பின்னணிக் குரல் தொழிலின் எதிர்காலம்?

பின்னணிக் குரல் கொடுப்பது 25 ஆண்டுகளுக்கு முன்பு நம்பகமான துறையாக இருந்தது.
பின்னணிக் குரல் தொழிலின் எதிர்காலம்?
Published on
Updated on
3 min read

அருள்செல்வன்

பின்னணிக் குரல் கொடுப்பது 25 ஆண்டுகளுக்கு முன்பு நம்பகமான துறையாக இருந்தது. தற்போது அப்படிச் சொல்ல முடியாது. தொழில்நுட்பம் நமக்கு மிகப் பெரிய ஒரு தடைக்கல்லாகிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் ஏ. ஐ. தொழில்நுட்ப ஆதிக்கம் அதிகரித்து, செயற்கையான குரல்கள் வருகின்றன. ஏ.ஜ. மூலம் திரைப்படமே எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

நடிகர் ஒரு மொழியில் பேசிய குரலை வைத்து அவரது மொழிமாற்றத் திரைப்படங்களுக்கு, பிற மொழிகளிலும், அவரை ஏ.ஐ. மூலம் பேச வைக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்போது, இன்னும் ஐந்து பத்தாண்டுகளில் பின்னணிக் குரல் கலைஞர்களின் வாழ்வாதாரம் கணிசமாகப் பாதிக்கப்படும். ஒருகட்டத்தில் பின்னணிக் குரல் தொழில் மெல்ல, மெல்ல அழியும்.

இதைச் சமாளித்து பின்னணிக் குரல் கலைஞராக வரவேண்டும் என்றால் மொழிகளைக் கவனிப்பது, மனிதர்களை அவர் அவர்களுக்குள் இருக்கும் உச்சரிப்பு, குரல் ஏற்றத் தாழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பது போன்றவை மிக முக்கியம்'' என்கிறார் 'விஜய் டி.வி. கோபி' என்கிற கோபி நாயர்.

விஜய் டி.வி.யின் அறிவிப்புகள், மகாபாரத சகுனி, டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்டு' போன்றவற்றின் மூலம் மிகவும் பரிச்சயமான, நட்சத்திரக் குரலான அவருடன் ஒரு சந்திப்பு:

முன்பு திரைப்படங்களில் குறிப்பிட்ட சில குரல்கள்தான் பின்னணிக் குரல்களாக ஒலிக்கும். அவை ஒரே மாதிரியாகத் தோன்றும். தற்போது இந்தத் துறையில் நேர்த்தி கூடியுள்ளதாகத் தெரிகிறதே, எப்படி?

இதற்கான பதில் மிகவும் எளிமையானது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. பரவலாக மக்களால் அறியப்படுவதும் ஒரு காரணம். அப்போது இந்தத் துறையைப் பற்றிய விழிப்புணர்வும் அறிதலும் ரொம்பக் குறைவு. ஒரு வசனமாக இருந்தாலும் அந்த ஒரு முழுக் காட்சிக்கும் ஒரே நேரத்தில் பேச வேண்டியிருந்தது. யாராவது இடையில் பேசுகிறவர்கள் பிழை செய்துவிட்டாலும்கூட மீண்டும் அதை முழுதாகச் செய்ய வேண்டும்.

இன்றோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் எல்லாமே சுலபமாகியுள்ளது. அன்று நிறைய நடிகர்களுக்குக் குரல் கொடுக்க பின்னணிக் கலைஞர்கள் பலரும் ஒரே இடத்தில் வர வேண்டும். இப்போது தனித்தனியாக எடுக்க முடியும். சர்வதேச திரைப்படங்களும் பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும்போது, அவர்களுக்கான தேவை அதிகமாகி நிறைய புது திறமைசாலிகளும் வருகின்றனர்.

திரையில் தோன்றுவோருக்குப் பேசும் குரல்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்வார்கள்?

நடிகர்களுக்கு ஏற்ற குரல்களைத் தேர்வு செய்வார்கள், அல்லது முகத் தோற்றத்துக்கு ஏற்றபடியும் குரல்களை மாற்றிப் பேசுவார்கள். அதற்கு மூக்கு, தொண்டை, வயிற்றில் இருந்தெல்லாம் குரல் எடுக்க வேண்டியிருக்கும்.

இப்படிப்பட்ட திறமையான கலைஞர்கள் இங்கே நிறையப் பேர் இருக்கின்றனர். முகங்களை பார்த்துப் பேசுவதைவிடவும் அந்த முகத்துக்கேற்றபடி குரல் பொருந்திப் போகிறதா? என்பதையே முக்கியமாகப் பார்க்க வேண்டும். அதையே இன்று அனைவரும் பின்பற்றுகிறார்கள்.

