ஆயிரக்கணக்கான முதியோர்களின் வீடுகளுக்குச் சென்று நியாயமான கட்டணம் பெற்றுகொண்டு மருத்துவச் சேவையை மேற்கொண்டு வருகிறார் முப்பத்து நான்கு வயதான மருத்துவர் சுவாமிநாதன்.
மதுரை மாநகரிலும், சுற்றுப்புறப் பகுதிகளில் வசிப்போருக்காக இவர் செயல்படுத்திவரும் 'டாக்டர் ஆன் வீல்' எனும் திட்டம் 5 ஆண்டுகளாக இருக்கிறது.
முதியவர்கள் செல்போனில் அழைப்பு விடுத்தால் போதும்; ஆம்புலன்ஸ்ஸில் தன் உதவியாளர்களுடன் சென்று அவர் மருத்துவ உதவிகளைச் செய்துவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியது:
'எனக்கு சொந்த ஊர் திருச்சி. சிறு வயதில் எனது அம்மா கனடாவில் குடியேறியதால், என்னையும், என் தங்கையையும் கனடா அழைத்துச் சென்றார்.
பள்ளிப் படிப்பை கனடாவில் முடித்தேன். மருத்துவப் படிப்பை சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் படித்தேன். பின்னர், முதுநிலைப் பட்டமும் பெற்றேன்.
மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது முதியவரை வீட்டிலிருந்து அழைத்துவந்து, திரும்ப வீட்டில் சேர்க்கும் வரை குடும்பத்தினர் படும் சிரமங்களை நேரில் பார்த்தேன்.
ஃபிளாட்டுகளில் வசிக்கும் முதியவர்களை மாடியிலிருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டுவர, பிறகு வீடு கொண்டு சேர்க்க நடைமுறை சிரமங்கள் இருக்கின்றன. செலவும் அதிகமாகும். பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்க, தனியாக வாழும் பெற்றோரின் நிலைமை இன்னும் சோகமானது. முதியோர்களுக்கு உதவிக்கு ஆள் கிடைப்பது குதிரைக்கு கொம்பாக இருக்கிறது.
'வீட்டுக்கு வந்து நோயாளியைக் கவனியுங்க' என்று மருத்துவரை அழைத்தால் கூட 'மருத்துவமனைக்கு கொண்டு வாங்கள்? என்றுதான் பெரும்பாலான மருத்துவமனைகளில் சொல்கிறார்கள். முன்பெல்லாம் வீட்டுக்கு வந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் இருந்தார்கள்.
இன்றைய சூழலில் போன் செய்தாலோ அல்லது இணையதளத்தில் ஆர்டர் செய்தாலோ உணவை வீட்டில் வந்து கொடுக்கிறார்கள். அதுபோல், மருத்துவச் சேவையையும் வீடுகளுக்குப் போய் ஏன் செய்யக் கூடாது என்று மனதில் தோன்றியது. மருத்துவமனைப் பணியைவிட்டு விலகி, 'சியாமளா ஹெல்த் கேர் கிளீனிக்'கை ஆரம்பித்தேன்.
'டாக்டர் ஆன் வீல்' திட்டத்துக்காக, வங்கிக் கடன் பெற்று ஆம்புலன்ஸ் வாங்கினேன். அதில், ஒரு ஐ.சி.யூ.வில் இருக்கும் வசதிகளை ஏற்படுத்தினேன். அழைப்பின்பேரில் முதியோரின் வீட்டுக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறேன்.
மதுரை மாநகரிலும், சுற்றுப்புறப் பகுதிகளில் வாழும் முதியோர் எங்களைத் தொடர்பு கொண்டதும், நோயின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் புறப்படுவோம். அவசர நிலையில் முதியவர் விரும்பும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்போம். சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றதும் மறுபரிசோதனையும் அழைப்பின்பேரில் சென்று வருவோம்.
பகல் நேரத்தில் கிளீனிக்குக்கு வரும் நோயாளிகளைக் கவனிக்க வேண்டும் என்பதால், சாதாரண பரிசோதனைகளை அதிகாலை நேரத்தில் முதியோரின் வீட்டில் வைத்துகொள்வேன். அதிகாலை ஐந்து மணிக்கு கூட பரிசோதனை செய்வதுண்டு.
ஒருமுறை அமெரிக்காவில் இருக்கும் ஒரு முதியோரின் மகன் நள்ளிரவில் என்னை தொடர்பு கொண்டு, 'அப்பாவை அழைக்கிறேன். எடுக்கவில்லை. உதவியாளரும் எனது அழைப்பை ஏற்கவில்லை. நீங்கள் போய் பாருங்கள்' என்று கூறினார்.
அவர் சொன்ன முகவரிக்குச் சென்றேன். முன்வாசல், சுற்றுச்சுவர் கதவு பூட்டப்பட்டிருந்தால் உள்ளே போக முடியவில்லை. வீட்டுக்குள் ஆள் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் பலமுறை தரப்பட்ட முதியவரின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். யாரும் எடுக்கவில்லை. வெளிநாட்டில் இருக்கும் முதியவரின் மகனை மீண்டும் தொடர்பு கொண்டு, விளக்கினேன்.
'வீட்டுக்குள் அப்பாவுடன் உதவியாளர் இருக்கிறார். நீங்கள் வீட்டுக்குள் போகாமலேயே வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறீர்கள்' என்று என்னிடம் கோபப்பட்டார். உடனே நான் காணொலிமுறையில் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருக்கும் முன்வாசல், சுற்றுச்சுவர் கதவைக் காண்பித்தேன்.
பின்னர், முதியவரின் உதவியாளரின் வீடு அருகிலேயே இருந்ததால், அவரது வீட்டைக் கண்டுபிடித்து அழைத்தோம். அவர் தனது அலைபேசியை அணைத்து வைத்திருந்தார்.
உதவியாளர் இரவு நேரங்களில் முதியவருக்கு மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு அவரை தனியே விட்டுவிட்டு கதவையும் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தனது வீட்டுக்குச் சென்று உறங்கியிருக்கிறார்.
வீட்டைத் திறந்துபோய் பார்த்தால் முதியவர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கமாகியிருந்தார். நானும் உதவியாளரும் அவரை மயக்கம் தெளிவித்து குளிப்பாட்டி மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சையை அளித்தேன். இப்படி பல சம்பவங்கள். முதியவர்களை எனது தாத்தாக்கள், பாட்டிகளாகப் பார்க்கிறேன். என்னை 'டாக்டர்' என்று அழைக்காமல் பெயர் சொல்லி அழைக்கச் சொல்லியிருக்கிறேன்.
தினமும் இரண்டு முதியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறேன். கவனிப்பு இல்லாத முதியவர்களுக்கு முதியோர் இல்லத்தையும் நடத்திவருகிறேன். நலிந்த முதியவர்களிடம் கூடிய வரை கட்டணம் வாங்குவதில்லை. சுமார் 15 பேர் வேலை பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தை எனது மனைவியும், மாமனாரும் கவனித்துகொள்கின்றனர். மனைவி விரைவில் பட்டையக் கணக்காளராகப் போகிறார்' என்கிறார் சுவாமிநாதன்.