அந்தக் கறுப்பு நிறக் கண்கள், அவளைப் பார்த்து, 'என்னைக் காப்பாற்று' என்று கெஞ்சின. அந்தப் பாம்பு, மண் குவியலின் மேல் குற்றுயிரும் குலையியிருமாய்க் கிடந்தது. பூங்குழலி ஜாக்கிரதையாகச் சற்று அருகில் சென்று குனிந்துப் பார்த்தாள்.
அது கோதுமை நிறத்தில் இருந்தது. உடம்பில் கட்டுக்கட்டாக வெள்ளைக் கோடுகள். அதன் கறுப்பு நிறக் கண்கள் பளிங்கு போல் மின்னின. கட்டுவிரியனாக இருக்குமோ? கையால் தொடவும் பயமாக இருந்தது. எப்படி இதைக் காப்பாற்றுவது?
அவர்களது வீடு நகரின் மத்தியில் மிகவும் பரபரப்பான பகுதியில் இருந்தது. மாடியில் வீடு கட்ட ஆரம்பித்து ஒரு மாதமாகியிருந்தது. இடித்துப் போடப்பட்ட கல்லும் மண்ணும் வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை எடுத்துச் செல்ல சின்ன லாரி வந்திருந்தது. இரண்டு பேர் மண்வெட்டிகளால் மண்ணையும் கல்லையும் வாரி வண்டியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
'ஏம்ப்பா ஒம்பதரை ஆச்சே? ஆறு மணிக்கெல்லாம் வந்திருந்தா இந்த நேரம் போயிருக்கலாம். போலீஸ் வந்தா ஃபைன் தீட்டிடுவாங்க?'
'மேஸ்திரி காலையில்தானுங்க சொன்னாரு. இனிமே நேரத்தில வந்திடறமுங்க?'
திடீரென்று அந்த மண் குவியலிலிருந்து சரசரவென்று நெளிந்து அந்தப் பாம்பு மேலே வந்தது.
'பா........ம்பு' என்று அவள் கத்தவும், ஒருவன் மண்வெட்டியால் அதன் மேல் ஓங்கிப் போடவும் சரியாக இருந்தது.
'நிறுத்துங்க! நிறுத்துங்க!' என்று பூங்குழலி அலறினாள். அவன் ஓங்கிய மண்வெட்டியுடன், 'அடிச்சித் தூக்கிப் போட்டுர்றனுங்க?' என்றான்.
'சே!சே! வேண்டாம். அது பாட்டுக்குப் போயிட்டுப் போவுது.'
பாம்பின் உடம்பில் வெட்டுப்பட்ட இடத்திலிருந்து சிவப்பு நிறத்தில் லேசாக ரத்தம் கசிந்தது. இருந்தாலும், 'தப்பிக்க வேண்டும்' என்ற உத்வேகத்துடன் அது 'கிடுகிடு'வென்று வேகமாக மண் குவியலின் மேல் ஏறியது.
இரண்டு நாள்களுக்கு முன்னால்தான் வீட்டின் முகப்பில் அடர்ந்து மண்டியிருந்த காகிதப் பூச்செடியை மொத்தமாக வெட்டிக் கொண்டு, குப்பைத் தொட்டியில் போட்டிருந்தார்கள். அதன் கிளையின் துண்டு ஒன்று மண்ணின் மேல் கிடந்தது. அந்தப் பாம்பு அந்தக் கிளையின் மீது தன் உடலைச் சுற்றிக் கொண்டது. அதற்கு மேல் நகர அதற்குத் தெம்பு இல்லை.
'நான் சொல்லச் சொல்ல இப்படிப் பண்ணிட்டீங்களே!' என்று பூங்குழலி ஆதங்கத்தோடு சொன்னாள். அவர்களோ அவள் சொன்னதைச் சட்டை செய்யாமல் மண்ணை வழித்துப் போடுவதைத் தொடர்ந்தார்கள். அவள் கீழே குனிந்து பாம்பைப் பார்த்தாள்.
அந்தக் கறுப்பு நிறக் கண்கள், அவளைப் பார்த்து, 'என்னைக் காப்பாற்று' என்று கெஞ்சின. சிறிது நேரத்தில் அவர்கள் போய்விட்டார்கள்.
