படகே வீடு...!

'வீடு, சொத்துகளை 2022-இல் நான் விற்றுவிட்டு, 1988-இல் கட்டமைக்கப்பட்ட 'ரீவா' எனும் சூரியச் சக்தியில் இயங்கும் 42 அடி நீளப் படகை வாங்கினேன்.
படகே வீடு...!
Published on
Updated on
2 min read

'வீடு, சொத்துகளை 2022-இல் நான் விற்றுவிட்டு, 1988-இல் கட்டமைக்கப்பட்ட 'ரீவா' எனும் சூரியச் சக்தியில் இயங்கும் 42 அடி நீளப் படகை வாங்கினேன். இதில், எனது மனைவி வைதேகியுடன் வசித்து வருகிறேன்.

பள்ளி விடுமுறை நாள்களில் மகள் கெய்யாவும் எங்களோடு வந்துவிடுகிறார்' என்கிறார் கேப்டன் கெளரவ் கெளதம். ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான இவர், படகிலேயே மூன்று ஆண்டுகளாக உலக நாடுகளுக்கும் பயணிக்கிறார்.

படகு வாழ்க்கை குறித்து கெளதம் கூறியது:

'படகில் வாழ்வது மேலைநாடுகளில் நடப்பதுதான். இந்தியக் கடற்படையில் நான் பணிபுரிந்தபோது, 'ஐ.என். எஸ். தரங்கிணி 2105' என்ற படகைச் செலுத்தக் கற்றேன். அப்போது இந்தியாவில் பொருத்தமான படகுகள் கட்டப்படவில்லை. இறக்குமதியாகும் படகின் விலை மிக அதிகம். படகை இறக்குமதி செய்தாலும், அதை எங்கு நங்கூரமிட்டு நிறுத்துவது, எப்படி பராமரிப்பது போன்ற கேள்விகள் எழுந்தன.

கரோனா காலத்தில் படகுகளின் விலை குறைந்தது. படகில் வாழ்ந்த வயதான வெளிநாட்டு தம்பதி படகை விற்கிறார்கள் என்று அறிந்ததும் அந்தப் படகை வாங்கினோம். அதற்கு முன் எங்களுக்குச் சொந்தமாக இருந்த வீடு, வீட்டில் இருந்த பொருள்களை விற்றேன். தேவையான பொருள்கள் மட்டும் கைவசம் வைத்தேன்.

படகில் இருப்பதே இரண்டு அறைகள்தான். அதில் ஒன்று சமையல் அறை. காஸ் சிலிண்டர், 'அவன்' வசதிகள் உண்டு. படகு ஆடி அசையும்போது எண்ணெய் சிந்தும். சிதறும். வறுக்கும்போது எண்ணெய் ஆவியாகி படகின் உள்புறம் பற்றிப் பிடித்து பிசுபிசுப்பாகும். சமையல் பகுதியில் வெப்பம் கூடும். அதனால் அரிசி, காய்கறிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு பொங்கல் அல்லது பிரியாணி போல சிக்கன சமையல்தான். பழங்கள், கீரைகள், வேகவைத்த பயறு வகைகள், காய்கறிகளை படகு நிறுத்தும் இடத்தில் கடைகளில் வாங்கி சேமித்துவைப்போம்.

விரும்பும் உணவு வகைகளை படகை நங்கூரம் போடும் இடங்களில் உண்டு ஆவலைத் தீர்த்துகொள்வோம். பண்டிகை பிறந்த நாள்கள் வரும்போது படகில் இருக்கும் 'அவன்'னில் கேக் பேக் செய்வோம்.

கடல் மேல் வாழ்க்கை வித்தியாசமானது. சாகசமும் பரவசமும் பின்னிப் பிணைந்தது. கடலில் குளிக்கலாம். மூழ்கி கடலுக்குள் உள்ள அழகை ரசிக்கலாம். சூரிய உதயம் அஸ்தமனங்களை தெளிவாகப் பார்க்கலாம். படகு வாழ்க்கையில் குடிக்க, குளிக்கத் தண்ணீர் பெரிய சவாலாக நிற்கும். ஆற அமர செய்ய வேண்டிய வெந்நீர் குளியல் கிட்டத்தட்ட வெகுதூரக் கனவு என்று சொல்லலாம். நன்னீர் பற்றாக்குறை ஒவ்வொரு துளியையும் விலைமதிப்புள்ளதாக மாற்றுகிறது. நன்னீரின் முக்கியத்துவத்தை படகு வாழ்க்கை புரிய வைக்கும்.

கடல் நீரில் குளிப்போம். கடல் நீரின் உப்பைக் கழுவ இறுதியில் நன்னீரில் சில நிமிடங்கள் குளிப்போம். மழைநீரை சேகரித்து வைக்கும் வசதியும் படகில் உள்ளது. படகில் உள்ள 'தலைகீழ் சவ்வூடுபரவல்' இயந்திரம் மூலம் கடல் நீரை நன்னீராகவும் மாற்றிக் கொள்வோம்.

வெப்ப நிலைக்கு ஏற்ற சிக்கன ஆடைகளை உடுத்துகிறோம். சோலார் பேனல்களில் மின்சாரம் தயாரித்து படகை செலுத்துகிறோம். சிறிய காற்றாலையும் உண்டு. மின்சக்தியைச் சேமித்து வைக்க பேட்டரியும் படகில் இருக்கிறது.

எரிபொருள், மின்சார சிக்கனத்துக்காகப் படகைச் செலுத்த பாய்களை விரித்து காற்று விசையில் தீர்மானித்த திசையில் பயணிப்போம். படகில் வாழ்வதால் துணிவு, தைரியம் இயற்கையாகவே உருவாகும். கடலின் அமைதி மனதுக்கும் அமைதியைத் தரும். மனைவி மகளுக்கும் படகை இயக்க வரும். படகில் வசிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்துகொண்டே இருக்க வேண்டும். அவசரத் தருணங்களில் பக்கத்தில் உள்ள கடல் கரையில் ஒதுங்கலாம். அது எந்த நாடாக வேண்டுமானாலும் இருக்கலாம். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி தடை செய்ய மாட்டார்கள். நிலைமை சரியாகும் வரை அந்த நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் மலாக்கா கடல் சந்திப்புப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதி கப்பல் வணிகப் போக்குவரத்து, மீன்பிடி படகுகள், மீன்பிடி மிதவைகள் மற்றும் நம்பமுடியாத வானிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அந்தப் பகுதியில் பயணிப்பது அதுவும் இரவு பயணம் பதற்றமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.

சவால்கள், சோதனைகள் இருந்தபோதிலும், அவற்றை கற்றல் அனுபவமாக எடுத்துகொள்ள வேண்டும். காற்று தாலாட்டி அழைத்துச் செல்லும் திசைகளில் வரும் நாட்களில் பயணிப்போம்' என்கிறார் கேப்டன் கெளரவ் கெளதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com