ரவிசுப்பிரமணியனுக்கு கனடாவில் 2025ஆம் ஆண்டின் இயல் விருது வழங்கப்பட உள்ளது. நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு நான் பழகி வருகிறேன்.
இளமையில் அவர் மிகப் பெரிய செல்வந்தர். கும்பகோணத்தில் அவருக்கு மிகப் பெரிய வியாபார நிறுவனங்கள் இருந்தன. கும்பகோணத்திலிருந்த ஹார்ட்வேர்ஸ் கடைகளிலேயே, இவரது கடைதான் மிகப் பெரிய கடை.
இவற்றைத் தவிர பக்கத்திலேயே இவருக்கு 'செல்லம் லாட்ஜ்' என்ற ஒரு விடுதி இருந்தது. அங்கு இலக்கியவாதிகள், நாடகக் கலைஞர்கள், பேச்சாளர்கள், இசைவாணர்கள், ஓவியர்கள் போன்றவர்கள் வந்தால், கட்டணமேதும் இல்லாமல் அவர்களைத் தங்க வைத்து உபசரிக்க வேண்டும் என்று நோக்கத்தில் கட்டடம் கட்டும்போதே இரண்டு அறைகளை ஒதுக்கியிருந்தார். அவர்களை எல்லாம் அப்படி உபசரிப்பார். தனது ஜீப்பிலேயே அவர்கள் போக வேண்டிய இடங்களுக்கும் கோயில்களுக்கும் அழைத்துச் செல்வார்.
அங்கு அப்போது தங்காத கலைஞர்களே இல்லை. ஞானக்கூத்தன், பாவண்ணன், பா. வெங்கடேசன், மா. அரங்கநாதன், பிரமிள், அசோகமித்திரன்,
பிரபஞ்சன், கோவை ஞானி, பரிக்ஷா ஞாநி, கோபி கிருஷ்ணன், தஞ்சை ப்ரகாஷ், கோணங்கி, ஓவியர்கள் ஆதிமூலம்,
ஆர்.பி.பாஸ்கரன், வேலு சரவணன், ஒளவை நடராஜன்... என்று எவ்வளவு பேர்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அந்த விடுதியில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார். கவிஞர் மீரா கும்பகோணம் கல்லூரிக்கு மாற்றலான சமயத்தில் அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.
ரவி தன் வீடு விற்றதைப் பற்றி 1995இல் வெளிவந்த 'காத்திருப்பு'
தொகுதியில் 'பழைய வீட்டில் பரண் இருக்கும்' என்று துவங்கும் ஒரு கவிதை எழுதியிருப்பார். அதே தொகுதியில் தன் நிலங்கள் விற்றதைக் குறித்து ஒரு கவிதையின் கடைசி வரிகள் இப்படி வரும்:
கீழ் மேல் தென்வடல்
ஜாதியடிகள் என மூலைக்கு மூலை
ஏதேதோ அளந்தார்கள்
இனி எனக்கும் நிலத்துக்குமான
இடைவெளியையும் சேர்த்து
மாநில, தேசிய அங்கீகாரங்களைக் கடந்து அவர் இன்று சர்வதேச அளவில் கவிதைகளுக்காகப் பெற்றிருக்கிற இலக்கிய அங்கீகாரம் அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. இலக்கியத்துக்காக அவர் வாழ்வையே பணயம் வைத்து ஆடிய ஆட்டத்தில் அடைந்த வெற்றி இது.
கல்லூரியில் படிக்கிறபோது அவருக்கு நாடகத்தில், நாட்டியத்தில், பல குரலில் பேசுவதில், என். எஸ். எஸ்ஸில், என். சி. சி.யில் எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தது. அப்போதே முறையாக கர்நாடகச் சங்கீதமும், பரதநாட்டியமும் பயின்று கொண்டிருந்தார். திருச்சி வானொலியின் நாடகப் பிரிவில் 'ஏ' கிரேட் ஆர்ட்டிஸ்ட்டாக தேர்வாகி அங்கே போய் நடித்து வந்துகொண்டிருந்தார். சென்னை வந்தவுடன் இப்போதும் வானொலியில் பகுதி நேர நாடகக் கலைஞராகவே இருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் நானும் ரவியும் காவேரி ஆற்றின் பகவத் படித்துறையிலோ, கல்லூரிக்குள் இருந்த குளக்கரைப் படிக்கட்டிலோ, சாரங்கபாணி, சக்ரபாணி, நாகேஸ்வரன் கோயில் பிரகாரங்களிலோ மகாமகக் குளக்கரையிலேயோ உட்கார்ந்து கண்ணதாசன், மேத்தா, பாரதி, நகுலன், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், மா. அரங்கநாதன், பாலகுமாரன், அப்துல் ரகுமான், வலம்புரி ஜான், க. நா. சு. எனக் கலந்து கட்டி அவர்கள் எழுதிய புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வதும் பேசுவதுமாய் இருப்போம்.
