சிறுகதை: பூங்காற்று
"ஒவ்வொரு அறையாகச் சென்று, எந்த அறையிலாவது டேபிள் பேன் வைத்திருக்கிறார்களா?' என்று பதற்றமாகப் பார்க்கிறான் சிவா. அக்கா வீடு என்பதனால் கூச்சத்துடன் அவனால் எந்த அறையினுள்ளும் படக்கென்று போக முடியவில்லை. " வெளியிலிருந்தே "டேபிள் பேன் இருக்கிறதா?' என்று அருகால் மேல் கை வைத்து உள்ளே தலை நீட்டி கண்களால் ஏற இறங்கப் பார்க்கிறான். "நம்மளால இந்த ஒரு உதவிகூட அவுங்களுக்கு செய்ய முடியலையே' என்று வருந்துகிறான். ஒருவேளை அவன் தேடுகின்ற டேபிள் பேன்' கிடைத்துவிட்டால் காற்று வசதியே இல்லாமல் படுத்து கிடக்கும் அக்காவின் மாமியாருக்கு கொண்டு போய் கொடுக்கலாம்' என்றுதான் நினைக்கிறான். அவன் இப்போது டேபிள் பேனை மட்டும் தேடவில்லை. தன்னுடைய சகோதரியையும் சேர்த்து தேடுகிறான்.
"வயசானவங்களைக் கொண்டுபோய் இப்படியா போட்டு வைப்பாங்க? இந்தக் கொடுமையெல்லாம் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது. நேரம் செல்லச் செல்ல சகோதரி மீது கோபமும் அதிகரிக்கிறது. சகோதரியை நேரில் கண்டதும் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கவேண்டும்' என்று நினைக்கிறான். அதனால் வருத்தப்பட்டு திருமணத்தைக் கூட காணாமல் திரும்பிப் போக வேண்டி வந்தாலும் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறான்.
அப்போது அந்த வழியாக வந்த மச்சான், அதாவது அக்காவின் வீட்டுக்காரர், "ஒவ்வொரு ரூமா போய் என்ன தேடுறே? விசேஷத்துக்கு வந்தமா போனமான்னு இல்லாம... தேவையில்லாத வேலை செய்யாத' என்பதுபோல் முறைத்துப் பார்த்ததால் மனம் சோர்ந்துப்போய் மறுபடியும் அந்த அத்தையின் அறையிலே போய் நின்றான்.
அந்த அறையின் உட்கூரையில் ஓடிக்கொண்டிருக்கும் மின் விசிறியை வேதனையோடு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கின்றான். அது, வயதான தாத்தா நடப்பது போலவே மெதுவாக ஆடி அசைந்தது.
பாயை சுருட்டி போட்டு வைத்திருப்பதுபோல், பின் அறையில் கொண்டுவந்து போட்டு வைத்திருக்கும் இந்த அத்தைக்கு காற்று வசதியாவது செய்திருக்க கூடாதா? இந்த "பேன்' இப்படி ஓடினால் கீழே படுத்திருப்பவருக்கு எப்படி காற்று வரும்? குடும்பத்திலிருப்பவர்கள் சற்று நேரம் வந்து நின்று பார்த்தால்தான், இங்குள்ள கஷ்டம் என்னவென்று புரியும்? யாருமே இங்கு வந்து பார்ப்பதில்லையோ? ஒருவேளை பார்த்துவிட்டு, "இப்ப எதுக்கு இந்த "பேன்' மாத்தணும் என்று அலட்சியமாக விட்டு விட்டார்களோ? இப்படி என்னென்னவோ நினைத்துக்கொண்டே கண் மூடிக்கிடக்கின்ற அத்தையை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
எப்போது பார்த்தாலும் இன்முகத்தோடு, "எப்படியிருக்கறீங்க அத்தை' என்று கேட்பதுபோல் இப்போதும் தொண்டை வரை வந்த வார்த்தை அங்கேயே சிக்கிக் கொண்டது. "எப்படி இருக்கிறார்' என்று கண்ணால் கண்ட பிறகும், அப்படியொரு வார்த்தையைக் கேட்க அவனுக்கு வாய் வரவில்லை. கந்தல் துணியை கசக்கிப் போட்டதுபோல் பழஞ்சேலையில் பஞ்சாய் நைந்துப்போய் கிடக்கும் அத்தையைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு என்னவோ போலிருக்கிறது.
