவலிக்க இந்த "வடை காபி' உணவகத்தை கண்டதும் நுழைந்து விட்டாள். செல்ஃப் சர்வீஸ் பகுதிக்குச் சென்றவள் இரண்டு வடைகள் சாப்பிட்டு முடித்தவுடன், பசி நீங்கி சற்று தெம்பு அடைந்திருக்க, ஒரு காபிக் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு நாற்காலிகளின் இடையில் நெளிந்து நெளிந்து தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்தாள்.

அப்போது, இரண்டு இருக்கைகள் முன்னால் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த ஒருவர் திடீரென்று எழ முயல, அவர் தலை, தெரியாமல் இவள் கையைத் தட்டிவிட, பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருத்தர் மேல் சூடான காபி கொட்டிவிட, துடித்து விட்டான் அவன். அவன் தொடையில் முழுவதும் காபி கொட்டி விட்டிருக்க, அவன் கால் சட்டையிலிருந்து ஆவி வந்து கொண்டிருந்தது.

'ஐயோ அம்மா..'' என்று அவன் அலற, வலியால் துடித்துக் கொண்டிருந்தான். காபிக் கோப்பையைத் தட்டி விட்டவன், 'சாரிம்மா, ரொம்ப சாரி சார். எக்ஸ்ட்ரீம்லி சாரி'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டான்.

தேவிகாவுக்கு சூடு தாங்காமல் துடித்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருக்க, அவன் அருகில் அமர்ந்து விட்டாள். 'சாரி சார். அவர் திடீர்னு நான் காபி கப்பை எடுத்துண்டு வர்றதைப் பார்க்காம எழுந்துட்டார். அவர் தலைபட்டு கப் தவறி உங்க மேலே விழுந்துடுச்சு. ரொம்ப சாரி சார். ரொம்ப சூடா இருந்தது. ரொம்ப எரிச்சலா. சாரி'' என்று சொன்னவள் கண்களில் ஒரு சக மனிதன் கஷ்டப்படுவதைப் பார்க்க சகஜமாக மனதில் எழ வேண்டிய பரிதாப உணர்வு பொங்கி நின்றது.

சில நிமிடங்கள் வலியால் துடித்தபடி கண்களை மூடிய நிலையிலேயே இருந்தவன், பிறகு கண்களைத் திறக்க, எரிச்சல் முப்பது சதவீதமாவது குறைந்து இருந்தது இவளுக்குத் தெரிந்தது.

'பரவாயில்லைங்க. நீங்க என்ன பண்ணுவீங்க? தெரியாம நடந்தது'' என்று சொன்னவன் பார்த்தான். ஒரு முன்பின் தெரியாத பெண்மணி தன் தோளில் கை வைத்தபடி தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டிருந்தது, சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது. தான் அவன் மேலேயே கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றோம் என்று. வெடுக்கென்று கையை எடுத்து விட்டு அவன் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

'சார், நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?''

'எங்கே சாப்பிட்டேன். வந்து ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தேன். சூடு வைச்சுட்டீங்க?'' என்று சிரித்தபடி சொன்ன சுரேந்திரனின் முகத்தில் இன்னும் அவன் தொடையில் இருந்த எரிச்சல் தெரிந்தது. அவன் பேச்சைக் கேட்டு, இவள் சிரித்தபடி இயல்பானாள்.

'அதுதான் தெரியாம பண்ணிட்டேன்னு சொன்னேனே சார். அதுக்கு ப்ராயச்சித்தமா உங்க டிபனை நான் ஸ்பான்சர் பண்ணறேன்'' என்று சொன்னாள். அவன் சிற்றுண்டியை உண்டு முடிக்க, இருவரும் ஆளுக்கொரு காபி வாங்கிப் பருக, அவள் சொன்ன மாதிரியே அவளே இருவர் சாப்பிட்டதுக்கும் பணம் கொடுக்க, அவள் மனதுக்கு சிறிது ஆறுதல் கிடைத்தது.

