த்துச்செல்வன்
வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன. சாலையின் ஓரமாக மகளை அணைத்துப் பிடித்தபடி திலகவதி நின்று கொண்டிருந்தாள். 'எதற்கு இப்படிப் பயமுறுத்தற மாதிரி டூ வீலர்களும் கார்களும் செல்கின்றனவோ?' என்று அவளுக்குக் கோபமாக வந்தது. மகள் வைதேகி கால்கள் பின்ன 'த்தா.. த்தா..' என்று ஏதேதோ வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு கைகளை இழுத்து இழுத்து அவளைப் பார்த்து முகத்தைக் கோணினாள்.
கடந்த சில ஆண்டுகளாக அவள் வாயிலிருந்து கட்டுப்பாடில்லாமல் எச்சில் வடிவது நின்றிருந்தது. அதற்கு முன் அருகில் உட்கார வைத்து துடைத்து விடுவதே ஒரு வேலையாக வைத்திருந்தாள் திலகவதி.
சாலையோரக் கடைகளில் இருப்பவர்கள் அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்ப்பதாக உணர்ந்தவள் ஏனோ கூனிக் குறுகினாள்.
'தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாரிசை ஆண்டவன் தந்தான்' என்று வழக்கம்போல் மனம் நொந்து வேதனைப்பட்டாள். பக்கத்து வீட்டு ராஜனை நினைத்துப் பற்களைக் கடித்துக்கொண்டாள். அவனைப் போல் இன்னும் எத்தனை பேர் சுற்றி உள்ளனர்? யாரை நம்புவது? சாலையைக் குறுக்காக நடந்து மருத்துவமனையை அடைந்தாள். கால்கள் பின்ன திலகவதியின் இழுத்த இழுப்புக்கு வைதேகி 'த்தா.. த்தா...' என்று குழறியபடி தட்டுத் தடுமாறி வந்தாள்.
இன்று எப்படியாவது டாக்டரிடம் தைரியத்தை வரவழைத்துக் கேட்டுவிட வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டாள். பிறந்து ஆறு மாதங்களான பின்னும் வைதேகி சிறு புன்னகைக் கூட செய்யவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அவள் பேசவும் செய்யவில்லை. சைகைகளைப் புரிந்துகொள்ளாமல் உட்கார்ந்தபடியே இருந்தாள். கத்தினாலும், கூப்பிட்டாலும் எங்கேயோ நிலைத்துப் பார்த்தபடி இருப்பாள்.
ஆட்டிசம் பலவீனமான 'எக்ஸ் சின்ட்ரோம்' பாதிப்பும் 'டியூபரஸ் ஸ்களீரோசிஸ்' நோயும் வைதேகிக்கு வந்திருந்ததை அறிந்தபோது, அவளுக்கு வருடங்கள் சில தாண்டி விட்டன. 'த்தா... த்தா...' என்பதற்குமேல் பேச்சும் வரவில்லை. உடம்பு மட்டும் பூரிப்பாக வளர, வளர திலகவதிக்குப் பயமாக இருந்தது.
இந்த முறை டாக்டரிடம் கேட்கத் தயங்கிவிடக் கூடாது. வழக்கம்போல் வெறித்துப் பார்த்தபடி அசையாது உட்கார்ந்திருக்கும் வைதேகியைப் பார்த்தாள். அவளைப் பரிசோதித்த டாக்டர், செல்லக்குட்டிம்மா... நேத்து என்னென்ன பண்ணினீங்க?'' என்று வைதேகியிடம் கேட்டார். அவள் எப்போதும்போல், 'த்தா.. த்தா..' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். டாக்டர் புன்னகை மாறாமல் அவள் சொல்வதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். வைதேகியின் முக பாவனைகள் மெல்ல மாறிவருவதாக உணர்ந்தார்.
லேசாக முகத்தில் உணர்ச்சிகள் காட்ட ஆரம்பிக்கிறாள்'' என்றார் டாக்டர்.
'இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டும்' என்கிற மனப் பதற்றத்தில் திலகவதி தடுமாறிக் கொண்டிருந்தாள். டாக்டரோ உற்சாகத்தில் பேசுவதுபோல் இருந்தார்.
ஏன், வைதேகி வீட்ல ஏதும் பண்ணீட்டாளா? ஒரே டென்ஷனாக இருக்கீங்க?'' என்றார். டாக்டர் தன்னைக் கவனித்துக்கேட்பதைக் கண்டு, உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல்தான் இருக்காள். உடம்பு மட்டும் வளர்ந்துகிட்டு இருக்கு'' என்றவள் மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
பிள்ளையைப் பெத்திருக்கிற லட்சணத்தைப் பாரு'' என்று திலகவதியின் கணவன் செலவுக்கு மட்டும் பணத்தைத் தந்துவிட்டு வீட்டுக்கே வருவதில்லை என்று அவள் டாக்டரிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தாள்.
ஏதாச்சும் மருந்துங்க கொடுத்து அவளைச் சரி பண்ணுங்க டாக்டர்!'' என்று முதல்முறை சந்தித்தபோது அவள் கேட்டாள்.
ஆட்டிசத்துக்கு என்று உறுதியான சிகிச்சை மருந்து எதுவும் இல்லை என்று அவளுக்கு ஆறுதலாகக் கூறி தற்காலிக மருந்துகளை மட்டுமே தந்துகொண்டிருக்கிறார். பொறுமையாக இருந்து விளையாட்டுகள் ஆட்டம் பாட்டங்கள் சொல்லித்தர பயிற்சிக் கொடுத்திருந்தார். எதைச் சொல்லி விளையாட்டுக் காட்டினாலும் எவ்வித உணர்ச்சியும் வைதேகி காட்டுவதில்லை. அதிலேயே நொந்து போனாள்.
மரக்கட்டையைப் போல ஏன்டி என் வயித்தில வந்து பிறந்தே?'' என்று ஒருமுறை இயலாமை தீர அடித்தே ஓய்ந்தாள். அப்போதும் வைதேகி த்தா.. த்தா..' என்று சொன்னாளே தவிர, வேறு எவ்வித உணர்வும் இல்லாமல் அசையாது அப்படியேதான் தரையில் கால்களைப் பரப்பி உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
கொஞ்சம்கூட வலிக்கிலேயாடீ'' என்று கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள் திலகவதி. சாப்பாட்டையும் ஊட்டிதான் விட வேண்டும். நன்றாகப் பிசைந்து மசித்துதான் கொடுப்பாள். விழுங்குவதும் தன்னிச்சையாகத்தான் நடக்கிறது. சில சமயங்களில், 'எங்கே மூச்சுக் குழலில் சிக்கிக் கொண்டு விடுமோ?' என்று பயந்து போய் விடுவாள்.
டாக்டரோ, சிறப்புப் பள்ளிக்குக் கொண்டு போய் விடுங்களேன்'' என்றார். அவர்கள் கேட்கும் பீஸ் அவளுக்கு மயக்கத்தை வரவழைத்துவிட்டது. 'பொதுப் பள்ளியில் விட்டும் மனிதர்களின் அக்கறைகள் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை' என்பது அவளுக்குப் புரிந்தது. மனம் கசந்து போயிருந்தாள்.
'கவர்மெண்ட் ஸ்கூல்ல இருக்கிற இன்குளூசிவ் எஜுகேசன்ல சேத்து விடலாம்... அக்கா?' என்று ஒருமுறை மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் வைதேகியின் கைகளைப் பிடித்த
படியே திலகவதியிடம் சொன்னாள். வைதேகியின் கைகள் அசையவே இல்லை. நர்ஸ் அவள் கைகளை மெல்ல அமுக்கி விட்டுக் கொண்டிருந்தாள். அதையும்தான் விசாரித்துப் பார்ப்போமே என்று ஒரு நடை சென்றாள் திலகவதி.
எடுத்ததுமே சேத்துக்கிட மாட்டோம்... திடீர்னு பள்ளிக்கூடத்துல விடமுடியாதும்மா... மனசைப் பக்குவப்படுத்தணும் இல்லையா?'' என்றார் தலைமை ஆசிரியர்.