காற்றோட்டமே இல்லாத ஒரு இருட்டறை. இவன் வந்து நிற்பதுகூடத் தெரியாமல், கட்டிலில் அடங்கி ஒடுங்கிப்போய் கிடக்கிறாள் அந்த மூதாட்டி. கன்னக்குழிகளில் ஈக்கள் களியாட்டம் போடுகின்றன.
நெற்றியிலும் கழுத்திலும் அரும்பியிருக்கும் வியர்வையைப் பார்த்ததும், "ஏறு வெயிலுக்கே இங்கே நிற்க முடியவில்லை! இன்னும் உச்சி வெயிலுக்கு எப்படியிருக்கும்?' என்று அவனால் அந்தப் புழுக்கத்தை மனதால்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. பானைக்குள் வேகும் பச்சரிசியைப்போல், அறைக்குள் வந்து ஐந்து நிமிடத்துக்குள்ளே வியர்வை அருவி நீராய் ஆர்ப்பரித்து வழிகின்றது. கர்ச்சீப்பை எடுத்து கழுத்து முகமென்று துடைத்துக் கொள்கிறான். அவளை இந்த நிலைமையில் பார்த்ததாலா அல்லது இந்த அறைக்குள் வந்ததாலா என்னவோ? உடலில் ஒரு வித எரிச்சல் தெரிகிறது.
மழைக்காலத்தில் காயாத ஈரத்துணியைக் கொடியில் போட்டு வைத்திருப்பதுபோல் குப்பென்று ஒரு கவுல் அடிக்கின்றது. அனிச்சையாகவே கைகள் அவனது மூக்கை கூர் தீட்டி விட்டுச் செல்கிறது.
"எப்படி இருந்தவங்க... இன்னிக்கு இப்படியாயிட்டாங்களே?' என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தோட்டத்துக்கு வந்து, முறத்திலிருந்த குப்பையை மூலையில் போட்டுவிட்டுப் போகும் அக்கா மகனிடம் சென்று, 'அத்தையைக் கொண்டாந்து ஏன் இந்த ரூமில் போட்டு வச்சிருக்கறீங்க?'' என்று பரிதாபமாகக் கேட்கிறான்.
'அவுங்களுக்கு சுகர் இருக்கு மாமா. அடிக்கடி யூரின் போவாங்க? வீட்டுக்குள்ளேயிருந்தா? அவங்களால உடனே எழுந்து அங்கே போக முடியாது. எங்களாலயும் கூடவேயிருந்தும் பார்த்துக்கவும் முடியலை. அதுக்குத்தான் பாத்ரூம் ஒட்டியே இருக்கற மாதிரி இங்க கொண்டாந்து விட்டுருக்கு மாமா'' என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு சென்றான்.
இன்னும் சற்று நேரத்தில் அக்கா வீட்டுக்காரர் வேறு, 'வா சிவா மண்டபத்துக்குப் போகலாம்'' என்று கூப்பிடுவார். அதிலிருந்து கல்யாண வேலை ஆரம்பித்துவிடும். கல்யாணம் முடிந்ததும் அப்படியே ஊருக்கு கிளம்புவதுபோல்தான் இருக்கும். அதனால் இந்த அறைக்கு இப்போதே காற்றோட்டத்துக்கு எதாவது வழி செய்தாக வேண்டுமே' என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
வெளியே பேச்சு சத்தம் கேட்டதும் அந்தப் பாட்டிக்கு முழிப்பு தட்டி, 'யாரு... என்ன...' என்பதுபோல் கண்களை சுருக்கி பார்த்தவள், 'வாப்பா'' என்றவாறு எழ முற்பட்டாள்.
"யாராவது தன்னைப் பார்க்க வர மாட்டார்களா? பேச மாட்டார்களா?' என்று காத்திருந்ததுபோல் மறுபடியும் வேக வேகமாக எழ முயன்றாள். மனதிலிருந்த வேகம் உடலில் இல்லை. பழுத்த பழமென்பார்களே அது இது தானோயென்று அவனை நினைக்க வைத்தது.