பூங்குழலி மீண்டும் பாம்பைப் பார்த்தாள். ஒரு சிறு குச்சியை எடுத்து அதன் வாலின் நுனியில் தயக்கத்தோடு லேசாக நிமிண்டினாள். அதன் வால் நெளிந்தது. ஆனால் பிடித்த கிளையை அது விடவில்லை. உயிர் இருக்கிறது. உள்ளே ஓடினாள்.
'ஏங்க, வாசல்ல, மண்ணு மேல பாம்புங்க?'
'பாம்பா? இங்கேயா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பழனி.
'என்ன பாம்பும்மா?' என்றாள் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த வான்மதி.
'உடம்புல கட்டுக்கட்டா இருக்கு. கட்டுவிரியன்னு நினைக்கிறேன்.'
'தொட்டுக்கிட்டு வெச்சிடாதே. கடுமையான விஷயம் கட்டுவிரியன்தான்' என்றார் பழனி.
மூவரும் வெளியில் ஓடினார்கள்.
'அதோ கிடக்கு பாருங்க?'
அது நகராமல், அங்கேயே, அப்படியே கிடந்தது. இதற்கு முன், அடிபட்ட குயில், கிளி, கொக்கு... என்று எத்தனையோ பறவைகளைக் காப்பாற்றி, அவற்றை மிருகக்காட்சி சாலையிலோ , வனத் துறை அலுவலகத்திலோ கொண்டு போய்க் கொடுத்திருக்கிறாள். இதற்கென்றே தனியான கூண்டுகள் கூட வைத்திருந்தாள். ஆனால் பாம்பு? இதுதான் முதல் முறை.
'அம்மா! நான் கிளம்பறேன். வனத் துறை அலுவலகத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லு' என்று வான்மதி கிளம்பினாள்.
'ஏங்க, நீங்க கொஞ்சம் இங்கயே நில்லுங்க. இந்தப் பாம்பு எங்கேயாச்சும் நகர்ந்து போயிடப் போவுது.'
உள்ளே சென்று கைப்பேசியை எடுத்தாள். வனத் துறை அலுவலக எண்ணை அழுத்தினாள். மணி அடித்துகொண்டே இருந்தது. யாரும் வேலைக்கு வரவில்லை போலும்.
கால்நடை மருத்துவர் ராஜனைக் கூப்பிட்டுப் பார்க்கலாம். அவர் மிருகக்காட்சி சாலையின் இயக்குநராக இருந்தபோது, ஒரு அடிபட்ட குயிலைக் கொண்டு போய் அங்கு ஒப்படைத்ததிலிருந்து நட்பு. அவர் எண்ணை அழுத்திவிட்டு எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். நாலைந்து மாதங்களுக்கு முன்பு அடிபட்ட மலைப்பாம்பு ஒன்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்து குணமாக்கியிருந்தார் என்று பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வந்திருந்தது.
'நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்' என்றது கைப்பேசி. மீண்டும் ஒருமுறை அழைத்தும், அதே பதில்.
வனத்துறையில் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை அழைத்து உதவி கேட்கலாம். சிலர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார்கள். சிலர் எடுக்கவில்லை. பார்த்தால் பிறகு கூப்பிடுவார்கள். மறுபடியும் வன அலுவலகத்தைத் தொடர்பு கொண்டாள். யாரும் எடுக்கவில்லை. கோபம் கோபமாக வந்தது.
'அம்மா! குடம் ஒண்ணு குடுங்க' என்று சித்தாள் கூப்பிட்டாள்.
'இதோ வந்துட்டேன்.'
கைப்பேசியிலேயே கண்ணாக ஓடிச் சென்று குடத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தாள். அந்தப் பாம்பை பழனி
யோ தனது கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருக்க, அவளுக்குக் கோபம் இன்னும் அதிகமானது.
'பாம்பு உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கு. அதப் போயி ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிக்கிட்டு இருக்கீங்களாக்கும்... உருப்படியா ஹெல்ப் பண்ணுவீங்களா? அத விட்டுட்டு..'
'என்ன ஹெல்ப் பண்றது?'
'அத ஒரு குச்சியால எடுத்து ஒரு பையிலயோ டப்பாவிலயோ, சாக்குலயோ போடலாமில்ல?'