ஆரம்பித்தான் அவன், 'நீங்க எனக்கு டிபன் வாங்கிக் கொடுத்ததுக்குக் கைமாறா நான் நாளைக்கே இந்த ஓட்டலில் உங்களுக்கு டிபன் வாங்கித் தரணுமே. கடன்பட்டுட்டேனே..''

'அது நான் தெரியாம உங்க மேலே சூடான காபியைக் கொட்டினத்துக்காக வாங்கிக் கொடுத்தது. எனக்கு கொஞ்சம் குற்ற உணர்வு போச்சு. என் கடமைன்னு நினைச்சு செஞ்சேன்.''

'ம்ம் நான் டிபன் வாங்கிக் கொடுக்கறதை நீங்க சாப்பிட்டாதான் என் மனசு ஆறும். இல்லைன்னா இந்த காபி கொட்டின எரிச்சலை மறக்கவே மாட்டேன். ப்ளீஸ்.. ..வேணும்னா இப்பவே வாங்கித் தரட்டுமா. சாப்பிடறீங்களா. மசால் தோசை.. ..''

மீண்டும் தன்னை அடக்க முடியாமல் சிரித்தவளுக்கு, யாரோ முன் பின் தெரியாத ஒருத்தன் சூடான காபியை இவன் மேல் கொட்ட வைத்து இவர்களுக்கு இடையில் ஓர் உறவை ஏற்படுத்திக் விட்டான் என்று புரிந்தது. ஒரு சூடான காதல் இவர்களுக்கு இடையே அந்த சிற்றுண்டியகத்தின் அந்த டேபிளில் உருவாக, காதலிக்க ஆரம்பித்தனர்.

'தேவிகா, என் அம்மா என் கல்யாணப் பேச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க? நம்ம காதலைச் சொன்னேன். நோ அப்ஜெக்ஷன். உங்க வீட்டு சங்கதி என்ன?'' என்று கேட்டான் சுரேந்திரன். இவர்கள் காதலிக்க ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து ஒருநாள் இதே சிற்றுண்டியகத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது..?

'என்ன தேவிகா யோசிக்க ஆரம்பிச்சுட்டே?''

'இல்லை சுரேந்திரன், எங்க வீட்டுல இதைப் பற்றி பேசணும். நான் சொன்னேனே. எனக்கு ஒரு தம்பி, ரெண்டு தங்கைகள், அப்பா வேலைக்குப் போய் பல வருஷம் ஆச்சு. ஏதோ மினிமம் சர்வீஸ் போட்டதால் பென்ஷன் வர்றது. அம்மா ஹோம் மேக்கர்தான். பேசணும்''

'நீ வேற தேவிகா, உடனே நல்ல முடிவா சொல்லு. இல்லேன்னா நீ என் தொடையில சூடானா காபி கொட்டினதால உண்டான எரிச்சலை மறக்கவே மாட்டேன். சொல்லிட்டேன். நினைச்சு நினைச்சு துடிப்பேன்'' என்று சுரேந்திரன் சொல்ல, தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாலும் இந்த முறை அவள் மனது யோசனையில் இருந்ததால் சிரிப்பை வெகுமாகக் கட்டுப்படுத்தியது. அவள் மனம் வீட்டுக்குச் சென்று அப்பொழுதே அவள் திருமணத்தைப் பற்றி அவளுடைய அப்பா, அம்மாவிடம் பேச ஆரம்பித்திருந்தது. அவள் மனம் முழுக்க யோசனை.

'உன் கல்யாணப் பேச்சை நீயே எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கறது ரொம்ப வேதனையான விஷயம் தேவிகா. நம்ம குடும்பச் சூழ்நிலை அப்படி. என்னை மன்னிச்சுடு. நான் என்ன பண்ண முடியும்'' என்று சொன்ன அம்மாவைப் பார்த்தாள் தேவிகா.

'என்னை மன்னிச்சுடும்மா..''

