
என் தாயாருக்கு வயது அறுபத்து மூன்று. நீரிழிவு உபாதையால் மிகச் சிரமப்படுகிறார். தலைச்சுற்றல், அசதி, வலது தோள்பட்டையில் வலி உள்ளது. இவை அனைத்தும் நீரிழிவால் வந்த கோளாறு என்கிறார்கள். இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
ரா.சண்முகநாதன், மதுரை.
உடலில் ஏற்படும் பல பிரச்னைகளைத் தூக்கி நீரிழிவு உபாதையின் மீது போட்டுவிடுவது இன்று சகஜமாகிவிட்டது. நீரிழிவு உபாதையைக் கட்டுப்படுத்திவிட்டால் நீங்கள் குறிப்பிடும் தலைச்சுற்றல், அசதி, தோள்பட்டை வலி எல்லாம் குணமாகிவிடும் என்று கூற முடியாது. எதனால் அது ஏற்பட்டது என்பதை அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மனம் சார்ந்த 'ரஜஸ்' பந்த பாசங்களில் மனதை ஆட்டி வைக்கும் தோஷத்தின் ஆதிக்யம், பித்தம் மற்றும் வாயுவின் கூட்டு சேர்க்கை ஆகியவற்றால் தலைச்சுற்றல் ஏற்படக் காரணமாகும்.
நிலம், நீரின் குறை மற்றும் வாயு ஆகாசம் ஆகியவற்றின் சீற்றம் உட்புறத் தாதுக்களைப் பாதிப்பதால் அசதியும் கை தோள்பட்டை வலியும் ஏற்படக் கூடும் என்ற ஆயுர்வேதத்தின் கருத்து, உங்களுடைய தாயாரின் விஷயத்தில் நன்றாகப் பொருந்துவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனால் ரஜ, பித்த, வாயுக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய உணவு, செயல், மருந்துகளை அவருக்கு அளிப்பதன் மூலமாக, குறைந்த நிலையில் உள்ள நிலம், நீரின் அளவை உடல் உட்புற அணுக்களில் வளர்ச்சி அடையச் செய்வதன் வழியாகச் சரி செய்துவிடும் விதமாக வைத்திய முறைகளைச் செய்ய வேண்டும்.
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையில் இவை அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் சமச்சீரான வரவால் அவருடைய உடல் பலம் பெற்று, உபாதைகள் குறையும்.
கோதுமை நொய்யை முதல் நாளிரவு நீரில் ஊற வைத்து காலையில் நன்கு கரண்டியால் அடித்துக் கிளறிப் பசையாக்கித் துணியால் வடிகட்டிய கோதுமைப் பால் அவர் குடிப்பதற்கு ஏற்ற பானம். காப்பிக் கொட்டையைப் போல் கோதுமையையும் வறுத்துத் தூளாக்கி வெந்நீர் ஊற்றி எடுத்து நீருடன் பால் சேர்த்துச் சாப்பிடுவதும் நல்லதே.
தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய உணவுப் பொருள்களில் கேழ்வரகு சிறந்தது. எளிதில் ஜீரணமாகாது. அதனை முளைகட்டிக் குத்திப் புடைத்துப் பின் இதன் மாவை இஞ்சி, கூழ், தோசை, அடை முதலிய உணவாக்கிக் கொள்ளலாம். நீரிழிவு நோயில் அதிக அளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்.
சர்க்கரை நோய்க்கான மருந்துகள், கொழுப்பு அடைப்பு ஏற்படாமல் இருக்கச் சாப்பிடும் மருந்துகளால் பலருக்கும் உடலில் தசைகளிலும், பூட்டுகளிலும் ரத்தக் குழாய்களிலும் வறட்சி அதிகமாகி உட்புறங்களில் எண்ணெய்ப் பசைக் குறைந்து வாயு நோய்கள் உண்டாகும்.
பூட்டுகள் வறண்டிருப்பதால் தசைகளை அசைக்கக் கூட முடியாமல் வலி உண்டாகும். இந்த நிலையில், உளுந்து நெய்ப்பை அளித்து வறட்சியைப் போக்கிப் பூச்சையும் பிசுபிசுப்பையும் அளித்தால் தசைகளைத் தளர்த்தி வேதனைகளைக் குறைக்கும். உளுந்தைக் கஞ்சியாக்கிப் பாலுடன் இரவில் சாப்பிடலாம். உடல் இளைப்பும் களைப்பும் நீங்கும்.
உளுந்தையும் கொள்ளையும் வேகவைத்து அதன் கஷாயத்தால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பது வலியைக் குறைக்க உதவும். முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த பச்சை அரிசி, உளுந்து, கறுப்பு எள்ளு ஆகியவற்றை 4:2:1 என்ற பங்கில் எடுத்து, ரவை அளவாக உணவுக் கஞ்சியாகக் காய்ச்சி அதில் பால் சேர்த்துக் காலை உணவாக உள்கொள்ள பூட்டுகளில் ஏற்படும் வலி, தசை காய்தல் போன்ற உபாதைகளைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
ஆயுர்வேத மருந்துகளில் தான்வந்திரம் க்ருதம், விதார்யாதி க்ருதம், கல்யாணகம்க்ருதம் போன்ற நெய் மருந்துகள், வஸந்த குசுமாகரம், சித்த மகரதுவஜம் போன்ற குளிகை, கேப்ஸ்யூல் மருந்துகள், வெளிப்பூச்சாக மஹாமாஷ தைலம், பிரபஞ்சன விமர்தனம் குழம்பு போன்ற மருந்துகளால் அவர் பயனடையலாம்.
'பிழிச்சல்' எனும் உடல் எங்கும் ஊற்றப்படும் இளஞ்சூடான மூலிகைத் தைலங்கள், வியர்வையை உருவாக்கும் 'நாடீஸ்வேதம்' எனும் சிகிச்சைகளும் அவருக்கு நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.