'படுங்க அத்தை'' என்று கை அமர்த்தினான். இவன் சொன்னது அவர்கள் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. விழுந்துக்கூட இருக்கலாம், இருந்தாலும், தன்னைப் பார்க்க, நாத்தனார் பையன் வந்திருக்கும்போது, நாம் மட்டும் படுத்தே கிடந்தால் அது நன்றாகவா இருக்கும் என்று பரவாயில்லை. 'ப்பா.. இருக்...கட்டும்'' என்றவள், ஒருக்களித்து, இரண்டு கைகளையும் கட்டிலில் ஊன்றி எழ முடியாமல் எழுந்து முந்தானையை சரி செய்துகொண்டாள்.
எவ்வளவு வயதானாலும் தானும் ஒரு பெண்தான் என்று அச்சப்பட்டுக்கொண்டே முந்தானையால் கழுத்தைச் சுற்றிக் கொள்கின்றாள். எப்படியும் எழுபது வயதாவது இருக்கும். கைகளில் தளதளவென்று காத்தாடிபோல் கூத்தாடும் சதை சுருக்கங்களெல்லாம், எலும்புகளில் ஒட்டி ஏலேலோ பாடுவதுபோல் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன. தலைமுடி அவளது தவ வாழ்க்கைப் போன்றே வெளுத்து வாங்கியிருக்கின்றது. முத்துப்பற்கள் இல்லாததால் முகவாய் சுருங்கி முன்தாடை நீண்டுப்போய் கிடக்கிறது. பானையில் வைத்த பழைய சட்டைபோல், அவளது முகம் அமுங்கிப்போய் கிடக்கிறது.
இந்த ஆறுக்கு ஆறு அறைக்குள், ஒரே ஒரு சின்னக் கட்டில் மட்டும்தான் போட முடியும். குருவிக் குஞ்சுபோல் சுருட்டிக்கொண்டு கிடப்பவளுக்கு இதுகூட பெரிதாகத்தான் தெரிய வேண்டும். கிழக்குப் பக்கம் சுவருக்குள் அமைக்கப்பட்டிருந்த அலமாரி மாடத்தில் அந்தப் பாட்டியின் துணிகள் ஒரு தட்டில் மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு தட்டில் ஒரு "பிளாஸ்டிக் டப்பா' அடிப்பகுதியில் கொஞ்சம் உப்புக்கடலைகள் கிடக்கின்றன.
அதன் மொறு மொறுவென்ற தோற்றம், பார்ப்பவர்களுக்கு எச்சிலைக் கூட்டி விழுங்கத்தான் செய்யும். அவர்களுக்குத்தான் பல்லில்லையே அப்பறம் எப்படி இதைச் சாப்பிடுவார்கள் என்று நினைப்பவர்களுக்கு, அதை விளக்கும் விதமாக பக்கத்திலே ஒரு பாக்கு உரலும் இருக்கிறது. அதற்கு தென்புறத்தில் இன்னொரு டப்பாவில் நிறைய மருந்து, மாத்திரைகள் இருக்கின்றன.
இவன் இங்கு வந்ததிலிருந்தே நாய் ஒன்று, அவ்வப்போது ஓடி வந்து நிற்பதும், இவனைப் பார்த்து "லொள்... லொள்...' என்று குரைத்துவிட்டு ஓடுவதுமாக இருக்கின்றது. அது படுத்துகொள்கிற இடத்தில் இவன் நிற்பதால் அப்படி குரைக்கிறதா? அல்லது யார் இந்த புதியவனென்று நினைத்து குரைக்கிறதா? என்று தெரியவில்லை. இவனும் அதனைப் புரிந்துக்கொண்டு "இரு... இரு... தோ கிளம்பிடுறேன்' என்பது போலவே அதைப் பார்க்கின்றான்.
'ஒக்.. கா....ரு...ப்பா..'' என்று நடுங்கிக் கொண்டுடே சொன்னதும், என்னவோ சொல்கிறார்கள் என்று குனிந்து காதுக் கொடுத்து கேட்டான். தான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை என்று அறிந்துக் கொண்ட பாட்டி, அந்தக் கட்டிலின் தென் மேற்கு மூலையை சைகையால் காட்டி, உட்காரு' என்று கையமர்த்தியப்பிறகுதான் அவள் சொன்ன விஷயமே அவனுக்குப் புரிகிறது.
