வாட்ஸ் ஆஃப் வீரர்கள்

வாட்ஸ் ஆஃப் வீரர்கள்

காலை எட்டு மணி. அன்றைய தினத்தின் இரண்டாவது காஃபி கோப்பையை எடுத்துகொண்டு சோபாவில் அமர்ந்தேன்.
Published on

காலை எட்டு மணி. அன்றைய தினத்தின் இரண்டாவது காஃபி கோப்பையை எடுத்துகொண்டு சோபாவில் அமர்ந்தேன். அருகில் அன்றைய செய்தித்தாளையும் கைப்பேசியையும் வைத்துகொண்டேன். பத்து அடி தூரத்தில் ஒரு மேசை மீது அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டி பேசிக் கொண்டிருந்தது. எல்லாமே "ப்ரேக்கிங் நியூஸ்'கள்தான். தொலைக்காட்சிப் பெட்டியே ஒரு நாள் ப்ரேக் ஆகாமல் இருக்க வேண்டும்.

நான் முன்பெல்லாம் இவ்வளவு காலை வேளை நேரத்தில் கைப்பேசியை எடுக்க மாட்டேன். "இவ்வளவு காலை வேளை நேரத்திலா?' என்று இந்தக் கால இளசுகள் எள்ளி நகையாடக் கூடும். விழிப்பதே கைப்பேசி முகத்தில்தானே! "மதியம் உணவு உண்டு படுக்கும்போதுதான் ஏதாவது வாட்ஸ் ஆஃப் செய்திகள் வந்துள்ளதா?' என பார்ப்பது வழக்கம். இருப்பதோ நான்கே நான்கு வாட்ஸ் ஆஃப் குழுக்களில்தான். அதில் வருபவை என்னவோ நமக்கு சம்பந்தமே இல்லாத செய்திகள்தானே.

ஒருநாள் என் உறவினர் ஒருவர் காலையில் கைப்பேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, 'சுந்தர், நியூஸ் தெரியுமா? சீதாராமன் சித்தப்பா காலமாயிட்டாராம். அவரோட பையன் உனக்கு வாட்ஸ் ஆஃப் மெஸேஜ் அனுப்பியிருக்காராமே. நான்தான் நீ ஒருவேளை மெஸேஜ் இன்னும் பார்த்தியோ , இல்லையோன்னு

ஃபோன் பண்ணி சொல்லலாம்னுதான் பண்ணறேன்'' என்று சொன்னார்.

அதிலிருந்துதான் காலையிலேயே வாட்ஸ் ஆஃப் செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் எல்லாருடைய சுயவிவரப் புகைப்படங்களைப் பார்ப்பேன். அதில் எனக்கு ரவிசங்கர், விசாகன் ஆகிய இருவருடைய "ப்ரொஃபைல் ஃபோட்டோக்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதில் புகைப்படம் மட்டும் அல்லாமல் சிலர் பலவித செய்திகளையும் வீடியோக்களையும் கூட பதிவேற்றம் செய்கின்றனரே. ரவிசங்கரும், விசாகனும் என்னுடன் ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள். இன்றும் தொடர்பில் இருப்பவர்கள்.

அதில், ரவிசங்கரின் ப்ரொஃபைல் போட்டோதான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நம் மனதுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் இருக்கும்.

"வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் ஒரு முறைதான் வரும். அப்படி வரும்போது அவற்றை உபயோகப்படுத்தத் தவறி விட்டால் அப்புறம் வருத்தப்பட வேண்டியதுதான்', "வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஏதாவது வாய்ப்புகள் காத்திருக்கலாம்', "தோற்று விடுவோமே என்று முயற்சி செய்யாமல் இருந்து விடக் கூடாது' , "தோல்வி என்பது வெற்றியின் முதல் படி' ... என்றெல்லாம் இருக்கும்.