'கட்டுவிரியன்! வலியில வேற இருக்கு! ஒரு போடு போட்டுச்சுன்னு வையி. அப்புறம் எனக்கு யாரு ஹெல்ப் பண்ணுவாங்க?'
அவர்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறு மருத்துவமனை. அங்கு காத்திருந்தவர்களில் ஓரிருவர், இவர்கள் இருவரும் எட்டி எட்டிப் பார்ப்பதையும், அவன் ஃபோட்டோ எடுப்பதையும் பார்த்துவிட்டு ரொம்ப ஆவலாக அருகில் வந்தனர். சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிச் சென்றனர்.
மறுபடி எல்லோருக்கும் ஒரு சுற்று ஃபோன் செய்து பார்த்தாள் பூங்குழலி. ஒருவர் கூட எடுக்கவில்லை. அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. பக்கத்து வீட்டுக்குப் பசும்பால் ஊற்றும் பால்காரர் வண்டியை ஓரமாகக் கொண்டு வந்து நிறுத்தினார். மணி பத்தரை.
'பாம்பு கிடக்காமே? எங்கே மேடம்?'
பழனியோ, பால்காரரை அழைத்துச் சென்று பாம்பைக் காட்டினார்.
'ப்பூ! சின்ன பாம்பு! அடிச்சுத் தூக்கிப் போட்டுறட்டுமா சார்?'
'உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க' என்றாள் பூங்குழலி.
'எல்லா உயிரையும் காப்பாத்தறதுக்குத் தானே இந்த மேடம் இருக்காங்க? அவங்க போயி பாம்பை அடிப்பாங்களா? நீங்க பாலை ஊத்துங்க?' என்றார் பக்கத்து வீட்டுக்காரர் கேலியாக.
இதற்குள் விஷயம் தெரிந்து போய், மாடியில் வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார், கம்பி கட்டுகிறவர்கள், சித்தாள்கள் என்று எல்லோரும் இறங்கி வந்து அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டுப் போனார்கள்.
அந்தக் கறுப்பு நிறக் கண்கள் பூங்குழலியிடம், 'ஏன் என்னை இப்படிக் காட்சிப் பொருளாய் ஆக்கி விட்டாய்? என்னைக் காப்பாற்றுவாயா மாட்டாயா?' என்று பரிதாபமாய்க் கேட்பதுபோல் இருந்தது. பூங்குழலிக்கு நெஞ்சு படபடவென்றது. வேறு யாரிடம் உதவி கேட்பது?
'நீங்க இங்கேயே இருந்து யாரும் கிட்ட வராமப் பாரத்துக்குங்க. கூட்டத்தைப் பார்த்துப் பயந்து அது நகர்ந்து எங்கேயாவது போயிடப் போவுது.'
'போகட்டுமே! அதுக்குத் தானாகவே சரியாயிடும். நீ ஏன் இப்படி அலட்டிக்கிறே?'
'பேசாம இருங்க! பாம்பு பிடிக்கிற சரவணன் தெரியுமில்ல? அவர் நம்பரை டைரியில குறிச்சு வெச்சிருக்கேன். அவருக்கு ஃபோன் பண்ணிப் பார்க்கிறேன்' என்றபடி உள்ளே ஓடினாள். டைரியில் தேடிக் கண்டு
பிடிக்க அரை மணி நேரம் ஆனது. எண்களை அழுத்தினாள். நல்லவேளை அவரே எடுத்தார்.
'சார், வணக்கம். நல்லா இருக்கீங்களா? நான் பூங்குழலி. ராம்நகர்..'
'ம்.,, சொல்லுங்கம்மா?'
'எங்க வீட்டு வாசல்ல ஒரு பாம்பு. அடிபட்டு நகர முடியாமல் கிடக்குது.'
'என்ன பாம்பு?'
'கட்டுவிரியன் மாதிரி இருக்கு.'
'என்ன நிறத்துல இருக்கு?'
'கோதுமை நிறம்.'
'அப்ப ஓலைப்பாம்பா இருக்கும். அது விஷம் இல்லாதது. அப்படியே எடுத்துப் பக்கத்துல இருக்கிற செடி கொடியில விட்டுடுங்க?'