இதில் உட்கார்ந்தால் தாங்குமா? என்று கை வைத்து லேசாக அழுத்திப் பார்த்தான். அப்பளம் உடைவதுபோல் மட மடவென்று ஒரு சத்தம் அவனுக்கு மட்டும் கேட்டிருக்க வேண்டும். சத்தம் இங்கிருந்துதான் வருகிறதா? அல்லது மனப்பிராந்தியா? இதற்கெல்லாம் இப்போது விடை தேடக் கூடாது. ஆர்வக் கோளாறில் ஏதாவது செய்யப் போய் மடக்கென்று உடைந்துப் போய்விட்டால், அதன் பிறகு அவர் தரையில்தான் படுக்க வேண்டி வரும். அந்தப் பாவம் நமக்கெதற்கென்று நினைத்துக் கொண்டவன், உட்காருவதற்கு வேறெதாவது இருக்கின்றதாயென்று திரும்பி சுற்றும் முற்றும் பார்க்கிறான். எதுவும் இல்லை. அப்படியே தேடி எடுத்துக்கொண்டு வந்தாலும், இந்த அறையில் எந்த சேரையும் போட முடியாது. வேண்டும் என்றால் ஸ்டூல் போட்டு உட்காரலாம். இப்போது அவனுக்கு ஸ்டூல் தேடும் எண்ணமில்லை. சுக துக்கங்களை இழந்து தன் உயிர் உறவுகளைக் கரையேற்றிவிட்டவளின் வாழ்வு, சுருக்கு மடி வலைப்போல் சுருங்கிக் கிடக்கிறது. அந்த சுருக்கத்தில் அவிஞ்சிப்போன அவர்களது அனுபவங்கள் எவ்வளவோ பொதிந்து கிடக்கின்றன.
அக்கா மகள் திருமணத்துக்காக, கூட மாட ஒத்தாசை செய்வதற்கு ஒருநாள் முன்னதாகவே வந்திருக்கின்றான் சிவா. அக்கா என்றால் பெரியப்பா பெண். பெரியப்பா பெண் என்றாலும் தன் சொந்த அக்கா போன்றுதான் பாசமாக இருப்பான். இருவரும் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். அந்த அன்பில்தான் அவளது மாமியாரைப் பற்றி அவரிடமே உரிமையாகக் கேட்க இருக்கிறான்.
அவளது மாமியார், பெரிய தாத்தாவின் பெண்தான்! இதற்கு முன் பலமுறை வந்திருக்கின்றான். குறிப்பாக, கிரகப் பிரவேசம், குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாள் விழா, காதுகுத்தி, மஞ்சள் நீர் சுபச் சடங்கு.. இவற்றிலெல்லாம் இந்த அத்தைதான் முன் நின்று எல்லா விசேஷத்தையும் எடுத்துக்கட்டிச் செய்வாள். இவளைக் கேட்காமல் யாரும் எதுவும் இந்த வீட்டில் செய்து விட முடியாது. அப்படிதான் எல்லோரையும் தன் கைக்குள் வைத்திருந்தாள்.
இளம் வயதிலே கணவர் இறந்தவுடன் இந்த அத்தைதான் குடும்பப் பாரத்தையே சுமக்க ஆரம்பித்திருக்கின்றாள். பிள்ளைகள் நண்டும் சிண்டுமாக இருந்திருக்கின்றனர். ஜீவனத்துக்கு வழி தெரியாமல் வீட்டு வாசலில் ஒரு பெட்டிக்கடை ஒன்றை வைத்திருக்கின்றாள். அது கொஞ்சம் கைக் கொடுக்கவே, அதோடு சேர்த்து வீட்டில் நான்கைந்து பசுக்களையும் வாங்கி வளர்த்து வந்திருக்கின்றாள்.
தினமும் காலையிலே அதனை ஓட்டிக்கொண்டுப் போய் ஆத்தோரம் கட்டிவிட்டு வருவாள். அதுவரைக்கும் பிள்ளைகளில் யாரையாவது ஒருவரை கடையில் விட்டுச் செல்வாள். போய் வந்ததும் தொழுவத்திலிருக்கும் சாணியெல்லாம் இவளே பிரம்புக் கூடையில் அள்ளி வைத்து, தனது மூன்று பிள்ளைகளுக்காக, சாணநீர் தலை வழியாகச் சொட்டுச் சொட்டாக மேலே ஊற்றுவதையும் பொருட்படுத்தாமல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டுப்போய், வடமேற்காக மலைபோல் கொட்டி வைத்திருக்கும் சாண குவியலில் கொட்டிவிட்டு வருவாள்.