'என்னை என்ன பண்ணச் சொல்றே தேவிகா, உனக்கப்புறம் தம்பி, ரெண்டு தங்கைகள், இப்பதான் படிக்கறாங்க. உன் அப்பாவோ பிடிவாதமா வீ.ஆர். எஸ். கொடுத்துட்டு பென்ஷன் மட்டும்தான் வர்றது. உன் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை'' என்று பொங்கி வந்த அழுகையைத் துடைத்துக் கொண்டாள் அம்மா.

அமைதியானாள் தேவிகா. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அம்மாவைப் பார்க்க பாவமாகதான் இருந்தது. மனதின் உணர்ச்சி அலைகள் வாயைக் கட்டிப் போட, அப்படியே உட்கார்ந்திருந்தாள், சில நிமிடங்கள்.

'சரி தேவிகா.. தானா தேடி வர வரனை விட்டுட வேண்டாம். இந்த ஜாதகம் அது இது எதுவும் பார்க்க வேண்டாம். உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது எங்கக் கடமை. ஆனா ஒரு ஹெல்ப் பண்ணு.''

'என்னம்மா'' என்று கேட்ட தேவிகாவின் மனதில் திருமண ஆசை இருக்கத்தான் செய்தது. அது அவள் முகத்திலும் பளிச்சிட்டது.

'ஒண்ணுமில்லைம்மா. அவர் பெயர் சுரேந்திரன் தானே. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச வருஷம், உன் தம்பி, தங்கைகள் படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போற வரைக்கும், உன் சம்பளத்தை என் வீட்டுக்குக் கொடுத்துடுவேன்னு அவர்கிட்ட சொல்லு. இந்த ஏற்பாடு பண்ணு. எப்படியாவது சிம்பிளா உன் கல்யாணத்தை முடிச்சுடலாம்'' என்று சொன்ன அம்மாவின் முகத்தையே சில நொடிகள் பார்த்தவளுக்கு நிதர்சனத்தின் இயலாமை பளிச்சிட்டது. எல்லா சூழ்நிலைகளையும் வாழ்க்கையில் வெல்வது இயலுமா?

மறுநாள் மாலையில் "வடை காபி' சிற்றுண்டியகத்தில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்த நேரத்தில், தனது அம்மா சொன்னதையே சுரேந்திரனிடம் சொன்னாள் தேவிகா.

இவளைப் பார்த்தான் சுரேந்திரன். 'சின்னப் பசங்க பேசிண்டு இருக்கும்போது சில சமயம் கிள்ளி விட்டுட்டு "பீன்ச்'சுன்னு ஏதோ சொல்வாங்க தெரியுமா? அதாவது உன்கிட்ட இருக்கறதுதான் என்கிட்ட இருக்குங்கறது மாதிரி. அதாவது "úஸம்'. உன் நிலைமைதான் என் நிலைமை. நான் ஒரு கவர்மென்ட் ஆபீஸ் க்ளர்க். எனக்கு ரெண்டு தங்கைகள் மட்டும். அதனால உன்னோட இந்தக் கோரிக்கையை என்னால ஏற்க முடியலையேன்னு முழு மன வருத்தத்தோட சொல்ல வேண்டிய கட்டாயம். மத்தபடி வேற என்னால முடிஞ்ச எந்த உதவியானாலும் செய்யறேன் தேவிகா.''

'வேற என்ன ஹெல்ப் பண்ணுவீங்க சுரேந்திரன். அவங்களுக்கு ட்யூஷன் சொல்லித் தருவீங்களா? பணம்தானே வாழ்க்கையில பிரதானம். உங்க நிலைமை எனக்குப் புரியறது. தயங்கித் தயங்கி உங்க இயலாமையைச் சொல்லி எனக்கு.. ..எனக்குன்னா என் குடும்பத்துக்கு உதவி செய்ய முடியாத உங்க குடும்ப சூழ்நிலையை வருத்ததோட எடுத்துச் சொன்னீங்க. தாங்க்ஸ்..''