'தொட பயமா இருக்கு சார். கட்டுவிரியனா இருந்தா?'
'சரி, ஒரு ஃபோட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் ஆஃப் பண்ணுங்கம்மா?'
வெளியில் ஓடினாள்.
'என்னங்க, சரவணன்கிட்ட பேசினேன். இந்தப் பாம்பையெல்லாம் ரெஸ்க்யூ பண்ணுவாரே... பேப்பர்ல எல்லாம் கூட வந்திருக்கு.. அந்தப் பாம்பை ஃபோட்டோ எடுத்து அவருக்கு வாட்ஸ் ஆஃப்ல அனுப்பச் சொன்னாரு. நல்லா க்ளோஸ் அப்ல எடுங்க?'
'நான் ஃபோட்டோ எடுத்ததுக்குத் திட்டுனியே?'
'சரி, மன்னிக்கச்சுக்குங்க! போட்டோவை இந்த நம்பருக்கு அனுப்புங்க?'
பழனி பாம்பைக் கிட்டத்தில் படம் பிடித்து அந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆஃப்பில் அனுப்பினார்.
ஐந்து நிமிடங்களாயின, பத்து நிமிடங்களாயின. அவர் கூப்பிடவில்லை.
'பார்த்தாரோ என்னவோ?'
அவளே மறுபடி அவரை அழைத்தாள்.
'சார், பாம்போட ஃபோட்டோ அனுப்பியிருக்கேன். பார்த்துட்டீங்களா?'
'இல்லைம்மா. பார்த்துட்டுக் கூப்பிடுறேன்.'
மணி பத்தேமுக்கால். பாம்பை எட்டிப் பார்த்தாள். அது அப்படியே கிடந்தது. ஆனால் அந்தக் கறுப்பு நிறக் கண்களில் உயிரின் துடிப்பு தெரிந்தது. 'கொஞ்சம் பொறுத்துக்கோ செல்லம்! எப்படியாவது உன்னைக் காப்பாத்திடுறேன்!' என்று பாம்பிடம் மெல்லிய குரலில் சொன்னாள். கைப்பேசி ஒலித்தது. சரவணன் பேசினான்.
'அம்மா, அது ஓலைப்பாம்பு தான். பயப்படாமப் பிடிச்சு எங்கேயாவது புதர்ல விட்டுடுங்க?'
'ஆனா சார், அதுக்கு அடிபட்டிருக்கு. உடனடியா சிகிச்சை தேவை.'
'அப்படியா? நான் ஒரு கோப்ரா ரெஸ்க்யூல இருக்கேன். ஒரு வீட்டுக்குள்ள நல்ல பாம்பு பூந்துடுச்சு. அதப் பிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க ஒண்ணு பண்ணுங்க. நான் ஒரு நம்பர் தர்றேன். அது வனத் துறையோட 'ரெஸ்க்யூ செல்' நம்பர். அதுல கூப்பிட்டுச் சொன்னீங்கன்னா அவங்களே ஆள் அனுப்பிப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்க?'
அவர் கடகடவென்று சொன்னார். குரலில் எரிச்சல் தெரிந்தது. அவள் உள்ளங்கையில் எழுதிக் கொண்டாள்.
'நன்றி சார்' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே வருவதாகச் சொல்லியிருந்த இன்ஜினியர் வந்துவிட்டார்.
'வாங்க சார். ப்ளீஸ் சார், ஒரு ரெண்டு நிமிஷம். பாம்பு ஒண்ணு அடிபட்டுக் கிடக்கு. அதான். அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணிட்டு வந்துடறேன். ஏங்க, நீங்க சாரோட பேசிட்டிருங்க. சார் வர்றீங்கன்னுதான் இவரும் இன்னிக்கு லீவு போட்டிருக்கார்.'
இன்ஜினியர் பாம்பை எட்டிப் பார்த்துவிட்டு, 'அடப் பாவமே!' என்று சொல்லிவிட்டு பழனியுடன் உள்ளே போனார்.
சரவணன் கொடுத்த எண்ணை அழைத்தாள் பூங்குழலி.
