வனவாசம்

எனக்குத் திருமணமாகி இருபத்து மூன்று வருடங்கள் ஆகின்றன. திருமணத்தின்போது அவளுக்கு இருபத்திரண்டு வயது.
வனவாசம்
Published on
Updated on
5 min read

எனக்குத் திருமணமாகி இருபத்து மூன்று வருடங்கள்  ஆகின்றன. திருமணத்தின்போது அவளுக்கு இருபத்திரண்டு வயது. முதல் திருமண நாளையே  மகன் ரமேஷுடன் தான் கொண்டாடினோம். 

'எங்கள் குடும்பத்தில் என் அம்மா, அப்பா, திருமணமாகாத இரண்டு தங்கைகள், ஒரு தம்பி' என்று பெரிய குடும்பம். வீட்டில் உள்ள எல்லோரையும் பார்த்துகொண்டு, குழந்தையையும் பார்த்துகொண்டு சீதம்மா எம்.ஏ. சேர்ந்து, 'அத்திரிபாட்சா' என்று பள்ளம் தாண்டுவது போல ஒரே மூச்சில் படித்து முடித்தாள் மிக நல்ல மார்க் எடுத்து. 

சீதம்மா தயவில்  வீட்டுக் கவலை என்றுமே  எனக்கு இருந்தது இல்லை. நான் படித்த உயர்படிப்புக்கும், ஏற்கெனவே நான் வெளியூர், வெளிநாட்டில்  பார்த்த வேலைகளின் அனுபவ அடிப்படையில் சென்னையில் மிக நல்ல வேலை கிடைத்தது. அது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், நான் சீக்கிரமே  ஆபீஸ் கிளம்பி மிக மிக லேட்டாக வீடு திரும்புவேன். அதுவரை  சீதம்மா சாப்பிடாமல் காத்திருப்பாள்.

'வீட்டு வேலை, சமையல் வேலை, துணி துவைத்தல்' என்று எது செய்தாலும் அவள் வேலையில் மிகுந்த நேர்த்தி தெரியும். எதுவானாலும் கடனே என்று செய்யாமல் ரொம்ப ஆசை ஆசையாக சிரத்தையாகச் செய்வதில் சீதம்மாவை  விஞ்ச யாராலும் முடியாது. என்னுடைய பெரியப்பா, சித்தப்பா பசங்க எல்லோருக்கும் அவள் ரொம்ப பெட்.

அவள் முகத்தில் அலுப்பு என்று யாருமே பார்த்திட முடியாது. யாரிடமும் தனது உடல் அல்லது மனச்சோர்வை பகிர்ந்து சலிப்படைய மாட்டாள். 

நான் ரொம்ப மோசம். திருமணமாகி, பதினைந்து வருடங்களாகியும் அவளை ஒரு படம், ஷாப்பிங், பீச், பார்க், கூட்டிக் கொண்டு போனது கிடையாது. எனக்கு எப்போதுமே வேலை, வேலைதான். அது அவளுக்கும் புரியும்  என்பது வேறு. இருப்பினும் சீதம்மா என்ன நினைக்கிறாள் ? இது பற்றி வருத்தப்

படுகிறாளா என்றெல்லாம் யோசித்ததே  கிடையாது.  அப்போதுதான் சீதம்மா எனக்கு, எனது குடும்பத்துக்கு எவ்வளவு உடல் உழைப்பை அளித்துள்ளாள் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது.

'நான் காய் நறுக்கி கொடுக்கட்டுமா? நான் துணி உலர்த்திக்  கொடுக்கட்டுமா?' என்று கேட்டாலும், அவள் பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். 'நீங்கள் பாவம், ரொம்ப களைப்பாக வீடு வருகிறீர்கள். உட்கார்ந்து நியூஸ் பாருங்கள், பாட்டு கேளுங்கள், என்ற மறுப்பாக!