'தேவிகா.. ..சாரி.. ..என் குடும்ப.. ..'' என்று ஆரம்பித்த அவனை இடைமறித்தாள் இவள். கையில் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டாள். எழுந்தாள். ஒருமுறை சுரேந்திரன் அருகில் சென்றாள்.

'நான் தெரியாம உங்க தொடையில சூடான காபியை விட்டு சூடு வைச்சேன். ஆனா நீங்க என் மனசுல அழியாத பெரிய சூடு வைச்சுட்டீங்க?'' என்று சொல்லிவிட்டு விருட்டென்று வேகமாக அந்தச் சிற்றுண்டியகத்தை விட்டு வெளியே வந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

'தேவிகா தேவிகா.. ..'' என்று அழைத்துக் கொண்டே சுரேந்திரன் வருவதைக் கண்டு ஒரு சந்தில் நுழைந்து கொண்டு சில நிமிடங்கள் கழித்து அவள் மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன் கைப்பேசியைப் பார்க்க, பத்து முறை அழைத்திருந்தான் சுரேந்திரன். இவள் அவனைத் திரும்ப அழைக்கவில்லை. ஒருதிட முடிவு செய்து அவன் எண்ணை முடக்கி விட்டாள். மறுநாள் அவன் வேறு எண்ணிலிருந்து தொடர்பு கொள்ள முயல அதற்கும் அதே நிலையைப் பரிசாக அளித்தாள். முடக்கினாள். மெல்ல மெல்ல சுரேந்திரனை அவள் மனதிலிருந்தும்..?

ஒரு காபிக் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்து அதே "வடை காபி' சிற்றுண்டியகத்தில் அதே இருக்கையில் அமர்ந்து பருக ஆரம்பித்தவள் மனதில் இன்று உணர்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இதே இடத்தில் அவள் மனதில் சூடான காதல் உருவானது. இயலாமையால் அதை மனதிலேயே போட்டு அழிக்க வேண்டிய சூழ்நிலை வர, அழித்துவிட்டாள். அதன் பிறகு அவள் தன் தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்து, நல்ல வேலை கிடைத்து, சுப காரியங்களையும் நடத்திவிட்டாள்.

இவையெல்லாம் நடக்கின்ற வேளையிலேயே, அவளுடைய அப்பா இறந்து எட்டு வருடங்கள் ஆகியிருக்க, அம்மா மூன்று வருடங்களுக்கு முன்னால் இறந்து போனாள்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் அவள் மனதில் ஒரு சிறிய குறும்படம் போல ஓடிக் கொண்டிருக்க, அனிச்சைச் செயலாய் காபியைப் பருகிக் கொண்டிருந்தாலும் அதன் சுவையை மட்டும் உணர்ந்தாள் தன் நாவில். அந்த மணமான காபியைப் பருகிக் கொண்டே நினைவலைகளில் மூழ்கியிருந்த அதே வேளையில் இவள் அருகில் ஒருவர் நிற்பது தெரிந்தது.

'வேற என்ன சாப்பிடறீங்க மேடம்?'' என்று சர்வர்தான் கேட்க வந்திருக்கின்றான் என இவள் நிமிர, இவளுடைய உணர்ச்சி நிறைந்த மனதின் உணர்ச்சியை பலமடங்கு அதிகரிக்கும் விதமாக..?

'எப்படி இருக்கே தேவிகா?'' கேட்டபடியே நின்றிருந்தான் சுரேந்திரன். இவள் பதில் சொல்வதற்குள் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு இவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் தாடி. அவனைப் பார்த்த இவள் வாயிலிருந்து சில நிமிடங்கள் வார்த்தையே வரவில்லை. சுரேந்திரன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். வெகு நேரம் கழித்து "ஹலோ' சொன்னாள்.

'தேவிகா. காபி ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டே.. நீ காபி கொண்டு வர்றதா இருந்தா சொல்லு. தான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கறேன். அன்னிக்கு நீ என் மேலே காபி விட்ட மாதிரி.. ..'' என்று தொடை எரிவது போல் பாவனை செய்தான். அப்பொழுதெல்லாம் போல் இவள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் சிரிக்க எல்லாம் இல்லை. முழு கட்டுப்பாட்டுடன் லேசாக புன்னகைப்பது சிறிய பாவனை செய்தாள் அவ்வளவுதான்.

