பொ.ஜெயச்சந்திரன்
'இசையில் பயிற்சி பெற குருகுலவாச முறையே சிறந்தது. தற்போது இசைத் துறையில் இளம் தலைமுறையினர் விருப்பம் கொண்டு கற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கலை மீதான ஆர்வம், பணிவு, பொறுமை, கற்கும் பாங்கு, ஞாபகச் சக்தி, உழைப்பு, குருபக்தி ஆகியன இருந்தாலே போதும். கலையுலகில் நன்றாகப் பிரகாசிக்க முடியும்' என்கிறார் திருச்சி கே.ஆர்.குமார்.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அய்யம்பேட்டையில் பாரம்பரிய அறிவு சார்ந்த இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், அகில இந்திய வானொலியில் நிலைய வித்வானாகப் பணியாற்றியவர்.
கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகளில் ஏராளமானோருக்குப் பயிற்சியை அளித்துவரும் அவரிடம் பேசியபோது:
'எனது பெற்றோர் கே.ஆர். ரமணி- சரஸ்வதி இசைப் பாரம்பரியத்தில் வந்ததால், சிறுவயதிலேயே எனக்கு 'லயத்தில்' நாட்டம் இருந்தது. எனது பெற்றோர், புதுக்கோட்டை லயம் பரம்பரையான 'கலைமாமணி' திருச்சி ஆர்.தாயுமானவனிடம் எட்டாம் வயதிலேயே மிருதங்கம் பயில சேர்த்துவிட்டனர்.
1972-இல் எனது 12-ஆம் வயதில், முதன் முதலாக திருச்சி வானொலி நிலையத்தில் சிறுவர் இசைமேடை நிகழ்ச்சியில் கடம் வாசித்தேன். அப்போது, 'வானொலி' இதழில் எனது கடம் வாசிப்பு குறித்த தகவலும், புகைப்படமும் வெளிவந்தது.
1976-இல் அங்கீகாரம் பெற்ற 'பி கிரேடு' கலைஞராகவும், 1983-இல் 'பி ஹைய் கிரேடு' கலைஞராகவும் உயர்வைப் பெற்று பல நிகழ்ச்சிகளில் வாசித்தேன். 1986-இல் மங்களுரு வானொலி நிலையத்தின் மத்திய அரசின் வானொலி நிலையக் கலைஞராகப் பணியமர்த்தப்பட்டேன். 2020-இல் மங்களுரு வானொலி நிலையத்தில் இருந்து ஒய்வு பெற்றேன்.
இதுதவிர தில்லி, சென்னை, மும்பை, கோவை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், ஹைதராபாத், பெங்களுரு உள்ளிட்ட பல வானொலி நிலையங்களிலும் தொலைகாட்சிகளிலும் மூத்த கலைஞர்களுடன் பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
மதுரை சோமு, கே.பி.சுந்தரம்பாள், லால்குடி ஜெயராமன், ராமன்- லெட்சுமணன், டி.என். கிருஷ்ணன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்.இராமநாதன், ஏ.கே.சி. நடராஜன், மஹாராஜபுரம் சந்தானம், ஏ.கன்யாகுமாரி, ஆர்.விஸ்வேஷ்வரன், என்.இரமணி, எஸ்.பி. நடராஜன், கதிரி கோபால்நாத், டி.வி.சங்கரநாராயணன் உள்ளிட்ட பல இசை மேதைகளுடன் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
குன்னக்குடி ஆர்.வைத்தியநாதன், வலையப்பட்டி சுப்பிரமணியனுடன் இணைந்து தொடர்ச்சியாக 9ஆண்டுகள் கடம் லய வாத்தியம் வாசித்தது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. குன்னக்குடியாரின் பல திரைப்படப் பாடல்களுக்கும், 'தோடி ராகம்' என்ற திரைப்படத்தில் இணைந்தும் வாசித்துள்ளேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இனம் புரியாத இன்பம் உண்டாகும். இசை அறிஞர்களும், ரசிகர்களும், பாராட்டும்போது ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் பெயரில் வழங்கப்படும் 'லயக்கலை அரசு', ' கடம் வாதன சனுரா', குஹனருள் கவிச்செல்வர்' உள்ளிட்ட பல விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.