புதிய சிக்கல் தொடங்கியது. எனக்கு அலுவல் பிரஷர் காரணமாக ரத்த அழுத்தம், சுகர், கொலஸ்ட்ரால் என்று எல்லாமே வந்து சேர்ந்துகொண்டது. இரண்டு வேளையும் ஏகப்பட்ட மாத்திரைகள். அந்த சமயம் தான் முக்கிய பொறுப்பு என்பதால் ஆபீஸ் டூர் வேறு. அந்த பாழாய்ப் போன மைல்டு ஹார்ட் அட்டாக்கும் வந்தது. சீதம்மா மிகவும் ஆடிப் போய் விட்டாள். எனது அம்மாவைவிட ஒரு படி மேலே  மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுவாள். அவள் கொடுத்த அழுத்தம் காரணமாக, நான் எனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன். தனியே ஒரு கன்சல்டன்ட் ஆகி விட்டேன். அதிக நேரம் வீட்டில் இருந்த படியே வேலை செய்யலாம். சில நேரம் மட்டுமே வெளியே போக வேண்டி இருக்கும். டூர் எல்லாம் கிடையாது. 

நானும் சரி, சீதம்மாவும் சரி, எனது உடல்நலம், ரமேஷின்  படிப்பு, அவனுக்குத்  தேவையான பைக், மொபைல், லேப்டாப்  என்று மட்டுமே கவனம் செலுத்திய நேரம் அது.  எந்த நேரமும்  தனது பிறந்த வீட்டுக்குக் கூடப் போகாமல் எங்களைப் பற்றியே  நினைத்துகொண்டு இருந்தாள் சீதம்மா. அப்போது தான் நான் கவனித்தேன். நிறைய மாற்றங்கள் தெரிந்தது அவளிடம். அடிக்கடி சோம்பிப்  படுக்க ஆரம்பித்தாள். 'நரம்பு வலியால் கால்கள் இழுக்கிறது' என்று சொல்ல ஆரம்பித்தாள். நெஞ்செரிச்சல், கை கால் மரத்துப் போதல், தலை சுற்றல், ஞாபக மறதி என்று பலவாறாக அவள் தவித்துக் கொண்டு இருந்தாள். என்னிடம் பெரிதாக கம்ப்ளையின்ட்  பண்ணவில்லை  என்றாலும் என்னால் அவற்றை கவனிக்க முடிந்தது. 

எனக்கு சமைக்கத் தெரியாது, வாஷிங் மெஷின் கூட ஆன் செய்யத் தெரியாது. அவ்வளவு  ஏன், டி.வி. சானல் கூட மாற்றத் தெரியாது. ரமேஷ் அவன் படிப்பின் சுமை காரணமாக ரொம்ப பிசி. வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுவது இல்லை என்றால் நான் சாதம் மட்டும் வைத்து விட்டு ரசம், குழம்பு பொரியல் வெளியில் இருந்து வரவழைத்து சாப்பிடும் நிலை உருவானது. 

சீதம்மாவை  கூப்பிட்டு கொண்டு நான் அலையாத டாக்டர் இல்லை. அலோபதி, ஹோமியோ, ஆயுர்வேதிக், , வர்மா என்று பல பல இடங்கள் அலைய ஆரம்பித்தேன். லட்சக்கணக்கில் பணம் செலவாகிக் கொண்டு இருந்தாலும் சீதம்மா குணமாகும் அறிகுறி சற்றுமே இல்லை. 

யாரிடம் இந்த சங்கடங்களைச் சொல்லிப் பகிர்வது? என் தம்பி, தங்கை எல்லோருமே அவரவர் வாழ்வில் ரொம்ப பிசி. சீதம்மா ஒரே பெண். அவள் அம்மா அப்பா மட்டும், வயதானவர்கள் என்றாலும் வேலூரில் தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு இவள் நிலைமை முழுவதும் தெரியாது.

'ஏதோ உடம்பு சரியில்லை' என்று மட்டும் தெரியும் அடிக்கடி போன் செய்து விசாரிப்பார்கள். இதற்கு நடுவில் நல்ல வரன் வந்தது. ரமேஷின் திருமணத்தை முடித்தோம். என்ன என்று சொல்ல, வந்த மருமகள் ரமேஷிடம் வேலை வாங்குவாளே தவிர, வீட்டுக்கோ எனக்கோ,  சீதம்மாவுக்கோ எதுவுமே  செய்யத் தயார் இல்லை. 