'என்ன தேவிகா பேசவே மாட்டேங்கறே. என் மேல இன்னுமா கோபம் போகலை?''

'உங்க மேலே கோபப்பட நான் யாரு?''

'அன்னிக்கு வெடுக்குன்னு எழுந்து போனவதான் நீ. நான் எவ்வளவு தடவை உன்னை கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினேன். நீ போனை எடுக்கவே இல்லை. உங்க வீட்டுக்கு வந்து கேட்கணும்னு நினைச்சேன். உன் குடும்பச் சூழ்நிலையால நீ ஒத்துக்க மாட்டே. என்னால என் குடும்பச் சூழ்நிலையால ஒத்துக்க முடியாது. அதனால என்ன செய்யறதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டேன்'' என்று சொன்னவன் அமைதியானான்.

சில நொடிகள் கழித்து, 'ஒரே ஊர்லயே இருந்தும் வருஷக் கணக்குல பார்த்துக்காம இப்ப இதே ஹோட்டல்ல நாம மீட் பண்ணனும்னு இருக்கு போல இருக்கு. சரி சொல்லு உனக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?''

'இல்லை''

'உன் குடும்பம்.. தம்பி தங்கைகள் படிப்பு.. ..?''

முழு விவரங்களும் சொல்லிவிட்டு, தான் வெற்றி அடைந்ததாக உணர்ந்தாள் தேவிகா.

'உன் கடமையெல்லாம் சூப்பரா நிறைவேற்றி முடிச்சுட்டே. உன்னைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை தேவிகா..''

'நீங்க ஏன் என்னைப் பாராட்டணும்?''

'என்ன தேவிகா அப்படிப் பேசறே. எனக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி. நாம காதலிச்சது.. .. மறந்துட்டியா?''

பதில் ஏதும் சொல்லவில்லை அவள். இப்பொழுது சுரேந்திரனைச் சந்தித்தது அவள் மனதுக்கு சந்தோஷம் கொடுத்திருக்கின்றதா அல்லது எரிச்சல் கொடுத்திருக்கின்றதா என்று அவளுக்குத் தெரியவில்லை. அன்று போல் வெடுக்கென்று எழுந்து போகவில்லை. எதுவும் பேசவும் இல்லை. அமைதியாக அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தாள். திடீரென்று நினைவுக்கு வந்தது. அவனைப் பார்த்தாள்..

'சரி சொல்லுங்க சுரேந்திரன் உங்களைப் பற்றி. உங்க மேரேஜ்.. . உங்க தங்கைகள் படிப்பு கல்யாணம்?''

'ரெண்டு தங்கைகளையும் படிக்க வைச்சு, வேலை வாங்கிக் கொடுத்து, கல்யாணம் பண்ணி வைச்சாச்சு.''

'வெரிகுட்''

'உங்க கல்யாணம்?''

'ஆச்சு. பண்ணிண்டேன்.. அரேஞ்ச் மேரேஜ். வேலைக்குப் போறவ. கல்யாணமானதும் கொஞ்ச வருஷம் அவ சம்பளத்தை அவ குடும்பத்துக்கு ஒரு பகுதி கொடுக்கணும். கஷ்டமுன்னு சொன்னா. நான் கண்டிப்பா முடியவே முடியாது. தங்கைகள் படிக்க வைச்சு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லி சண்டை போட்டு அவளை சம்மதிக்க வைச்சேன். மனசே இல்லாம ஒத்துண்டா. நான்கு வருஷம் ஏதோ புது கல்யாண மோகத்துல என் பேச்சைக் கேட்டு சம்பளத்தை அப்படியே என்கிட்ட கொடுத்தவ அப்புறம் என்ன ஆச்சோ தெரியலை. டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டா? உடனே இன்னொருத்தனைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டுட்டா. குழந்தைகளை என்கிட்டயே விட்டுட்டு போயிட்டா...' என்று சொன்னவன் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

என்னதான் அவன் மீது இவள் மனதில் கோபம் இருந்தாலும் அவனுடைய இந்த வார்த்தைகள் இவள் மனதில் லேசான வருத்தத்தை உண்டு பண்ணத்தான் செய்தது.

