புள்ளிகள்

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் 'என் கதை' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
புள்ளிகள்
Published on
Updated on
3 min read

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் 'என் கதை' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

இசைத்தமிழ் குறித்து பதினான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து, விபுலானந்தரால் எழுதப்பட்ட நூல் 'யாழ் நூல்', 1947 ஜூன் 5-இள் திருக்கொள்ளம்புதூரில் அரங்கேற்றப்பட்டது.

'குமரி பிலிம்ஸ்' எனும் பட நிறுவனத்தை 45 பேர் இணைந்து ஐநூறு முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் பங்குத் தொகை செலுத்தி தொடங்கினர். இதன் தயாரிப்பில் 1961-இல் வெளிவந்த படம்தான் 'பாதை தெரியுது பார்'. இதுவே தமிழில் வெளிவந்த முதல் யதார்த்தப் படமாகும்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

இமயமலையில் உள்ள புகழ்பெற்ற பனி லிங்கத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது 'பூட்டா மாலிக்' என்ற ஆடு மேய்க்கும் முஸ்லிம் சிறுவன்.

'மாண்புமிகு' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மு.வரதராசனார்.

பெரடரிக் பாண்டிங் என்ற அறுவைச் சிகிச்சை நிபுணர் நீரிழிவு நோய், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து சிந்தித்தவாறு படுத்திருந்து, அப்படியே தூங்கிவிட்டார். அப்போது அவருக்கு வந்த கனவின்படி, உருவானதே 'இன்சுலின்'.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

'புற்றுநோய் பாதித்த செல்களை 'சிஸ்டம் பயாலஜி' முறையில் 'ரிவர்சல்' சிகிச்சையில் சாதாரண செல்லாக மாற்றலாம்' என கொரிய ஆராய்ச்சியாளர் குவாங்- ஹியூம் சோ கண்டுபிடித்துள்ளார். பெருங்குடலில் இருந்த நார்மலான செல்லாக மாற்றி, வெற்றி கண்டுள்ளார். தென் கொரியாவில் ஆங்கில வழிக் கல்வி கிடையாது. கொரிய மொழியிலேயே இந்தச சாதனையை செய்துள்ளார்.

-சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

'ஐ.நா. அமைதி காக்கும் படைக்கு இந்தியாவைச் சேர்ந்த 2.90 லட்சம் வீரர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர் அடிக்கடி பிரச்னை ஏற்படும் பகுதிகளில் உள்ள அமைதி காக்கும் படைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இன்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் இந்தியப் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர். 1960-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பணியாற்றியது முதல் 2007-இல் 'லைபீரியா'வில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது வரை நமது பெண்கள் தங்களது திறன்களை நிரூபித்து வருகின்றனர்' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

1997-இல் ஒரு நாள் பாளையங்கோட்டை கல்லூரி ஒன்றில் பேச பேராசிரியர் க.அன்பழகன் வருகை தந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் விருதுநகர் விரைவு வண்டிக்கு புறப்பட்டுச் சென்றார். ரயிலில் ஏறியதுடன் அன்பழகன் கீழே உள்ளவர்களைப் பார்த்த

போது அவரது தம்பி திருமாறன் இருந்தார். அவரைப் பார்த்து, 'ஏய்.. என்னைவிட கிழவன் ஆகிவிட்டாயா?' என்று கேலி செய்தார். அவரின் பேத்தியைப் பார்த்ததும், அளவற்ற மகிழ்ச்சியுடன் மேலே அழைத்துச் சென்றவர் கல்லூரி நிகழ்ச்சியில் பரிசாகத் தனக்கு அளிக்கப்பட்ட வெள்ளிக் கிண்ணத்தை அளித்தார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

கவியரசு கண்ணதாசனுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் எப்படி நெருங்கிய நண்பரோ, அதுபோல் இயக்குநர் சி.வி.ஸ்ரீதருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். ஸ்ரீதரின் பல படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை வழங்கியவர் எம்.எஸ்.விசுவநாதன். 'போலீஸ்காரன் மகள்' படத்தில் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்ததும், படக் குழுவினர் பூசணிக்காயை சுற்றி உடைக்க ஆயத்தமாகினர்.

ஆனால் ஸ்ரீதரோ, 'இப்போது பூசணிக்காயை உடைக்க வேண்டாம். இன்னொரு பாடலை படமாக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்' என்றார்.

'ஒருநாளில் எப்படி பாடல் காட்சியைப் படமாக்குவது சாத்தியம்' என்று படக்குழுவினர் யோசித்தனர்.

ஆனால் ஸ்ரீதரோ, ' ஹீரோயின் இறந்தவுடன் சோகமான பாடல் ஒன்று இடம்பெற வேண்டும். அதையே படமாக்கப் போறேன். இந்தத் தகவலை எம்.எஸ்.

விசுவநாதன், டி.கே.ராமமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோரிடம் சொல்லி, அவர்களை அழைத்து வாருங்கள்' என்று அருகேயிருந்த சித்ராலயா கோபுவிடம் சொன்னார்.

