தவ வாழ்க்கை வாழ்ந்தேன்; சாதித்தேன்...

சமூக ஊடகங்களில் ஐ.ஏ.எஸ். தொடர்புடைய செய்திகள், காணொளிகளை மட்டுமே பார்ப்பேன்.
தவ வாழ்க்கை வாழ்ந்தேன்; சாதித்தேன்...
Published on
Updated on
2 min read

சமூக ஊடகங்களில் ஐ.ஏ.எஸ். தொடர்புடைய செய்திகள், காணொளிகளை மட்டுமே பார்ப்பேன். திரைப்படங்களை அரிதாகவே பார்ப்பேன். எட்டு ஆண்டு சென்னை வாழ்க்கையில் பொழுதுபோக்கும், நண்பர்களுடன் கொண்டாட்டமும் இல்லை.

ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற லட்சியம்தான் இருந்தது. பண்டிகைக்கும் நான் ஊர் சென்றதில்லை. ஒரு துறவியின் தவ வாழ்க்கையை வாழ்ந்தேன்'' என்கிறார் சங்கர் பாண்டியராஜ்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்தவர். பெற்றோர் தையல் தொழிலாளர்கள். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால், சிறு வேலையைப் பார்த்துக்கொண்டே தொலைதூரக் கல்வி முறையில் பி.பி.ஏ. தமிழ் வழியில் படித்தார். மூத்த, இளைய சகோதரிகள் இருவர். ஒரு தம்பி. குடும்பப் பிரச்னைகளுக்கு இடையே

ஐ.ஏ.எஸ். தேர்வைத் தமிழில் எழுதி, 807ஆவது இடத்தைப் பிடித்துத் தேர்வாகியுள்ளார்.

அவர் கூறியது:

பட்டம் பெற்றவுடன் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. எனது குடும்பமும் மதுரையில் குடியேறியது. கிடைத்த வேலைகளைச் செய்து நாள்களை ஓட்டினேன். மக்கள் சேவையில் விருப்பம் இருந்ததால் மதுரையில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு மனித உரிமைகள், சட்டம்ஒழுங்கு குறித்து அறிந்துகொண்டேன்.

ஒருநாள் மதுரை சிம்மக்கல்லில் ஒரு பேக்கரியில் தேநீர் குடித்து மேஜையில் நான் வைத்த கிளாஸை வட நாட்டைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் கழுவ எடுத்துக்கொண்டு சென்றான். நான் திடுக்கிட்டேன். சிறுவர்களைப் பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். எனது வீட்டு வறுமையே என் முன் நிழலாடியது.

இந்தச் சிறுவனுக்கு வீட்டில் எவ்வளவு வறுமை இருந்திருந்தால், படிக்க வேண்டிய வயதில் வேலைக்கு வந்திருப்பான் என்று நினைத்தேன். அரசுத் துறைகளுக்குத் தகவல் கொடுத்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் வந்துவிட்டனர். அந்தப் பையனையும், அவனுடன் வேலை பார்த்த இதர சிறுவர்களையும் மீட்டு அழைத்துச் சென்றனர்.

அடுத்த நாள் எனது புகைப்படத்துடன் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. பலரும் பாராட்டினர். ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. இன்னொரு பக்கம் எனது வாழ்க்கை எப்படி அமையப் போகிறதோ? என்ற பயமும் இருந்தது.

அடுத்த சில மாதங்களில் மேலூருக்கு ஒரு வழக்கு தொடர்பான ஆய்வுக்காக ஐ.ஏ.எஸ். அலுவலர் சகாயம் வந்திருந்தபோது, அங்குள்ள மயானத்தில் தங்க நேரிட்டது. அவருக்குத் துணையாக நானும் சில இளைஞர்களும் தங்கினோம். இரவில் பேசிக் கொண்டிருந்தபோது, எனது செயல்பாடுகளைத் தெரிந்துகொண்ட சகாயம், 'மக்களுக்குச் சேவை செய்ய பொதுநல அமைப்புகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில்லை. அரசு உயர்பணியில் சேர்ந்தும் சேவை செய்யலாம்' என்றார்.

அந்தக் கணத்தில் எனது கவனம் ஐ.ஏ.எஸ், தேர்வுகள் மீது சென்றது. சென்னைக்கு வந்து குடியேறினேன். தமிழ் வழியில் படித்தாலும் ஆங்கில அறிவு இல்லாமல் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். ஆங்கிலத்தில் ஓரளவு புரிந்து கொள்ள, எழுத வர மூன்று ஆண்டுகள் ஆனது. வேலை செய்து முடித்து இரவில் படிப்பதும் சிரமமாக இருந்தது. இருந்தாலும் நான்கு முறை தேர்வு எழுதினேன். நுழைவுத் தேர்வில் தேறினாலும் முதன்மைத் தேர்வில் தொடர் தோல்வி.

மீண்டும் உத்வேகத்துடன் படித்தேன். 'நான் முதல்வன்' திட்டம் அறிவிக்கப்பட்டதும் அதற்கான நுழைவுத் தேர்வு எழுதினேன். பயிற்சிக்கும் தேர்வானேன். அங்கு மாத உதவிப் பணம் வழங்கப்பட்டதால், வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. முழுக் கவனத்தையும் குவித்துப் படித்தேன்.

சிறப்புப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தெரிவு செய்திருந்தேன். தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் தனிப் பயிற்சி பெற்றேன். ஐ.ஏ.எஸ். தேர்வையும் தமிழில் எழுதினேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வை பத்துப் பேர்கூட தமிழில் எழுத மாட்டார்கள். அதனால் பயிற்சி நிலையங்களில் தமிழில் எழுதுபவர்களுக்குப் பயிற்சி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள்.

ஐ.ஏ.எஸ். தேர்வு நாம் நினைப்பது போல் மிகக் கடினமான தேர்வு அல்ல. ஐந்து ஆண்டு தேர்வு கேள்வித்தாள்களைப் பார்த்தால், எந்த மாதிரியான கேள்விகள் எப்படிக் கேட்கப் படுகின்றன என்ற சூட்சுமம் தெரியவரும். அதை அனுசரித்துப் பாடங்களை வாசித்தால் போதும்.

ஐ.ஏ.எஸ். தேர்வை ஒருவர் ஒன்பது முறை எழுதலாம். நான் எட்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்.

தேர்வில் தேர்வானதும், நான் படித்த தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்ததை வாழ்வில் கிடைத்த பெருமகிழ்ச்சியாகவே கருதுகிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் அழைத்துப் பாராட்டினார்'' என்கிறார் சங்கர் பாண்டியராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com