'சாரி. அப்புறம் உங்களுக்கு குழந்தைகள்?''

'ஒரு பையன், ஒரு பெண்..''

நேரம் சென்றது. என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தாலும் எழுந்திருக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்த தேவிகாவைப் பார்த்தான் அவன். மனதில் வார்த்தைகளை கோர்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

'தேவிகா.. .தேவி ..'' அழைக்க, அவள் மனது லேசாக உருகுவதை அவளே உணர, ஆச்சரியமாக இருந்தது. காதலின் சக்தி இதுதானோ?

பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.

'தேவிகா.. .நான் ஒண்ணு சொல்வேன். தப்பா எடுத்துக்காதே. ஏத்துக்கோ. நான் என்ன சொல்ல வரேன்னா..''

'என்ன?''

'ரெண்டு பேரோட குடும்ப சூழ்நிலை மனசார காதலிச்ச நம்மளைப் பிரிச்சது. இப்ப சூழ்நிலை சாதகமா இருக்கு. நாம ஏன் ஒண்ணு சேரக் கூடாது.. இன்னும் உன் மீதான காதல் இன்னும் அப்படியே.. பசுமையா?''

'கல்யாணமா எதுக்கு?''

'இழந்த வாழ்க்கையை திரும்பவும் எடுத்துண்டு ஜாலியா..''

'இப்ப நான் என் குடும்ப கடமையெல்லாம் முடிச்சுட்டேன். அதனால என் சம்பளம் உங்களுக்குக் கிடைக்கும் அதுதானே..''

'என்ன தேவிகா இது, நான் ஏதோ வேணும்னு செஞ்சதா சொல்றே. என் குடும்பச் சூழ்நிலை அது. இப்பதான் நானும் என் கடமையை முடிச்சுட்டேனே. இப்ப என் குடும்பம்தான். கல்யாணம் பண்ணிண்டா நம்ம குடும்பம்.. .. நான், நீ,

ஆகாஷ், ப்ரீத்தி..''

'புரிஞ்சு போச்சு சுரேந்திரன், இப்ப உங்க குழந்தைகளைப் பார்த்துக்க ஒரு ஆள் வேணும். அதானே..''

'இப்படி நீ என்னை சந்தேகப்படறதுன்னு முடிவு எடுத்துட்டு பேசினா நான் எப்படி நிரூபிக்கறது. நான் அதுக்காக சொல்லலை. உன் மேல என் மனசுல இருந்த காதல் ஒரு நொடி கூட போகலை. ஐ லவ்..''

'ஓ.கே. சுரேந்திரன். சொல்லி இருக்கீங்க. யோசிச்சுப் பார்க்கறேன். எனக்கு சரின்னு பட்டதுன்னா.. .. ஓ.கே. சொல்றேன்.. ..'' என்று சொல்லிவிட்டு எழுந்து இந்த முறை 'நான் வரேன்'' சொல்லி விட்டு மெதுவாக அந்த சிற்றுண்டியகத்தை விட்டுக் கிளம்பி பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.

'நல்ல முடிவா சொல்லு தேவிகா'' என்று இவள் காதுகளை வந்து அடைந்த சுரேந்திரனின் வார்த்தைகளை அசை போட்டவாறே பேருந்து

ஏறினாள்.

'சங்கர், நான் வீ.ஆர். எஸ். கொடுத்துட்டேன்டா. போதும் உழைச்சது. எனக்கு பென்ஷன் வரும். நல்ல வேளையா கவர்மென்ட் வேலை'' என்று தேவிகா சொல்லிக் கொண்டிருந்தபோது அன்று இரவு அனைவரும் வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்தனர்.

