
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற எண்ணற்றோர் உயிரையும், வாழ்க்கையின் இன்பங்களையும் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தேசப் பற்றும், நேர்மையும், ஆர்ப்பாட்டம் இல்லாத அன்றாட வாழ்க்கையும் இன்றும் மெய்சிலிர்க்க வைக்கும். அவ்வாறு வாழ்ந்த தேசத் தொண்டர்கள் சிலரது வாழ்வில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள்:
சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக, 1944இல் ஐ.என்.ஏ. படை இம்பாலை பிடிக்கத் திட்டமிட்டபோது, அதற்கான அத்தனை உதவிகளைச் செய்தவர் நாயர் ஸான். ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
ஜப்பானில் இருந்து தலைமறைவு வாழ்க்கையாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாயர் ஸான், நாடு சுதந்திரம் அடைந்தவுடன் தனது குடும்பத்துடன் திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பின்னர், சுபாஷ் சந்திர போஸ் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். அதுபற்றிய உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றவர் நாயர் ஸான்.
சுதந்திரத்துக்குப் பின்னர், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மனதைப் பாதிக்கவே, ஜப்பானுக்கே சென்றுவிட்டார். ஜப்பான் அரசக் குடும்பத்தினருடன் இருந்த நெருக்கம் காரணமாக, இந்தியத் தலைவராக மதிப்புடன் நடத்தப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியத் தூதரகம் ஜப்பானில் அமைக்கப்பட்டது. அங்கு நல்லுறவு வளரக் காரணமாக இருந்த நாயர் ஸான், பிற்காலத்தில் இந்தியத் தூதர்களாக வந்தவர்களின் அலட்சியப் போக்கால் மனம் ஒடிந்து தூதரகப் பணியில் இருந்து விடுவித்துக்கொண்டார். பின்னர், இந்திய உணவகம் ஒன்றை டோக்கியோவில் நடத்தினார்.
இவர் இந்தியா வரும்போதெல்லாம் கேரளத்துக்கு வருகை தந்து, தனது உறவினர்களுடன் நாள்
களைச் செலவிட்டார். மதச் சண்டை, இனச் சண்டை, மொழிச் சண்டைகளில் இந்தியா சிக்கியிருப்பதைக் கண்டு வருந்தினார். 1990இல் நாயர் ஸான் இறந்தார். அவரது வாரிசுகள் டோக்கியோவில் இன்றும் அந்த உணவகத்தை நடத்துகின்றனர்.
இந்த உணவகத்தில் நேதாஜி உள்ளிட்ட முக்கியமான தலைவர்களோடு நாயர் ஸான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரதமர் லால் பகதூர் சாஸ்தூரி ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தன்னிடம் சேமிப்பில் இருந்த ஏழாயிரம் ரூபாயோடு கடன் தொகையைப் பெற்று, குடும்பத்துக்காக பியட் கார் வாங்கினார்.
1966இல் அவர் மறைந்தவுடன் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய நல்லெண்ணத்துடன் அவரது மனைவி லலிதா சாஸ்திரியை வங்கி நிர்வாகம் அணுகியது. எனினும், லலிதா சாஸ்திரி இதற்கு மறுத்துவிட்டார். தனது கணவரின் நேர்மை, சுயசார்பு கொள்கைக்கு மதிப்பளித்து பல ஆண்டுகளாகத் தனக்கு வந்த ஓய்வூதியத்தைப் பயன்படுத்தி, கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தினார்.
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் பின்பாட்டுக்காரர் ஒரு மறதி ஆசாமி. ஒருமுறை தண்டி யாத்திரையில் மகாத்மா காந்தி நடத்திய உப்புச் சத்தியாக்கிரகம் குறித்த ஒரு பாட்டு. 'உப்பை எடுத்தார்' என்பது பல்லவி.
கலைவாணர் அந்தப் பின்பாட்டுக்காரரைப் பாடச் சொன்னபோது, அடுத்த அடியை மறந்து 'உப்பை எடுத்தார்' என்றே பலமுறைப் பாடினார். மக்கள் விழித்தனர். அப்போது கலைவாணர் அந்தப் பாடகரைக் காட்டிக் கொடுக்காமல் மக்களின் கவனத்தை ஹாஸ்யத்தின் பக்கம் திருப்பினார்.
எவ்வளவோ போராடி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தும் காந்திஜி அங்கு சென்று ஒருமுறையா உப்பை எடுத்திருப்பார்? நம் பாட்டுக்காரர் பாடியபடி பலமுறை குனிந்து, குனிந்து உப்பை எடுத்திருப்பாரே? அதைத்தான் தத்ரூபமாகப் பாடிக் காட்டினாரோ?'' என்று சொல்லி, பாடகரின் மறதியையும், தன் மதிநுட்பத்தால் சமாளித்தார் கலைவாணர்.
நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
கல்கியும், மூதறிஞர் ராஜாஜியும் ஒருமுறை விழாவொன்றில் பங்கேற்றனர். அப்போது ஒருவர் கல்கியிடம், உங்களது புதினங்கள் அனைத்தும் வெகுநீளமாக இருக்கின்றனவே...'' என்று ஆதங்கப்பட்டார். உடனே அருகே இருந்த ராஜாஜி, மயிலுக்குத் தோகை எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அழகு. அவ்வாறே கல்கியின் கதைகளும்...'' என்றார்.
1962இல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, முதல்முறையாக வரவு செலவுத் திட்டம் தமிழில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழை நிர்வாக மொழியாக நிலைநாட்டும் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார் காமராஜர்.
கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.