நான் திரை உலகுக்கு வந்து என் அறுபதாண்டு தொடக்கத்தில் நான் சந்தித்த 100 பிரபலங்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன். அதற்கு இசைவு தந்த என் மரியாதைக்குரிய தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...' என்று தனக்குத் தானே இரங்கற்பா எழுதிய கவியரசு கண்ணதாசன்தான் நான் சந்தித்த முதல் பிரபலமானவர்.
காரைக்குடி அழகப்பா கல்லூரிக்குக் கவியரங்கத் தலைவராக வந்தார். அவர் தலைமையில் நான் பாடிய போது நான் நானாக இல்லை.
மகிழ்ச்சிக் கடலில் ஒரு மீனாக நீந்தினேன். நகரத்தார்களில் இரண்டாவது பட்டினத்தாராகப் போற்றப்படும் அவர் கவியரங்கத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறி 'ரயிலுக்கு நேரமாச்சு' என்று அவசரத்தில் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைக் காட்டினேன்.
அவர் என்னை அந்த அம்பாசிடர் காரில் ஏற்றிக் கொண்டு எனக்காக நாலைந்து கவிதைகளை வேக வேகமாகப் படித்து விட்டு என்னை வாழ்த்தி நான்கு வரிகள் எழுதி தந்தார்.
காரைக்குடி 3.11.62
நண்பர் நாராயணன் அவர்களின் கவிதைகள் சிலவற்றைக் கண்ணுற்றேன். கவிதைக்குரிய ஓசைச் சிறப்புப் பரந்து விரிந்து கிடக்கக் கண்டேன். இந்த உள்ளம் எதிர்காலத்தில் பெரும் மலராய் மலர்ந்து மணம் வீசும் நம்பிக்கை ஒளியை இக்கவிதை நூல் தருகிறது.
அன்பன் கண்ணதாசன்
இந்த நான்கு வரிகளின் சிபாரிசுதான் பல மொழிப் படங்களுக்குக் கதாசிரியனாகவும், வசனகர்த்தாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தலையெடுக்க வைத்தது. 1972இல் என் முதல் படம் ' சொந்தம்' அதற்குப் பாட்டெழுத அவரும் எம்.எஸ்.விஸ்வநாதனும் வந்தார்கள். என்னிடம் பாட்டுக்கான சூழ்நிலை என்னவென்று கேட்டதும் நான் சிறகடித்துப் பறந்தேன். நான் சொல்லி முடித்த பத்தாவது நிமிடத்தில் பாட்டும் மெட்டும் தயாரானது.
'கண்ணுபடப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கடி ரவிக்கையை....'
நான் கதாசிரியனாகி, இயக்குநராகி, பின்னர் தயாரிப்பாளரானேன். 1978இல் 'மீனாட்சி குங்குமம்' படத்துக்கு பாடல் தந்தார்.
'ஸ்ரீரங்கனோ ஸ்ரீ தேவியோ
வடிவேலனோ தெய்வானையோ..'
என்ற பாட்டை எழுதியதோடு எந்தத் தொடக்க விழாவுக்கும் வராத கவிஞர் அதிகாலை 5 மணிக்கு வந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
ஏவி.எம். சரவணன், 'சார் எப்படி அதிகாலை வந்தீர்கள்' என்று கேட்டதற்கு, 'காரைக்குடியில் இருந்து வந்த நாம் யாரும் மண்ணுக்கு பெருமை சேர்க்கவில்லை. அவன் சேர்த்தான். அதனால் அதிகாலை வந்தேன்' என்றார்.
1973இல் ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி'யை நான் எழுதியபோது பாட்டெழுதி விட்டு அவர் புறப்பட்ட போது, அவர் பணம் எதுவும் கேட்காமல் காரில் ஏறி உட்கார்ந்தபோது அவரிடம் கவரில் 250 ரூபாய் கொடுத்தேன். அதைப் பிரித்துக் கூட பார்க்காமல் கை காட்டி விட்டு காரில் போனார்.
அவர் இறந்து அவர் உடல் நடிகர் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, அவர் எழுதிய மரண சாசனத்தை என்னைப் படிக்கச் சொல்லி மனோரமா அழுது கதறி கேட்டது. இன்னமும் அந்தக் குரல் 'என்னை அறிமுகம் செய்த ஆண்டவன்' என்று சொன்னது என் நெஞ்சில் எதிரொலிக்கிறது.
நான் வாழ்நாளெல்லாம் சொல்ல நினைப்பதை 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற ஒரே புத்தகத்தில் சொன்னவர் என்று காஞ்சி மகா பெரியவரால் பாராட்டப் பெற்றவர். வாழ்க அவர் புகழ். இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(தொடரும்)