திரைக் கதிர்

ஒரு வழியாக விஜய், அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கட்சியை அறிவித்துவிட்டார்.
திரைக் கதிர்

ஒரு வழியாக விஜய், அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கட்சியை அறிவித்துவிட்டார். "இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு' கட்சிப் பணி என்று விஜய் குறிப்பிட்டிருக்கும் நிலையில், படத்தை இயக்கப்போவது கார்த்திக் சுப்புராஜ் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், கடந்த வாரம் விஜய் - அ.வினோத் சந்திப்பு பனையூர் இல்லத்தில் நடந்திருக்கிறது. "படத்துக்காக அல்ல, வேறு ஒரு விஷயம் குறித்து ஆலோசிக்க' என அதற்கு விஜய்க்கு நெருக்கமானவர்களே விளக்கம் சொல்லி, கார்த்திக் சுப்புராஜின் பதற்றத்தைப் போக்கியிருக்கிறார்கள். விஜய்யின் கடைசிப் படம் என்பதால், படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிற, தயாரிப்பாளரைத் தெலுங்குப் பக்கம் தேடிப்பிடித்திருக்கிறார்கள்.

------------------------------------------------

சமீபத்தில் வெளியான "வடக்குட்டி ராமசாமி' படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தானம். இதனிடையே "டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்குகிறார். இனி வரும் அடுத்தடுத்த படங்களிலும் காமெடி களைகட்டும் என்கிறது அவரது வட்டாரம்.அன்புச்செழியன் தயாரிப்பில், "இந்தியா பாகிஸ்தான்' பட இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுவும் காமெடி படமாகும். முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. டப்பிங்கையையும் நிறைவு செய்து கொடுத்துவிட்டார் சந்தானம். கோடை கொண்டாட்டமாக ஏப்ரலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து மே மாதத்தில் "டிடி ரிட்டர்ன்ஸ்' இரண்டாம் பாகம் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள்.

------------------------------------------------

அஜித் படம் தான் அடுத்து என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். விக்னேஷ் சிவனும் பரபரப்பாக ஸ்கிரிப்டில் மூழ்கியிருந்தார். ஏனோ அந்த ப்ராஜெக்ட் நடக்கவில்லை. அதைக் கடந்த விக்னேஷ் சிவன் அடுத்து வேறு ஸ்கிரிப்டை கையிலெடுத்தார். அதில் வந்து சரியாக உட்கார்ந்தார் பிரதீப் ரங்கநாதன். "லவ் டுடே'க்குப் பிறகு எல்லோரும் ஆசை ஆசையாக பிரதீப்பை எதிர்பார்க்க, அவர் வந்து சேர்ந்ததோ விக்னேஷ் கைகளில். அப்படி தீர்க்கமான ஸ்கிரிப்ட்டை எழுதியிருந்தார் சிவன் சத்தமே போடாமல் பிரதீப்பை அழைத்துக் கொண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்திற்கே போய்விட்டார். அங்கேயே ஏழு நாள் ஷுட்டிங் மங்களகரமாக நடத்த ஆரம்பித்து விட்டார். அத்தனை நாட்களிலும் சீமான் பிரதீப்பின் அப்பாவாக பிரமாதமாக நடித்தது தான் இப்போது வரைக்கும் யூனிட் காரர்களால் பேசப்படுகிறது.

------------------------------------------------

நயன்தாராவைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் பாலிவுட்டில் "பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மலையாளத்தில் வெளியான "கீதாஞ்சலி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சினிமாவில் பத்தாண்டுகளைக் கடந்து விட்டார். தனது படங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும், கீர்த்தி ஹிந்தியில் வருண் தவானின் 18-ஆவது படமாக உருவாகி வரும் "பேபி ஜான்' படத்தில் நடித்து வருகிறார். தமிழில் தயாரிப்பாளராகவும் ஜெயித்த, அட்லி இந்த படத்தின் மூலம் ஹிந்தியில் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். இப்படம் "தெறி' படத்தின் ரீமேக். தமிழில் "கீ' படத்தை இயக்கிய காளீஸ் இதனை இயக்குகிறார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், பி. எஸ். அவினாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் மும்பையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தவிர ஹிந்தியில் வெப்சிரீஸ் ஒன்றையும் கைவசம் வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com