'சித்திரமும் கைப்பழக்கம்' என்பது ஒளவையின் முதுமொழி. "சித்திரமும் ஆன்லைன் பழக்கம்' என்பது புதுமொழி. இந்தப் புதுமொழிக்கேற்ப இளம் தலைமுறையினருக்கு இணையம் மூலம் ஓவியப் பயிற்சி அளித்து அசத்தி வருகிறார் ஓவியக் கலைஞர் கோபி கிருஷ்ணமூர்த்தி.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த நாற்பத்து ஒன்பது வயதான இவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலருக்கு இணையம் மூலம் ஓவியப் பயிற்சியை அளித்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'எனக்கு சிறுவயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. இதற்கு எனது பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி- லட்சுமியும் ஊக்குவித்தனர். பிளஸ் 2 வரை படித்தேன். பின்னர், தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வித் தேர்வு வாரியம் நடத்திய ஓவியப் பயிற்சியைப் படித்தேன். ஓவிய ஆசிரியர்கள் பத்தமடை சிவராமகிருஷ்ணன், பொன்.வள்ளிநாயகம், பழனிசெல்வன் ஆகியோரிடம் அடுத்தடுத்து ஓவியப் பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தேன்.
1993, 94-ஆம் ஆண்டுகளில் மும்பையில் திரைத் துறை பேனர்களை வடிவமைக்கும் ஓவியராகப் பணிபுரிந்தேன். பின்னர், சொந்த ஊருக்கு வந்து அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம் பள்ளியிலும், ராஜபாளையம் சின்மயா பள்ளியிலும் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும்போது, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்தேன். அவர்கள் மாநில, மாவட்ட அளவில் போட்டிகளில் பரிசு பெற ஊக்கமும் அளித்தேன்.
பள்ளிகளில் அளிக்கப்படும் ஓவியப் பயிற்சியை மாணவ, மாணவியர்கள் முழுமையாகப் பெற முடிவதில்லை. அவர்
களுக்கு ஆர்வம் இருந்தாலும், கல்விக்கே முக்கியத்துவம் என்பதால், திறமையான மாணவர்கள் இருந்தும் அவர்களுக்கு முழு அளவில் கலையைக் கற்பிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் கரோனா காலம் வந்தது. பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்ட காலம் அது. வீட்டில் ஓய்வாக இருக்க முடியவில்லை. இந்த நேரத்தில் ஓவியக் கலையை இணையம் மூலம் கற்பிக்கலாம் என்று என் நண்பர்கள் ஊக்குவித்தனர். நண்பர்கள் வாயிலாக ஓரிருவர் முதலில் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்கள் முழு அளவில் தேர்ச்சி பெற்றவுடன் அவர்கள் வாயிலாக, புதிதாக ஓவியப் பயிற்சியைப் பெற மாணவர்கள் பலரும் முன்வந்தனர்.
இப்போது அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஓவியப் பயிற்சியைப் பெறுகின்றனர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பயிற்சியை அளிக்கிறேன். இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஓவியப் பயிற்சியை அளித்துள்ளேன். அவர்கள் முழு அளவில் ஓவியக் கலையைக் கற்றுத் தேர்ந்து, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்று பரிசு
களைப் பெற்று வருகின்றனர். சிறு குழந்தைகளும் ஓவியக் கலையை ஆர்வத்துடன் கற்பது, எனக்கு ஆத்மத் திருப்தியை அளிக்கிறது.
ஆயில் போஸ்டர், டிரெயின்ட் & கலரிங், வாட்டர் கலர், போஸ்டர் கலர் போன்ற பயிற்சிகளை அளிக்கிறேன். ஓராண்டு வரையில் பயிற்சி நீடிக்கும். கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், விலங்குகள், பறவைகள், மனித முகங்கள் என்று பலவகைகளில் ஓவியங்களை வரையக் கற்றுத் தருகிறேன். தமிழர்களின் பாரம்பரியமான ஓவியக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என ஆவல்.
பள்ளியில் பயிலும் எனது மகன் முனிஷ், இளம் வயதிலேயே ஓவியக் கலை மீது ஆர்வம் செலுத்தி நன்கு வரைகிறான். மனைவி புஷ்பா, கல்லூரியில் பயிலும் மகள் ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முழு அளவில் எனது பணிகளுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். நண்பர் வீர.சேகர் எனது வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார்.
ஓவியத்தைத் தவிர்த்து, பிற நேரங்களில் குறும்படங்கள் இயக்குவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் செலுத்துகிறேன்'' என்கிறார் கோபி கிருஷ்ணமூர்த்தி.