படித்துவிட்டால் போதும். மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். "நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும்' என்ற எண்ணம் வரும். நிறைய பேர் அது போல் வாட்ஸ் ஆஃப் செய்திகள் கூட அனுப்புகின்றனர் என்பது என்னவோ உணமைதான் என்றாலும், ரவிசங்கரும், விசாகனும் பதிவேற்றுபவை மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து கரோனா காலத்தில் ஆள்குறைப்பு காரணமாக வேலையை இழக்க வேண்டி வர, ஒரு மனை விற்பனை நிறுவனத்தில் முகவர்களாகப் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

'சுந்தர், எவ்வளவோ பிரசாரம் பண்ணறோம். இன்னும் ஒண்ணு கூட விற்கலைப்பா. ஒண்ணே ஒண்ணுதான் கை கூடி வரா மாதிரி இருக்கு. வித்தா கமிஷன் கிடைக்கும்'' என்று ஒருநாள் சொன்னான் விசாகன். ரவிசங்கர் ஒருநாள் எனக்கு ஃபோன் செய்து விட்டு என் வீட்டுக்கே வந்து விவரங்களைச் சொல்லி , 'நீ ஒரு இடம் வாங்கிப் போடேன் சுந்தர்'' என்று ஐம்பத்திரண்டு வருட நட்பின் உரிமையோடு சொன்னான். சாதாரணமாகச் சொன்னாலும் அவன் முகத்தில் எதிர்பார்ப்பும் இருந்தது என்னவோ நன்கு தெரிந்தது. நான் வாங்கினால், அவர்களுக்கு கமிஷன் கிடைக்குமே.

'நான் இருக்கறது சென்னையில, திண்டிவனத்துல நிலத்தை வாங்கி அதை யார் பராமரிக்கறது. இருக்க ஒரு சொந்த வீடு இருக்கு. போதும்பா'' என்றேன்.

'தத்துவம் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனாலும் ஒரு இடம் வாங்கு. இது என் உத்தரவு'' என்றான். 'நீ உத்தரவு வாங்கு'' என்றேன் நகைச்சுவையாக!

ஒருநாள் என்னுடைய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எல்லாரும் பள்ளியில் சந்திக்கலாம். முடிந்தவரை ஆசிரியர்களையும் அழைக்கலாம் என முடிவு செய்தோம். இதுபோல் எட்டு வருடங்கள் முன்னால் ஒருமுறை ஏற்பாடு செய்து சிறப்பாகச் சந்திப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டன.

அதனால் மீண்டும் ஒருமுறை அதுபோல் பெரும் சந்திப்பு நடத்த வேண்டும் என சில தோழர்கள் என்னிடம் தெரிவித்ததால் நான் பள்ளி வாட்ஸ் ஆஃப் குழுவில் இந்த விஷயத்தைப் பற்றி எழுத, மெதுமெதுவாக ஒவ்வொருவரக ஆமோதிப்பு செய்திகளை அனுப்ப செயல்முறை ஆரம்பமானது.

அப்பொழுது எனக்கு ஒரு யோசனை தோன்ற கைப்பேசியை எடுத்தேன்.

'ஹலோ விசாகன்.. இருபத்திரண்டாம் தேதி நாங்க படிச்ச ஹை ஸ்கூல்ல எங்க பேட்ச்மேட்ஸ் நிறைய பேர் சந்திக்கறோம். நீயும் ரவிசங்கரும் அப்ப வாங்க. உங்க ரியல் எஸ்டேட் கம்பெனி விஷயமா கான்வாஸ் பண்ணுங்க. நான் ஏற்பாடு பண்ணறேன். ஒரு சைட் வித்தாக் கூட நல்லதுதானே'' என்று சொன்னேன்.

'நல்லதுதான். கமிஷன் கிடைக்கும். ஆனா என்னிக்கு சொன்னே?''

'வர இருபத்திரண்டாம் தேதி. ஞாயிற்றுக்கிழமை..''

'இல்லப்பா அன்னிக்கு ம்ம்... ம்ம். முடியாது..'

'உங்களுக்காகத்தாம்பா ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். சைட் விற்கவே மாட்டேங்குதுன்னு புலம்பிட்டு இருக்கியே. அதான் ஹெல்ப் பண்ணலாம்னு.. ''

'புரியுது சுந்தர். அன்னிக்கு என் மனைவி திருத்தணி கோயிலுக்கு போகலாம்னு சொல்லிட்டா. வர வழியிலே அவளோட மாமா வீட்டுக்குப் போயிட்டு வரணுமாம்.. சொல்லிட்டாப்பா. ஒண்ணும் பண்ண முடியாது'' என்று சொன்னான்.

