
நூறு ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத கணிதப் புதிருக்குத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளி மாணவி திவ்யா தியாகி. இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுகலை படித்து வருகிறார். 1928-இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஹெர்மன் கிளாவர்ட் உருவாக்கிய சிக்கலான கணிதப் புதிருக்கு திவ்யா தியாகி தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்.
கிளாவர்ட்டின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் காற்றாலையின் தொழில்நுட்பம், செயல்திறன் மேம்பட்டிருந்தாலும், காற்றாலையின் எடை கூடிய சுற்றும் கைகள் நாளடைவில் எப்படி வளைகின்றன என்பது புதிராக இருந்து வந்தது.
காற்றாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட எடை கூடிய பிளேடுகள் காற்றில் சுற்றும்போது, நல்ல எடையுடன் போதுமான பருமனுடன் இருந்தாலும் நாளடைவில் வளைந்துபோகின்றன. அதனால் காற்றாலையை செயல்திறன் குறைகிறது. பிளேடுகள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்தால், அந்த பிரமாண்ட பிளேடுகள் நாளடைவில் வளைந்து போவதைத் தவிர்க்கலாம் என்று திவ்யா தியாகியின் கண்டுபிடித்ததுடன் பிளேடுகளின் வடிவத்தை மாற்றி அமைக்கும் தொழில்நுட்பத்தையும் வகுத்தார்.
திவ்யாவின் புதிய வடிவமைப்பு காலத்தின் தேவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பால், காற்றாலையின் செயல் திறன் மேம்படும். அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். காற்றாலையை பராமரிக்கும் செலவு குறையும்.
திவ்யாவின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக 'அந்தோணி இ. வோல்க்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. திவ்யா அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விமானத்தின் சுழலும் பிளேடுகளை மாற்றி வடிவமைப்பதிலும் ஆய்வு செய்து வருகிறார்.
திவ்யாவுக்கு ஆய்வில் வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ஸ்வென் ஷ்மிட்ஸ் கூறுகையில், 'திவ்யாவின் புதிய கண்டுபிடிப்பு உலக அளவில் அடுத்த தலைமுறை காற்றாலை உருவாக்கப்படுவதில் பெரிதும் உதவும்' என்கிறார்.