கோலிவுட் ஸ்டூடியோ!

அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார்.
கோலிவுட் ஸ்டூடியோ!
Published on
Updated on
3 min read

அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி!

அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்களுக்கு முன் அஜித், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான்.

இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. சினிமா துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே அதில் நிலைத்திருக்கிறேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி, அமைதி என வாழ்க்கை என்னைப் பல வழிகளில் சோதித்தது.

ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும் போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வரச் செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன்'' என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ஷாலினி, அஜித் 33 ஆண்டுகள் கடந்ததைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, நீங்கள் உங்கள் கரியரை மட்டும் வளர்த்துக்கொள்ளவில்லை. பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறீர்கள். உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது'' என்று பதிவிட்டிருக்கிறார்.

ஊர்வசி
ஊர்வசி

தேசிய விருது குழுவுக்கு ஊர்வசி கேள்வி!

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், விக்ராந்த மெஸ்ஸி, சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி, சிறந்த துணை நடிகராக எம்.எஸ்.பாஸ்கர், மலையாள நடிகராக விஜயராகவன், சிறந்த துணை நடிகையாக ஊர்வசி என அந்தப் பட்டியல் நீள்கிறது. ஏற்கெனவே, சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு என இரண்டு விருதுக்கு 'தி கேரளா ஸ்டோரி' தேர்வு செய்யப்பட்டது.

இது கேரள ரசிகர்களிடமும், கேரள அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை ஊர்வசி தேசிய திரைப்பட விருது குழுவை சரமாரியாகக் கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால் எந்த அடிப்படையில் அல்லது அளவு கோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருது, விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது?

விஜயராகவன் சிறந்த துணை நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகர் என்றால் இந்த நடிப்பை அவர்கள் எவ்வாறு மதிப்பிட்டார்கள்? விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும், ஷாருக்கானை சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது? சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர். ஆனால், சிறந்த நடிகையாக ஒருவரையும், சிறந்த துணை நடிகையாக ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஏன் நடிகைகளுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை. நாங்களும் வரி செலுத்துகிறோம்; மற்றவர்களைப் போலவே எங்கள் வேலைகளைச் செய்கிறோம். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விருது தேர்வுக் குழு பதிலளிக்க வேண்டும். கிடைப்பதை வாங்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்கு இது ஒன்றும் ஓய்வூதியமல்ல. இது எங்கள் வேலைக்கான அங்கீகாரம். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தலையிட்டு, இது தொடர்பாக கேள்வி கேட்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'விக்ரம்' படம் தந்ததற்கு நன்றி ஸ்ருதி!

ரஜினி நடித்திருக்கும் 'கூலி' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடந்தது. அமீர்கான், நாகர்ஜூனா, சௌபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ஷ்ருதி ஹாசன் பேசுகையில், இந்த நாள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். ரஜினி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் சௌபின் சாஹிர் மிகவும் திறமை வாய்ந்தவர். முக்கியமாக, உபேந்திரா சாரின் நடிப்பு அதிரடியானதாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் சத்யராஜ் சாரின் மகளாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு 'கூலி' படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு இயக்குநர் லோகேஷூக்கு நன்றி. அதுபோல, என்னுடைய அப்பாவுக்கு 'விக்ரம்' திரைப்படத்தைக் கொடுத்ததற்கும் நன்றி. அப்படத்திலிருந்துதான் உங்களுடைய பெரிய ரசிகை ஆகிவிட்டேன்.

லோகேஷ் கனகராஜ் அமைதியாகச் செயல்படக்கூடிய ஓர் இயக்குநர். அதுமட்டுமல்ல, நம்மோடு ஒன்றிணைந்து செயல்படக்கூடியவர். அனிருத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. அவருடைய இளமைக் காலத்திலிருந்து அவரைப் பார்த்து வருகிறேன். அவரின் ஸ்பெஷலான பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்கிறது.'' எனக் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com