அமெரிக்காவில் அசத்தும் தமிழர்...

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த வழுதூரை சொந்த ஊராகக் கொண்ட ஸ்வர்ணவேல், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, திரைப்பட உருவாக்கம் குறித்து கற்பித்து வருகிறார்.
அமெரிக்காவில் அசத்தும் தமிழர்...
Published on
Updated on
4 min read

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த வழுதூரை சொந்த ஊராகக் கொண்ட ஸ்வர்ணவேல், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, திரைப்பட உருவாக்கம் குறித்து கற்பித்து வருகிறார்.

சென்னைக்கு அண்மையில் வருகை தந்த அவருடன் ஓர் சந்திப்பு:

திருநெல்வேலியில் இருந்து மிச்சிகன் பயணம் எப்படி சாத்தியமானது?

அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள வழுதூர் கிராமம்தான் எனக்கு பூர்விகம். திருநெல்வேலி- கடையம் வழித்தடத்தில், செங்குளம் என்ற நிறுத்தத்தில் இறங்கி , ஒன்றரை கி. மீ. நடக்க வேண்டும்.

நான் சிறுவனாக இருந்தபோது, வறட்சியால் எங்கள் குடும்பம் பிழைப்பு தேடி மும்பை சென்றது. தாணே அருகில் முலுண்ட் என்கிற ஊரில்தான் பள்ளி, கல்லூரி நாள்கள் கழிந்தன. வேலைவாய்ப்பு கருதி பி.காம் முடித்தேன். படிக்கும்போது, நாடகங்களில் நடித்தேன். அப்படியே திரைத்துறையின் மீது ஆர்வமும் வந்தது.

பூணே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கத்தைப் பற்றி முடித்தேன். பாலிவுட்டில் சில காலம் வேலை பார்த்தேன். எனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்குத் திரும்பினேன்.

ஊரில் தங்கியிருந்தபோது, வில்லுப்பாட்டுக் கலைஞர் காவு பாண்டியன் என்பவர் வாழ்க்கையை 'வில்லு' எனும் பெயரில் ஆவணப் படமாக எடுத்தேன். அது மும்பை திரைப்பட விழாவில் பங்கேற்றது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூடன் பணியாற்றியோர் களக்காட்டில் இருந்தனர். அவர்களை வைத்து 'ஐ.என்.ஏ.' என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். இயக்குநர் அருண்மொழி உதவிசெய்தார்.

நேதாஜி தொடர்புடைய காட்சிகளை சென்னையில் இருந்த நேதாஜியின் செயலாளர் பாஸ்கரன் என்பவர் கொடுத்தார். இரண்டரை மணி நேரம் ஓடும் அந்தப் படத்தை ஒரு மணி நேரமாகச் சுருக்கினோம்.

தூர்தர்ஷன் கேட்டபோது அரை மணி நேரமாக்கிக் கொடுத்தோம். 1998 ஜனவரி 23-இல் நேதாஜி நூற்றாண்டு நினைவையொட்டி, காலை 10 மணியளவில் ஒளிபரப்பானது. பல கோடி பேர் பார்த்தனர்.

எங்கள் ஊரில் பீடி சுற்றும் தொழில் செய்யும் 13 வயது பெண்ணின் கதையை அடிப்படையாக வைத்து, இத்தாலி நண்பர் இலாரியாவுடன் இணைந்து இத்தாலி டி.வி.க்காக

'தங்கம்' என்ற ஆவணப் படத்தை எடுத்தேன். பீடி சுற்றும் தொழில் பிடிக்காமல், தங்கம் வீட்டை விட்டு ஓடி விடுவாள். அம்பாசமுத்திரத்துக்குச் சென்று கிருஷ்ணா திரையரங்கில் 'ஒளிவிளக்கு' படம் பார்த்துவிட்டு, ஊரைச் சுற்றிப் பார்ப்பாள். இரவில் கடையில் பரோட்டா சாப்பிடுவாள். பிறகு பெட்ரோல் பங்க் அருகில் அமர்ந்திருப்பாள். பதற்றத்துடன் அப்பா மகளைத் தேடி கண்டுபிடித்து திட்டி அழைத்துச் செல்வார். இந்தப் படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது.