திரையிசை மட்டுமல்லாது, ஹெச்.எம்.வீ,, ஏவி.எம்., சங்கீதா மற்றும் பல நிறுவனங்களுடன் வெளியீடு செய்துள்ள ஆடியோ வெளியீடுகளில் மூத்த கலைஞர்களுடன் வாசித்துள்ளேன். கடந்த 53வருடங்களாக இந்த இசைத்துறையில் பயணிப்பதே வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுதான்.
கடின உழைப்பும், பணிவும், பண்புடன் கூடிய பழக்கவழக்கங்கள் இருந்தால், நிச்சயமாக மகிழ்ச்சி கிட்டும். இசைத்துறையிலும், வாழ்க்கையிலும், குடும்பத்தார்களிடமும். மற்ற, மற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து அன்பைப் பகிர்ந்து மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். மிருதங்கம், கடம், நாகஸ்வரம், தவில், தபலா உள்ளிட்டவற்றில் பலருக்கும் பயிற்சி கொடுத்து, இசையின் மேன்மையையும், லய நுணுக்கங்களையும் போதித்து வருகிறேன்.
மிருதங்கம், கஞ்சிரா, முகர்சங்கு என பல லயவாத்தியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கருவிக்கும் பயிற்சி எடுப்பதற்கு வெவ்வேறு முறைகளைக் கையாள வேண்டியுள்ளது. கஞ்சிரா ஒரு கை வாத்தியம். இடது கையில் பிடித்துகொண்டு, வலது கையில் வாசிப்பார்கள். ஆனாலும், இடது கைவிரல்களில் சில நுணுக்கங்களைக் கையாள்வார்கள். மிருதங்கம், கடம் போன்ற வாத்தியங்களை வாசிக்க, இரு கைகளின் விரல்களையும் பயன்படுத்தி வாசிக்க வேண்டும். கடம் வாத்தியத்தை வாசிக்க இரு கை விரல்களையும் உபயோகிக்க வேண்டும். 10 விரல்களும் செயல்பட வேண்டும்.
கடம் கருவி மண்ணின் கலவையாகயிருப்பதால், அதனை தட்டினால்தான் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான ஒலி மட்டும்தான் வரும். ஆனால், விரல்களிலிருந்து கொடுக்கும் அழுத்தம், லாகவம், விரல்களை பயன்படுத்தும் பிதானம் இந்த மாதிரி நுணுக்கங்களை தெரிந்துகொண்டு கையாளுவதால், பலவிதான ஒலி அலைகளை எழுப்பி வாசிக்க இயலும்.
கொன்னக்கோல் என்பது 'கொன்னுப்பிப்பது' என்பதாகும். அதாவது லய சம்பந்தமான பாடல்களையும், ஜதிகளை வாயால் சொல்வது மட்டுமல்லாமல், சுருதியோடு சேர்த்து நயமாகவும், கம்பீரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும், ஜனரஞ்சமாகவும். சொல்வதுதான் சிறப்பாக அமையும்.
தினமும் சாதகம் செய்து புதிய கணக்கு வழக்குகளை இணைத்து கோர்வைகளையும், அமைத்து வெவ்வேறு தாளங்களுக்கு ஏற்றார்போல வடிவமைத்து வழங்குவதற்கு பயிற்சியே முக்கிய மூலதனமாகும். முழுமனதோடு கூடிய முயற்சியே பயிற்சியாகும். இதுவே பலனையும் கொடுக்கும்.
கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகளின் முக்கியமான ஒரு அங்கமாக 'லயம்' என்ற பகுதியும், 'ஸ்ருதி' என்ற பகுதியும் இரு தூண்களாகவும், இரு கண்களாகவும் கருதப்படுகின்றன. மிருதங்கம், கடம் என இரு லய வாத்தியங்களையும். குருகுலவாச முறைப்படி, குரு அனுக்கிரஹம் பெற்று கற்றதினாலும், பயிற்சியளிக்கும் வழிமுறையினை குருநாதரிடம் வரமாக பெற்றதினாலும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.
தமிழில் பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் நான் இயற்றிய பக்திப் பாடல்களை 'வழிகாட்டும் வடிவேலனை நினை' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன்' என்கிறார் கே.ஆர்.குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.