'வணக்கம். வனத்துறையின் கட்டுப்பாட்டு அறை'
'வணக்கம் சார். நான் ராம்நகர்லேயிருந்து பேசறேன் சார். என் பேர் பூங்குழலி. எங்க வீட்டு வாசல்ல ஒரு பாம்பு அடிபட்டுக் கிடக்குது சார். அதைக் காப்பாத்தறதுக்கு ஏதாச்சும் ஏற்பாடு செய்ய முடியுங்களா?'
'ராம் நகரா? கொஞ்ச நேரத்தில உங்களைத் தொடர்பு கொள்வாங்க. நன்றி.
தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இன்ஜினியரிடம் பேசி முடித்து, அவர் மாடிக்குச் சென்று வேலையாள்களிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது மணி பனிரெண்டரை. வனத்துறையிலிருந்து ஆள் யாரும் வந்தபாடில்லை.
'அந்தப் பாம்பு மூன்று மணி நேரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது! இத்தனை பெரிய நகரத்தில், இத்தனை பேரைத் தெரிந்திருந்தும் நம்மால் இதைக் காப்பாற்ற உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லையே' என்ற ஆற்றாமை அவளை அழுத்தியது. கோபத்துடன் மறுபடி வனத்துறையின் கட்டணமில்லா எண்ணை அழுத்தினாள்.
'சார், நான் கொஞ்ச நேரம் முன்னாடி பேசியிருந்தேன். பாம்பு ஒண்ணு அடிபட்டு...'
'ராம் நகர் தானே? சொல்லியிருக்கேன் மேடம். வருவாங்க?' என்று சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டார்.
பூங்குழலி ஆயாசத்தோடு நாற்காலியில் உட்கார்ந்தாள். வான்மதி பத்து முறை கூப்பிட்டிருந்தாள்.
'வான்மதி.. அது அப்படியே தான் இருக்கு. யார் யாருக்கோ ஃபோன் பண்ணியும் புண்ணியமில்ல. இப்பத்தான் வனத் துறையோட ரெஸ்க்யூ செல் நம்பர் கிடைச்சுது. கூப்பிட்டுச் சொல்லி அரைமணி நேரமாச்சு... இரு... ஏதோ கால் வருது... அவங்களாத்தான் இருக்கணும். அப்புறம் பேசறேன்.'
'வணக்கம் மேடம். நான் ஜெயராஜ் பேசறேன். வனத் துறையில உங்க நம்பர் குடுத்தாங்க. எங்க மேடம் வரணும்? நான் சின்ன மேம்பாலத்துக்கிட்ட வந்துட்டேன்.'
அவள் அடையாளம் சொல்லிவிட்டுத் தவிப்புடன் நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.
மீண்டும் கைப்பேசி ஒலித்தது.
'சார், நேரா வாங்க. ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாப்புல... ஓரமா மண்ணு கொட்டியிருக்கும் பாருங்க. நான் வெளியிலதான் நிக்கிறேன்.'
அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. அவள் நெஞ்சு திக்திக்கென்று அடித்துகொள்ளும் சத்தம் அவளுக்கே கேட்டது. ஜெயராஜ் வந்து வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
'பாம்பு எங்கே மேடம்?' என்று கேட்டார்.
'இதோ!' என்று அவள் காட்டிய இடத்தில் பாம்பைக் காணவில்லை. அவள் இதயம் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டது.
'இங்கேதான். இந்த இடத்துலதான் இருந்துச்சு .'
பரிதவிப்போடு அங்குமிங்கும் தேடினாள். பழனியும் சேர்ந்து தேடினார். பாம்பைக் காணவில்லை. அது பிடித்துகொண்டிருந்த கிளை மட்டும் கிடந்தது.
'இத்தனை தூரம் கஷ்டப்பட்டு, இப்போது காப்பாற்றும் தறுவாயில் காணாமல் போய்விட்டதே.'
எதிர்த்தாற்போல், சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காருக்கடியில் ஒரு குண்டுப் பூனை உட்கார்ந்து இவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
'அந்தப் பூனைதான் பிடித்திருக்குமோ? அடிபட்ட பாம்புதானே? அதனால் என்ன செய்ய முடியும் பாவம்.'
அதற்குள், வந்தவர் குனிந்து, மண் குவியலின் அருகில் இருந்த பூச்செடிகளில் கைகளால் துழாவினார்.