மாலை, வெயில் தாழச் சென்று மாட்டையெல்லாம் ஓட்டிக் கொண்டு வந்து தோட்டத்தில் கட்டிவிட்டு, அலுமினிய குண்டானில் தவுட்டைக் கொட்டி தண்ணீரில் கரைத்து வைப்பாள். பால் கறப்பதற்கு முன் தண்ணீரைக்கொண்டு, அதன் மடியை சுத்தமாகக் கழுவிவிட்டு, அதற்கு வலி ஏற்படாதவண்ணம் விளக்கெண்ணையால் வருடிவிட்டுதான் பால் கறப்பாள். அந்தப்பாலை தெருவில் உள்ள வாடிக்கையாளருக்கும், அதே ஊரிலுள்ள டீக்கடைக்கும் ஊற்றிவிட்டு வருவாள்.
கூரை வீட்டிலே தன்னுடைய காலங்களைக் கழித்து விட்டாலும், தன் பிள்ளைகளாவது நன்றாகயிருக்க வேண்டுமென்றுதான். இந்த வீட்டை இருபது ஆண்டுகளுக்கு முன்பே, கூட்டுறவில் கடன் வாங்கியும், அது போதாமல், தான் வைத்திருந்த நகை நட்டுகளையெல்லாம் விற்று, போதாக் குறைக்கு சிலரிடம் கை மாத்தாக கொஞ்சம் பணம் வாங்கி, அப்போதே மூன்று சென்டில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டியிருக்கின்றாள்.
இந்த விவரம் தெரிந்துக்கொண்ட தூரத்து அண்ணன் ஒருவர் வாயிலிருந்த வெற்றிலை பாக்கு எச்சிலை "த்து...' என்று துப்பிவிட்டு, 'ஏம்மா...பொட்டப் புள்ûளைய வச்சிக்கிட்டிருக்கற... ஒனக்கெதுக்கு இவ்வளவு பெரிய வீடு? ஏன் கூரை வீட்டுலே இருந்தா ஆகாதா?'' என்று சொன்ன உறவுகளுக்கு மத்தியில் கௌரவமாக வாழ்ந்துக் காட்டினாள். அப்போது அந்தக் கிரகபிரவேசத்திற்கு வந்ததுகூட சிவாவுக்கு இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது. "ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூரோ, தொண்ணூத்தி ரெண்டிலதான் நடந்தது' என்று நினைப்பவனுக்கு ஆண்டுதான் சரியாக நினைவில் இல்லை. அப்போது விசேஷத்துக்கு வந்து செல்லும் உறவினர்களிடம் தான் கட்டிய வீட்டைப் பற்றி பெருமையாகப் பேசியவள் அப்போது இவனிடமும், "எப்படிப்பா இருக்கு வீடு?' யென்று கேட்டிருக்கின்றாள்.
'எல்லாம் நல்லாயிருக்கு அத்தே! பார்த்துப் பார்த்து கட்டியிருக்கறீங்க?'' என்று புகழாரம் சூட்டியிருக்கின்றான். நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், கட்டியவர்களுக்கு மனம் கோணக்கூடாதென்று, இவன் எப்போதும் அப்படித்தான் சொல்வானென்பது அவர்களுக்குத் தெரியாது.
'வீட்டில எல்லா விசேஷமும் செய்யலாம்போல? எத்தனை சதுரம் போட்டு கட்டியிருக்கிங்க அத்தே'' என்று மகிழ்ச்சியாக கேட்டான் சிவா.
தான் ஒரு சிறப்பான வேலையை செய்திருப்பதாக நினைத்து மகிழ்வுற்றவள் புன்னகைப் பொங்க, 'எப்படியும் பன்னெண்டு சதுரம் வரும்னு நெனைக்கிறேன்பா'' என்றிருக்கின்றாள்.
