
2024-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் "சிறந்த வெளிநாட்டு திரைப்படம்' பிரிவுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது கிரண் ராவின் "லாபத்தா லேடீஸ்' திரைப்படம்.
இந்தாண்டு "வாழை', "கொட்டுக்காளி', "தங்கலான்', "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', "மகாராஜா', "ஜமா' போன்ற ஆறு தமிழ்த் திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வதற்கான பரிசீலனைப் பட்டியலில் இருந்திருந்தது.
தமிழிலிருந்து ஆறு திரைப்படங்களும், தெலுங்கிலிருந்து மூன்று திரைப்படங்களும், மலையாளத்திலிருந்து நான்கு திரைப்படங்களும், ஒடியா மொழியிலிருந்து ஒரு திரைப்படமும், ஹிந்தியிலிருந்து பன்னிரெண்டு திரைப்படங்களும், மராத்தி மொழியிலிருந்து மூன்று திரைப்படங்களும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்வதற்கான பட்டியலில் இருந்தது. இதிலிருந்து "லாபத்தா லேடீஸ்' எனும் ஹிந்தி திரைப்படத்தைத் தேர்வு செய்திருக்கின்றனர். இதற்கு முன்பு ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து "சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவு'க்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் என்னென்ன?
சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் 1969 -இல் வெளியான "தெய்வ மகன்' திரைப்படம்தான் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம். "உல்கா' என்ற வங்க மொழி நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி 1987 - இல் வெளியான "நாயகன்' திரைப்படம் இரண்டாவது திரைப்படம். "தெய்வ மகன்' திரைப்படத்துக்குப் பிறகு, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுப் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் திரைப்படம் இதுவாகும்.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கிய மற்றுமொரு திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ரகுவரன், ரேவதி நடித்திருந்த "அஞ்சலி' திரைப்படம் 1990-இல் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பிறகு 1992-இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "தேவர் மகன்' 65-ஆவது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்தனர்.
ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலில் இது இரண்டாவது கமல்ஹாசன் திரைப்படம்.
இதன் பிறகும் தொடர்ந்து இரு முறை கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களே ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டன. 1995- இல் வெளியான "குருதிப்புனல்' திரைப்படமும், 1996-இல் வெளியான "இந்தியன்' திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டன.
1998-இல் "ஜீன்ஸ்' திரைப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் ஆஸ்கருக்கு அனுபப்பட்ட இரண்டாவது திரைப்படம் இது.
இதன்பிறகு மீண்டும் கமல் இயக்கி நடித்த "ஹே ராம்' திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டது. மொத்தமாக கமல் நடித்த ஐந்து திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்குப்பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
"ஹே ராம்' திரைப்படத்துக்குப் பிறகு 16 ஆண்டுகள் எந்தத் தமிழ் திரைப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படவே இல்லை.
2016-ஆம் ஆண்டு வெளியான வெற்றி மாறனின் "விசாரணை' திரைப்படம்தான் "ஹே ராம்' திரைப்படத்துக்குப் பிறகு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்
படம். ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு 2021-இல் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான "கூழாங்கல்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு அறிமுக இயக்குநரின் படைப்பு இது.
"கூழாங்கல்' படத்துக்குப் பிறகு எந்த தமிழ்த் திரைப்படமும் ஆஸ்கரின் "சிறந்த வெளிநாட்டு' திரைப்படம்' பிரிவுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.