
உலகில் பறவைகள் பலவிதமாகவும், விலங்குகள் விநோதமான முறையிலும் வாழ்கின்றன. அவற்றில் சில சுவாரசியங்களைப் பார்ப்போம்.
மனிதர்களோடு விளையாடும் பறவைகள்
தஞ்சாவூர் அருங்காட்சியக முதன்மைக் கட்டடத்தின் பின்புறமும், பெரிய கோயிலுக்கு மிக அருகிலும் இரண்டு ஏக்கரில் ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளது. இங்கு 20 நாடுகளைச் சேர்ந்த ராஜாளி உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான பறவைகள் உள்ளன. இங்குள்ள பறவைகள் பயமின்றி நம் மீது அமரும். அதற்கு நாமே உணவும் ஊட்டலாம்.
யானைகள் காதுகளை அசைப்பது ஏன்?
தரையில் வாழ்கின்ற விலங்குகளில் மிகப் பெரியது யானை. அதற்கு தன்னுடைய உடலை தூக்கிக் கொண்டு நடப்பதற்கு கடினமாக இருக்கும். எனவே அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்கிறது. ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் ரத்த ஓட்டம் இருக்காது. எனவே, தன்னுடைய பெரிய காதுகளை அங்கும் இங்குமாக அசைத்துக்கொண்டே இருக்கிறது.
கழுதைக்கு வரிக்குதிரை சாயம்:
சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாய்க் குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் வர்ணம் தீட்டினர். இதுதொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி, வைரலானது. இந்த நிலையில், அங்குள்ள ஷாண்டான் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கழுதைகளுக்கு வெள்ளை கருப்பு நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போன்று தோற்றமளிக்கும் வகையில், மாற்றியுள்ளனர். இது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்கிறது.
வனத்தின் உள்ளே சென்று பார்க்கலாம்:
காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக் காடுகள் உள்ளன. இந்தியாவில் முதன்முதலாக இங்குதான் வனத்துக்கு உள்ளே சென்று பார்க்கும் வகையில், மர நடைபாதைகள், உயர்கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் எனப் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையால் செய்யப்பட்டுள்ளன. வனத்துக்குள்ளே அச்சமின்றிப் பார்வையாளர்கள் சென்று, விலங்குகளையும், பறவைகளையும், வனத்தின் அழகையும் ரசிக்கலாம்.
சுந்தர வனக் காடு:
சுந்தரவனக் காடுகள் உலகில் உள்ள அலையாத்திக் காடுகளில் மிகவும் முக்கியமானதாகும். இந்தக் காடுகள் வங்கதேசத்துக்கும்
இந்தியாவுக்கும் இடைபட்ட பகுதியிலும், கங்கை நதியின் இறுதிப்பகுதியிலும் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகளாகும். சுந்தரவனக் காடு
என்பது வங்க மொழியில் 'அழகான அடர்ந்த காடு' என்று பொருள்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.