'வைதேகிக்கு மனது என்று ஒன்று இருக்கிறது' என்று ஒரு படித்தவரின் மென்மையான வார்த்தைகள் திலகவதியின் கண்களைத் தளும்ப வைத்துவிட்டது. வைதேகிக்கு அட்மிஷன் போட்டு ஆயத்த மையத்துக்குச் சென்று விடும்படி கடிதம் தந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு சென்றாள். என்ன செய்வார்கள்?
'எங்கே சென்றாலும் தூக்கிக் கொண்டே செல்லும் ஒரு குழந்தையை என்ன பாடுபடுத்துவார்களோ?' என்று அவளுக்குத் திகிலாக இருந்தது. 'பேசாமல் வீட்டுக்குத் திரும்பி விடலாமா?' என்றுகூட நினைத்தாள்.
பயப்படும்படியா எல்லாம் ஒண்ணுமில்லைங்க. பிஸியோதெரபி, ஸ்பீச் தெரபின்னு சொல்லித்தருவாங்க!''
அய்யோ அவளுக்கு அதெல்லாம் புரிஞ்சு எப்படி?'' என்ற திலகவதிக்கு மனச் சோர்வு பிடித்தாட்டிவிட்டது.
முதலிரண்டு நாள் ஆயத்த மையத்தின் வளாகத்தில் அவளைப் போன்ற பெற்றோர் நால்வருடன் காத்திருந்தாள். வெவ்வேறு வயதில் ஒன்பது குழந்தைகள் ஆயத்த மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனித்தாள். அவர்களோடு வைதேகியை ஒப்பிட்டுப் பார்த்தவளுக்கு இதுவரையிலுமிருந்த நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக அறுந்துவிழ ஆரம்பித்தன.
முன்னைக்கு இப்ப பரவால்லீங்க. முன்னே எதுவாயிருந்தாலும் நான்தான் பண்ணிவிடணும். இப்ப அவனாகவே சட்டையைப் போட்டுக்கிறதும் சாப்பாட்டை அள்ளி வாயில வைச்சுக்கிறதும்னு பரவால்லீங்க? அப்பப்ப டாக்டருங்க வந்து பார்த்துட்டு நம்பளைக் கூப்பிட்டு ஆலோசனையும் சொல்வாங்க.
இன்னும் ரெண்டு மாசத்துல பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுடுவாங்க. அவன் என்ன படிச்சு கலெக்டரா ஆவப் போறான்? ஏதோ நம்ம காலம் முடிஞ்சவுடன் யார் தயவுமில்லாம அவன் காலத்தை வாழ்ந்து முடிச்சிட்டு...'' என்று பேசிக் கொண்டிருந்த பெண் பேச்சைத் தடுமாற
விட்டுத் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அசையாமல் குனிந்தபடியே தரையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
திலகவதிக்கு மேற்கொண்டு அந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக என்ன பேசுவது, எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை.
அந்தப் பையனுக்கு அரும்பு மீசை துளிர்விட ஆரம்பித்து இருப்பதையும் கண்டாள். 'எங்கே விழுந்துவிடுவானோ?' என்று பதற்றப்படும் அளவுக்கு அவனது நடை இருந்தது. எந்த நேரமும் சிரித்தபடியே இருந்தான்.
'வைதேகியும் ஒருநாள் மாறுவாள்' என்று திலகவதிக்குத் தோன்றினாலும், 'இதுவரை வைதேகி நடக்கவே ஆரம்பிக்கவில்லையே' என்று அப்போது மனதில் உறுத்தல் எழுந்தது. 'அவள் நடக்க ஆரம்பித்துவிட்டால் போதும்' என்று மனம் வேண்ட ஆரம்பித்துவிட்டது.