'என்ன விசாகன், இது விஷயம்.. அதை அடுத்த ஞாயிற்றுக்கிழமை போங்கலாமில்லை. நான் சொன்னேன்னு சொல்லு. கோயில் எங்கப்பா போயிடும். ஒரு சைட் விற்றாலும் இருபதாயிரம் ரூபாய் கமிஷன் கிடைக்கும்னு சொன்னியே. நான் வேணும்னா உன் மனைவியிடம் பேசட்டுமா? இருபத்திரண்டாம் தேதி கெட் டு கெதர்னு ப்ளான் பண்ணியாச்சு. மாத்த முடியாது. நல்ல சான்ஸ் விசாகன். என் க்ளாஸ்மேட்ஸ்ல நிறைய பேர் பெரிய வேலையில இருக்காங்க. ஒருத்தருக்காவது நிலம் வாங்கிப் போடணும்னு தோணும். என்னோட ப்ரைமரி ஸ்கூல் க்ளாஸ்மேட்டுன்னு சொன்னா கொஞ்சம் வாங்க முனைப்பு காட்டு வாங்க?''

'நீ சொன்னா புரிஞ்சக்கவே மாட்டே சுந்தர். எப்பவும் நீ பேசறதுதான் சரின்னு சொல்லுவே. நீ சொல்றதைத்தான் கேட்கணும்னு பிடிவாதம் பிடிப்பே. அதுதான் உன்கிட்ட எனக்குப் பிடிக்காதது...'' என்று கோபமாக சொன்னான் விசாகன்.

'இதுல என் பேச்சைத்தான் கேட்கணும்னு சொல்றேன்னு எங்கே வர்றது விசாகன். ஒரு சான்ஸ் ஏற்படுத்தித் தரேன். பிஸினஸ் பண்ணிக்கோன்னு சொல்றேன். உன் மனைவியிடம் விளக்கி சொல்லி, உனக்கு ஒரு நல்ல சான்ஸ்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணு. ஒரு சைட்டாவது விற்கும்னு நம்பு...'' என்று சொன்னேன்.

'இல்லை சுந்தர், திருப்பியும் அதையே பேசறே. என் மனைவி நான் சொல்றதைக் கேட்க மாட்டா. அவ சொன்னா சொன்னதுதான். அவ வாய்ல விழுந்து யார் அடிபடறது. ஒருவேளை அந்த ப்ரோக்ராம் கேன்சல் ஆனா நான் சொல்றேன். சாரி சுந்தர்'' என்று சொல்லி விட்டு என் பதிலுக்குக் காத்திராமல் பட்டென்று கைப்பேசியை வைத்துவிட்டான். ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஒருவருக்கு அவருடைய பிஸினஸில் உதவி செய்வதற்காக நான் முன்வந்தால்...?

ஐந்து நிமிடங்கள் என்னைச் சுதாரிக்க எடுத்துகொண்டு மீண்டும் கைப்பேசியை எடுத்தேன்.

'ஹலோ ரவிசங்கர் ..''

'சொல்லுடா சுந்தர்'' என்றான்.

முழு விவரங்களையும் எடுத்துச் சொன்னேன். பொறுமையாக. எல்லாவற்றையும் கேட்டான்.

'ம்ம் எப்படிடா. நீங்க படிச்ச ஹை ஸ்கூல்ல உங்க பேட்ச் மேட்ஸ் மீட் பண்ணறீங்க. அதுல நானும் விசாகனும் எப்படி கலந்துக்கறது. ம்ம் வேணாம். சரிப்பட்டு வராது'' என்று பட்டென்று சொன்னான்.

'அதுக்குத்தான் ஒரு ஐடியா யோசிச்சு வைச்சிருக்கேன் ரவிசங்கர்''

'என்ன அது?''

