ஏழு நாள்களுக்காக விண்வெளி சென்ற நாஸா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளியில் சுமார் நான்கு மாதங்களாகத் தங்கியிருக்கின்றனர். அவர்களின் விண்வெளி வாழ்க்கை எப்படியிருக்கிறது?
சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில், "தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியுடன் நாள்கள் நகருகின்றன. நான்கு மாதங்களாக நான் வளர்த்த இரண்டு நாய்கள், எனது நண்பர்களை அதிகமாக இழந்திருக்கிறேன். அவர்களுக்கும் என்னைப் பிரிந்து இருப்பது கடினம். ஆனால் அவர்கள் என் நிலைமையைப் புரிந்துள்ளனர் என நினைக்கிறேன். நாங்கள் அநேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்குத் திரும்புவோம்.
நான் என் நாய்களை அதிகாலை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, கேட்கும் பறவைகளின் விதம் விதமான ஒலிகளை போன்ற பலவற்றை தவறவிட்டுள்ளேன். பல மனக்குறைகள் இருந்தாலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான் செய்ய விரும்புகிற ஒரு விஷயம் மனதில் தோன்றுவதை எழுத்தில் பதிவு செய்வதுதான். எனது அனுபவங்களை, என் மனநிலையை மற்றவர்கள் அந்தப் பதிவுகள் மூலம் புரிந்துகொள்ள முடியும். விண்வெளி அனுபவங்கள் நிச்சயம் நூலாக வெளிவரும்'' என்கிறார்.
'விண்வெளி சுமிதாவுக்குப் பிடித்த இடம். இப்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழ்நிலையை சுனிதா சமாளிப்பார்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அவரது கணவரும் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றுபவருமான மைக்கேல் ஜே. வில்லியம்ஸ். திருமணமாகி இருபது ஆண்டுகளான இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. நாஸாவில் சேருவதற்கு முன்பு, சுனிதா ராணுவ ஹெலிகாப்டர்களை இயக்கிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலானது.
சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 -இல் தனது 59-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். முன்னதாக, 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது, தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
சுனிதா வில்லியம்ஸூம், புட்ச் வில்மோரும் விண்வெளியில் இருந்துகொண்டே நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க, வாக்குச் சீட்டுக்காக விண்ணப்பத்துள்ளனர்.
விண்வெளி ஆய்வகத்தில் புவிஈர்ப்பு இல்லாததால் எல்லா பொருள்களும் மிதக்கும். சீவிய தலைமுடி கூட எழுந்து நிற்கும். உடலும் மிதக்கும். அதனால் எடையைத் தாங்கும் வேலை எலும்புகளுக்கும் குறைவதால் எலும்புகளில் அடர்த்தி பலம் மெல்ல, மெல்லக் குறைகிறது. இதை எதிர்கொள்ள, இரண்டு விண்வெளி வீரர்களும் தினசரி இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
ஊட்டம் தரும் சிறந்த "உறைந்த-உலர்ந்த' உணவுகள் ஆய்வு நிலையத்தில் கிடைக்கின்றன. கூடவே வைட்டமின் மாத்திரைகளும்தான்.
பூமியில் பல் துலக்கிவிட்டு எச்சிலை வெளியே துப்பி விடலாம். ஆனால் விண்வெளியில் பல்துலக்கி துப்பினால் எச்சில் அறையில் மிதக்கும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க பல்துலக்கியவுடன் பல்பசையை அப்படியே விழுங்க வேண்டும். தவிர பல் துலக்கும்போது பல் பசை நுரை கடுகு அளவு கூட வாயிலிருந்து வெளியே வந்து விடாமல் வாயை மூடியவாறே பல் துலக்க வேண்டும். பல் பசை நுரையை விழுங்கியதும் பற்களை ஈரமான டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
விண்கலத்தில் கழிவறையில் உறிஞ்சும் குழாய் மூலம் மனிதக் கழிவுகளை வேதியியல் பொருள்களின் துணையோடு ஆவியாக்கப்படுகிறது. சிறுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
விண்வெளி ஆய்வகத்தில் வெப்பநிலை "குளுகுளு'வாகப் பராமரிக்கப்படுவதால், ஆய்வகத்தில் வசிப்பவர்களுக்கு வியர்க்காது. அதனால் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் உடைகளை சில வாரங்களுக்கு அல்லது மாதம் ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். உடலை சுத்தப்படுத்த பிரத்யேக டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தப்படும்.
விண்வெளி வாழ்க்கையிலும் பல நடைமுறை சிரமங்கள் இருக்கின்றன. அவற்றை ஈடு கட்டும் விதமாக சுனிதாவுக்கு மாதம் பத்தரை லட்சம் ரூபாய் சம்பளமாகத் தரப்படுகிறது.
நீண்ட காலம் தங்குவது ஏன்?
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. ஜூன் 5-இல் அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து புறப்பட்டு, 7-இல் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இருவரும் ஜூன் 14-இல் மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களைக் கொண்டு சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்கள் இல்லாமல் அண்மையில் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்த பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரட்டும்...
சுனிதா அமெரிக்காவில் இருந்திருந்தால் கணவருடன் மெழுகுவர்த்தி ஏற்றி கேக் வெட்டி பிறந்தநாளைக் அமர்க்களமாகக் கொண்டாடியிருப்பார்.
செப். 19-இல் பிறந்த நாளன்று விண்வெளி ஆய்வகத்தில் கருவிகளை சக விண்வெளி வீரர்களுடன் ஆய்வு செய்தார் சுனிதா. நாஸா இயக்குநர்களுடன் கலந்துரை நிகழ்த்தி, ஆய்வகத்தின் எதிர்காலத் திட்டங்கள், விண்வெளி ஆராய்ச்சி பற்றி விவாதித்தார்.
ஆனால் இந்திய பாட்டு-இசை நிறுவனமான "சரிகமா' சுனிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடியது. சோனு நிகம், ஷான், நீதி மோகன் போன்ற புகழ்பெற்ற பாடகர்கள் "இந்தப் பிறந்தநாள் மீண்டும் மீண்டும் வரட்டும்' என்று பொருள்படும்படியான "பார் பார் தின் யே ஆயே" என்ற பழைய ஹிந்திப் படப் பாடலைப் பாடி வாழ்த்தினர். குஜராத்தில் சுனிதாவின் பூர்விக கிராமத்தில் சுனிதா நலமாக பூமி வந்து சேர பூஜை-பிரார்த்தனைகள் கோவில்களில் நடத்தப்பட்டன.
சர்வதேச விண்வெளி ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பை நாஸா சுனிதாவுக்கு இரண்டாவது தடவையாக வழங்கியுள்ளது. 2012 விண்வெளிப் பயணத்தின் போது சுனிதா தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.