எனக்குத் தான் வேலை அதிகம் ஆயிற்று. என்னை, வீட்டை, மகன், மருமகளை, கூடவே உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சீதம்மா என்று அனைவரையும் கவனிக்கும் நிலை எனக்கு உருவாயிற்று. இப்போது இரு கோடுகள் தத்துவம் போல எனது உடல்நிலை பிரச்னைகள் கொஞ்சமும்  மனதுக்கு பெரிதாகத் தெரியவில்லை. 

என்னமோ புரியவில்லை. என்னுடைய ரூமில் தனியாக உட்கார்ந்து எனது மொபைலில் ஆடியோ ஆன் செய்து வைத்துகொண்டு பேச ஆரம்பித்தேன்.

'ஹலோ மை டியர் பிரெண்ட்ஸ், வணக்கம். நான் தான் உங்கள் ஜெகன் பேசுகிறேன். ஜெகநாதாச்சாரி. நலம் தானே? உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. பேசலாமா ?' என்றும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். யாராவது என்னை

கவனிக்கிறார்களா என்று. பிறகு தொடர்ந்தேன். 

'சின்ன வயதில் 'அட்வான்டேஜ் அப் ஹாவிங் ஒன் லெக்' என்று ஒரு பாடம் படித்தது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. ஜி.கே. ஜெஸ்டர்ட்டன்  என்பவரின் கட்டுரை பன்னிரெண்டாவது வகுப்பில் படித்தது. கால் இரண்டில் ஒன்றை  இழந்தால் அந்த இழப்பை, அந்த  ஒற்றைக் காலின்  மதிப்பை புரிய வைக்கிற  பாடம் அது. ஏன் இப்போது அது பற்றி என்கிறீர்களா? சொல்கிறேன். நன்றாக ஆரோக்கியமாக இருக்கும்போது, இரண்டு கால்களில் ஒன்று இல்லை என்றால் என்ன ஆகும் என்பது ஒருவருக்கு தெரிவதில்லை. ஒரு விபத்தில் ஒரு கால் போய் விட்டது என்றால் அவன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்று உணர்த்தும் பாடம் அது.'

மேலும் தொடர்ந்தேன். ரொம்ப நேரம் அந்த ஸ்பீக்கர் பட்டனை அழுத்திக் கொண்டு பேசுவது எனக்கு பழக்கமில்லாத ஒன்று.

'இருக்கும்போது அருமை தெரியாது. இழக்கும்போது நிச்சயம் தெரியும்.  என்னுடைய ஆருயிர் மனைவி.. இல்லை எனது அம்மா, எனக்கு கிடைத்த தேவதை, நான் தவமின்றி பெற்ற வரம். என்னுடைய வழிகாட்டி, நலம்விரும்பி, தியாக தீபம் எப்படி சொன்னாலும் அது சீதம்மாவை தான் குறிக்கும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திடீர் என்று ஒரு செயலிழப்பு காரணமாக அவர்களால்  நடக்க முடியவில்லை, பேச முடியவில்லை, உணவு அருந்த முடியவில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அது உணவுக் குழலுக்குப் பதில் மூச்சுக் குழலுக்குள் செல்லுகிற நிலை. அதனால் நீராகாரம் மட்டுமே எடுக்கிறாள். அதுவும் நான் தான் அவளுக்கு அதனை  கொடுக்கிறேன் மிகுந்த மனவேதனையுடன்...' என்று சொல்லி, மேலும் பேச சற்று மூச்சு வாங்கிக் கொண்டேன். வரும் அழுகையை அடக்கிக் கொண்டு!

'அவளுக்கு என்ன உடம்பு என்று ஏன் யாராலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. வானத்தை வில்லாக வளைக்கலாம். ராகு, கேது பெயர்ச்சி வந்தால் மாறும். சனிப்பெயர்ச்சி வந்தால் மாறும். குரு பெயர்ச்சி  வந்தால் மாறும். ஆனால் எதுவுமே  மாறவில்லை. இன்னும் அவள் ஆயுளை நீட்டி வருகிறார் என்பது நிச்சயம். இப்போதும் சில நேரம் வாட்ஸ் ஆஃப்பில்  ஏதாவது சிறு கவிதைகள் எழுதி ஸ்டேட்டஸ் வைப்பாள். பார்ப்பவர் யாருக்குமே அவளுக்கு உடம்பு சரியில்லை என்று தெரியாது. யாரிடமும் நான் இதுவரை பிரகடனப்படுத்தவில்லை.