அந்தக் குரல் அந்தந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டும்தான் இயக்குநர்களால், அது பரிசீலிக்கப்பட்டு, இறுதி செய்யப்படும். இங்கு இரண்டுமே நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பல நேரங்களில் அந்த நடிகருடைய தோற்றம், அந்த நடிகருடைய நடிப்பு இரண்டிற்கும் ஏற்ற குரல் எவ்வாறு பொருந்துகிறது என்பதெல்லாம் பார்த்தே இயக்குநரால் அந்தக் குரல் தேர்வு செய்யப்படுகிறது.

காட்சி ஊடகங்களில் குரலும் ஒலியும் தற்போது மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.அதற்கு எவ்வாறெல்லாம் மெனக்கெடுகிறார்கள்?

திரைப்படம், காட்சி ஊடகம் என்று வருகிறபோது, இன்று குரலும் ஒலியும் தவிர்க்க முடியாதவை. எந்த ஒரு செயலிலும் நாம் மெனக்கெட்டே ஆக வேண்டும். அந்தக் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, நியாயம் சேர்க்கும் விதமாக ஒவ்வொரு கலைஞரும் மெனக்கெட்டே அந்தக் குரலை அளிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்கிறார். அதனால் மெனக்கெடல் என்பது மிக அதிகமாக இருக்கிறது.

அந்தக் கதாபாத்திரம் நடிப்பதற்கு எவ்வாறெல்லாம் மெனக்கெட்டதோ, அதே அளவுக்கு அதை ஒரு பின்னணிக் குரல் கலைஞர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு அந்த மெனக்கடல்களைச் செய்கிறார். நடிகர் ஓட வேண்டும் என்றால் அவர் ஓடி இருப்பார். அவருக்கு ஒரு பரந்தவெளி இருந்திருக்கும். ஆனால் ஒரு பின்னணிக் குரல் கலைஞரால் ஒரு சிறு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு ஓட முடியாது. ஆனால் அந்த மெனக்கடல் அங்கு இருக்கும். அந்த உணர்வை நான்கு சுவருக்குள் இருந்து அவர் அளித்தாக வேண்டும்.

ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து அவர் குரல் இப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா?

ஆஜானுபாகுவான மனிதருடைய குரலும் கம்பீரமாக இருக்கும் என்றவொரு அவசியமும் கிடையாது. அவருடைய குரல் ரொம்ப மென்மையானதாகவும் இருக்கலாம். சிறு வயது இளைஞனின் குரல் மிரட்டும் தொனியிலும் இருக்கும். அந்தக் காலம் முதல் இதைப் பார்க்கலாம்.

நடிகர் மோகனுக்கும் பின்னணிக் குரல்தான். இன்று பார்த்தால் அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்களுடைய குரல் தனித்துவமானது. அவருடைய குரல் மிகச் சிறப்பான ஒன்று. அவருடைய தோற்றத்துக்கும் அந்தக் குரலுக்கும் சம்பந்தம் இருக்காது. அதே மாதிரிதான் அரவிந்த்சாமியின் குரலாகட்டும், ரவி மோகன் குரலாகட்டும்.

அவர்களுடைய தோற்றமும் குரலுக்கும் தொடர்பில்லாதது போல் வேறு மாதிரி இருக்கும். அதனால் தோற்றத்துக்கும் குரலுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. கதாபாத்திரத்துக்கேற்ற வகையில் குரலை மாற்றத் தெரிந்தால் இத்துறையில் நாம் முன்னேறிச் செல்லலாம்.

தொழில்நுட்பம் உங்கள் துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது? மேம்படுத்துகிறது?

இந்தப் பணியில் நேரும் தவறுகளையும் குறைக்க முடிகிறது. அதனால் நேரம் மிச்சமாகிறது. இன்றைய தொழில்நுட்பம் சிறு சிறு குறைகளைச் சரி செய்து மேம்படுத்திப் பேசவும் முடிகிறது. குரல்களைத் தடிமனாக்கவும் கூர்மைப்படுத்தவும் முடிகிறது. முன்பெல்லாம் எதற்கு எடுத்தாலும் ஸ்டுடியோ சென்று பேச வேண்டும்.

நீங்கள் குரல் கொடுத்த பிரபலமான படைப்புகள் என்னென்ன?

நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக, விஜய் தொலைக்காட்சியின் குரல் கலைஞராக இருக்கின்றேன். டிஸ்கவரி சேனலில் வந்த 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற தொடரில் 'பேர் கிரில்ஸ்' என்கிற சாகச வீரருக்குப் பல ஆண்டுகளாக நான் குரல் கொடுத்தேன். அதைக் கடந்து 'ஜோதா அக்பர்' போன்ற பெரிய ஹிட் திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளேன்.

மகாபாரதத் தொடரில் சகுனி கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுத்தது எனக்குப் பெரிய அடையாளத்தைப் பெற்று தந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com