அதன்படி, கண்ணதாசன், 'பூமறந்து போகிறாள். பொட்டெடுத்து போகிறாள். புன்னகையை சேர்த்தெடுத்து கன்னி மயில் போகிறாள்...' என்று வரிகளைக் கொண்ட பாடலை 20 நிமிடங்களில் எம்.எஸ்.வி.யும் டி.கே.ராமமூர்த்தியும் ரெக்கார்டிங் செய்தனர். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அந்தப் பாடல் ஒலிக்க, அதே வேகத்தில் காட்சியைப் படமாக்கினார் ஸ்ரீதர்.

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குள்பட்டோர் பிரிவு) இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து, 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கியது.

தொடக்க வீராங்கனையும், ஆல் ரவுண்டருமான கோங்காடி திரிஷா ஆட்ட நாயகி விருதை வென்றார். அவர் 7 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம் உள்பட 309 ரன்களும், 7 விக்கெட்டுகளையும் எடுத்து பிரமாதப்படுத்தினார். தெலங்கானாவைச் சேர்ந்த அவரை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து, பாராட்டி, பரிசு வழங்கியதோடு ரூ.1 கோடியை அளித்தார்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

'இலங்கையில் ஒருமுறை நடத்தப்பட்ட கிருஷ்ணலீலா நாடகத்தில் நரகாசுரனாக கலைவாணர் என்.எஸ்.கே. நடிக்கிறார். அவர் மகன் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.

நரகாசுரன் வீழ்கிறான். அவர் வீழ்ந்ததும், 'அப்பா.. எனக்கு ஒரு வழியும் காட்டாமல் போறீங்களே..?' என்று அவர் மீது நான் விழுந்து அழும் காட்சி. நான் அப்படி சொல்லி அவர் மீது விழுந்து அழும்போது, என்.எஸ்.கே. சொல்கிறார்.

'மகனே.. கலங்காதே.. அப்படியே தனுஷ்கோடி வழியாக போ' என்கிறார். அது நான் அழ வேண்டிய காட்சி.

எனக்கோ சிரிப்பு வந்துவிட்டது. நல்லவேளை முகத்தை உடனே, அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு நான் குலுங்கி, குலுங்கிச் சிரித்தது. இந்தப் பக்கம் பார்ப்பவர்களுக்கு நான் அழுவதுபோல் தெரிந்தது' என்றார் எஸ்.வி.சகஸ்ரநாமம்.

நம்பியார் என்ற பெயருக்கு முன்னால் இருக்கும் எம்.என். என்ற இரு எழுத்துகளில் 'எம்' என்ற எழுத்து அவரது தந்தை கெளு நம்பியாரின் இல்லப் பெயரான மஞ்சேரியைக் குறிக்கும். 'என்' என்பது பெற்றோர் அவருக்கு இட்ட நாராயணன் என்ற பெயரைக் குறிக்கும்.

நம்பியாருக்கு பதிமூன்று வயதாக இருந்தபோது, 1930-இல் ஊட்டியில் முகாமிட்டிருந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீமதுரை தேவி வினோத பாலகான சபாவின் நாடகங்களைக் கண்டு கலைஆர்வம் கொண்டார்.

முதலில் நாடகக் குழுவில் இருந்த நம்பியாருக்கு கிடைத்தப் பணி சமையல் உதவியாளர். நாடகக் குழுவுடன் சேலம், மைசூரு, தஞ்சை என்று நம்பியாரின் கலைப்பயணம் தொடர்ந்தது. நடிப்பு, வாய்ப்பாட்டுகளைக் கற்றார்.

கோவை அய்யாமுத்து எழுதி, நவாப் ராஜமாணிக்கம் அரங்கேற்றிய 'நச்சுப் பொய்கை' என்ற நாடகத்தில் பெண் நீதிபதியின் வேடம் நம்பியாருக்கு 15-ஆம் வயதில் கிடைத்தது. மாதம் மூன்று ரூபாய் ஊதியம். 'பக்த ராமதாஸ்' நாடகத்தை பக்த ராமதாஸ் 1935-இல் படமாக்கினார் பத்திரிகையாளர் முருகதாசா.

நாடகத்தில் நடித்தவர்களே நடிக்க, நடிகைகளை இல்லாதப் படமான அதில் பழம்பெரும் நடிகரான டி.கே.சம்பங்கியுடன் நகைச்சுவை வேடத்தில் மாதண்ணாவாக நடித்தார் நம்பியார்.

'வித்யாபதி' படத்தில் ஏற்ற நாராயண பாகவதர் என்ற நகைச்சுவைப் பாத்திரத்துக்காக மொட்டை அடித்துகொண்டார் நம்பியார்.

1947-இல் வெளியான ஜூபிடரின் 'ராஜகுமாரி' படத்தில், எம்ஜிஆருடன் இணைந்தார் நம்பியார். அதில், நாயகனுக்கு உதவும் 'பாகு' என்ற நகைச்சுவை சாகசக் கதாபாத்திரத்தில் நம்பியார் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. 'சர்வாதிகாரி' படத்தில் மகாவர்மன் என்ற சர்வாதிகாரியாக நடித்த நம்பியாரை அடக்கும் நாயகன் பிரதாபனாக எம்ஜிஆர் நடித்தது திருப்பமாக அமைந்தது. பின்னர், எம்ஜிஆருக்கு வில்லன் நம்பியார் என்ற நிலை உருவானது.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com