கண்டது
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)
'பிலாகோடு, வெள்ளிகோடு, குழிகோடு, தொழிகோடு, இடைக்கோடு, திக்கணங்கோடு, பாக்கோடு.'
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
(செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் நடைபயிற்சி மைதானத்தில் எழுதியிருந்தது)
'தினமும் அறுபது நிமிட நடைபயிற்சி நோய்க்குத் தடை.'
ஜி.அர்ச்சுனன், செங்கல்பட்டு.
(கோவையில் ஹோட்டல் ஒன்றில் கரும்பலகையில் எழுதியிருந்தது)
'தூங்குபவனுக்கு கனவு இலவசம்; ஆனால், உழைப்பவனுக்கு வெற்றி நிச்சயம்.'
வி.ரேவதி, தஞ்சாவூர்.
கேட்டது
(வேடசந்தூரில் உள்ள ஒரு வீட்டில்...)
'ஏங்க எங்க பொண்ணு கிளாஸ் போட்டுட்டு இருக்கும் பரவாயில்லையா?'
'பரவாயில்லை.. எங்க பையனும் அப்பப்போ ஒரு கிளாஸ், ரெண்டு கிளாஸ் போடுவான்...?'
'என்னது..?'
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
(கோவை கவுண்டன்பாளையம் பூங்கா ஒன்றில் இருவர்)
'நீங்க எவ்வளவு சொல்லியும் தன் காதலைப் பிரிக்க முடியாதுன்னு சொன்ன உங்க மகன் கல்யாணம் செய்துட்டானா?'
'கல்யாணம் செய்துட்டு இப்போ பிரிஞ்சுட்டான்...?'
எம்.பி.தினேஷ், கோவை 25.
(திருச்சி பூங்கா ஒன்றில் நடைபயிற்சியில் இருவர் பேசியது)
'பையன்தான் இப்போ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறானே.. இன்னும் நீங்க ஏன் வேலைக்குப் போய் கஷ்டப்படுறீங்க?'
'நீங்க வேறே.. ரீசார்ஜ், பெட்ரோல், டீ செலவுகளுக்கு எல்லாம் நான்தான் அவனுக்கு 'பாக்கெட் மணி' கொடுக்கணும்..'
அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
சாப்பிடும்போதுதிட்டுவது அப்பா! சாப்பிட்டவுடன்திட்டுவது அம்மா! 'என்ன சாப்பாடு'ன்னு கேட்டா திட்டுவது மனைவி!
நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.
மைக்ரோ கதை
மருத்துவமனையில் இறுதிமூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் அப்பா ஆறுமுகம் தனது மகன் முரளியிடம், 'என்னால் மறக்க முடியாத ஒன்று. நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கில் 90 மதிப்பெண் வாங்கினேன் என்று ரேங்க் கார்ட் காண்பித்தாய். ஒன்பதுடன் பூஜ்ஜியம் சேர்த்து காண்பிக்கிறாய் என்று சொன்னேன். நீ மறுத்தாய். அடித்தும் சொல்லலை. பூஜ்ஜியம் சேர்க்கவில்லைன்னு சொன்னே? இப்போ கேட்கிறேன் சொல்லு.. உண்மையை சொல்லு..?' என்றார்.
அதற்கு முரளி, 'நீங்க எப்போ கேட்டாலும் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்ஜியம் சேர்க்கலை..?' என்றார்.
இதற்கு ஆறுமுகம், 'நீ 90 மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் இல்லையே..?' என்றார்.
அதற்கு முரளி, 'சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி. நான் சொன்னதும் சரி. நான் சேர்த்தது 9' என்றார்.
ஆறுமுகத்துக்கு தலைசுற்றியது.
ஜி.ஏ. செங்கல்பட்டு.
எஸ்.எம்.எஸ்.
முயலாமல் இருப்பதைவிட முயன்று தோற்றுப் பார். வெற்றியின் சூட்சமம் பார்.
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
அப்படீங்களா!
ரொக்கம், சில்லறை பரிவர்த்தனையைக் குறைக்க மத்திய அரசு எண்ம பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. விரல் நுனியில் நடைபெறும் எண்ம பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு பயன்படும் மத்திய அரசின் பாதுகாப்பான பிம் செயலியில் புதிய சேவைகள் அறிமுகமாகி உள்ளன. பிம் 3.0 செயலியை இனி 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம். இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளிலும் பிம் செயலி மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் தனித்தனியாக குழுக்களை அமைத்து நாம் செலவிடும் தொகைக்கான கணக்கை கணக்கிட்டு பார்த்து கொள்ளலாம். மேலும், நாம் எந்தந்தப் பிரிவில் எவ்வளவு தொகை செலவிட்டுள்ளாம் என்பதையும் இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நமது குடும்ப உறுப்பினர்களில் இடம்பெற்றுள்ள குழுவில் உள்ளவர்களைத் தேர்வு செய்து ஒரே நேரத்தில் பணத்தை அனுப்பலாம்.
குழுவில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் செலவிடும் தொகையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். தனியார் பணப் பரிவர்த்தனை செயலிகளுக்கு போட்டியாக பிம் 3.0 செயலியில் இடம்பெறும் புதிய சேவைகள் அனைவரின் கவனத்தை ஈர்க்கும்.
அ.சர்ப்ராஸ்