நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட திருமயம் ஒன்றியத்தில் உள்ள லெம்பலக்குடி, திருமயம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும் விழாக்கள் அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
லேனா விளக்கு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த இரண்டு பள்ளிகளும் கல்வியறிவை புகட்டியுள்ளன. இதன்வாயிலாக, அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
நூற்றாண்டு கொண்டாட்டம் குறித்து சிலரிடம் பேசியபோது:
அகல்யா ரவீந்திரன், நடனக் கலைஞர்:
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரால், என் பெற்றோர் உள்பட பலரும் 1990-இல் புதுக்கோட்டை லேனா விளக்கு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமுக்குப் புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் எதுவும் இல்லாதபோதும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
என் தாய் படித்த இதே பள்ளியில்தான் நானும், என்னுடைய இரண்டு சகோதரிகளும் படித்துள்ளோம். அப்போது வில்சன், சுப்புலட்சுமி, தனலட்சுமி, ரேணுகா, இமாம் ஜோசப், பால்ராஜ், ஈஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பணியில் இருந்தனர்.
மாணவர்களிடம் திறமைகளைக் கண்டறிந்து, மாவட்ட அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளுக்கு இவர்கள் அழைத்துச் செல்வார்கள். நடனப் போட்டிகளில் நான் பரிசுகளையும் பெற்றுள்ளேன். இந்த தொடக்கப் பள்ளியானது எனது கல்வியையும், கலையையும் வளர்த்துள்ளது.
தற்போது 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடனப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறேன். ஒரு நடனப் பள்ளியையும் நடத்துகிறேன்.
மணிமேகலை ரஞ்சித், தையல் பயிற்சியாளர்:
1990 ஆகஸ்ட் மாதத்தில் ஆலங்குடிக்கு புலம்பெயர்ந்து வந்து தங்கினோம். அங்குள்ள அங்கன்வாடியில் முதலில் சேர்ந்தேன்.
அங்குள்ள மக்களை இடமாற்றம் செய்து லேனாவிளக்கு இலங்கைத் தமிழர் முகாமுக்குக் கொண்டு வந்தனர். பிறகு, லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் எனது படிப்பைத் தொடங்கினேன்.
தொடக்கத்தில் வீட்டில் பேசும் தமிழும், பள்ளியில் பேசும் தமிழும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. இலங்கைத் தமிழ்ப் பேச்சை பேசும்போது முதலில் யாருக்குமே சரியாகப் புரியவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் மொழியில் முன்னேற்றம் அடைந்தாலும், நடுநிலைப் பள்ளி வந்தபோது சரியான முறையில் மொழி, எழுத்து, பேச்சு ஆகியவற்றை புரிந்து கொள்ள முடிந்தது.
பாஞ்சாரதேவி சாத்தையா, ஆசிரியை: எனது வாழ்வின் அடித்தளத்தை அமைத்து, அளப்பரிய பங்காற்றி, அறிவுக் கண்ணை மலர்வித்த பெருமை திருமயம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு உண்டு. பசுமரத்தாணி போல் மனதில் பதிந்த பசுமை மாறாமல் நினைவுகளில் நீங்கா இடம்பெற்றவை பள்ளி நாள்களும், நண்பர்களும்!
1990-களில் தலைமையாசிரியர் ராமன், ஆசிரியர்கள் அமுதசுரபி, கல்யாணி உள்ளிட்டோர் கரும்பலகையில் படுக்கைக் கோடு, நேர்க்கோடு என்று சொல்லிக் கொண்டே எழுதச் சொல்லிய நினைவுகள் இன்றும் நிழலாடுகிறது.
விழாக்களில் பேச வாய்ப்பளித்து, எங்களை மெருகேற்றினர். ஆசிரியர் சாத்தையாவின் கண்டிப்பானது ஒழுக்கமான மாணவர்களாக வளர்த்தது. அடைக்கலசாமி ஆங்கிலத்தையும் தமிழைப்போல பிழையின்றி கூட்டி வாசிக்க அன்றே கற்றுத் தந்தவர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் மேலான கவனிப்பாலும், கருணையாலும் இன்று நான் ஆசிரியையாக உள்ளேன்.
திருமயம் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.மகேஸ்வரன்:
மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும், பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணற்ற சலுகைகளை தமிழ்நாடு அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. முகாம்களில் வாழும் அனைத்து மாணவர்களும் பெரும்பாலும், அரசுப் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். பள்ளிகளுக்கு பெருமையும் தேடித் தருகின்றனர்.
அந்த வகையில் லேனாவிளக்கு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழ்பவர்கள் கடந்த 34 ஆண்டுகளாக லெம்பலக்குடி பள்ளியில் படித்து வருகின்றனர், படித்தவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பணியாற்றினாலும். பள்ளியின் முன்னேற்றத்தில் தங்களையும் இணைத்துகொண்டு அவர்களால் முடிந்த பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.