ஆச்சி என்றால், இந்தத் திரையுலகில் எல்லோரும் அறிந்த ஒரே பெயர் மனோரமாதான். இவர் காசியப்பன், ராமாமிர்தம் என்ற பெற்றோருக்கு 1937இல் பிறந்தார். இயற்பெயர் கோபி சாந்தா. தஞ்சாவூர் அருகே உள்ள மன்னார்குடியில் மனோரமாவின் தாய் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட மனக்கசப்பில் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு வறுமையுடன் வந்து சேர்ந்தார்.
பள்ளிப் படிப்பை தொடர முடியா நிலையில் செட்டியார்களின் வீடுகளில் பணிபுரிந்தபடி 'வைரம்' நாடக சபாவில் நடிக்கத் தொடங்கி 'பள்ளத்தூர் பாப்பா' என்று பெயரெடுத்தார். பிறகு எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றம், எம்.ஆர். ராதா நாடக சபாவில் சேர்ந்து நடித்தார். ஆரம்பக் காலத்தில் சிங்களப் படத்தில் தோழி வேடத்தில் நடித்த பின்
எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா சிபாரிசு செய்து இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்தும் அவை வெளிவராமல் போகவே ஏமாற்றமடைந்தார்.
கவியரசர் கண்ணதாசனின் அறிவுரையை ஏற்று கதாநாயகி எண்ணத்தைக் கைவிட்டு நகைச்சுவை நடிகையாகி 'மாலையிட்ட மங்கை' படத்தில் அறிமுகமானார்.
1973இல் என் மதிப்புக்குரிய இயக்குநரும், 'மௌன ராகம்' படத்தில் சந்திரமௌலியாக ரேவதியின் அப்பாவாக நடித்த மறைந்த ரா.சங்கரன் எனக்கு 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.
அன்றுதான் பிரகாஷ் ஸ்டூடியோவில் நடிகர், பத்திரிகையாளர் சோவுடன் மனோரமாவை முதன் முதலில் சந்தித்தேன். என்னை அன்று முதல் அப்பச்சி என்றே அழைத்தார்.
மனோரமா வீட்டுக்கு நான் போகும் போதெல்லாம் அவர் தாயாரும் அப்படியே சொல்ல ஆரம்பித்தார். பிரிந்திருந்த அவர் கணவர் 'கண் திறந்தது' படத்தில் ஹீரோவாக நடித்தவர். 'கறுப்புப் பணம்' படத்தில் 'தங்கச்சி சின்னப் பொண்ணு...' என்ற பாடலை கே.ஆர். விஜயாவைக் கேலி செய்து பாடியவர். அவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி நடிகர் முத்துராமன் பிரசாத் ஸ்டூடியோவில் 'அச்சாணி' படப்பிடிப்பில் சிபாரிசு செய்தார்.
அந்தப் படத்தில் மனோரமா என் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பில் நடித்ததால் அவரிடம் முத்துராமன் சிபாரிசைச் சொன்னேன். அவர் என் கணவரில்லை. ஒரு நடிகர். உங்கள் விருப்பம்'' என்றார். அப்படிச் சொன்னவர் பின்னாளில் அவரது மரணத்தைக் கேள்விப்பட்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
என்னுடைய 'அச்சாணி' படத்தில் இளையராஜா இசையில் 'அது மாத்திரம் இப்போ...' என்ற பாடலைப் பாடினார். நான் அவரிடம் நீங்கள் பாடிய பாட்டுக்குப் பணம் இல்லை. இலவசம். நடித்ததற்கு மட்டும் பணம்'' என்றேன். காரைக்குடி அப்பச்சி கணக்காதான் இருக்கீங்க!'' என்று சொல்லியபடி காரில் ஏறிச் சென்றார்.
நான் எழுதித் தயாரித்த 'பாட்டிக்கு வயசு 16' சீரியலில் நடித்தார். திடீரென ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து அப்பச்சி. என் கூட என் பிள்ளை பூபதியும் நடிக்கட்டும். எனக்குப் பணம் கூட தர வேண்டாம்'' என்று அவர் சொன்ன போது, ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, அதில் நடிக்க இருந்த நடிகர் விவேக்கை சமாதானப்படுத்தி பூபதியை நடிக்க வைத்தேன்.
பிரபல எழுத்தாளர் மா. லெட்சுமணன் மறைவிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மா.லெட்சுமணன் மனைவியிடம், சுசீலா! நான் புருஷனை வேண்டாம்னு தொழிலைப் புடிச்சுக்கிட்டேன். நீ தொழில் வேண்டாம்னு புருஷனைப் புடிச்சுக்கிட்டே'' என்று கண் கலங்கிச் சொன்னார். அவர் காரில் ஏறி உட்கார்ந்ததும் என்னை அழைத்து ஒரு பேப்பருக்குள் இருந்த பணக்கட்டை என்னிடம் தந்து, சுசீலாகிட்ட கொடுத்திடுங்க'' என்று சொல்லிப் புறப்பட்டார்.
கவியரசர் கண்ணதாசன் மரணத்தன்று நடிகர் சங்கத்தில் அவர் எழுதிய மரண சாசனத்தை என்னைப் படிக்கச் சொன்னார். என்னை அறிமுகம் செய்த ஆண்டவன்'' என்று அழுதபடி இருந்தார்.
1,500 நாடகங்கள், நான்கு மொழிகளில் 600 படங்கள் என்று சாதனை நடிகையாக வலம் வந்தார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களுடன் நடித்துப் பெருமை பெற்றார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பெயர் பதியப் பெற்று சாதனை பெண்மணியாக உயர்ந்தார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்று பெருமையடைந்தார்.
பாட்டியாய், தாயாய், மகளாய், மனைவியாய், காதலியாய் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்.
2015இல் உயிர் பிரிந்தும் ரசிகர்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.