உலகின் உச்சி...

'கிரீன்லாந்தை எங்களுக்கு விற்றுவிடுங்கள். இல்லையென்றால் எடுத்துகொள்வேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தி வருவது சர்வதேச அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
உலகின் உச்சி...
Published on
Updated on
3 min read

'கிரீன்லாந்தை எங்களுக்கு விற்றுவிடுங்கள். இல்லையென்றால் எடுத்துகொள்வேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தி வருவது சர்வதேச அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கிராபைட், லித்தியம், தங்கம், இரும்பு, யுரேனியம், துத்தநாகம், செம்பு தாதுக்கள் கிரீன்லாந்தில் அதிகம் இருப்பதால், கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றும் முடிவை ட்ரம்ப் மாற்றிக் கொள்ள மாட்டார். இதனால், டென்மார்க், கிரீன்லாந்து நாடுகள் கலங்கி நிற்கின்றன.

உலகின் மிகப் பெரிய தீவான இந்த நாடு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. உலகின் உச்சியில் அமைந்துள்ள கிரீன்லாந்தில் ஆண்டில் 10 மாதங்கள் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை. ஜூன் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் நிலையான பகல். இரவே இல்லாததால், சந்திரனும் இல்லை. அந்த நாள்களில் முழுமையாக சூரியன் பிரகாசிக்கும்.

கிரீன்லாந்தின் பூர்வக் குடியினரை 'இனுயிட்' என்கின்றனர். 2,166,086 சதுர கி.மீ. பரப்பளவில், சுமார் அறுபதாயிரம் பேர் மட்டுமே வாழ்கின்றனர்.

பத்தாம் நூற்றாண்டில் கடல் கொள்ளைக்காரர்கள் கிரீன்லாந்தில் காலடி எடுத்துவைத்தனர். பிறகு டென்மார்க் கிறித்துவப் பரப்புரையாளர்கள் கிரீன்லாந்து வந்து சேர்ந்தனர். டென்மார்க் வர்த்தகர்கள் திமிங்கல வேட்டைக்கு கிரீன்லாந்து வந்து சேரவே, உள்ளூர் பூர்விகக் குடியினர் காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

பறந்து விரிந்த ராட்சஷ பனிப்பாறைகளுக்குப் பெயர் போனது. டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து இருந்தாலும், தீவை ஆளுவது கிரீன்லாந்து அரசுதான்.

நகரங்களை இணைப்பது விமானங்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள், கப்பல்கள் போன்றவையாகும். நகரங்களில் மட்டும் சாலை வசதி உள்ளதால், கார்கள், டாக்சிகள், பஸ்கள் ஓடும் . நகரங்களில் பிரமாண்ட அடுக்குமாடி வீடுகள், அகலமான இருவழி சாலைகள் கிடையாது. சிறு ஊர்களில் பாதை மட்டுமே. ஆனால் தூய்மையான குடிநீர் எங்கும் கிடைக்கும்.

இங்குள்ள வால்ரஸ் என்ற கடல் விலங்குக்கும் தந்தம் உண்டு. தந்த வேட்டைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. தீவு மக்கள் உணவுக்காக வேட்டையாட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில் விளைநிலம் கிடையாது. நிலம் முழுவதும் பாறைகள். அதனால் காய்கறிகள் இறக்குமதியாவதால், விலையும் மிக அதிகம். கிரீன்லாந்து அதிகம் குளிர் உள்ள பகுதி என்றாலும் வெந்நீர் ஊற்றுகள் சில இடங்களில் உள்ளன. கிரீன்லாந்தில் சுற்றுலாவுக்கு அதிக செலவு செய்யவேண்டும்.

அமெரிக்காவுக்கு கண் ஏன்?

இரண்டாம் உலகப் போரின்போது, கிரீன்லாந்து டென்மார்க் - சம்மதத்துடன் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 1951இல் அமெரிக்கா 'பிட்டுஃபிக்' ராணுவத்

தளத்தை கிரீன்லாந்தில் அமைத்தது. 1968இல் அணுகுண்டுகளைச் சுமந்து சென்ற அமெரிக்க 'ஆபரேஷன் குரோம் டோம்' விமானம் கிரீன்லாந்தில் விபத்துக்குள்ளானது.

அணுகுண்டுகளில் ஒன்று மட்டும் இதுவரை மீட்கப்படாமல், மர்மம் தொடர்கிறது.

அமெரிக்க ராணுவ மயமாக்கல் டென்மார்க் மக்கள் குடியேற்றம் விரிவடைந்தவுடன் கிரீன்லாந்து பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து நியாயமற்ற முறையில் அகற்றப்பட்டனர், 1950களில் அமெரிக்கா அன்றைய சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட பனிப் போர் காலத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கிரீன்லாந்து ராணுவ முக்கியத்துவம் பெற்ற பகுதியாக மாறியது.

காலநிலை மாற்றம் கிரீன்லாந்தையும் விடவில்லை. அதனால் கிரீன்லாந்தில் முக்கால்வாசி நிலப்பரப்பில் குவிந்துகிடக்கும் பனிக் கட்டிகள், பனிப்பாறைகள் ஆண்டுதோறும் 267 பில்லியன் டன் உருகி கடலில் கலக்கிறது. இந்த உருகும் நீர் கடல் மட்டத்தை இதுவரை எட்டு அங்குலம் உயர்த்தியுள்ளது,

அமெரிக்க ராணுவத் தளம் கிரீன்லாந்தில் இருந்தாலும் 75 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களாக இருந்தோர் கிரீன்லாந்தை சொந்தம் கொண்டாட நினைக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் கிரீன்லாந்தின் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை. ட்ரம்ப் பதவி ஏற்றதும் மகனை கிரீன்லாந்துக்கு அனுப்பிவைக்க, அவரும் ராணுவத் தளத்தை பார்வையிட்டு திரும்பிவந்தார். கிரீன்லாந்தில் வசிக்கும் டென்மார்க் குடிமக்களோ, கிரீன்லாந்தின் பூர்வகுடியினரோ ட்ரம்ப் மகனைப் பார்க்க வரவில்லை.

அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ், உஷா அமெரிக்க அதிகாரிகளுடன் கிரீன்லாந்தில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளத்துக்கு வருகை தந்தார். அவர் வருகைக்கு முன்னரே அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களிடம், 'உஷாவைக் காண, அவரிடம் பேச விருப்பம் இருக்கிறதா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சொல்லிவைத்தது மாதிரி, 'நோ... தேங்க்ஸ்..' என்று விலகிவிட்டார்கள்.

கிரீன்லாந்தின் 'ஸிஸிமுட்' என்ற இடத்தில் மார்ச் 28இல் நடைபெற்ற தேசிய ஸ்லெட் நாய்கள் பந்தயத்தைப் பார்க்க உஷா விரும்பியதால், அதற்கும் கிரீன்லாந்து சுற்றுலா நிறுவனம் முதலில் ஏற்பாடு செய்துவிட்டு பின்னர் பின்வாங்கியது. இதனால் வான்ஸ் தம்பதி அமெரிக்காவுக்கு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com