உலகமயமாக்கலுக்குப்பின் பிலிம்ஸ் டிவிஷனிலிருந்து இந்த மாதிரியான படங்களுக்கு நிதி கிடைப்பதில்லை.

ஒரு கட்டத்தில் எனது ஆவணப்பட அனுபத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சென்னைக்கு வருகை தந்து, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்.ஏ. ஊடகவியலுக்கு நான் ஆவணப்படம் குறித்து பயிற்சி அளித்தேன். அப்போது 'மேஜர் ஃபிலிம் தியரி' என்று ஒரு புத்தகம் கிடைத்தது. திரைப்படத் தயாரிப்பு கற்றிருந்தும் இன்னும் ஆழமாகப் படிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

இந்தியாவில் திரைத்துறைக்கான பிரத்யேக முனைவர்பட்டப் படிப்பு இல்லை. வெளிநாட்டில் படித்து பிலிம் ஸ்டடீஸில் முனைவர் பட்டம் வாங்க விரும்பியபோது, பூணேவில் எனக்கு கற்பித்த ஆசிரியர் சதீஷ் பகதூர் ஊக்கப்படுத்தினார்.

அமெரிக்காவில் இருந்து வந்த பேராசிரியர் கோரி க்ரீக்மர் என்பவர் பூணே திரைப்படக் கல்லூரிக்கு வந்தபோது, அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். என்னுடைய ஆர்வத்தையும் 20 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தையும் பார்த்துவிட்டு உதவி செய்தார். ஐவோவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேலை செய்துகொண்டே படித்து முனைவர் பட்டம் வாங்கினேன். பின்னர், மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை கிடைத்து, 15 ஆண்டுகளாக திரைக்கதை, திரைப்பட உருவாக்கம் பற்றிப் பாடம் எடுக்கிறேன்.

அமெரிக்க மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள்?

ஆங்கிலம், ஊடகத் துறைகளில் எனது கற்பித்தல் பணி இருக்கும். வகுப்பறையில் 24 மாணவர்கள் வரைதான் அனுமதி. என் வகுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பி 32 பேர் வரை சேர்ந்து விடுவார்கள். ஆர்வமாகக் கற்றுக் கொள்வார்கள்.

ஊடகவியல், திரைக்கதை எழுதுதல், காட்சிகளுக்கான புனைவை எழுதுதல், திரைப்படம் உருவாக்குதல், குறும்படம் உருவாக்குதல், காட்சிகள் அமைத்தல், காட்சிகளைப் பிரித்து எழுதுதல் போன்றவை கற்பிக்கப்படும். என்னிடம் படித்தவர்கள் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். என்னுடைய மாணவி ஒருவர் எழுதி, இயக்கிய 'காலேஜ் ஹ்யூமர்' என்கிற இணையத் தொடர் பெரிய வெற்றியைப் பெற்றது.

அமெரிக்க மாணவர்கள் இந்திய திரைப்படங்கள் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

ஹிந்தி திரைப்படங்களை அமெரிக்க மாணவர்கள் அதிக அளவில் பார்க்கின்றனர். முன்பெல்லாம் அவர்கள் ஒரு சோகமான காட்சியில் திடீரென்று பாடல் ஒலிக்கும்போது அதிர்ச்சியடைவார்கள். இப்போது அதற்கு அவர்கள் பழகி விட்டார்கள். இந்திய படங்கள் மீது குறிப்பாக வைக்கப்படும் ஒரு விமர்சனம் அவை அனைத்தும் ராமாயண, மகாபாரதத் தாக்கத்தில் உருவான கதைகள் போலிருக்கும் என்பதுதான். இதற்கு எதிர்வினையும் இருந்தது.

தமிழ்த் திரையுலகில் நீங்கள் காணும் மாற்றம் என்ன?

