
ஆன்லைனில் 'சிக்கந்தர்' சல்மான் விரக்தி!
திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தபோதிலும் பாலிவுட்டில் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக கசிவது பெரும் பிரச்னையாக உள்ளது.
தென்னிந்திய படங்களிலும் ஹிந்தியில் முதல் நாள் வெளியாகும் படங்கள் எளிதாக லீக் ஆகிறது எனக் குற்றச்சாட்டு உள்ளது. 'சிக்கந்தர்' விவகாரத்தில் திரைப்படம் தியேட்டரில் கேமராவால் ரெக்கார்ட் செய்யப்பட்டு, பின்னர் விரைவாக ஹெச்.டி தரத்தில் மேம்படுத்தப்பட்டு லீக் செய்யப்பட்டுள்ளதாக 'இந்தியா டுடே' தளம் தெரிவிக்கிறது. சல்மான் கானின் திரைப்படம் ஈகைத் திருநாளை ஒட்டி வெளியாகியிருப்பதால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளது.
முதல்நாளில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வெளியில் படத்தைப் பார்ப்பதற்காக காத்திருக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரையரங்கக் கொண்டாட்ட விடியோக்கள் பரவி வருகின்றன. 'சிக்கந்தர்' சல்மான் கானுக்கும் ஏ. ஆர். முருகதாஸூக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது சல்மான் கானின் 'சிக்கந்தர்' திரைப்படம். வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே ஆன்லைனில் இந்தப் படம் கிடைப்பது பலருக்கும் ஏமாற்றமளித்துள்ளது.
சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் !
சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, பாஸில் ஜோசஃப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, வண்டலூர் பூங்காவில் 14 வயதான 'அனு' என்ற வெள்ளைப் புலியைத் தத்தெடுத்து வளர்த்தார். அந்தப் புலியின் பராமரிப்புச் செலவுகளை ஆறு மாதங்களுக்குச் சிவகார்த்திகேயன் கவனித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு, செரு என்ற ஆண் சிங்கத்தைத் தத்தெடுத்து, அதன் பராமரிப்புச் செலவுகளை ஆறு மாதங்களுக்குக் கவனித்துக் கொண்டார்.தற்போது, வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள 'ஷெர்யர்' என்ற சிங்கத்தையும், 'யுகா' என்ற புலியையும் அவர் தத்தெடுத்துள்ளார்.
இந்தச் சிங்கம் மற்றும் புலிக்கான பராமரிப்புச் செலவுகளை மூன்று மாதங்களுக்குச் சிவகார்த்திகேயன் கவனித்துக் கொள்ளவுள்ளார்.
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் - சூர்யாவின் அறிவுரை!
எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சூர்யா பேசியதாவது:
'ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எங்களுடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவிற்கும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் லோகோவிற்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். மனதை வருடுவது என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் நீண்ட நாள் கழித்து ஆல்பமாக ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மனதை வருடும் பாடல்களும் இருக்கின்றன.
சிறிது நாள்களுக்கு முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக... நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக... உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், 'நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே..' என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது.
இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை.... இந்த தருணத்தை... கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன்.
இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாசானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள்.
வாழ்க்கையில் ஒரு முறை.. இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம். தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.