ஓடி விளையாடு பாப்பா..?

'கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்துவதால், அவர்கள் விளையாடுவது குறைகிறது.
சிமோனி
சிமோனி
Published on
Updated on
2 min read

'கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்துவதால், அவர்கள் விளையாடுவது குறைகிறது. இதன்காரணமாக, அவர்கள் பேசுவதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன. கூட்டுக் குடும்பத்தில் உறவுகள் பலர் இருப்பதால் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் தனிக் குடும்பத்தைவிட அதிகம் கிடைக்கும். இரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்லிடப்பேசி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது'' என்கிறார் பேச்சு மொழி, செவித்திறன் நிபுணர் சிமோனி.

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவர், "பி.ஏ.எஸ்.எல்.பி.' எனப்படும் பேச்சு மொழி, செவித்திறன் பட்டப்படிப்பை படித்துள்ளார். சொந்த ஊரில் அவர் கடந்த சில ஆண்டுகளில் பல குழந்தைகளுக்கு பேச்சுத் திறனையும் செவித்திறனை ஊக்குவிக்கும் வகையில், வழிகாட்டியுள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'பெண்கள் கருவுற்றதும் எந்தவிதமான குறைபாடு இல்லாத அழகான,அறிவான, அன்பான குழந்தை பிறக்க வேண்டும் என்றே வேண்டுவார்கள். சிலருக்கு மரபுரீதியாகவும், கருவுருதல், வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களால் மூளை, உடல் வளர்ச்சி குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

பிறவியில் இருந்தோ அல்லது இடையில் ஏதேனும் சூழ்நிலைகளாலோ, பேச்சுத் திறனோ அல்லது செவித்திறனோ பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளித்து குணப்படுத்த முடியும்.

பேச்சு என்பது எண்ணங்கள், யோசனைகள், தகவல்களை அர்த்தமுள்ள வார்த்தைகளாக ஒலியை வெளிப்படுத்துவதன் மூலம் வெளிப்படுத்தும் திறன். குழந்தைகளின் உளவியல் வளர்ச்சிக்கும், சிந்தனைகளை சரியான முறையில் வெளிப்படுத்துவதற்கும் சரளமான பேச்சு அவசியம். பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இயலாமைக்கும் ஊனத்துக்கும் வழிவகுத்துவிடும். ஊசி, மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்காமல் சிகிச்சை அளிக்க முடியும்.

அவர்களுக்கு பேச்சு சிகிச்சை அளித்து சராசரி குழந்தைகள் போல் வலம் வர நாங்களும் குழந்தைகளாகவே மாறி, உடல் அசைவு, சைகைகள், வாய் உச்சரிப்பு, முக பாவங்கள்,பாடல்கள் என அவர்களது எண்ண ஓட்டத்துக்கேற்ப சிகிச்சையை அளித்து வருகிறோம்.

பேசுவதில் சிரமப்படுபவர்களுக்கு அவர்களின் தொடர்புத் திறனை மேம்படுத்தவும், தடைகளை நீக்கவும் இந்தச் சிகிச்சை உதவும். பேச்சு தசைகளை வலுப்படுத்தவும், உச்சரிப்பை மேம்படுத்தவும், நோயாளி

களுக்கு எவ்வாறு சரியாகப் பேச வேண்டும் என்பதைக் கற்பிப்பதையும் மேற்கொள்வோம்.

கரகரப்பான குரல் போன்ற சிறிய பிரச்னைகள் முதல் மூளை பாதிப்பு காரணமாக ஓரளவு பேச்சு இழப்பு வரை குணப்படுத்தலாம். நோயின் தன்மையைப் பொறுத்து மற்ற மருத்துவ அல்லது உளவியல் சிகிச்சைகளும் பயன்படுத்தப்படலாம்.

எழுத்துகள், எண்கள், பாடல்கள், நிறங்கள், விலங்குகள், பழங்கள் போன்றவையின் பெயர்களைக் குழந்தைகள் சொல்வதால் அவர்களுக்கு பேச்சு வந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. அவர்களின் தேவைக்காக தனக்கு விருப்பம் உள்ளவற்றை தெரிவிக்க உரையாட வேண்டும். வயதுக்கேற்ப பேச்சு, மொழி வளர்ச்சி இல்லாமல் இருப்பதே "தாமதமாகப் பேசும் குறைபாடு' ஆகும்.

பேச்சு , மொழி வளர்ச்சி குறைபாடு மரபணு மூலமாகவோ, காது கேளாமை, ஆட்டிசம், நரம்பியல்சார் பிரச்னை, கற்றல், அறிவு

சார் குறைபாடு, பெருமூளைவாதம், வாய் தசை பலவீனமாய் இருத்தல், நரம்புதளர்ச்சியால் ஏற்படும் செயற்

திறன் குறை, பிறவி உறுப்பு குறைபாடு உள்ளிட்டவையே ஆகும். இவை அல்லாது சில குழந்தைகளுக்கு புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது. ஆனால் பேசுவதில் மட்டும் சிரமம் இருக்கும்.

குழந்தையின் பெயரை அழைத்தால் கவனம் காட்டாமல் இருத்தல், தேவைகளை சைகைகளால் தெரிவிப்பது மூலமாகவோ அல்லது தெரிவிக்கத் தெரியாமல் இருத்தல், சக குழந்தைகளுடன் சேர்ந்து வினையாடுவதிலோ அல்லது பழகுவதிலோ சிரமம் காட்டுதல், குழந்தைகள் பேசுவது கேட்போருக்கு புரியாமல் இருத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், பெற்றோர் உடனுக்குடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் கேட்டல் திறனில் குறைபாடு இருந்தாலும் அது பேச்சுத்திறனைப் பெரிதும் பாதிக்கும். அதற்கும் நிபுணரை அணுகுவது நல்லது.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டோர், தசை தளர்வால் பேச்சு குறைபாடு உள்ளவர்கள், திக்குவாய், குரல் பிரச்னை உள்ளவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள்,உணவு விழுங்குவதில் பிரச்னை உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக இலவசமாக சிகிச்சையும் திறன் பயிற்சி வழங்கவும் சென்னைக்கு அருகே கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு என்ற இடத்தில் மத்திய அரசு சார்பில் " பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம்' செயல்படுகிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பேச்சு பயிற்சி சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் சிமோனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com