
எட்டாம் வகுப்பில் படிக்கும் என் மகன் படிப்பில் மிகவும் மந்தமாக இருக்கிறான். ஆங்கிலம், கணிதம், வரலாறு ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவதே இல்லை. அவன் நீண்ட ஆயுளுடன் அறிவாளியாகவும் வாழ வழி உள்ளதா?
-தாமரைச்செல்வி, புதுவை.
'மண்டூக பர்ணீ' எனும் வல்லாரை அனைத்து இடங்களிலும் தாராளமாய் கிடைக்கும். பூமியில் படரும் மெல்லிய கொடி இலைகள் வட்டமாய் மத்தியில் சிறிது உள்வளைவுடன் இருக்கும். நீர்த் தேக்கமான இடங்களின் ஓரத்தில் மழைக்காலத்தில் தானாய் உற்பத்தியாகும். கீரையின் சுவை கசப்பு, புத்தி மேதை வளர்ப்பில் பிராம்ஹீ போல வல்லாரையும் குணங்களில் மிகச் சிறந்ததொரு மூலிகையே. நிறைய ஆயுர்வேத மருந்துகளில் வல்லாரை சேருகின்றது.
பரிசுத்தமான பூமியில் பயிராக விளைந்துள்ள வல்லாரை ஸமூலம் எடுத்துக் கழுவி நீரில்லாமல் உதறி சுமார் ஒரு பிடி அளவு எடுத்து, கொஞ்சம் பசுவின் நெய்யில் பொரித்து காலை உதயத்தில் வெறும் வயிற்றில் பற்களால் மென்று சுவைத்துச் சாப்பிடவும். ஒரு மாசமாவது குறைவின்றி தினசரி தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். சாதம் சாப்பிடக் கூடாது. பாலும் பழங்களும் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இதனால் மகனுக்கு என்ன பயன்? வெகு நீண்ட ஆயுள், வாழ்க்கைக் காலம் முழுவதும் உடல் கம்பீரம், வாலிபம், மேனி வனப்புடன் விளங்குவார். வல்லாரை ரத்தத்தைச் சுத்தம் செய்து சொரி, சிரங்கு முதலிய சிறிய, பெரிய சரும நோய்களைப் போக்குவதிலும், மூளைக்கு வன்மை தூய்மை கொடுத்து ஞாபகச் சக்தி, புத்தி மேதை வளர்ப்பதிலும் சிறந்த ஒரு மூலிகையாகும்.
வேறு முறை: வல்லாரை ஸமூலம் நன்றாக அரைத்துப் பிழிந்த சாறு மகனின் செரிமானச் சக்திக்கு உகந்தவாறு அரை முதல் இரண்டு அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் 30 மில்லி) வரையில் சாப்பிடக் கொடுக்கவும். அதிமதுர சூரணத்தை அரை முதல் 2 கிராம் அளவு காய்ச்சின பசும்பாலுடன் இரவு படுக்கும் முன் சாப்பிடவும். ஆயுளைப் பூரணமாய்த் தரும். வந்துள்ள நோய்களைப் போக்கும். வராமல் தடுக்கும். உடல் வன்மை கூடும். பசி, பயிர், உடல்நிறம், குரல் இவைகளை வளர்க்கும். புத்திமேதையை அதிகமாக்கும்.
முருகக் கடவுளின் பெயரைக் கொண்ட ஆயுர்வேதச் சூரண மருந்து ஒன்று இருக்கிறது. விற்பனையிலுள்ளது. அதில், சிறிது தேன், மூலிகை நெய் மருந்து ஒன்றை உருக்கிக் குழைத்து ஒரு நாளில் இரு வேளை சாப்பிட படிப்பில் மந்தமாக இருக்கும் மகன் நன்றாகப் படிக்கத் தொடங்கி விடுவான். ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களில் அதிக கவனம் ஏற்பட்டு தேர்ச்சி பெற்றுவிடுவான்.
விடுமுறை நாள்களில் ஆயுர்வேத மருத்துவமனைகளில் தங்கி, உடலில் எண்ணெய் தடவி வியர்வைச் சிகிச்சையை மேற்கொண்டு குடலைச் சுத்தமாக்கியப் பின்னர், நெற்றியில் தாரையாக ஊற்றப்படும் 'சீரோதாரை' எனும் சிகிச்சை செய்துகொள்வது நலம். தலைக்கு மொட்டை போட்டுக் கொண்டு இதைச் செய்துகொள்ள வேண்டும். மொட்டை போட மாட்டேன் என்று மகன் அடம்பிடிக்கக் கூடாது.
அறிவு வளர்ச்சிக்கு பசுவின் நெய் உதவுகிற மூளையின் பெரும்பாகம் ஒரு வகை கொழுப்பு (பாஸ்கோலிபிட்ஸ்) உள்ளதாயிருக்கிறது. அதுவே உணவாகவும் ஆகிறது. பசுவின் நெய்யில் இது நிறைய இருக்கிறது.
விஷயங்களை அறிவதற்கும், அறிந்த பொருள்களைத் திரும்ப ஞாபகப்படுத்துவதற்கும், தெரிந்த விஷயங்களை மனதிலேயே தேக்கி வைத்துகொள்வதற்கும் பசுவின் நெய் உதவுகிறது. அதனால் மகனுக்கு உணவில் அடிக்கடி பசுவின் நெய் சேர்க்கவும். மூளையின் மேல்புறத்திலுள்ள அநேக வளைவுகளினுள்ளே கோடிக்கணக்கான கோசாணுக்களின் படர்கொடிகளின் மின்ரசாயனச் செய்திகள் விரைவாக நடைபெற உதவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.