ஒரு காலத்தில் ஏவிஎம் , ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், விஜயா வாகினி போன்ற நிறுவனங்கள் திரைப்படங்களைத் தயாரித்தன. அப்போது முதலாளிகள் கை ஓங்கி இருந்தது. உழைப்பவர்கள் செழுமையாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. குறைந்தபட்ச ஊதியத்துக்கு உத்திரவாதம் இருந்தது. படத்தின் லாப, நஷ்டங்களை முதலாளிகள் தாங்கினார்கள். பாதுகாப்பான வியாபாரம் அப்போது இருந்தது.

பின்னர், சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் ஒரே நிறுவனத்துக்கு 20 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்கள். இப்போது திரைத்துறையின் போக்கே மாறி உள்ளது.

வியாபார விஸ்தீரணம் அதிகரித்துள்ளது. ரூ.400 கோடியில் படம் எடுக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஒரு காலத்தில் விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுத்து படங்கள் எடுத்தார்கள். இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. விநியோகத் தொழிலே இன்று முடங்கியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், நிறைய திரையரங்குகளை கையில் வைத்துகொண்டு செய்யும் விநியோகம் தற்போது நடைபெறுகிறது. இதில் வெளிப்படைத் தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கூற முடியாது. திரைத்தொழில் ஒரு சூதாட்டம் போல் மாறி உள்ளது. சிறிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தற்போது திரைத்தொழிலில் ஈடுபடுவது எளிதல்ல.

'அன்றும் இன்றும் திரை ரசனை' எப்படி?

எவ்வளவோ மாற்றங்கள். அப்போதெல்லாம் திருநெல்வேலிக்கு எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வருவதற்கு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகும். மதுரை எல்லாம் போய் விட்டுதான் திருநெல்வேலிக்கு வரும். அதுவும் சென்ட்ரல், ரத்னா போன்ற ஓரிரு திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படும். அம்பாசமுத்திரம் அல்லது முக்கூடல் வர பல மாதங்களாகும்.

தற்போது அமெரிக்காவில் வில் ஸ்மித் படம் என்றைக்கு வெளியாகிறதோ அதே நேரத்தில் திருநெல்வேலியில் அதைப் பார்க்க முடிகிறது. ஹாலிவுட் படங்களையும் விரும்பிய மொழியில், சப் டைட்டிலுடன் பார்க்க முடிகிறது. ஹாலிவுட் நடிகர் திருநெல்வேலி பாஷை பேசுகிறார்.ஆங்கிலப் பாத்திரங்களை உள்ளூர் மயப்படுத்தி மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கிறார்கள்.

முன்பெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நட்சத்திரப் படங்கள் ஒரே திரையரங்கில் 175 நாள்கள் ஓடிய வரலாறு உண்டு. பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களை ஆயிரம் திரையரங்களில் ஒரே நாளில் வெளியிட்டு முதல் இரண்டு வாரங்களில் வசூலை அள்ளுவதுதான் இப்போதைய போக்காக இருக்கிறது.

முன்பெல்லாம் வணிக இலக்கணத்துக்குள்தான் படத்தை எடுக்க முடியும். தற்போது 'கொட்டுக்காளி', 'கூழாங்கல்', 'வாழை', 'லப்பர் பந்து' போன்ற முயற்சிகள் செய்ய முடிகின்றன. இவற்றில் வணிக ரீதியாக சில படங்கள் வெற்றியும் பெறுகின்றன. திரைப்பட விழாக்களிலும் திரையிடப்படுகின்றன. ஓ.டி.டி. வாய்ப்புகளும் இப்போது உள்ளன.

வணிகப் படங்கள் நடுவே புதிய முயற்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு வெளி கிடைத்துள்ளது. சமூகப் பிரச்னை, தலித் பிரச்னையைப் பற்றி படங்கள் எடுத்துப் பேச முடிகின்றன. அதற்கான ஒரு வியாபாரவெளியை உருவாக்க முடிகிறது. இது ஒரு பெரிய பாய்ச்சல்தான்.