'இதோ இருக்கு!'
பாம்பை பூப் போலக் கையில் பிடித்து எடுத்தார். தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடினார். பூங்குழலிக்கு 'அப்பாடா!' என்று இருந்தது. பழனியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
'டப்பாவை மூடிட்டீங்களே! அதுக்கு மூச்சு விட முடியுமா?'
'மூடியில சின்னச்சின்ன ஓட்டை இருக்கு.'
மூடியின் வழியே பாம்பைப் பார்க்க முடிந்தது.
'காப்பாத்திட முடியுமா சார்?'
'கஷ்டம்தான்! கிட்டத்தட்ட ரெண்டு துண்டா இருக்கு. வெட்டுப்பட்ட இடத்துல லேசா ஒட்டிக்கிட்டு இருக்கு பாருங்க. வெட்டுக் காயம் எப்படி உண்டாச்சு?'
'மண்ணு எடுக்க வந்த ஆளுங்க, நான் தடுக்கறதுக்குள்ள மம்புட்டியால போட்டுட்டாங்க?'
'ரொம்ப நேரமாக் கிடந்திருக்கும் போல?'
'ஆமாம் சார். காலையிலேருந்து இவங்களும் யார் யாருக்கோ ஃபோன் பண்ணிப் பார்த்தாங்க. ஒண்ணும் நடக்கலை. நீங்க ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டா?' என்று கேட்டார் பழனி.
'இல்லை சார். நான் தன்னார்வலர். வாலண்டியர். வனத் துறையில சொன்னீங்கன்னா, எங்களை மாதிரித் தன்னார்வலர்களைத் தொடர்பு கொள்வாங்க. நாங்க வந்து ரெஸ்க்யூ பண்ணுவோம். சரிங்க மேடம். நான் கிளம்பறேன். நீங்களும் உங்க சாரும் இவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டதுக்கு நன்றி. எல்லோரும் உங்களைப் போலிருந்தா நல்லா இருக்கும்'
'இருங்க சார். ஒரு தடவைப் பார்த்துக்கிறேன்' என்று பூங்குழலி பாம்பை மீண்டும் பார்த்தாள். அந்தக் கறுப்பு நிறக் கண்கள் இப்போதும் அவளை உற்றுப் பார்த்துகொண்டிருந்தன. அவற்றில் தெரிந்தது பயமா, நம்பிக்கையா?
மதியம் பூங்குழலிக்கு சோறு இறங்கவில்லை.
'சரி,விடு! உன்னால முடிஞ்சதைச் செஞ்சிருக்கே. அதுக்கப்புறம் அதோட விதி! அதப் பத்தியே நினைச்சிக்கிட்டு இருக்காம, சாப்பிடு' என்றான் பழனி பரிவோடு.
'ஜெயராஜிடமிருந்து செய்தி வரும்' என்று காத்திருந்தாள். ஒன்றும் வரவில்லை. ஐந்து மணிக்கு மேல் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் எண்ணை அழைத்தாள். அழைப்பு போகவேயில்லை. சரவணனைக் கூப்பிட்டாள்.
'சார்.... நான்தான் பூங்குழலி.'
' சொல்லுங்கம்மா?'
'நல்ல பாம்பைப் பிடிச்சிட்டீங்களா?'
'பிடிச்சிட்டேம்மா. நாலடி நீளம். பாத்ரூமுக்குள்ள போயிப் படுத்துக்கிச்சு. ரெண்டு மணி நேரம் ஆச்சும்மா பிடிக்க. முழுசா வீடியோ எடுத்து யூ ட்யூபில போட்டிருக்கேன் பாருங்க. 'பாம்பும் பல்லவனும்'... என்னோட சேனல்.. பார்த்திருக்கீங்களா?'
'இல்லை சார் பார்த்ததில்லை.'
'எல்லா நியூஸ்லயும் என்னைப் பத்தி வந்திருக்கும்மா. போன வாரம் கூட கோவை டி. வி. யில என்னோட பேட்டி வந்துச்சே...'
'சார் நான் டி. வி. பார்க்கிறதில்லை. அந்தப் பாம்பு..'