அங்குச் சென்றவுடன்தான் 'த்தா.. த்தா...' என்று சொல்ல ஆரம்பித்தாள். பறவைகளின் ஒலிகள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதன் பாஷையில் வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதுபோல்தான் வைதேகியின் 'த்தா.. த்தா..'வும். மெல்ல கால்கள் பின்னத் தடுமாறி நடக்க ஆரம்பித்ததும் அதற்கும் பிறகுதான்.
மேசையின் விளிம்பில் இருந்த கத்தரிக்கோல் நகர்ந்து, மேசையிலிருந்து கீழே விழ இருந்தது. வைதேகி அது விழாமல் இருக்க கத்தரிக்கோலை உள்ளே நகர்த்தி வைத்ததை தற்செயலாக திரும்பிய டாக்டர் பார்த்து, அவரின் புருவம் மகிழ்ச்சியுடன் உயர்ந்தது.
பாரும்மா அவ செய்கையை... இன்னும் சில வருசத்துல அவ தன்னைக் கவனிச்சுக்கிற அளவுக்குத் தயாராகிடுவாள்'' என்றார் சந்தோஷத்துடன்.
திலகவதி அவரின் மகிழ்ச்சியை நம்பிக்கையில்லாமல் மனக் கசப்புடன் பார்த்தாள். தினம் தினம் இவளை வைத்துக்கொண்டு ஓடியாடுவது நான்தானே. அதன் பாடுகளை டாக்டருக்கு எப்படிப் புரியவைப்பது? பக்கத்து வீட்டு ராஜன் 'அக்கா.. அக்கா..' என்று தன்னை அழைத்துப் பேசுபவன்தான். வைதேகியை குழந்தையாக இருக்கும் காலம்தொட்டே தூக்கிக் கொஞ்சியவன்தான். அவன் வைதேகியின் தோள்பட்டையில் தனது கரங்களை வைத்திருந்த விதத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள்.
'கட்டெறும்புக்கா' என்று வழிசலாகப் பேசியவன், மீண்டும் வைதேகியின் தோள்பட்டையைத் தட்டி விடுவதுபோல் பாசாங்குச் செய்தான். 'அவள் எந்த ஆதாரத்தைக் கொண்டு இத்தனைநாள் பழகியவனைக் குற்றம் சாட்டமுடியும்' என்று கருதி அவனை முறைத்துப் பார்த்தாள். அவன் 'யென்னக்கா?' என்றபடி அவளை ஒருகணம் பார்த்துவிட்டு நழுவினான்.
'அடுத்தமுறை அவனைக் கவனிக்கவேண்டும். இல்லை தான்தான் சந்தேகப்படும் புத்தியில் இருக்கிறேனா?' என்றும் அவள் குழப்பினாள். ஒருவேளை குற்றம்சாட்டி தவறாகப்போய்விட்டால் என்ன செய்வது? இவளை எந்த நேரமும் தான் இனி கவனித்துப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டுமா? யார், யார் எப்படிப்பட்டவர்கள் என்று எந்த பூதக்கண்ணாடியை வைத்துப் பார்ப்பது?
'எக்கேடோ கெட்டுப்போ!' என்று விலகிச் சென்ற கணவன் வேறு திருமணம் செய்துகொண்டு, தனிக்குடித்தனம் வாழ்வதாகச் சொன்னார்கள்.
அவன் அவளுக்கு மாதம் தவறாது மளிகைச் சாமான்களும் மாதச் செலவுக்கு வங்கிக்கணக்கில் பணத்தையும் அனுப்பி விடுகிறான். ஆன்லைன் மயத்தில் எல்லாம் எளிதாகிவிடுகிறது அவனுக்கு. பெற்ற வயிற்றுக்குத்தானே தெரியும் நடைமுறையின் சிக்கல்.
'ராஜன் என்ன பண்ணினான்?' என்று அவளிடமிருந்து பதில் வராது என்று தெரிந்தும் திலகவதி ஆற்றாமையில் வைதேகியிடம் கேட்டு உலுக்கினாள். அவள் 'த்தா.. த்தா..' என்றாளே தவிர வேறொன்றும் கூறவில்லை.
