கண்டது
(தாம்பரத்தில் ஒரு ஆட்டோவில் எழுதியிருந்தது)
'உனக்கு வெற்றி சிம்மாசனம் வேண்டுமானால் வியர்வைக் கடலில் நீராடு.'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
(மன்னார்குடியில் ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்தது)
'எதிரியை எதிரே வை. துரோகியை தூர வை.''
-சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம்.
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களின் பெயர்)
'ஆறுகாணி, பத்துகாணி.''
-மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.
கேட்டது
(திருச்சி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் கணவன்- மனைவி)
'நீ சரியான கஞ்சமாச்சே..
மின்சார அடுப்பை ஏன்டி வீணா எரிய விடுறே...?''
'சும்மா இருங்க? மின்சார அடுப்பு பக்கத்து வீட்டுக்காரியுடையது...?''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் தம்பதி பேசியது)
'மாமா.. யாரோ எனக்கு 'பியூட்டிஃபுல்'ன்னு மெசேஜ் அனுப்பியிருக்காங்க?''
'கருமம்.. பேட்டரி புல்ன்னு வந்திருக்கு.. சார்ஜரை ஆஃப் பண்ணு...?''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
(திருச்சி ஹோட்டல் ஒன்றில் இருவர்)
'டீயா, காஃபியா..?''
'டீ- காஃபி சாப்பிடறதையே விட்டுட்டேன்... ''
'நான் விடலையே.. வாங்கித் தாங்க?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
நேற்றைய வாழ்க்கை திரும்பக் கிடைக்காது. இன்றைய வாழ்க்கை நிரந்தரமில்லை. நாளைய வாழ்க்கை நிச்சயமில்லை. இருந்தும் போராடுகிறோம். அதுதான் வாழ்க்கை.
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
மைக்ரோ கதை
குப்புசாமி தனக்குச் சொந்தமான வீட்டுக் குடியிருப்பில் வாடகையை வசூலித்துகொண்டு வந்தார். இரு மாதங்களாக, வாடகை தராமல் இருந்து வந்த ரமேஷ், 'இந்த மாசமும் வாடகையைத் தர முடியாது. பல கஷ்டங்கள்'' என்றார். இதற்கு குப்புசாமி, 'போன மாசமும் இதையே தான் சொன்னீங்க?'' என்றார்.
அதற்கு ரமேஷ், 'எனக்கு எப்போதும் ஒரே பேச்சுதான். மாத்தி மாத்தி சாக்குப் போக்கு சொல்ற பழக்கமே என்னிடம் இல்லை...'' என்றார்.
இதற்கு குப்புசாமி என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல், நகர்ந்துவிட்டார்.
- ரத்னம் மரகதம், கோயம்புத்தூர்.
எஸ்எம்எஸ்
வெள்ளம் வந்து சென்ற நதி சுத்தமாகும். துன்பம் வந்து சென்ற மனம் பக்குவப்படும்.
-எஸ்.மாரிமுத்து, சிட்லப்பாக்கம்.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆஃப்பில் தங்களின் ஸ்டிக்கர்களை உருவாக்கி கொள்ளும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. பயன்பாட்டாளர்கள் தங்களின் கருத்துகளை வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வெளிப்படுத்த ஸ்டிக்கர்கள் உதவுகின்றன. முன்பு வாட்ஸ் ஆஃப்பின் வெளியில் உள்ள பிற ஆஃப்புகளில் ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
பின்னர் வாட்ஸ் ஆஃப்பில் இருந்து வெளியேறாமல் பயன்பாட்டாளர்கள் தங்களின் ஸ்டிக்கர்களை தாங்களே உருவாக்கும் சேவை பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது அனைத்து ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். பயன்பாட்டாளர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்ஸை உருவாக்கும் சேவை அறிமுகமாகி உள்ளது.
இதைப் பயன்படுத்த முதலில் நாம் சாட்டுகளில் டைப் செய்யும் பகுதியில் உள்ள ஸ்டிக்கர்ஸை தேர்வு செய்து அங்குள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்து ஸ்டிக்கர்ஸாக்க வேண்டிய புகைப்படத்தை இணைத்திட வேண்டும். இப்படி உருவாக்கப்படும் உங்களின் ஸ்டிக்கர்கள் நீங்கள் சாட்களில் டைப் செய்துவிட்டு இணைக்கும் பகுதியில் வந்துவிடும்.
இதை தனியாகவோ, மொத்தமாகவோ பிறருக்கு அனுப்பி வைக்கலாம்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.