அதற்கு விருப்பமும் இல்லை. அவரவர் வாழ்வை அவரவர் சிக்கலை வேறு யார் அனுபவிக்க முடியும் ? அவள் தன்னை மிகச் சரியாக கவனித்துக் கொள்பவள். இறைபக்தி கொண்டவள். ஆனால் இந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஏன் அவள் இப்படி சிரமங்களை சந்திக்கிறாள்? யாருக்குத் தெரியும் விடை? அவள் மனசு என்ன பாடுபடுகிறது என்று அவள் கூடவே இருக்கும் எனக்கு மட்டுமே தெரியும்.

அவள் என்ன வேதனை அனுபவிக்கிறாள் என்று எனக்கு மெசேஜ் மூலமே சில நேரம் சொல்கிறாள். இருந்தாலும் முழுவதுமாக இல்லை என்பது தான் எனது எண்ணம். நான் யாரிடம் சொன்னாலும் ஆறுதல் கிடைக்கலாம். பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லலாம். பிரசாதம் கொண்டு வந்து கொடுக்கலாம். தீர்வு சொல்ல யாராலும் முடியாது. அவள் வலியை வேதனையை நான் உட்பட யாராலும் வாங்கிக்கொள்ள முடியாது....இது தானே உண்மை?' என்று பேசினேன்.

மீண்டும் சீக்கிரம் இந்த ஆடியோவை முடிக்கும் எண்ணத்தோடு ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேன். 

' கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் தான் இதற்கு  மருந்து, ஆறுதல், நல்ல மாறுதல். எந்த ஒரு தவறுக்கும் ஒரு முடிவு உண்டு. என் செல்லம் சீத்து ஒரு தவறும் செய்யவில்லை. அப்படிப்பட்ட ஒரு நல்ல பக்தைக்கு ஏன் இந்த சோதனை? நிச்சயம் அவள் விரைவில் பூரண குணமடைவாள். இது எனக்குள் நானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு நம்பிக்கை. வேறு என்ன செய்ய? நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ? எத்தனையோ பேருக்கு ஆறுதல் சொல்லும் நான் தனிமையில் அமர்ந்து எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.

நிச்சயம் நல்லதே நடக்கும் என்று....நான் சீத்துக்கு செய்யற சேவை எல்லாம் சுகமான சுமைகள். எவ்வளவு செய்து இருப்பாள் எனக்கு? எத்தனை தூக்கங்கள் தொலைத்திருப்பாள்? நான் சேவை செய்யாமல் வேறு யார் செய்து விட முடியும்' என்று பேசிக் கொண்டே இருக்கும்போது எனது விரல் அசைந்து விட்டு ஆடியோ கட் ஆனது. நான் பேசியதை நானே ஒரு முறை போட்டுக் கேட்டேன். அப்போது அதனை  சீத்துவும் கேட்டு விட்டாள் என்பதை உணரத் தவறினேன்.

ஓரிரு நிமிடங்களில் எனக்கு ஒரு மெசேஜ். சீத்து தான்.

'டியர், என்னை எனது அம்மா வீட்டில் கொண்டு போய் விடுங்கள். சில நாள்கள் அங்கே இருந்து விட்டு வருகிறேன். எத்தனை நாள் உங்களுக்கு  சிரமம் கொடுப்பேன். அழுகிற மாதிரி ஒரு பொம்மை படம்....லவ் சீத்து.'

எழுந்து ஓடினேன். 'வேண்டாம் செல்லம். நான் நல்லாத்தானே பார்த்துக்கறேன். இங்கேயே  இரு. உன்னோட அம்மாவுக்கும் வயதாகி விட்டது. உன்னை விட்டு என்னாலும் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது.'