அவள் மட்டும் எல்லாப் பெண் குழந்தைகள் போலவே இருந்திருந்தால் எவ்வளவு பூரிப்பும் வனப்புமாக இருந்திருப்பாள். அழகை மட்டும் வாரி இறைத்துவிட்டுப் புத்தியின் நரம்பைச் சிதைத்தது யார்? யார் மீது பழியைப் போட்டு நோவது.
உடலை வளமாக வளரவிடும் இறைவன் மனதின் வளர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் இப்படி வைத்திருக்கிறானே? மூன்று வயதுக் குழந்தையின் மனதைப் பதினைந்து வயதுக்குரியவளுக்கு தருகிறானே. அதையும் டாக்டர் மகிழ்ச்சியாகச் சொல்கிறாரே? திலகவதிக்கு அடிமனதில் வலிகள் திரண்டு வார்த்தைகளாக வெடித்தன.
இவளைக் கருணைக் கொலை பண்ணிடுங்க, டாக்டர்..'' என்று சத்தமாகக் கத்திவிட்டு அழ ஆரம்பித்தாள் திலகவதி.
ஒருகணம் ஆடிப்போய்விட்டார் டாக்டர். அவர் பேசவே இல்லை. திலகவதியை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.
அரசுப் பள்ளியில் இருக்கிற வசதியும் இவளைப் போன்ற குழந்தைகளைக் கவனித்துப் பயிற்சி அளிக்கிற அழகையும் பெருமையாகப் பேசியவள்தான் இன்று தனது குழந்தைக்கு வலுக்கட்டாயமாக விடை கொடுக்கச் சொல்கிறாள். 'சட்டத்தின் முன் இது தவறு?' என்று சொன்னால் அவள் உணர்வுகளின் கொதிப்புக்குப் புரியப் போவதில்லை.
நல்லவிதமாக இருக்கற பொண்ணுங்களையே பாத்துப் பாத்து வளர்க்க வேண்டியிருக்கு. இவளை நான் எப்படி டாக்டர் போற இடம்லாம் என்கூடவே வச்சிருக்க முடியும். சுத்தியிலும் இருக்கிற கண்கள் எல்லாம் நல்ல கண்கள்னு எப்படிச் சொல்ல முடியும் டாக்டர்? ஒருமாசம் அழுதுட்டு துக்கத்தைத் தீர்த்துக்கிறேன். இவளுக்கு இந்த உலகத்தைவிட்டு விடுதலை வாங்கிக் கொடுங்க, டாக்டர்?'' என்ற திலகவதியும் தேம்பித் தேம்பி அழுதாள்.
ஒரு உயிரை உலகுக்குக் கொண்டுவர உரிமை நம்ம கையிலே எப்படி இல்லையோ? அப்படிதான் ஒரு உயிரையும் நீக்கறதுக்கு நமக்கு உரிமையில்லைம்மா?'' என்றார் டாக்டர்.
வலிக்காம அவளுக்கு விடுதலை கொடுத்திடலாம் டாக்டர், ப்ளீஸ்...'' திலகவதி கெஞ்ச ஆரம்பித்தாள்.
'த்தா... த்தா...' என்று வைதேகி சொல்லி திலகவதியின் கையைப் பிடித்துக்கொண்டு முகத்தைக் கோணிச் சிரித்தாள். அப்போது வேறொரு குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டதாகப் பதற்றத்துடன் வந்த நர்ஸ் கூற, டாக்டர் திலகவதியின் முதுகை ஆதரவுடன் தடவி தைரியமா இரும்மா?'' என்று கூறிவிட்டு அவசரமாக நர்ஸூடன் எமர்ஜென்ஸி வார்டை நோக்கிச் சென்றார்.
'டாக்டரின் செய்கையில் தான் எதிர்பார்த்த ஆறுதல் கிடைக்காது' என்று உணர்ந்தாள் திலகவதி. வைதேகிக்கு தானே ஒரு முடிவை மனதைக் கல்லாக்கிக் கொண்டு எடுத்து விடுவது எனத் தீர்க்கமாக முடிவெடுத்தாள். மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்..
