பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்றதுமே மீண்டும் அவரது கதைகளை வாசித்துப் பார்த்தேன். எழுபது சிறுகதைகளுக்கு மேல் வாசித்து, மேடைக்குப் பொருத்தமான 'கழுதை தேய்ந்து', 'சண்டை', 'தலைவர் வருகிறார்', 'ஆயா', 'தெப்பக்குளம்', 'தெய்வம் நின்று கொல்லும்' ஆகிய ஆறு சிறுகதைகளை நாடகமாக்க உள்ளோம். ஒவ்வொரு சிறுகதையுமே ஒவ்வொரு ஜானரில் இருக்கும். எல்லாமே மனதைத் தொடும் சிறுகதைகள்'' என்கிறார் கோமல் தியேட்டர் நாடகக் குழுவின் அமைப்பாளர் தாரிணி கோமல்.
நாடகத்தில் திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அவருடன் ஒரு சந்திப்பு:
எழுத்தாளர் சிவசங்கரியின் சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
எழுத்தாளர் சிவசங்கரியும் என் தந்தை கோமல் சுவாமிநாதனும் இலக்கிய ரீதியில் நெருங்கிய நண்பர்கள். அப்பா 'சுபமங்களா' என்ற பத்திரிகையை ஆரம்பித்தபோது, அந்த நிகழ்ச்சியில் சிவசங்கரி பங்கேற்றார். அப்பா காலமானபோது எங்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார் சிவசங்கரி.
சிவசங்கரியின் சிறுகதைகள், நாவல்களை நான் சிறுவயது முதலே விரும்பிப் படிப்பேன். அவரது பல கதைகள் என்னைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. நான் நாடகத் துறைக்கு வந்தவுடன் அவரது சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாகவே எனக்குள் இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியக் கூட்டம் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது என் ஆசையைத் தெரிவித்தேன்.
நீ நாடகமாகத் தயாரிக்கிறாய் என்றால் கண்டிப்பாகத் தருகிறேன்'' என்றார் சிவசங்கரி. என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என்னைப் பரவசப்படுத்தியது. வரும் அக்டோபர் மாதம் சிவசங்கரிக்கு 83 ஆவது பிறந்த நாள். அவரது சிறுகதைகளை நாடகமாக்கி, பிறந்த நாள் பரிசாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அவர் எங்களுடன் நன்கு ஒத்துழைத்து, எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்.
நாடகமாக வரப் போவது குறித்து சிவசங்கரியின் ரசிகர்கள் மத்தியிலும் நிறைய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே எங்களுக்கும் பொறுப்பு அதிகமாக உள்ளது. சென்னை நாரத கான சபாவில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை இந்த நாடகம் அரங்கேறுகிறது.
பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை நாடகமாக ஆக்கும்போது நிறைய சவால்கள் இருக்குமே?
கோமல் தியேட்டர் சார்பில் எழுத்தாளர்கள் தி.ஜா., சூடாமணி, சுஜாதாவின் படைப்புகளை எடுத்து நாடகமாக்கி இருக்கிறோம். சுஜாதாவின் முக்கியமான சிறுகதைகளை மட்டும் நாடகமாக்கி மேடையேற்றியபோது, அரங்கம் நிறைந்தது. உட்கார இடமில்லாமல் பலர் திரும்பிச் சென்றனர்.
பிரபல எழுத்தாளர்களின் கதைகளை நாடகமாக்கும்போது, மக்கள் பெரிதும் ரசிக்கிறார்கள். ஆனால், சிறுகதைகளை நாடகமாக்கும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சில கதைகள் மட்டும்தான் நாடகத்துக்குப் பொருத்தமாக இருக்கும்.
சில கதைகளில் வர்ணனைகள் அதிகமாக இருக்கும். அதை நாடகத்தில் கொண்டு வருவது பெரிய சவால்தான். அந்தக் காட்சிகளின்போது, வேறு ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவர் பேசுவதுபோல் அல்லது சூழ்நிலையை வர்ணிப்பதுபோல காட்சிப்படுத்தி விடுவோம்.
எத்தனை கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்? நாடகம் எத்தனை மணி நேரம் நடைபெறும்?
நடிகர்கள், நடிகைகள் என மொத்தம் 16 பேர். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். மேக்கப் மேன், இசையமைப்பாளர், ஒளியமைப்பாளர் என எல்லோரையும் சேர்த்து மொத்தம் 20 பேர் அடங்கிய குழு எங்களுடையது. மொத்தம் 110 நிமிடங்கள் நாடகம் நடைபெறும்.
சிவசங்கரியின் ஆறு கதைகளுக்கும் சேர்த்து 15 லோகேஷன்கள் உள்ளன. பேக்ட்ராப், எல்.இ.டி. டிசைன்களில் இருக்கும். கடந்த ஒரு மாதமாக இதற்கான வசனங்களை எழுதி, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, எப்படியெல்லாம் காட்சிப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டோம். ஆகஸ்ட்,
செப்டம்பர் மாதம் முழுவதும் ஒத்திகை நடைபெறும். நாடகம் தொடங்குவதற்கு முன்பு, சிவசங்கரி குறித்த ஆடியோ விஷூவல் காட்சிகள் 10 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகும்.
