மீண்டும் வைரலான ப்ரியா வாரியர்!
2018 - ஆம் ஆண்டு வெளியான 'ஒரு அடர் லவ்' படத்தில் கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியர் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் வைரல் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றி விழாவில் பேசிய பிரியா, ' எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. 2018-இல் 'அடர் லவ்' படத்தில் வைரலானது போல மீண்டும் வைரல் ஆகிவிட்டாய் என்று என்னிடம் சொல்கிறார்கள். கடந்த 2 நாள்களாக எனக்கு பலரும் தொடர்புக்கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கலாம் என்பதாகத்தான் இருந்தது. ஒரு கிளாசிக் ரெட்ரோ பாடல்...அதுவும் சிம்ரன் மேம் ஆடிய பாடலுக்கு, நான் சரியானப் பங்களிப்பை கொடுப்பேன் என்று இயக்குநர் ஆதிக் நம்பியதற்கு நன்றி. நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
34 வருடங்கள் கழித்து வெளியாகும் கேப்டன் பிரபாகரன்!
ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும். அப்படி மறைந்த விஜயகாந்துக்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம் தான் 'கேப்டன் பிரபாகரன்'.
அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக அமைந்த படம் தான் கேப்டன் பிரபாகரன். பெரும்பாலான ஹீரோக்களுக்கு அவர்களது நூறாவது படம் வெற்றியை கொடுக்க தவறியபோது விஜயகாந்த்திற்கு மட்டும் நூறாவது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் பெற்றுக் கொடுத்தது.
அது மட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும் விதமாக கேப்டன் என்கிற அடைமொழியையும் சேர்த்து அவருக்கு பரிசளித்தது கேப்டன் பிரபாகரன். இந்தப்படம் கொடுத்த வெற்றியின் ஞாபகார்த்தமாக தான் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார் விஜயகாந்த்.
இத்தனை பெருமை வாய்ந்த திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதை கொண்டாடும் விதமாக விரைவில் மிகப்பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. பிலிம் விஷன் கம்பெனியின் ராமு படத்தினை 4 கே தரத்திலும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து கொடுத்துள்ளார்.
4 கே தரத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் 'கேப்டன் பிரபாகரன்' விரைவில் தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.
1991 ஏப்ரல் 14 -ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ரிலீஸாக இந்த படம் வெளியானது.
இயக்குநர் ஆர்கே.செல்வமணிஇயக்கியிருந்தார். ஒரு படத்திற்கு எல்லாமும் சரியாக அமைந்து விடும் என்பது போல இந்த படத்திற்கு இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவு ராஜராஜன், வசனங்களுக்கு லியாகத் அலிகான், வில்லனாக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெறும் விதமாக சரத்குமார், அறிமுக மிரட்டல் வில்லனாக வீரபத்ரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரும் பக்கபலமாக அமைந்ததுடன் இந்தப்படம் மூலம் தங்களது திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர்.
பினராயி விஜயனுடன் சிவகார்த்திகேயன்!
கேரளாவின் கண்ணூரிலுள்ள பினராயி பகுதியில் அந்த ஊரின் பாரம்பரியத்தையும் கலாசார மரபுகளையும் பிரதிபலிக்கும் வகையில் 'பினராயி பெருமா' நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்தாண்டுக்கான இந்த நிகழ்வு கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பங்கேற்க நடிகர் சிவகார்த்திகேயன் கேரளா சென்றிருந்தார். அங்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து அவருடைய இல்லத்தில் மதிய உணவும் அருந்தியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'பினராயி பெருமா' நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். இதே நிகழ்வில் நடிகர் ஆசிஃப் அலியும் பங்கேற்றிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், 'நான் இந்த பினராயி பெருமா நிகழ்வுக்கு வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. நான் இவ்வளவு நாள்களாக முதலமைச்சர் சாருடைய பெயர்தான் பினராயி என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போதான் அது ஓர் ஊரினுடைய பெயர் என்று தெரிந்தது. 'பொறந்த ஊருக்குப் பெருமை சேரு. வளர்ந்து நாட்டிற்குப் புகழைச் சேரு' என்று ரஜினி சாரின், 'முரட்டுக்காளை' படத்தில் பாடல் இருக்கும். அந்த வரிகள் எவ்வாறு உண்மையாகும் என்று விஜயன் சாரை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
ஓர் ஊர் பெயரைத் தாங்கி இன்று ஒரு ஐகானாக மாறியிருக்கார். முதல் முறையாக விஷு பண்டிகை சமயத்தில் நான் கேரளாவில் இருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு படத்துக்கு நீங்கள் கொடுக்கிற அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி. திலும் 'அமரன்' திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
கலையையும் பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் இந்த 'பினராயி பெருமா' நிகழ்வை நடத்தியிருக்காங்க. இப்படியான விஷயம் எனக்கு ஊக்கம் கொடுக்கிறது. இன்று இந்தியா முழுவதும் பலரும் ரசிக்கிற சினிமா துறையாக மலையாள சினிமா இருக்கிறது . கடந்த மாதம் நான் கமல் சார்கிட்ட பேசும்போது 'கேரளாவுல பாருங்க. அனைவருடைய நடிப்பும் அற்புதமாக இருக்கும். பெரிய கதாபாத்திரம், சின்ன கதாபாத்திரம் என்கிற விஷயத்தையெல்லாம் தாண்டி அனைவரின் நடிப்பும் நல்லா இருக்கும்' என்று சொன்னார்.
விஜயன் சார் வீட்டில் ரொம்பவே சுவையான உணவைச் சாப்பிட்டேன். அவர் வீட்டில் சாப்பாடு என்று சொன்னதும் நம்ம தனியாக உட்கார்ந்து சாப்பிடுவோம்
என்றுதான் நினைத்தேன். ஆனால், அவரோடு உட்கார்ந்து அவருடைய குடும்பத்தில் ஒருவனாக இருந்து சாப்பிட்டேன்' எனப் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.