அந்தக் காலக் கட்டத்தில் அது பிரமாண்டமாக இருந்திருக்கின்றது. இப்போதுள்ள வீடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால், இது என்ன வீடு? இதுக்குப்போய் இப்படி ஒரு புகழாரமா? என்றுதான் சொல்லத் தோன்றும். அது காலமாற்றம். நாம் அந்தக் காலத்தோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது அதன் வேலைப்பாடு மொசைக் தரை, நாட்டுத் தேக்கில் செய்யப்பட்ட தலைவாசல் இப்படியெல்லாம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதால்தான் அப்படிக் கேட்க வைத்தது. அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
'ஆமாப்பா, ஒரு தடவைக் கட்டுறோம். நல்லா... சிறப்பா... இருக்கணும்மேன்னுதான் வீட்டைப் பார்த்துப் பார்த்து கட்டியிருக்கறேன். பிறந்தநாள், மஞ்சத் தண்ணி, ஏன் காதுகுத்திக்கூட இந்த ஹால்லே செய்யலாம். அப்படித்தான் கணக்குப்பண்ணி, ஹாலமட்டும் பதினாறுக்கு இருபத்தைஞ்சின்னுப் போட்டு நல்லா தாராளமாகக் கட்டியிருக்கறேம்ப்பா'' என்றாள். அதற்கப்பறம் அவன் கேட்கின்றானோ இல்லையோ, அந்த வீட்டின் அருமைப் பெருமைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே இருந்திருக்கின்றாள்.
'அப்பறம்பா.. பசங்களுக்கெல்லாம் ரூம் வேணுமில்ல, அதுக்குத்தான் ரெண்டு பெட்ரூம் போட்டிருக்கேன்.'' என்று சொன்னவள் அடுத்து பூஜை அறை, சமையல் அறை, கழிவறை.. என்று ஒவ்வொரு அறையாகக் காண்பித்து தான் எதற்காக இந்த அறையெல்லாம் போட்டிருக்கின்றேனென்று சொல்லி, தன்னுடைய தொலைநோக்குப் பார்வையை நினைத்துப் பார்த்து மகிழ்ந்துப் போயிருக்கின்றாள். அப்போது, ஒவ்வொரு அறையாகப் பார்த்து வந்தவன், 'இது என்ன ரூம் அத்தே'' என்று பின் பக்கத்திலிருந்த ஒரு சிறு அறையைப் பார்த்துக் கேட்டிருக்கின்றான்.
'இது ஸ்டோர் ரூம்பா. பழைய சாமான்கள் போட்டு வைக்கறதுக்கு ஒரு இடம் வேணுமில்லை. அதுக்குத்தான்! இதுல ஒரு கட்டிலைப் போட்டு படுத்தாப் போதும், தோட்டத்திலிருந்து தெக்கத்தி காத்து சும்மா குளுகுளுன்னு வாரியடிக்கும். இப்ப நீயே பாக்கறயில்ல?'' என்றாள் ஆனந்தமாக...!
அதன்பிறகு அக்கா பொண்ணுக்கு மஞ்சத் தண்ணியின்போது பார்த்துப் பேசிச் சென்றது அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்றுகூட முன் அறையில் தன்னுடைய பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவை ரசித்து, அந்தக் கூடைச்சேரில் குறுகிப்போய்தான் உட்கார்ந்திருந்தாள்.
'பரவாயில்லை அத்தே.. நீங்க என்ன நெனைச்சி செஞ்சிங்களோ.. அதேமாதிரி உங்கப் பேத்திக்கு இந்த ஹால்லே மஞ்சத் தண்ணியும் செஞ்சிப் பாத்துட்டிங்க?'' என்றான். அப்போது அவளுக்கு ஒரே பெருமிதம். மஞ்சள் சூரியனைப் போல் மழுமையான புன்னகையில் அவளது முகமே மலர்ந்திருக்கின்றது. தன்னால் சரி வர நடக்கப் புடிக்க முடியவில்லையென்றாலும் சந்தோஷமாக எழுந்து வந்து, 'வாப்பா சாப்பிடு'' என்று வாஞ்சையோடு அழைத்துச்சென்று உட்கார வைத்து அவள் கையாலே உணவும் பரிமாறினாள்.
அதற்ரு அப்புறம் இப்போதுதான் வந்திருக்கின்றான். வந்தவன் கொஞ்ச நேரம் சொந்த பந்தங்களோடு வெளியே பேசியிருந்து விட்டு, எங்கே அத்தையை காணவில்லை என்று ஒவ்வொரு அறையாகத் தேடிக்கொண்டே இங்கு வந்து விட்டான்.
