சாமானியர்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை தங்களது 'கிப்லி' படங்களைச் சமூக வலைதளங்களின் முகப்பில் பதிவேற்றம் செய்துவருகின்றனர். ஒரே நேரத்தில் எண்ணற்றவர்கள் தங்களுக்கான 'கிப்லி' பாணி புகைப்படங்களைக் கேட்பதால், இணையமே அலறியது. சமூக வலைதளங்களில் தற்போது அதகளம் செய்து கொண்டிருப்பது 'கிப்லி' பாணி ஓவியங்கள்தான் என்பதை சொல்லவா வேண்டும்.
'கார்ட்டூன்' எனப்படும் கேலி சித்திரங்களில் அரசியல்வாதிகள், முக்கிய தலைவர்கள் உருவப் படங்களை வரையும்போது உருவம் நீட்டியும் குறைத்தும் வரையப்படும். தலை பெரிதாகவும், உடல் சிறிதாக இருக்கும். இதனால் கார்ட்டூன்களை பல பிரபலங்கள் விரும்புவதில்லை. ஆனால் 'கிப்லி' படங்களில் உருவக் கேலி இருக்காது. கார்ட்டூன் வரைபவர் கார்டூனிஸ்ட்டாக இருப்பார். வரையப்பட்டிருப்பவர் வேறு ஒருவராக இருப்பார். தன்னை தானே வரைந்து கொள்ளவும், பல புனைவு கதாபாத்திரங்களை உருவாக்கவும் 'கிப்லி' வரைவு முறை உதவுகிறது.
காமிக்ஸ் கதை புத்தகங்களில் வரும் உருவங்களைப்போல தோற்றம் கிடைப்பதால், 'கிப்லி' யுக்தி மூலம் தங்களை வரைந்து கொள்வதில் அல்லது வரையச் செய்வதில், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் புகைப்படங்களின் 'கிப்லி' பதிப்பைப் பெரிதும் விரும்புகிறார்கள்.
'கிப்லி' யுக்தியைப் பயன்படுத்தி படங்கள் வரைந்துகொள்ளும் வழக்கம் உலக நாடுகளில் பெரிய அளவில் அதிகரித்து உள்ளதால், 'கிப்லி' யுக்தியைக் கையாளும் சர்வர் வெப்பமாகி 'கிப்லி' படங்களை வரைந்து வரைந்து செயல் இழந்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு வேலைப் பளு பல ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.
இதுதவிர 'கிப்லி' யுக்தி செயல்பட உழைக்கும் செயற்கை நுண்ணறிவுக் குழுவினரும் தூக்கமின்றி உழைக்க வேண்டியுள்ளது. அதனால் 'ஓபன் ஏ.ஐ.' தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், 'இந்த யுக்தி பயன்படுத்தி படங்கள் வரைவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது, ஒரு நாளைக்கு மூன்று, படங்களை மட்டுமே உருவாக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
'கிப்லி' எப்படி பிரபலமடைந்தது?
சியாட்டிலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கிராண்ட் ஸ்லாட்டன், 'கிப்ளிஃபைட்' செயற்கை நுண்ணறிவில் புகைப்படத்தை சரி செய்வதை (எடிட் செய்வதை) பிரபலப்படுத்தினார்.
இதற்காக, அவர் அண்மையில் மேம்படுத்தப்பட்ட 'ஓபன் ஏ.ஐ,' படம் உருவாக்கும் யுக்திகளை அறிமுகப்படுத்திய சிறிது நேரத்திலேயே, ஸ்லாட்டன் என்பவர் 'எக்ஸ்' தளத்தில், கடற்கரையில் தனது குடும்பத்தினர், நாயின் 'கிப்லி' பாணி புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். இது இணைய ஆர்வலர்களிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இதனால் அவர்கள் தங்களது கிப்லி படங்களால் சமூக ஊடகங்களை அதகளம் செய்தனர்.
'சாட் ஜிபிடி'- ஐ பயன்படுத்தி கிப்லி பாணி செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கலாம். வலைதளம் அல்லது செயலியைத் திறந்து, கீழ் இடது மூலையில் உள்ள '+' அடையாளத்தைக் கிளிக் செய்து, படத்தைப் பதிவேற்றம் செய்து, 'எட்ண்க்ஷப்ண்ச்ஹ் ற்ட்ண்ள்' அல்லது 'இந்தப் படத்தை ஸ்டுடியோ கிப்லி மூலம் வரை' என்று ஆணையிட்டால் பதிவேற்றம் செய்த படத்தின் 'கிப்லி' பதிப்பு கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
'கிப்லி'யின் ரிஷி மூலம் 'ஸ்டூடியோ கிப்லி' ஆகும். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'ஸ்டூடியோ கிப்லி' 1985-இல் ஹயாவ் மியாசாகி, இசாவோ தகாஹாட்டா என்ற இருவரால் அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கப்பட்டது.
சிறார்கள், பெரியவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட 'ஸ்பிரிட்டட் அவே', 'மை நெய்பர்', 'டோடொரொ', 'ஹெளல்ஸ் மூவிங் கேஸில்' போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் 'ஸ்டூடியோ கிப்லி'யில்தான் உருவானது. அதனால் பொதுவாக 'கிப்லி' பாணி படங்கள் என்று அழைக்கத் தொடங்கினர்.
வழக்கமான அனிமேஷன் படங்களிலிருந்து வித்தியாசமாக 'கிப்லி' பாணி படங்கள் இருந்ததால் அவை அனிமேஷன், பெரிய - சின்னத் திரை விளம்பரங்கள், குறும்படங்கள் தயாரிப்பிலும் பிரபலமாயின.