என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு, 'கண்ணாலேயே என்னை கொண்டு விடுங்கள்' என்று கெஞ்சினாள். நானும் அதற்கு ஏற்பாடு செய்தேன். அங்கே அவள் பிறந்த வீட்டில் ஏ.சி. இல்லை. மின்விசிறி கூட சரியாக சுற்றவில்லை. யாரையும் கேட்காமல் அவற்றை வாங்கிப்  போட்டேன்.  அந்த மெசேஜை அன்றே சில நெருங்கிய  குறிப்பிட்ட நான்கைந்து நண்பர்களுக்கு மட்டும் அனுப்பி வைத்தேன்.

இரண்டு பேர் பார்க்கவே இல்லை. ப்ளூ டிக் வரவில்லை. இரண்டு பேர் கும்பிடு போட்டு உனக்கும் உன் மனைவிக்கும் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதில் அனுப்பி இருந்தனர். நண்பர் ராம்கி (ஓரிரு முறை மட்டுமே நேரில் பார்த்து பார்த்த மாத்திரத்தில் நெருக்கமாகி விட்ட  மிக நல்ல நண்பர். அவரே  ஒரு மனநல ஆலோசகர்) மட்டும், 'உங்கள் கஷ்டங்கள் புரிகிறது. நிச்சயம் உங்களை நாளை அழைக்கிறேன்' என்று செய்தி அனுப்பினார்.

சொன்னது போலவே மறுநாள் கூப்பிட்டு முழு விவரமும் விசாரித்து எனக்கு தனது  டிஸ்டன்ஸ் ஹீலிங்கை அனுப்பி வைப்பதாக சொல்லி, 'மனம் தளராதீர்கள். உங்கள் மனதை நல்ல வழியில் செலுத்துங்கள். நிச்சயம் இதில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்கள் அன்பு மனைவி சீத்து நிச்சயம் வெகு விரைவில் பூரண குணமடைந்து வந்து சேருவார்' என்று பேசினார்.

சீத்துவைப்  பார்க்க வேண்டும் என்ற ஆசை எழவே காரை எடுத்துகொண்டு  கிளம்பினேன். சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவள் வீடு அடைந்தேன். 

அவள் புன்னகை பூத்தாள். கையைத் தூக்கி அசைத்து என்னை அருகில் அழைத்தாள்.  தனது அன்பை, காதலை கண்களால் தெரிவித்தாள். ததும்பி வரும் அழுகையை அடக்கிக் கொண்டாள். மொபைலை  கையில் எடுத்து எனக்கு மெசேஜ் அனுப்பினாள்.

'இப்போது நான் உள்ளுக்கும் உடம்புக்கும் ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொள்கிறேன். சிறிது முன்னேற்றம் இருக்கிறது. என்ன நடந்தாலும் நான் நமது வீட்டுக்குள் சொந்தமாக வலது கால் வைத்து நடந்து வந்து தான் நுழைவேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறேன். நீங்களும் காத்திருங்கள். எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.'

நடக்க முடியாமல் மெதுவாக வந்து காபி கொடுத்த மாமியார் முகம் சோகம் நிறைந்து இருந்தது. காபி குடித்து விட்டு, சீதம்மா அருகே உட்கார்ந்து அவளைத் தடவிக் கொடுத்து அவளை தூங்க வைக்க முயற்சி செய்தேன். அவள் விரல்களுக்குள் எனது விரல்களை கோர்த்துக் கொண்டு எனது அன்பைப் பரிமாற முயற்சி செய்தேன். அப்படியே இரண்டு மணி நேரம் கடந்தது. 

'நீ நிச்சயம் குணமாகி நம் வீட்டிற்குள் நீ விரும்பியது போல வலது கால் வைத்து நடந்து வருவாய்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.  'சீதம்ம மாயம்ம ஸ்ரீ ராமுடு ' என்று முனகலாக பாடிக் கொண்டு சென்னை நோக்கி வண்டி ஓட்டினேன்.

'சீதம்மாவின்  இந்த வனவாசம் எப்போது முடியுமோ? அவள் வலி வேதனை குறைந்து நல்வழி எப்போது பிறக்குமோ?' என்று மனம் கடந்து அல்லாடியாது. வண்டி தானாகவே  வீடு வந்து கொண்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com