த்தா... த்தா...'' என்றபடி வைதேகியோ, திலகவதியின் பின்னே கால்களைப் பின்னமாக வைத்துக்கொண்டு நகர்ந்து வந்தாள்.
வந்து தொலையேண்டி... என் உயிரையும் மானத்தையும் வாங்கித் தொலையாதடி...'' என்று தரதரவென்று இழுத்துக்கொண்டு சாலைக்கு வந்தாள்.
சாலையைக் கடக்க எண்ணியபோது திலகவதிக்கு அந்த யோசனை உதித்தது.
என் வயித்திலே பிறந்ததுக்கு நீ என்னடி பாவம் பண்ணினே? வா நாம ரெண்டு பேருமே இந்த வாழ்க்கையை முடிச்சுக்குவோம்'' என்றபடி சாலையின் தூரத்தில் வேகமாக வந்த பாரம் ஏற்றிய லாரியைப் பார்த்தாள் திலகவதி. அவள் மனம் கல்லாகிக் கொண்டிருந்தது. வைதேகியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அசுர வேகத்தில் வந்த லாரி நெருங்கிய நேரத்தில் குறுக்கே அவளுடன் பாயத் தயாரானாள்.
ஒரு விநாடிதான். லாரிக்காரனும் 'தன்னால் கட்டுப்படுத்த முடியாது' என்று தோன்றித் திகைத்து ஸ்டீயரிங்கை திருப்பினான். சாலையில் இருந்தவர்களும் அதிர்ந்தனர்.
லாரி தங்களை நோக்கி வருவதைக் கண்ட வைதேகி, தனது தாய் திலகவதியைத் தரதரவென்று பின்னோக்கி இழுத்துக்கொண்டு 'த்தா.. த்தா..' என்று சொல்லியபடி விழுந்தது ஆச்சரியம்தான்.
அக்கம்பக்கத்திலிருந்தவர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஓடிவந்து திலகவதியையும் வைதேகியையும் தூக்கிவிட்டனர். சிராய்ப்புகளுடன் எழுந்த திலகவதி மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, மன்னிச்சுடுடி..'' என்று முனகினாள். அதற்குமேல் பேச்சு வரவில்லை.
கணநேரத்தில் வைதேகி செயல்பட்டுத் தன்னை இழுத்துச் சென்றதை திலகவதி ஒரு மின்னல்போல் உணர்ந்தாள். நடைமேடையில் லாரி ஏறி இரைச்சலோடு நின்றது. கோபத்தில் இறங்கி சாலையைக் கடந்துவந்த டிரைவர் 'அறி
விருக்காம்மா' என்று கத்தினான். வைதேகியின் 'த்தா த்தா'வைக் கேட்ட லாரி டிரைவர் மேற்கொண்டு சத்தமிடாமல் துண்டால் முகத்தைத் துடைத்தபடி வைதேகியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்று லாரியில் ஏறினான். தடுமாறி எழுந்த திலகவதியின் கரங்களை இறுகப் பிடித்தவாறு, கால்கள் தடுமாற நின்ற வைதேகி சட்டென்று திலகவதியை இழுத்த
படிக்குச் சாலையோரமாகவே கால்கள் பின்ன நடந்தாள். சாலையில் வாகனங்கள் பரபரப்பாகப் போவதும் வருவதுமாக விரைந்துகொண்டிருந்தன. மகளின் இழுத்த இழுப்புக்குச் சென்ற திலகவதி, டாக்டர் சொன்னபடி படிப்படியாகத் தன்னை உணர்ந்துகொள்ளும் வைதேகியைக் கண்டாள். அவளின் மனபாரம் எல்லாம் குறைந்து மகிழ்ச்சி அலையடித்தது.
மன்னிச்சுடுடி... தப்பான முடிவெடுத்திட்டேன்... நீ தெய்வம்டி... வாழும் காலம்வரை அம்மா உன்னைப் பார்த்துப்பேன்டி...'' என்றவள் மகளைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். த்தா... த்தா...'' என்றபடி வைதேகியும் அம்மாவைப் பார்த்துக் கண்கள் மின்னச் சிரித்தாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.