'ஆச்சரியமான விஷயம்தான். சரி உங்களுக்கு எல்லா லிங்க்கும் வாட்ஸ் ஆஃப்பில அனுப்புறேன். பாருங்க?'
'எனக்கு வாட்ஸ் ஆஃப் கிடையாது சார். அந்தப் பாம்....'
'அப்புறம் எப்படிப் பாம்போட ஃபோட்டோவை எனக்கு அனுப்பினீங்க?'
'என் கணவரோட கைப்பேசியிலேருந்து அவர் அனுப்பினாரு. அந்தப் பா....'
'ஏம்மா வாட்ஸ் ஆஃப் வைச்சுக்கலை?'
'நான் கைப்பேசியைப் பயன்படுத்தறதே ரொம்பக் குறைவு. அந்தப்....'
'கைப்பேசி, வாட்ஸ் ஆஃப் ... இதெல்லாம் இல்லேன்னா இன்னிக்கு நீங்க இத்தனை பேரைத் தொடர்பு கொண்டிருக்க முடியுமா? டெக்னாலஜி அவசியம்மா?'
'உண்மைதான், இருந்தாலும்...'
'சரி விடுங்கம்மா. இப்ப ஏன் கூப்பிட்டீங்க?'
'அந்தப் பாம்பு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கத்தான்.'
'எனக்குத் தெரியாது.'
'ஜெயராஜ்னு ஒருத்தர் வந்தார் சார்.'
'ஓ! ஜெயராஜ் வந்தாரா? அவரையே கூப்பிட்டு கேளுங்கம்மா?'
'அவருக்கு அழைப்பு போகமாட்டேங்குது.'
'அப்ப அந்த டோல் ஃப்ரீ நம்பரைக் கூப்பிட்டுக் கேளுங்க?'
'சரி சார். ரொம்ப நன்றி.'
'அப்புறம் ஒரு விஷயம்மா. இனிமே அடிபட்ட பாம்புக்காக எல்லாம் ஃபோன் பண்ணாதீங்க. உயிரோட இருக்கிற பாம்பை ரெஸ்க்யூ பண்றதில ஒரு அர்த்தம் இருக்கு. சாகக் கிடக்கிற பாம்பைக் காப்பாத்தி என்ன பண்ணப் போறோம்? அதே மாதிரி, இந்த ஓலைப் பாம்பு, தண்ணிப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு, இதுக்கெல்லாம் ஃபோன் பண்ணாதீங்க. ஒரு நல்ல பாம்பு, ஒரு மலைப் பாம்பு, ஒரு கட்டுவிரியன் இல்ல ஒரு கண்ணாடிவிரியன்.... இப்படிப் பிடிச்சா அதுல ஒரு த்ரில் இருக்கும். நமக்கும் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும். வைக்கிறேம்மா' என்று தொடர்பைத் துண்டித்தார்.
அவள் மனம் வலித்தது. 'பாம்பில் எந்தப் பாம்பு உசத்தி? எந்தப் பாம்பு தாழ்ச்சி? பாம்பின் உயிருக்கு மதிப்பில்லையா? மனித உயிருக்கே மதிப்பில்லாத இந்த நாட்டில் பாம்பின் உயிரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?'
சோர்வுடன், கட்டணமில்லா எண்ணை அழுத்தினாள்.
'வணக்கம் சார். ஒரு அடிபட்ட பாம்பு விஷயமா நான் உங்களைக் கூப்பிட்டிருந்தேன். அந்தப் பாம்பு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கலாமா சார்?'
'அது, கொண்டு வரும்போதே செத்துப் போச்சு மேடம். எலும்பெல்லாம் உடைஞ்சு போயிடுச்சு.'
'அடடா! அப்...படியா சார்?'
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. நெஞ்சை அடைத்தது. அழுகை வரும் போல் இருந்தது. திக்கித் திணறி, 'நன்றி சார்' என்று கூறிவிட்டு துக்கம் தாங்காமல் தரையில் உட்கார்ந்தாள். கண்களில் கண்ணீர் திரண்டது. கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் உருண்டோடின.
ஒரு கண்ணீர்த் துளி மூடியிருந்த அவள் கையின் மேல் விழுந்தது. அந்தத் துளியில், 'அந்தக் கறுப்பு நிறக் கண்கள்' தெரிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.