கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கோழிக்கோட்டில் ஃபரூக் காவல் நிலையத் துப்புரவுப் பணியாளர் இந்திராவுக்கு வீட்டு மனையை வாங்கித் தந்துள்ளார் ஆய்வாளர் ஹாஜீரா. கணவரை இழந்து, மகன், மகளின் சிகிச்சைக்காக வீட்டை விற்று சோகத்தோடு வாழும் இந்திராவுக்கு நல்வழியைக் காட்டியுள்ளார் ஹாஜீரா.
காவல் நிலையத்தின் பகுதிநேர துப்புரவுப் பணியாளராக அறுபத்து இரண்டு வயதான இந்திரா பணிபுரிகிறார். கணவரை இழந்த இந்திராவின் மூத்த மகன் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை. மகளுக்கோ காச நோய். இருவரின் சிகிச்சைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் இருந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டில் வசிக்கிறார்.
இந்திரா சோர்ந்துள்ளபோதெல்லாம், காவல் ஆய்வாளர் ஹாஜிரா ஆறுதல் சொல்வார். நேர்மையான காவல் அதிகாரியான ஹாஜிரா, தனது சேமிப்பை வைத்து 700 சதுர அடி விஸ்தீரணமுள்ள வீடு ஒன்றைப் படாதபாடுபட்டு கட்டி முடித்தவர்.
'இந்திரா சேச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும்'' என்று மனதுக்குள் ஹாஜிரா சொல்லிக் கொள்வார். சொந்தமாக வீடுகட்ட கையில் இருந்த சேமிப்பையும், சொசைட்டியில் கடன் வாங்கி வீடு கட்டுமானத்தைப் பூர்த்தி ஆக்கியதால், ஹாஜிராவால் இந்திராவுக்காகத் துக்கப்பட மட்டுமே முடிந்தது. ஹாஜிராவின் வீட்டுக் கடன் கணிசமாகக் குறைந்த நிலையில், பொருளாதாரம் கொஞ்சம் தேறி இருந்தது.
அந்தத் தைரியத்தில் தனது வீட்டுக்கு அருகில் விற்பனைக்கு வந்த நான்கு சென்ட் நிலத்திற்கு ஹாஜிரா முன்பணம் தந்தார். ஹாஜிராவின் கணவரும் தன்னால் முடிந்த பணத்தைத் தயார் செய்து அளிக்க, 2025 பிப்ரவரி 18-இல் ஐந்தேகால் லட்சம் ரூபாய் கொடுத்து இந்திரா பெயரில் அந்த நிலத்தை ஹாஜிரா பதிவு செய்தார்.
'இந்திரா சேச்சியின் முகம் எப்போதுமே இருண்டு கிடக்கும். அவரது சூழல் அப்படி. அவரது பெயரில் வீட்டு மனையை நானும் கணவரும் சேர்ந்து வாங்கினோம். விஷயம் தெரிந்ததும் லேசாக ஒரு புன்னகை அக்கா முகத்தில் தோன்ற, எனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. வீடு கட்டணுமே... அதற்காக தெரிந்தவர்களிடம், உடன் படித்தவர்களிடம் பண உதவி கேட்டிருக்கிறோம். பலரும் உதவிகளை செய்ய முன்வந்துள்ளார்கள். என்னிடம் இருப்பதை முடிந்த அளவுக்குப் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்தான்'' என்கிறார் ஹாஜிரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.