'இவ்வளவு பேருக்கும் ஸ்நாக்ஸ், டீ காஃபிக்கு ஏற்பாடு பண்ண வேண்டாமா. ஒரு நல்ல குக் அட்ரஸ் கிடைச்சிருக்கு. அவரிடம் கேசரி, போண்டா, காஃபி ஆர்டர் கொடுத்துட்டேன். டீச்சர்களுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்க நான் போகணும். அதனால ஸ்நாக்ஸ் வாங்க என்னால வர முடியாது. நீயும் விசாகனும், குக் வீட்டுக்குப் போய் ஸ்நாக்ஸ், காஃபி எடுத்துட்டு வந்துடுங்க.

பேக் பண்ணி கொடுத்துடறாங்களாம். காஃபி கேனை மட்டும் திருப்பிக் கொடுக்கணுமாம். அப்படி வர நீங்க அப்படியே கெட் டு கெதர் முடியற வரைக்கும் அங்கேயே இருங்க. நான் யார் யார் கொஞ்சம் இன்ட்ரஸ்ட் காட்டுவாங்கன்னு பார்த்து உங்களை இன்ட்ரட்யூஸ் பண்ணறேன். உங்க திறமையை அவங்களிடம் காட்டுங்க? ஒரு சைட்டாவது வித்துடும்னு நம்பிக்கை இருக்கு ரவி.''

'சரிவரும்கறே.. .. ..''

'ஏன் வராது. நீங்க வாங்க. நல்ல சான்ஸ். "குக்'கோட அட்ரûஸ உனக்கு வாட்ஸ் ஆஃப் பண்ணிடறேன். சரியா.. ?''

'சரி சுந்தர். நீ இவ்வளவு சொல்றே.. ..ஒரு சைட் விற்றாலும் கூட நல்லதுதானே..''

'அப்புறம் விசாகன் என்னவோ இழுக்கறான். அன்னிக்கு அவன் மனைவி திருத்தணி கோயிலுக்குப் போய்தான் ஆகணும்னு சொல்லிட்டாளாம். நீ அவனிடம் பேசி அவனையும் வர வை ..''

'ஆரம்பத்துலேயே ப்ராப்ளமா.. ..சரி அவனிடம் பேசிப் பார்க்கறேன்'' என்று சொல்லி விட்டு கைப்பேசியை வைத்தான். நான் என்னுடைய வகுப்புத் தோழர்களை அழைக்கும் வேலையைத் தொடர்ந்தேன். சில மாணவர்கள் பள்ளி வாட்ஸ் ஆஃப் குழுவில் இல்லை. தனியாக விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அன்று மாலை நான்கு மணிக்கு கைப்பேசி பாட ஆரம்பித்தது. எடுத்தேன். அந்த முனையில் ரவிசங்கர்.

'சொல்லு ரவி...''

'ஹாய் சுந்தர்... விசாகனுக்கு ஃபோன் பண்ணி கேட்டேன். இவ்வளவு சொன்னப்புறமும் உன் மூலமா சுந்தர் என்னைக் கன்வின்ஸ் பண்ணச் சொல்லி சொன்னானான்னு என்னைக் கேட்டான். உன்கிட்ட சொன்னதுதான் என்கிட்ட சொன்னான். வர்றது கஷ்டமாம். சரி அதை விடு.

நான் என் கூட வேற ரெண்டு பேரைக் கூட்டிட்டு வர்றேன். கூட ஒர்க் பண்ணறவங்க. ஒரு போர்ட் வைச்சுக்கறோம். எல்லாருக்கும் ஒரு ஃபாம்ப்லட் கொடுக்கறோம். அதுல முழு விவரமும் இருக்கும். பத்து நிமிஷம் எல்லாரையும் உட்கார வைச்சு எங்க சைட்டை பற்றி கொஞ்சம் விளக்கிச் சொல்றோம் என்ன. மத்தபடி ஸ்நாக்ஸ் விநியோகம், காஃபி கொடுக்கறது எல்லாம் முழுசா நாங்க பார்த்துக்கறோம். சரிதானே....''

'போர்ட் வைப்பீங்களா. அது ஒரு ஸ்கூல் ரவிசங்கர். அவங்க அனுமதி கொடுப்பாங்களா. கேட்கணுமே. பாம்ப்லெட் இன்ட்ரஸ்ட் காட்டறவங்களுக்கு மட்டும் கொடுக்கலாம். மத்தபடி டென் மினிட்ஸ் லெக்சர்.. ..ஒரு ஸ்கூல் கெட் டு கெதர் ஃபங்க்ஷன்ல கஷ்டம் ரவி. எனக்கு சந்தேகமா இருக்கு..'' என்று இழுத்தேன்.

