ஒரே மலையில் 3,500 ஆலயங்கள்..

'பாலிதானா' ஆலயங்களானது குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள 'பாலிதானா' பேரூருக்கு அருகிலுள்ள சத்ருஞ்சய மலையில் (எதிரிகளை வெல்லும் மலை) உள்ள மிகப் பெரிய சமண ஆலய வளாகமாகும்.
ஒரே மலையில் 3,500 ஆலயங்கள்..
Published on
Updated on
2 min read

'பாலிதானா' ஆலயங்களானது குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள 'பாலிதானா' பேரூருக்கு அருகிலுள்ள சத்ருஞ்சய மலையில் (எதிரிகளை வெல்லும் மலை) உள்ள மிகப் பெரிய சமண ஆலய வளாகமாகும். 800 சிறிய ஆலயங்கள், 100 பெரிய ஆலயங்களின் அடர்த்தியான தொகுப்பு. ஒரே இடத்தில் இத்தனை ஆலயங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதனால் பாலிதானா 'ஆலயங்களின் நகரம்' என்று அழைக்கப்படும்.

சமணர்களில் ஸ்வேதாம்பர மரபினருக்கு மிகவும் புனிதமான தலமான இந்த வளாகத்தில் உள்ள ஆலயங்கள் பல நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. ஆலயங்களின் க ட்டுமானங்கள் 11- ஆம் நூற்றாண்டுக்கு சற்று முன்பு தொடங்கப்பட்டது.

1656-இல் முகலாய மன்னர் முராத் பக்ஷ் என்பவரிடமிருந்து இந்த மலையை சாந்திதாஸ் ஜாவேரி என்ற சமணப் பெருவணிகர் விலைக்கு வாங்கி, ஆலயங்கள் கட்டுமான வேலைகளைத் தொடங்கினார். 1730-இல் ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளை இந்த ஆலய வளாகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றவுடன் மேலும் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டன.

சத்ருஞ்சயா மலையில் மட்டும் பல உயரங்களில் மொத்தம் 3,507 ஆலயங்கள் அமைந்துள்ளன. மலையைச் சுற்றி சத்ருஞ்சயா ஆறு ஓடுகிறது. அனைத்து ஆலயங்களிலும் சேர்த்து 27 ஆயிரம் தீர்த்தங்கரர் சிலைகள் உள்ளனவாம். எல்லா சிலைகளையும் தனித்தனியாகப் பார்ப்பது சிரமம்தான். குறைந்தது 15 நாள்களாவது தேவைப்படும். அதற்கும் 15 முறையாவது மலையேறி இறங்க வேண்டிவரும்.

பாலிதானா வளாகம் மலையின் உச்சியில், மலைகளின் பல்வேறு முகடுகளில் அமைந்துள்ளது. பிரதான ஆலயம் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; இது ஸ்வேதாம்பர மூர்த்தி பூஜக பிரிவின் புனிதமானது. பெரும்பான்மையான ஆலயங்கள் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெயின் சமயத்தவர், சுற்றுலாப் பயணிகள் மலைப்பாங்கான பாதையில் 3,336 செங்குத்தான படிகளை ஏறி ஆலய வளாகத்துக்குச் செல்லவேண்டும். ஆங்காங்கே நின்று ஓய்வு எடுத்துச் செல்ல இடங்கள் உள்ளன. படிகளை ஏற முடியாதவர்களுக்கு மலையின் அடிவாரத்தில் 'டோலி' எனப்படும் வாடகைப் பல்லக்குகளில் அமர்ந்து செல்லலாம்.

பல்லக்கைத் தூக்க ஆண்களும், திடகாத்திரமான பெண்களும் இருக்கிறார்கள். பல்லக்கு மரச் சட்டங்களை தோளில் வைத்து சுமக்காமல் தலையில் சும்மாடு வைத்து சுமக்கின்றனர்.

மலையேறும்போது யாரும் காலணி அணியக் கூடாது. ஆனால், கால் உறையை அணியலாம். தோல் பர்ஸ், பெல்ட் எதுவும் பயணிகளிடம் இருக்கக் கூடாது. ஆலய வளாகத்தில் உணவு எதுவும் கிடைக்காது. கொண்டு போகவும் முடியாது. தண்ணீர் மட்டும் கொண்டு செல்லலாம்.

அடிவாரத்தில் கடைவீதியில் இருக்கும் உணவு விடுதிகளில் தேநீர், காஃபி கிடைக்காது.

ஆலய வளாகம் தெய்வங்கள் தங்குமிடமாக நம்பப்படுவதால், புரோகிதர்கள் உட்பட யாரும் இரவில் தங்க அனுமதியில்லை. மலை உச்சியிலிருந்து மாலையில் அடிவாரத்துக்கு வந்தாக வேண்டும்.

அடிவாரத்தில் பல மடங்கள், ஓய்வு இல்லங்கள், கடைகள், சிறிய ஆலயங்கள் உள்ளன. பாவ்தானா பேரூர் பவநகரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பவநகர் வர ரயில், விமானத்தைப் பயன்படுத்தலாம். பாவ்நகரிலிருந்து தரை வழியாக பாலிதானா செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com