வரும்போதே ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே வந்தது, இப்போது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அங்கிருந்த இரண்டு பெட்ரூமில் ஒன்றை கணவன், மனைவி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். மற்றொன்றில் பேரப் பிள்ளைகள் படிப்பறையாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஹாலில் மரச்சோபா, டிவி ஸ்டாண்ட், டீபாய், சேர், கம்ப்யூட்டர் என்று அறையே அடைத்துக் கொண்டதால் இவர்களுக்கான இருப்பிடம் இன்று பின்னுக்குப் போய் விட்டது.
'என்ன சிவா கல்யாணத்துக்கு ஹெல்ப் பண்ண வந்தியா? இல்லை நியாயம் பேச வந்தியா?'' என்று எங்கே அக்கா வீட்டுக்காரர் தேடிக்கொண்டே வந்துவிடப் போகிறார் என்ற அச்சம் அவனுக்குள் அவ்வப்போது எழத்தான் செய்கிறது. இருந்தாலும் அதையும் தாண்டி சில விஷயங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கிறது.
இவனுடைய திருமணத்தின்போது, பெண் வீட்டாருக்கு யாரோ மொட்டை கடுதாசியில், "அப்பன மாதிரி அவனும் குடிப்பான், ஊர்லகூட அவனப்பத்தி தப்பு தப்பாதான் பேசிக்கறாங்க. வேலைக்கும் சரியா போகமாட்டான். சூதுல உட்காந்தான்னா... எழுந்திருக்கவே மாட்டான். அதனால, ஒரு தடவைக்கு நாலு தடவை நல்ல யோசிச்சி முடிவெடுங்க.' என்று எழுதி இருந்திருக்கு. அந்த விஷ்யம் சிவாவுக்கு தெரிந்து, அவன் இந்த அத்தை மூலம்தான் பெண் வீட்டாரிடம் பேசியிருக்கிறான்.
அவர்களும், 'என் நாத்தனார் புள்ளையப்பத்தி எனக்கு தெரியாதா? அப்பா இல்லாத புள்ளத்தான்! ஆனா, அவ அம்மா ஒரு நாளும் தப்பா வளக்கல...'' என்று பல்வேறு விஷயங்கள் பேசி அந்தத் திருமணத்தை முடித்திருக்கிறாள். அதனால் தானோ என்னவோ இவளின் மீது அவனுக்கு தனிப்பட்ட மரியாதையும் பாசமும் எப்போதும் உண்டு.
"எப்படி இருந்தவங்க... இன்னைக்கு' என்று கண் கலங்கியவாறு அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, "லொள்..லொள்..'என்று மறுபடியும் நாயின் குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அவள் வளர்க்கும் நாய்தான்.
"நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறேன். உன்னால, எனக்கு கிடைடக்க இருந்த பிஸ்கட்டும் இன்னும் கிடைக்கலை. இப்ப நீ இங்க வரியா... இல்ல நான் அங்க வரட்டுமா' என்பதுபோல் அவனை அது முறைத்துக் கொண்டே, "லொள்... லொள்' என்று சின்னதாக விட்டு விட்டு குரைத்தது. எதற்காக அது குரைகின்றதென்று புரிந்துக்கொண்ட பாட்டி, தலையணைக்கு கீழே கையை விட்டு, கிடைத்த நான்கைந்து பிஸ்கட்டை எடுத்து அங்கிருந்தப்படியே "இந்தாடா செல்லம்' என்பதுபோல் வெளியே தூக்கிப் போட்டாள். வாலைக் குழைத்துக்கொண்டு அதனை அது கவ்விக் கொண்டு ஓடியது.
போட்டதை சாப்பிடுகிறதா? இல்லையா' என்பதுபோல் தலை சாய்த்துப் பார்க்கின்றாள். எங்கே கீழே விழுந்து விடப்போகிறாள் என்று பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, "பழைய சாமானெல்லாம் போட்டு வைக்கறதுக்குத்தான் இந்த ரூம்' என்று சுதாரிப்பாக இயற்கை விஞ்ஞாணியைப்போல் அப்போதே எப்படி இவர்களால் கணிக்க முடிந்ததோ' என்று அவன் நினைத்துக்கொண்டே இரண்டு கதவையும் திறந்து விட்டான்.
அதே தெற்குப்பக்க பூங்காற்று இப்போதும் குளுகுளுவென்று வாரியடித்து ஆனந்தப்படுத்துவதுபோல் அகம் மகிழ்ந்துக் கொண்டிருக்கும் அத்தையையே
ஆச்சர்யமாக பார்த்து நிற்கிறான் சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.