'அட ஒண்ணும் ப்ராப்ளம் வராதுப்பா. உங்க ப்ரோக்ராமுக்கு எதுவும் டிஸ்டர்பன்ஸ் வராம பார்த்துக்கறோம். கவலையே படாதே. குக்கோட அட்ரஸ் அனுப்பி வைச்சுடு'' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

"என்னடா இது... ஏதோதோ சொல்கிறான். அவன் சொல்வதைச் செய்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அது ஒரு பள்ளி. அதில் நாங்கள் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்கே தற்போதைய தலைமை ஆசிரியரிடம் போராடி அனுமதி வாங்க வேண்டி இருந்தது. இதில் ரவிசங்கர் என்னவோ போர்ட் வைக்கிறேன். ஃபாம்ப்லாட் கொடுக்கிறேன், பத்து நிமிடம் லெக்சர் கொடுக்கிறேன் என்று சொல்கிறானே.. சரியாக இருக்குமா?' என்று யோசித்துப் பார்க்க, மண்டை குழம்ப, என் நெருங்கிய பள்ளி நண்பன் செல்வமணிக்கு என் கைப்பேசியை இணைத்தேன்.

'சொல்லு சுந்தர்'' என்றான் செல்வமணி.

அவனிடம் முழு விவரத்தையும் எடுத்துச் சொல்லி, 'நீ என்ன நினைக்கறே?'' என்று கேட்டேன்.

'நீ ஹெல்ப் பண்ணறது நல்லதுதான். யாராவது சைட் வாங்கினா அவங்களுக்கு பிஸினஸ் ஆகும். ஓ.கே. ஆனா இந்த போர்டு, பாம்ப்லேட், லெக்சர் எல்லாம் நல்லா இருக்காது சுந்தர். நீ நாம சந்திக்கணும், டீச்சர்களையும் பார்க்கணும்னு கஷ்டப்பட்டு இதுக்கு ஏற்பாடு பண்ணறே. ரவிசங்கர் சொல்ற மாதிரியெல்லாம் பண்ணினா அதுக்காகத்தான் நீ இந்த கெட் டு கெதருக்கு ஏற்பாடு பண்ணினேன்னு நினைச்சுடுவாங்க சுந்தர்.

உனக்கும் கமிஷனில் பங்கு கிடைக்கும்னுதான் இந்த கெட் டு கெதருக்கே நீ ஏற்பாடு பண்ணி இருக்கேன்னு கட்டாயம் நாலு பேராவது நினைப்பான். நீ சொல்லிடு. விருப்பம் இருக்கறவங்க கிட்ட தனித்தனியா மட்டும் கான்வாஸ் பண்ணறதா இருந்தா பண்ணுங்க. இந்த போர்ட், பாம்ப்லேட், லெக்சர் எல்லாம் ஸ்கூல்ல அலவ் பண்ண மாட்டங்கன்னு கண்டிப்பா சொல்லிடு. ..'' என்று ஆணித்தரமாக சொன்னான் செல்வமணி.

'தாங்க்ஸ் செல்வமணி. நீயும் சொன்னதுக்கப்புறம் மனசுல ஒரு ஃபோர்ஸ் கிடைக்கறது. கண்டிப்பா நோன்னு சொல்லறதுக்கு.... ரவிசங்கருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்'' என்று சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்தேன்.

உடனே ரவிசங்கரைத் தொடர்பு கொண்டு சொல்ல கொஞ்சம் தயக்கம் இருந்தது. மனதில் கொஞ்சம் கொஞ்சமாக என் தயக்கத்தை விரட்டி விட்டு கைப்பேசியை எடுத்தேன்.

