வரிசை கட்டும் காமிக் கதைகள்!

மார்வெல் ஸ்டுடியோஸ் உலகம் எங்கிலும் தனக்கான ரசிகர்கள் வட்டத்தை கட்டியெழுப்பியுள்ளது.
வரிசை கட்டும் காமிக் கதைகள்!
Published on
Updated on
3 min read

மார்வெல் ஸ்டுடியோஸ் உலகம் எங்கிலும் தனக்கான ரசிகர்கள் வட்டத்தை கட்டியெழுப்பியுள்ளது. 2008 ஆம் ஆண்டின் 'அயர்ன் மேன்' படத்தை துவக்கி வெற்றிக் கண்டது. முதலில் 'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்', 'பிளாக் பாந்தர்', 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' போன்ற படங்களை வெளியீட்டு தனக்கான வட்டத்தை உருவாக்கி கொண்டது.

மார்வெல் ஸ்டுடியோஸ் இதுவரை 25 படங்களுக்கு மேலாக வெளியிட்டு வெற்றி கண்டுள்ளது. நூற்றாண்டின் திரைப்பட பந்தயம் பலனளித்தது என்பது தெளிவாகிறது . காமிக் புத்தக ரசிகர்களின் தலைமுறைகளை மிக உயர்ந்த சிம்மாசனத்தில் ஏற அனுமதித்து வருகிறது இந்த நிறுவனம்.

கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. பல தரப்பு பரித்துரைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பிறகு அந்த வேலைநிறுத்தம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுக்கு வந்தது. அந்த வேலை நிறுத்தத்தால் அனைத்துத் திரைப்படங்களின் வேலைகளும் பாதியில் நின்றுவிட்டது. அதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகளும் தள்ளிப்போனது.

இந்த வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நடந்த வெளியீடுகளுக்கு அறிவிக்கப்பட்ட பல படைப்புகள் 2024ஆம் ஆண்டே வெளியாகியிருக்க வேண்டியது. அவையெல்லாம் இந்தாண்டில் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 9 மார்வெல் படைப்புகள் வெளியீட்டிற்கு வரிசை கட்டி நிற்கின்றன. முதலாவதாக கடந்த மாதம் 27ஆம் தேதி 'யுவர் ஃப்ரென்ட்லி நெய்பர்ஹூட் ஸ்பைடர்மேன்' என்ற அனிமேஷன் தொடர் ஒடிடி தளத்தில் தொடங்கியிருக்கிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தத் தொடரை, சோனி இல்லாமல் மார்வெல் மட்டுமே தனியாக தயாரித்திருத்திருக்கிறது.

அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும், 'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்படம் மறு படப்பிடிப்பு, திரைக்கதை மாற்றம், எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் எனப் பல தடைகள் ஏற்பட்டதால் கடந்தாண்டே வெளியாக வேண்டிய இப்படம் இந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது மார்வெல் வைத்திருக்கும் அடுத்தக் கட்ட வெளியீடுகளில் முக்கியமான திரைப்படம்.

பிறகு, 'டேர் டெவில்: பான் எகெய்ன்' தொடர் மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஏற்கெனவே வெளிவந்த டேர்டெவிலின் மூன்று சீசன்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இந்தத் தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தளத்தில் வெளியாகியுள்ளது.

ஹீரோக்களிலும் சேராத வில்லன்களிலும் சேராத நடுநிலை கதாபாத்திரங்களான ஜான் வாக்கர், வின்டர் சோல்ஜர், எலினா, ரெட் கார்டியன் போன்ற கதாபாத்திரங்கள் ஒரு குழுவாக இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'தன்டர்போல்ட்ஸ்)'. இத்திரைப்படம் மே 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜூன் 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஐயர்ன் ஹார்ட் என்ற வெப் சீரிஸ் வெளிவரவிருக்கிறது. தொழில்நுட்பத்தில் டோனி ஸ்டார்கிற்கு நிகராகத் திறமை படைத்த ரிரீ வில்லியம்ஸ் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் குறைந்த எதிர்பார்ப்பே நிலவி வருகிறது.

ஜூலை மாதம் மார்வெல் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். அடுத்து வரப்போகும் பல முக்கியப் படைப்புகளுக்கும் ஆழமானதொரு அடித்தளம் அமைக்க உள்ளது 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்'. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. சொல்லப்போனால், மார்வெல் நிறுவனத்தின் எதிர்காலம் இத்திரைப்படத்தின் கையில்தான் உள்ளது.

'ஐஸ் ஆஃப் வக்கான்டா' என்ற அனிமேட்டட் தொடர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளிவர உள்ளது. மார்வெல் அனிமேஷன் பேனலின் கீழ் வரும் இந்தத் தொடர் 'பிளாக் பாந்தரின் ஸ்பின் ஆஃப்' தொடர் ஆகும். இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 'மார்வெல் ஜாம்பிஸ்' என்ற அனிமேஷன் தொடர் வெளிவர உள்ளது. மார்வெல் அனிமேஷன் பேனலின் கீழ் வரும் இந்தத் தொடர் 'வாட் இஃப்' முதல் சீசனில் வந்த ஜாம்பி தொடர்ச்சியாக வரும் தொடர் ஆகும்.

இந்த ஆண்டினை 'வொன்டர் மேன்' என்ற ஒரு புதிய கதாபாத்திரத்தைக் கொண்ட தொடருடன் நிறைவு செய்கிறது மார்வெல். ஆரம்பக் கட்ட பணிகளில் உள்ள இந்தத் தொடர் டிசம்பரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் ஆழம் பார்த்து பொறுமையாகவே களம் காண்கிறது. புதுமையாகக் களமிறங்கும் மார்வெல் டி.சி நிறுவனம், இந்தாண்டு சூப்பர்மேன் திரைப்படத்தை மட்டுமே வெளியிடுகிறது. ஜூலை 11 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இந்தத் திரைப்படம்தான் டி.சி யுனிவெர்சை உருவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறது.

இதைத் தவிர வேறு எந்த பெரிய தயாரிப்புகளும் டி.சி.யிடம் இருந்து இந்தாண்டு எதிர்பார்ப்பதற்கு இல்லை. இந்தத் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே அடுத்தடுத்த நகர்வுகளுக்கு தயாராகவிருக்கிறது டி.சி. நிறுவனம்.

மொத்தத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படைப்பு வெளிவர இருப்பதால் இந்தாண்டு காமிக் ரசிகர்கள் கொண்டாடும் ஆண்டாக மாறி உள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com