சக்கரவர்த்தி
சவூதி அரேபியாவின் ஜெட்டா கோபுரத்தின் கட்டுமானப் பணி 2030இல் நிறைவடைகிறது. வானை நோக்கி ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு எழுப்பப்படும் 'ஜெட்டா கோபுரம்' உலகின் மிகப் பெரிய உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெறும்.
தற்போதைக்கு 'உலகின் மிக உயர்ந்த கட்டடம்' துபையில் 163 தளங்களைக் கொண்ட புர்ஜ் கலீஃபா. இதன் மொத்த உயரம், 828 மீ. (2,717 அடி). புர்ஜ் கலீஃபா கட்டுமான வேலைகள் 2004இல் தொடங்கப்பட்டு, 2010இல் திறக்கப்பட்டது.
புர்ஜ் கலீஃபாவை வடிவமைத்த அமெரிக்க கட்டடக் கலைஞர் அட்ரியன் ஸ்மித் ஜெட்டா கோபுரத்தையும் வடிவமைத்துள்ளார். துபையின் உயிர்த் துடிப்பான புர்ஜ் கலீஃபாவில் வில்லாக்கள், குடியிருப்புகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளன. இது சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டதால் துபைக்கு அந்நியச் செலவாணியும் கிடைக்கிறது.
துபையை ஒப்பிடும்போது சவூதி அரேபியா நிலப்பரப்பில் 552 மடங்கு பெரியது. இங்கு மெக்கா, மதீனாவைத் தவிர்த்துவிட்டால், சவூதியில் உலக அதிசயம் எதுவும் இல்லை.
அதனால், சுற்றுலா நோக்கில் சவூதி செல்பவர்கள் குறைவு. உலக மக்களைக் கவருவதற்காக, புர்ஜ் கலீஃபாவைவிட உயரமான கோபுரம் ஒன்றைக் கட்ட 2013இல் முடிவாகி நடைபெற்ற கட்டுமானப் பணிகள் 2018இல் திடீரென்று நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
2,600 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் 2 .20 லட்சம் கோடி ரூபாய்) செலவில் ஜெட்டா நகரில் 'ஜெட்டா கோபுரம்' கட்டப்படுகிறது. சுமார் 660 ஏக்கர் நிலப்பரப்பில், 156 தளங்களுடன் 3,307 அடி உயரத்துக்கு இந்தக் கோபுரம் வடிவம் பெறுகிறது. இதுவரை 63 தளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
புர்ஜ் கலீஃபாவில் உள்ளது போலவே குடியிருப்புகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயங்கும். ஜெட்டா கோபுரம், புர்ஜ் கலீஃபாவைவிட 180 மீ. (591 அடி) உயரம் அதிகமாக இருக்கும் என்பதால், உலகின் மிகப் பெரிய கட்டடமாக அறியப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.