'ஹலோ ரவி.... உனக்கு ஹெல்ப் பண்ணி ஒரு சைட்டாவது உங்களுக்கு விற்பனை ஆனா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அதுல சந்தேகமே இல்லை. ஆனா இந்த போர்டு, பாம்ப்லேட், லெக்சர் இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா. நான் முடிஞ்ச வரை எல்லார்கிட்டேயும் உன்னைத் பேச வைக்கறேனே. எனக்கு என்னவோ ஒண்ணு என்ன ரெண்டு பேர் சைட் வாங்குவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.. ..தப்பா நினைச்சுக்காதே என்ன.. .. கண்டிப்பா வா.. ..'' என்று சொன்னேன்.

'என்னப்பா இது எதுவுமே பண்ணக் கூடாதுங்கறே. சரி அப்புறம் கால் பண்ணறேன்'' என்று சொல்லிவிட்டு கைப்பேசி இணைப்பைத் துண்டித்தான் ரவிசங்கர்.

இருபத்தொன்றாம் தேதி மாலை வரை ரவிசங்கரிடமிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. நான் பத்தாவது முறை அவனைத் தொடர்பு கொண்டபோதுதான், கைப்பேசியை எடுத்தான்.

'சுந்தர்.. என்ன விஷயம்..?''

'என்னப்பா இப்படி கேட்கறே. எதுக்கு உனக்கு

ஃபோன் பண்ணப் போறேன். நாளைக்கு ஸ்கூல் கெட் டு கெதர். வந்துடறே இல்ல... உன்கிட்ட இருந்து எனக்கு கன்ஃபர்மேஷன் வேணுமே.. ''

'எனக்கு கொஞ்சம் ஃபீவரா இருக்குப்பா....'' என்றுஅவன் குரலில் இழுவை பயங்கரமாக இருந்தது.

'ஃபீவர் எவ்வளவு இருக்கு?'' என்று கேட்டேன்.

'99 இருக்கும்... கொஞ்சம் கோல்ட்.. வேற.. ..''

'கொஞ்சம்தானே ரவி, அதுவும் இல்லாம நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள சரியாயிடுமே. கோல்ட்னால உடம்பு சுடற மாதிரி இருக்கும். வந்துடு. சரியாயிடும்..'' என்று உற்சாகப் படுத்தியபடியே சொன்னேன்.

'சுந்தர், ஒண்ணு கேட்கணும்..''

'சொல்லுப்பா..''

'ஸ்நாக்ஸ் அயிட்டங்களை குக்கே ஸ்கூல்ல டெலிவரி பண்ண மாட்டாங்களா? அது என்ன இது நாமே போய் வாங்கிக்கணும்கறது. அப்புறம் காஃபி கேனை வேற திருப்பிக் கொண்டு போய் கொடுக்கணும்கறது.. அவங்களையே டெலிவரி பண்ணச் சொல்லு. பைசா வாங்கறாங்க இல்ல..''

அவன் பேச்சைக் கேட்டு என் தலை லேசாக சுழல ஆரம்பித்தது. அன்று என்னவோ ஸ்நாக்ஸ் அயிட்டங்களை அவனே குக் வீட்டுக்குச் சென்று கொண்டு வருவது மட்டும் இல்லாமல் அதன் விநியோகம் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்கிறேன் என்று உற்சாகமாக பேசி விட்டு இன்று..?

'என்ன ரவி இது, அன்னிக்கு நீ என்ன சொன்னே. இப்ப தலைகீழா.. .''

'எனக்கு ஜுரம்னு சொன்னேனே சுந்தர்.''

'அதுதான் லைட்டாதானே இருக்கு ரவி?''

'சரிப்பா. சொல்லிடறேன். போர்ட் வைக்கக் கூடாதுங்கறே. எல்லாருக்கும் பாம்ப்லாட் கொடுக்கக் கூடாதுங்கறே. டீட்டெயில்ஸ் சொல்லி சின்ன லெக்சர் கொடுக்கக் கூடாதுங்கறே. வந்து என்ன யூஸ்.. ஒண்ணும் ஆகாது.. .. நாங்க வந்தா வேஸ்ட்தான்.. ..ஒரு பைசாவுக்குப் ப்ரயோசனம் இருக்காது..''