சிவசங்கரியின் படைப்பின் உயிரோட்டம் பாதிக்காதவாறு நாடகம் அமைய வேண்டுமல்லவா?
ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்புக்கு உயிர் கொடுத்து உருவாக்கியிருப்பார். அதில், ஒரு உயிரோட்டம் இருக்கும். எந்த விதத்திலும் அந்த உயிரோட்டத்தைச் சிதைக்கக் கூடாது. நாம் விரும்பியபடி புதிதாக ஒரு கதாபாத்திரத்தை நாடகத்துக்குள் நுழைக்க முடியாது. அவர்கள் எழுதியிருக்கும் கதாபாத்திரத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. எந்தக் காரணத்துக்காக, என்ன வீரியத்தோடு கதாபாத்திரங்களை எழுத்தாளர் படைத்திருக்கிறாரோ? அதை அப்படியே நாடகத்தில் கொண்டு வருவதுதான் சவால்.
சிவசங்கரி நம்மிடையே இருப்பது பெரிய வரம். ஆறு சிறுகதைகளுக்குமான திரைக்கதையை எழுதி, அவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன்.
வாசித்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். ஒரேயொரு கதையில் மட்டும் வர்ணனைகளை எடுத்துக் காட்டுவதற்காக ஒரு கதாபாத்திரத்தை புதிதாகக் கொண்டு வர வேண்டியிருந்தது. அதற்கு அவர் முழு மனதுடன் சம்மதித்தார். 'தேவையான இடங்களில் திருத்தங்கள் செய்துகொள்' என்று அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பணியை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
நாடகக் குழுவை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. பல நிறுவனங்களில் நான் முக்கிய பொறுப்புகளை வகித்திருப்பதால், அந்த அனைத்து அனுபவங்களும் எனக்கு நாடகக் குழுவை நடத்தப் பெரிதும் உதவுகின்றன. என்னுடைய நாடகங்களுக்கு வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியவற்றையும் நான்தான் மேற்கொள்கிறேன்.
இளைஞர்களுக்கு உங்கள் நாடகக் குழுவில் நிறைய வாய்ப்புக் கொடுக்கிறீர்களே?
என் நாடகக் குழுவில் நடிப்பதற்கென்றே சில கலைஞர்கள் உள்ளனர். அத்துடன் ஒவ்வொரு நாடகத்திலும் இளம்தலைமுறை கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். நடிப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் என்னை அணுகுவதுண்டு. அவர்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்து என் நாடகத்தில் பங்கேற்க வாய்ப்பும் கொடுக்கிறேன்.
தேவையான நிதியை எப்படித் திரட்டுகிறீர்கள்?
நல்லி குப்புசாமி செட்டி போன்றோர் நாடகக் கலை வளர்ச்சிக்காக நிறைய உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஒரு நாடகத்தை மேடையேற்றுவதற்கு ஆகும் மொத்த செலவையும் கணக்கிட்டு சொல்லிவிட்டால், அந்தத் தொகை முழுவதையும் வழங்கும் புரவலர்களும் உண்டு. சில இடங்களில் அரங்கை மட்டும் இலவசமாகக் கொடுப்பார்கள். நாடகம் நடத்துவதற்கு ஆகும் செலவை நாங்கள்தான் மேற்கொள்ள வேண்டும். பல நல்ல உள்ளங்கள் கொடுக்கும் நிதியைக் கொண்டுதான் நாடகங்களை நடத்தி வருகிறோம்.
நாடகம் மேடையேறுவதைப் பார்க்க ஆவல்: சிவசங்கரி
என்னுடைய சிறுகதைகள் இப்போது நாடகமாகப் போவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு அடிப்படையாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதைகள் நாடகமாக வந்தபோது, அதை நான் மிகவும் ரசித்தேன்.
என் காலத்துக்குப் பிறகு என் சிறுகதைகளும் இப்படி நாடகமாக்கப்பட வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அந்த நேரத்தில் சில இளைஞர்களைச் சந்தித்தபோது, 'எங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆனா, தமிழில் நன்றாகப் பேசுவோம். உங்க கதைகளைப் படிக்கணும் போல் இருக்கு. அதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கு' என்று கூறினர்.
என் கதைகளை நாடகமாக்கினால் பலதரப்பட்ட மக்களுக்கும் போய்ச் சேருமே என்று தோன்றியது. இதுபற்றி தாரிணி கோமல் என்னிடம் ஒருமுறை பேசியது நினைவுக்கு வந்தது. அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, என் சிறுகதைகளை நாடகமாக்க அவரும் பெரிதும் ஆவலாக இருப்பது தெரிந்தது. உடனே நடவடிக்கையில் இறங்கினோம்.
தாரிணியோ நாடகத் துறை பற்றிய எல்லா நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர். நான் அவரது பணிகளில் தலையிட விரும்பவில்லை. நான் ஒரு குழந்தையைப் பெற்று தாரிணியிடம் கொடுத்துவிட்டேன். அதை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது, செம்மையாக அலங்கரிப்பது என்பது போன்ற எல்லா பொறுப்பையும் அவரிடமே விட்டுவிட்டேன். எல்லோரையும்போல என் சிறுகதைகள் நாடகமாகி மேடையேறுவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.