
சர்தார் 2 : கார்த்தி சொல்லும் ரகசியம்!
நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-இல் வெளியான 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் படத்தில் இணைந்திருக்கின்றனர். சென்னையில் , திரைப்படக் குழு சார்பில் முன்னோட்ட காட்சி அண்மையில் வெளியிடப்பட்டபோது, கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, 'சர்தார் என்று பெயர் வைத்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீது தனி ஈர்ப்பு எனக்கு உண்டு. மித்ரன் அடுத்து என்ன சொல்லிப் பயமுறுத்தப் போறாருன்னு எல்லோரும் கேக்கறாங்க. முதல் படத்துல (இரும்புத்திரை) மொபைல்ல மெசேஜ் வந்தாலே பயமா இருக்கும், அடுத்த படத்துல (சர்தார் 1) வாட்டர் பாட்டில் பார்த்தாலே பயமா இருக்கும். இந்தப் படத்துல அதைவிட பயங்கரமான விஷயத்தை வச்சிருக்கிறார். வில்லன் எவ்ளோ பெரிய ஆளுறத வச்சுதான் ஹீரோ எவ்ளோ நல்லவன்றது. சண்டை போடுற ரெண்டு பேரும் மிகப்பெரிய ஆளா இருந்தாதான் போர் சுவாரசியமா இருக்கும். அப்படி இந்தப் படம் மிகப் பெரிய போர் பத்தி பேசுது.
எதிரில் எஸ்.ஜே. சூர்யா என்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். மித்ரனின் ஒரு பழக்கம் என்னனா, ஃபர்ஸ்ட்ல ஃப்ளாஷ்பேக்தான் எடுப்பார். இன்றைக்குத் தயாரிப்பாளராக இருக்கிறது ஈஸி இல்லை. வெறும் ஐடியாவையும், உழைப்பையும் மட்டுமே நம்பி பெரிய ரிஸ்க் எடுக்குறாங்க? அந்த அளவுக்கு, இந்தப் படத்துல மித்ரனோட உழைப்பை முக்கியமா பாக்றேன். எல்லோருக்கும் இது புரியணும், சுவாரசியமா இருக்கணும்னு நெறைய மெனக்கெட்டிருக்கிறார்.
எஸ்.ஜே சூர்யாவுக்கு நடிப்புத் தீனி எவ்ளோ கொடுத்தாலும் அவருக்குப் பத்தறதில்ல. அவர் கேட்டு கேட்டு பண்றத பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும். அவர் செட்டுல நாங்க செல்போன் தொட்றதே இல்ல. அவர்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிறதுக்கு அவ்ளோ விஷயம் இருக்கும். கைதிக்கு அப்புறம் நானும் சாம்.சி.எஸ்ஸூம் இணைந்திருக்கோம்' என்று பேசி முடித்தார்.
விஜய் சேதுபதி - அசத்தும் லைன் அப்!
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்', 'மஹாராஜா', 'விடுதலை பாகம் -2' போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி தூள் கிளப்பியிருந்தார்.
தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அறிவிப்பை படக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்டில் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை சார்மி கௌரும் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இதுகுறித்து சமூக வலைதளப் பக்கங்களில், 'யுகாதி பண்டிகையன்று சென்சேஷனல் கூட்டணியின் புதிய சாப்டர் தொடங்கியிருக்கிறது' எனப் படக்குழு பதிவிட்டிருக்கிறது.
இத்திரைப்படம் 'பான் இந்தியன்' திரைப்படமாக அத்தனை மொழிகளிலும் உருவாகி வெளியாகவிருக்கிறது. படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கிறது.
இதுதவிர 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' பட இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'ஏஸ்' திரைப்படமும் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலும் அண்மையில் வெளியாகியிருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'ட்ரெயின் படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதில் ஷ்ருதி ஹாசன், நாசர் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் முடிந்திருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த லைப் அப்பை தாண்டி 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடித்துவருகிறார்.
ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு!
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் 'டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்துக்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி , ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துகொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கு ஜோதிகா தனது நண்பர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து அவர்களைப் பற்றியும், அவர்களை சந்திப்பதைக் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் த்ரிஷாவுடன் முன்பு எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், 'நேரம் பறந்து கொண்டிருக்கிறது. அது உங்களை உயரத்திற்குக் கூட்டிச்செல்கிறது.' என குறிப்பிட்டிருக்கிறார்.
நடன இயக்குநர் பிருந்தாவுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து , 'இந்தப் பெண் அவரின் விரல்களால் எங்களை நடனமாட வைத்தவர்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தன் நண்பர்கள் அனைவருடனும் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படத்தைப் பகிர்ந்து, 'இதைதான் நான் தெரபி என்று அழைப்பேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.