'என்ன ரவி இது தனிப்பட்ட முறையில் நீ இருபது, முப்பது பேரிடம் பேசினா கொஞ்சம் கூடவா பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் இருக்காது. உடனே இல்லேன்னா கூட, கொஞ்ச நாள் கழிச்சு உன்னைக் கான்டாக்ட் பண்ணி பர்சேஸ் பண்ணுவாங்க? நான் சொல்றது இது அட்லீஸ்ட்.. உடனே கூட யாராவது உனக்கு ஆர்டர் கொடுக்கலாம்...'' என்று முயன்ற வரை முயற்சி செய்தேன்.

'ம்ம் இல்லப்பா.. '' என்று அவன் குரல் தேய்பிறையைப் பிரதிபலித்தது.

'அப்ப நீ வரலையா ரவி?'' என்று லேசான அதிர்ச்சியோடு கேட்டேன்.

'நெக்ஸ்ட் டயம் வந்தா பார்க்கலாம்'' என்று சொன்னான்.

'என்ன ரவி இது. நல்ல சான்ஸ். உனக்கும் விசாகனுக்கும் ஏதாவது நல்லது நடக்கும்னு ஆசைப்பட்டேன். சான்ûஸ எடுத்துக்க மாட்டேங்கறீங்க. இப்ப ஸ்நாக்ஸ் அயிட்டங்களை ஸ்கூலுக்குக் கொண்டு வர வேற ஆள் ஏற்பாடு பண்ணனுமே.. திரும்பவும் ஒருமுறை கேட்கறேன். வர்றியாப்பா?'' என்று என் குரலில் எதிர்பார்ப்பு இருந்திருக்கலாமோ என எனக்கு சரியாகத் தெரியவில்லை.

'இல்லப்பா. வரலை'' என்று அமைதியாக இருப்பதன் மூலம் கூட இந்த பதிலைச் சொல்ல முடியும் என்பதை எனக்கு கைப்பேசியின் அந்த முனையில் இருந்து நன்கு விளக்கினான் ரவிசங்கர். கனத்த இதயத்தோடு கைப்பேசியை மேசையின் மீது வைக்க எனக்கு இரண்டு நிமிடங்கள் பிடித்திருக்கும்.

அடுத்த நாள் மாலைதான் எங்கள் பள்ளியில் கெட் டு கெதர். காலையிலே வாட்ஸ் ஆஃப் செய்திகளைப் பார்க்க கைப்பேசியை எடுத்தேன். எங்கள் பள்ளி வாட்ஸ் ஆஃப் குழுவிலே இந்தச் சந்திப்பு விஷயமாக நிறைய செய்திகள் வந்திருந்தன. முதலில் ப்ரொஃபைல் ஃபோட்டோ பிரிவில் "ரீஸன்ட் அப்டேட்ஸ்' பார்க்க ஆரம்பித்தேன். பத்து பேர் அப்டேட் செய்திருந்தனர். அதில் ரவிசங்கரும் ஒருவன். அவன் அப்டேட்டை பார்த்தேன்.

முதலில் அவன் ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரம். அடுத்தது ஒரு ஊக்க மேற்கோள். அதைப் படித்தேன்.

"வாழ்க்கையில் வாய்ப்புகள் வரும்போது சாக்கு போக்கு சொல்லாமல் அதை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.. ..' என்றிருந்தது.

படித்த எனக்கு "தவசி' படத்தில் நடிகர் வடிவேலுவிடம் "இந்த அட்ரஸ் எங்கே இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா?' என்று ஒரு சீட்டைக் காட்டி கேட்கும்போது அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் திடுக்கிடும் நகைச்சுவைக் காட்சி நினைவில் வர, அந்த நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. முடிவில் கஷ்டப்பட்டு சிரித்து வைத்தேன்.

'என்ன திடீர்னு சிரிக்கிறீங்க?'' என்று கேட்டாள் என் மனைவி.

விளக்கிச் சொல்ல நேரம் ஆகும் என்றாலும் நான் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் விளக்கிச் சொல்லும்போது என் மனது வேதனைப்படும் என்பதால், 'ம்ம் வாட்ஸ் ஆஃப்பில் ஜோக் அனுப்பியிருக்கான் என் ஃப்ரண்ட். அதைப் படிச்சுட்டுத்தான் சிரிச்சேன்'' என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதி ஆனேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com