'அப்படியாக்கா.. நல்லா யோசிச்சு முடிவெடு. அப்புறம் கொடுத்துட்டு ஏன் கொடுத்தோம்னு யோசிக்கக் கூடாது இல்லையா?'' சொன்னான் தம்பி சங்கர்.

'இல்லைடா. இனிமே யாருக்காகடா வேலைக்குப் போகணும். என் கடமையெல்லாம் முடிச்சுட்டேன். உன்னையும் ஹரிதாவையும், ஸ்வேதாவையும் நல்லா வாழ வைச்சுட்டேன். இனிமேலயும் பஸ் பிடிச்சு அவசர அவசரமா ஆபீஸ் போயி.. போதும் வர பென்ஷன் போதும்.. ..'' என்று சொன்னவள் குரலில் களைப்பு தென்பட்டது. வருடங்கள் உழைத்த களைப்பு.

உணவு உண்டு முடித்தவுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சங்கரின் பையன், விஷ்வா உறங்கி விட்டிருந்தான்.

'அக்கா'' என்று அழைத்தாள் சுமதி, சங்கரின் மனைவி.

'என்ன சுமதி?'' என்று கேட்டாள் தேவிகா.

'நானே ரெண்டு நாளாவே உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன். இப்ப தயங்கித் தயங்கி சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத சூழ்நிலை வந்துடுத்து..''

'என்ன சொல்றே சுமதி, புரியறா மாதிரி சொல்லு..''

'நான் மறுபடியும் வேலைக்குப் போகலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். விஷ்வாவை யார் பார்த்துப்பான்னு குழம்பிண்டு இருந்தேன். இப்ப நீங்க வீ.ஆர்.எஸ். கொடுக்கப் போறீங்க. வீட்டுல சும்மா இருந்தா உங்களுக்கு போர் அடிக்கும். நாங்க உங்களுக்கும் ஹெல்ப் பண்ணினா மாதிரி ஆச்சு இல்லையா? நீங்க விஷ்வாவைப் பார்த்துக்குங்க? நான் வேலைக்குப் போகப் போறேன். இவர் கிட்ட ஏற்கெனவே சொல்லிட்டேன். ஓகேவா.. ..'' என்று

அக்காவைப் பார்த்து தயங்காமல் சொன்னாள் சுமதி.

'நான் என்னம்மா சொல்றது. உன் விருப்பம். உன் வேலை'' என்று சொன்னவள் அன்றைய செய்தித்தாளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

ஆட்டோவில் வந்து இறங்கியதும் தேவிகாவின் கண்கள் முன் தெரிந்தது முதியோர் இல்லம் அது. பல இல்லங்களைப் பற்றி விசாரித்து இந்த இல்லத்தைத் தெரிந்தெடுத்திருந்தாள் தேவிகா.

ஆட்டோக்காரனுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு மெதுவாக உணர்ச்சி ததும்பும் மனதுடன் அந்த இல்லத்துக்குள் நுழைய அறங்காவலர் சந்திரசேகரன் ஓடி வந்து வரவேற்றார்.

'வாங்க தேவிகா, ரொம்ப சந்தோஷமா மனசார உங்களை வரவேற்கிறேன். வாங்க'' என்று வரவேற்று அவளுக்கு காபி கொண்டு வரச் சொல்லி பருக வைத்தார்.

காபியைப் பருகியவள் மனதில் அவள் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன் பின்றாக ஒன்று வந்து செல்ல ஆரம்பித்தன.

'தேவிகா... உங்க முடிவைப் பாராட்ட என்கிட்ட வார்த்தைகளே இல்லை. உங்களுடைய மீதி வாழ்க்கையை இந்த இல்லத்துகே அர்ப்பணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களே. உங்களுக்குத் தலை வணங்கறேம்மா. ரொம்ப உயர்ந்த உள்ளம் படைச்சவங்களாலதான் இந்த மாதிரி பண்ண முடியும்'' என்று சொன்னார் சந்திரசேகரன்.

