சந்தன மரங்களில் சிறிய அளவில் நுண்ணிய சிற்பங்கள், கலைப்பொருள்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார் 'நுண்பொருள்கள் உருவாக்கும் சிற்பி' டி.கே. பரணி.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருமழிசையைச் சேர்ந்த டி.கே. பரணியின் குடும்பத்தில் பலரும் சந்தன மரச்
சிற்பிகள். இவர்கள் சந்தனத்தில் மட்டுமல்லாமல், ஒற்றை அரிசி, இரட்டை அரிசி, இரண்டரை அரிசிகளிலும் உருவங்களைச் செதுக்கி சாதனையைப் படைத்து வருகின்றனர்.
அவருடன் பேசியபோது:
'எனது சிறுவயது முதலே 10 செ.மீ. , 20 செ. மீ. உயரங்களில் கடவுள் சிலைகள் எப்படி தத்ரூபமாகப் படைக்க முடிகிறது என்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் கடவுளை வணங்கிவிட்டு தந்தையிடம் இந்தத் தொழிலைக் கற்றேன்.
தவழும் கிருஷ்ணர், விநாயகர், கற்பக விநாயகர், திண்டின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர், பெருமாள், சிவன் ஆகிய கடவுள்களின் முகங்களை மட்டுமே அப்படியே செதுக்குவோம். பின்னணியில் இருக்கும் இடங்கள், பிரபை, கடவுளர்களின் வாகனங்கள், அதில் வரும் டிசைன்கள் போன்றவை கற்பனையில் உருவானதுதான்.
ஒரு செ. மீ. உயரமுள்ள சிலைகள் முதல் ஒரு அடி உயரமுள்ள சிலைகள் வரை நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்துள்ளேன். ஒரு சிலையை உருவாக்க இரண்டு மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையாகும். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான நுண் சிற்பங்களைச் செதுக்கியுள்ளேன்.
ஆரம்பத்தில் தேக்கு மரங்களில் செய்யும்போது, அதில் பூச்சிகள் அரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் சந்தன மரங்களை பூச்சிகள் எந்தக் காலத்திலும் தீண்டுவதில்லை. அரிப்பதும் இல்லை. எனவே, சிலைகள் காலத்துக்கும் அழியாமல் பொக்கிஷங்களாக மிளிரும். எனவேதான் சந்தனக் கட்டைகளைத் தேர்வு செய்கிறோம்.
ஒற்றை அரிசியில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி சிலைகளைச் செய்து குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் எனது தந்தை காளாஸ்திரி. ஒற்றை அரிசியில் நுண் சிற்பத்தைப் படைத்ததற்காக எனது அண்ணன் டி.கே.மூர்த்திக்கும், ரிஷப சிங்கர் சிலையைச் செய்ததற்காக எனக்கும் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையில் உள்ள விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் (வி.டி.ஐ.) நடத்தும் போட்டிகளிலும் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளேன்.
எனது மனைவி ரேணுகா, எம்பிஏ முடித்த ஆசிரியையாகப் பணியாற்றும் மகள் திவ்யா, பிசியோதரெப்பிஸ்ட்டாக பணியாற்றும் மகன் திலீப் ஆகியோரும் சிற்பக் கலையை என்னுடன் மேற்கொள்கின்றனர்.
ஒருமுறை அரிசியில் நுண் சிற்பம் ஒன்றை வடித்து வைத்திருந்தேன். அதற்கு இறுதி வடிவம் மட்டுமே கொடுக்கும்போது, எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று அரிசியை தானிய அரிசி என்று நினைத்து கொத்திச் சென்றுவிட்டது. அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட அந்தச் சிற்பம் போய்விட்டதே என்ற வருத்தம் இருந்தாலும், ஒரு பறவையின் பசியாற்ற முடிந்தச் சந்தோஷம் கிடைத்தது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக, 30 செ.மீ. உயரமும், 23 செ.மீ. அகலமும், 8 செ.மீ. குறுக்களவும் கொண்ட 'தவழும் பாலவிநாயகர் சிலை'யை உருவாக்கியுள்ளேன்.
மிகவும் அழகுற இந்த நுண்ணிய சந்தனச் சிலை உருவாகியுள்ளது. மூஷிக வாகனம் குடைபிடிப்பது போலவும், மேலும் ஒரு மூஷிக வாகனம் வெண்சாமரம் வீசுவது போன்றும், விநாயகருக்கு கிளி பழத்தை அளிப்பது போன்றும், மரத்துக்குக் கீழே பாலவிநாயககர் தவழ்வது போன்றும் சிலையை உருவாகியுள்ளேன்.
விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் (விடிஐ) உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகளில் இந்தச் சிலை வைக்கப்படவுள்ளது. தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள கண்காட்சிக்கும் இந்தச் சிலை செல்கிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எனது படைப்புகள் வாங்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்திய குடியரசுத் தலைவர் முதல் அமெரிக்க அதிபர் வரை எனது கலைப்படைப்புகள் வாங்கப்பட்டுள்ளன.
இந்தக் கலை அழிந்து விடக்கூடாது. விருப்பத்துடன் வரும் மாணவ, மாணவிகளுக்கு இந்தக் கலையை கற்றுத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன். உண்மையான ஆர்வமும், விருப்பமும், கற்பனை வளமும் உள்ளவர்கள் இந்தக் கலையைக் கற்று பெருமை சேர்க்கலாம்.
இந்தச் சிலையைச் செய்வதற்கு எங்களுக்கு போதுமான சந்தனக் கட்டைகளை எந்தவித சிரமமும் இல்லாமல் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்கிறார் பரணி.