இதையெல்லாம் அன்று நினைத்துப் பார்க்கவே முடியாது. தற்போது படம் தயாரிப்பது சுலபம்தான். திரையிட்டு, போட்ட பணத்தை எடுப்பதுதான் சிரமம். ஓடிடியும் சிறு சுயாதீனப்படங்களுக்கு அனுகூலமாக இல்லை.

'வாழை', ' லப்பர் பந்து' போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் 'கூழாங்கல்', 'கொட்டுக்காளி' போன்ற படங்கள் பேசப்பட்ட அளவுக்கு வெற்றி பெறவில்லை.அதற்கான ரசனையை மக்களிடம் வளர்க்க வேண்டும். அந்தக் கடமை நமக்கு உள்ளது.

தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால் 'ஏரி பிளக்ஸ் கேமரா' என்றால் அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. கோடீஸ்வரர்கள்தான் அதை வாங்க முடியும். படப்பிடிப்புக்கு வரும்போது அதன் கூடவே நான்கு பேர் வருவார்கள் .

வாடகைக்கு தான் அதை எடுக்க முடியும்.

தற்போது டிஎஸ்எல்ஆர் கேமராவில் கூட படமெடுத்துவிட முடியும். ஏன் செல்போனில் எடுத்துக் கூட திரைப்பட விழாக்களுக்கு அனுப்புகிறார்கள். விருதுகளும் வாங்குகிறார்கள் .அப்படிப்பட்ட தொழில்நுட்ப சாத்தியங்கள் இன்று உள்ளன.

திரை ரசனையைப் பொருத்தவரை கர்நாடகம், கேரள மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டில் முனைப்பான திரைப்பட இயக்கம் எதுவும் வளரவில்லை. ஆனால் அவ்வப்போது முயற்சிகள் நடக்கும். செழியன் 'டுலெட்' , அம்ஷன் குமார் 'மனுசங்கடா' , பா.ரஞ்சித் 'அட்டகத்தி' ,

'மெட்ராஸ்' போன்ற படங்களைத்தான் தங்களது அடையாளமாக இவர்கள் முன் மொழிகிறார்கள். இதெல்லாம் முன்பு நினைத்தே பார்க்க முடியாது. 'அவளுக்கென்று ஒரு மனம்' போன்ற மாறுபட்ட படங்களை எடுக்க கலைக்கோவில் ஸ்ரீதர் மிகவும் சிரமப்பட்டார். சிறிய படங்களுக்கு என்றும் போராட்டங்கள் இருக்கின்றன. டிஜிட்டல் மயமானது தற்போது ஓடிடி, திரைப்பட விழாக்கள் போன்றவற்றைச் சாத்தியமாக்கி உள்ளது.இந்தப் புதிய வெளி இளைய படைப்பாளிகளுக்கு ஒரு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது.

மாறிவரும் கேளிக்கைத் தொழில்நுட்பங்களானது திரைத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா?

ஒரு காலத்தில் திரைப்படம் மட்டுமே பெரிய கேளிக்கை ஊடகமாக இருந்தது. தற்போது ஏராளமாக விரிவடைந்துள்ளது. இருந்தாலும் திரைப்படத்துக்குரிய ஈர்ப்பும் ஏற்பும் குறைந்து

விடாது. திரைப்படம் என்றைக்கும் அழிந்துவிடாது. இந்த சவால்களைத் தாண்டி எப்படிப் படம் எடுப்பது என்பதைப் பற்றியே யோசிக்க வேண்டும்.இந்தப் போராட்டம் உலக நாடுகள் அனைத்திலும் உள்ளன. இவ்வளவு சவால்கள் இருக்கும்போது அதை அலட்சியப்படுத்திவிட்டு வருகிற சாதாரணமான படங்கள் தோல்வி அடையத்தான் செய்யும்.

எல்லா சவால்களையும் கடந்த கதைசொல்லலும் திரைப்படமும் நிலைத்து நிற்கும்.

- அருள்செல்வன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com