'சார், நீங்க வேற பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. ஏதோ என்னால முடிஞ்சது. என்னோட பென்ஷன் தொகையில எண்பது பர்சென்ட் மாதம்தோறும் இல்லத்துக்குக் கொடுத்துடறேன். அதோடு மட்டும் இல்லாம நானும் இந்த இல்லவாசி. என்னால என்ன முடியுமோ அதை நான் செய்யறேன் சார். என் கடைசி மூச்சு வரைக்கும் இதுதான் என் வீடு. அதுக்கு நீங்கதான் அனுமதிக்கணும்'' என்று கைகூப்பி அவரை வேண்டிக் கொண்டாள்.

'இப்ப நீங்கதாம்மா பெரிய வார்த்தை பேசறீங்க. என் முன்னாடி ஒரு தெய்வம் வந்து உட்கார்ந்திருக்கறதா நினைக்கறேன். இதுக்கு பர்மிஷன் கேட்பாங்களா? வாங்கம்மா இந்த இல்லம் உங்களுடையது. இதை மேலும் மேலும் சிறப்பா நடத்த உதவி பண்ணுங்க' சொல்லியபடியே தேவிகாவை உள்ளே அழைத்துச் சென்றார் சந்திரசேகரன்.

இல்லவாசிகளுக்கு தேவிகாவை சந்திரசேகரன் அறிமுகப்படுத்திவிட்டு, 'மேடம்தான் இந்த இல்லத்தோட இன்சார்ஜ். எல்லாரும் இவங்க சொல்றதை கேட்கணும். உங்கக் குறையை மேடம்கிட்ட சொல்லுங்க.. இனிமே இங்கேதான் தங்கப் போறாங்க'' என்றார்.

புன்னகைத்தபடியே சென்று கொண்டிருந்தாள் தேவிகா. பார்த்துக் கொள்ள யாரும் இல்லாதவர்கள் சிலர், வாரிசுகள் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டவர்கள் சிலர், மன நலம் சிறிதளவு சரியில்லாத சிலர்.. .. பலதரப்பட்ட ஆதரவில்லாத முதியவர்களை ஒவ்வொருவராக பார்த்து விட்டு சிறிது நேரம் வந்து நாற்காலியில் அமர்ந்தாள் தேவிகா.

"உன்னோட இதுவரையிலான வாழ்க்கையை உன் தம்பி, தங்கைகள் வாழ்க்கைக்காகவே அர்ப்பணிச்சுட்டே. அவங்களை எல்லாம் நல்லபடியா வாழ்க்கையில் செட்டில் ஆக்கி விட்டுட்டே. இனிமேல் இருக்கற வாழ்க்கையை எதுக்கு அவங்களுக்காக நீ செலவழிக்கணும். உன்னோட பழைய காதலனும் சரி.. அவங்கச் சுயநலனுக்காக உபயோகப்படுத்திக்கப் பார்த்தாங்க. நல்ல முடிவு எடுத்தே தேவிகா. மிச்சம் உள்ள வருஷங்களை ஆதரவில்லாத இந்த உள்ளங்களுக்காகச் செலவு செய்யணும்னு முடிவு பண்ணிட்டே ஹாட்ஸ் ஆப் டு யூ தேவிகா. உன்னைப் புகழ வார்த்தைகளே இல்லை. காட் ப்ளஸ் யூ' என்று அவள் மனசாட்சி அவளைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னது. அதைக் கேட்டவள் கண்களில் இருந்து உணர்ச்சி மிகுந்த கண்ணீர்த் துளிகள் வர ஆரம்பிக்க, அதில் வருத்தம், ஏமாற்றம் இவையுடன் சேர்த்து ஆனந்தக் கண்ணீரும் பெரும்பகுதி இருக்கத்தான் செய்தது.

சில நிமிடங்கள் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டு அந்த இல்லத்துக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள் தேவிகா. முழு அர்ப்பணிப்புடன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com