வி.எஸ்.

நூறு வயதானபோதிலும், 'நாட்டில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்?'
வி.எஸ்.
Published on
Updated on
2 min read

நூறு வயதானபோதிலும், 'நாட்டில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்?' என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தார் அச்சுதானந்தன். தினமும் நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய அரசியல் செய்திகளை யாரையாவது படிக்கச் சொல்லி கேட்பது அவருடைய பழக்கம். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளில் அச்சுதானந்தன் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பத்திரிகைகள் வெளியிடுவது வழக்கம்.

சில சமயங்களில், அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தன் வயதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்கள். அவரது முழுப் பெயர் 'வேலிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன்'. ஆனால், மலையாள மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்பது அவரது சுருக்கமான பெயரான 'வி.எஸ்.' என்பதுதான்!

கேரளத்துக்கு உள்பட்ட ஆலப்புழா மாவட்டத்தில் பரவூர் என்ற கிராமத்தில் வறுமையான, ஈழவ குடும்பத்தைச் சேர்ந்த அச்சுதானந்தன், தனது நான்கு வயதில் தாயை இழந்தார். அச்சுதானந்தனுக்கு நான்கு வயது இருக்கும். அவரது தாய்க்கு அம்மை நோய் வந்திருந்தது. இறக்கும் தருவாயில் தன் இரண்டு மகன்களையும் கடைசியாக ஒருமுறை பார்க்க விரும்பினார் அந்தத் தாய்.

ஆற்றங்கரையில் குடிசையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாயிடம் இரண்டு பிள்ளைகளையும், அழைத்துச் சென்றனர். குடிசையின் பக்கவாட்டு கீற்றுகளை நீக்கி, அதன் வழியே பிள்ளைகளைப் பார்த்த தாயின் கண்களில் கண்ணீர். அவர் கையசைக்க, சின்னப் பிள்ளை கீற்று வழியாக உள்ளே நுழைய முயன்றார். ஆனால், மற்றவர்கள் அவனைத் தடுத்துவிட்டனர். அன்றே தாய் இறந்தார். தாயின் மரணம் சிறுவன் அச்சுதானந்தனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தன் பன்னிரெண்டாவது வயதில் தந்தையை இழந்த, அச்சுதானந்தன், ஏழாம் வகுப்புடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தன் அண்ணன் கங்காதரனின் தையல் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். 1940-இல் ஆங்கிலேய நிறுவனத்தில் பணி. பதினாறு வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அன்றைய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கிருஷ்ணப் பிள்ளை போன்றவர்களின் பேச்சால் கவரப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் ஓராண்டிலேயே சேர்ந்தார். குட்டநாடு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற அச்சுதானந்தன், தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கேற்றார்.

1946 செப்டம்பரில் திருவாங்கூர் சமஸ்தான திவானின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அச்சுதானந்தன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்ரவதைக்குள்ளாக்கினார் 'என்னை லாக்-அப்பின் உள்ளே வைத்துப் பூட்டி, கம்பி இடுக்குகள் வழியே கால்களை மட்டும் வெளியில் இழுத்து, லத்தியில் கட்டி, பாதங்களில் அடித்தனர்.

ஒருகட்டத்தில் கால்கள் மறத்துப் போய், பாதங்களில் விழும் அடி மண்டைக்குள் வலி ஏற்படுத்தியது' என்று பிற்காலத்தில் ஒருமுறை குறிப்பிட்டார் அச்சுதானந்தன். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்த போலீஸார் அருகே இருந்த வனப் பகுதியில் அவர் உடலைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும் உயிர்த் தியாகம் செய்த தோழர்கள் பட்டியலில் அச்சுதானந்தனின் பெயரையும் சேர்த்துவிட்டது.

ஆனால், வனப்பகுதியில் வெகுநேரம் கழித்து நினைவு திரும்பிய அச்சுதானந்தனை சிலர் மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுதானந்தனை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்தார் அச்ச்சுதானந்தன். அவர் விடுதலையானபோது, கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டுவிட்டது. அவர் தலைமறைவானார்.

போராட்ட குணம் கொண்ட தந்தையின் அரவணைப்பில் வளர்ந்துவந்த அவர், உயர்வகுப்பினர் வசிக்கும் தெரு வழியாகத்தான் பள்ளிக்கூடம் செல்வார். ஒரு நாள் அந்தத் தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் கேலி செய்ய, அவர்களை அச்சுதானந்தன் அடித்துவிட்டார். வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவர் எதுவுமே சொல்லவில்லை.

மறுநாள் காலை அச்சுதானந்தன் பள்ளிக்குப் புறப்பட்டபோது, மகனுக்கு ஒரு பெல்ட் கொடுத்தார். பதிலடி கொடுக்கக் காத்திருந்த சிறுவர்கள் தாக்கத் துவங்கியதும், பெல்ட்டைக் கழற்றி, சுழற்றத் துவங்கினார் அச்சுதானந்தன். அவருக்கு 'அப்பா கொடுத்த பெல்ட்' ரொம்பவே உதவியாக இருந்தது.

தனது 44-ஆவது வயதில் முதல் முறையாக எம்.எல்.ஏவானார் அச்சுதானந்தன். கேரள முதல்வராகப் பதவியேற்றபோது, அவருக்கு வயது எண்பத்து இரண்டு. மிக அதிக வயதில் முதல்வரானவர் இவர்தான். 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 32 பேர் விலகி, மார்சிஸ்ட் கட்சியைத் துவக்கினர். அந்த 32 பேரில் உயிரோடு இருந்த ஒரேயொரு நபரான அச்சுதானந்தன், அண்மையில் மறைந்துவிட்டார்.

1967-ல் செவிலியராகப் பணிபுரிந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த வசுமதியைத் திருமணம் செய்துகொண்டார் அச்சுதானந்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com