எங்கள் திசைகளைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ய முயன்று கொண்டிருந்த நாள்கள் அவை. கும்பகோணம் கோபால்ராவ் நூலகம், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் மற்றும் கிளை நூலகங்களைத் தவிர, அப்போது எங்களுக்கு புத்தகங்களைப் படித்துவிட்டுத் தருவதற்கு, செல்வராணி புக் டெப்போவும், மார்க்கண்டேயா புக் டெப்போவும் உதவியாக இருந்தன.
விஜய், ஜெயா தொலைக்காட்சி அலைவரிசைகளில் பணியாற்றியபோது அவர்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அதற்கான கிரெடிட் இவருக்குக் கிடைக்காமல் போனது பெரும் சோகம். ஏற்கெனவே 'டு லெட்' படத்தில் நடித்திருந்த இவர், இப்போது அருண் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
எவ்வளவோ விதவிதமான கவிதைகளை எழுதிவிட்டார் ரவி, இதுவரை வந்த ஏழு தொகுப்புகளில். அவரே என்னிடம் சொன்னது போல, அவர் வீட்டம்மாவிடம் அவர் பேச முடியாதெல்லாமும் அவர் கவிதைகளில் இருக்கின்றன.
உண்மையில் கலையில் அவர் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். இன்னும் அடைய வேண்டியது ஒரேயொரு உயரம்தான். அது இழந்ததையெல்லாம் மீட்பது. தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமல் போன ஓர் ஆட்டைத் தேடி மலைப் பிரதேச வனாந்திரத்தில் திரியுமொரு மேய்ப்பவரைப் பற்றி, புதிய ஏற்பாட்டில் (நியூ டெஸ்ட்மெண்ட்) ஒரு உவமைக் கதை வரும் அவரது கதையும் அதுதான்.
வாழ்வின் சுகங்களென எண்ணப்படும் வீடு, வாசல், நிலபுலன்கள் போன்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளைத் தொலைத்துவிட்டு, கவிதை என்கிற ஒரே ஒரு ஆட்டை மட்டும்தான் மேய்த்துக்கொண்டிருக்கிறார்.
நதிகள் பிணமாவது பற்றி 'இன்றி அமையாது உலகு' என்ற கவிதையில் ரவி பதறிப் பதறிக் கலங்குகிறார் அல்லவா, அந்தத்
துயரம்தான் அவர் படுகிற துயரம். இந்த உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடக்கிற போரில், ஷெல்களால் நொறுங்கிய வீடுகளில் தப்பிப் பிழைத்த குழந்தைகளுக்காக அழுது, 'குடிநீரும் கிடைக்கவில்லையே' என்ற தலைப்பில் கவிதை எழுதி இறைவனையே அவர் சபிக்கும்படி நேர்கிறதே, அதைப் படுகிறவன்தான் இந்த ரவிசுப்பிரமணியன். நான் மேற்சொன்ன கவிதைகள் அவருக்கு சமூகத்தில் இருக்கிற தீவிர அக்கறை குறித்துப் பேசுகிற கவிதைகள்.
அந்த வகையில் இருக்கிற இன்னொரு அரசியல் கவிதையை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். யுவான் சுவாங் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் கவிதையின் தலைப்பு 'கிவான்ஸ்வாங்கின் பயணக்குறிப்பிலிருந்த ஒரு உரையாடல்'. 'யு' வுக்குப் பதில் ஒரு 'கி' அவ்வளவுதான். ஆனால் அதற்குள் எவ்வளவு விஷயங்கள்.
எங்கும் செல்லாமல் அந்த நாட்டில் அங்கேயே இருக்கும் மன்னர் மும்மாரி பொழிகிறதா கேட்கிறார் என்றால், அவர் அந்தப்புர ஜன்னலைக்கூடத் திறக்கவில்லை என்பது தெரிகிறது. சுபிட்ஷ வாழ்வுதானே பிரஜைகளுக்கு புகார்கள் ஏதும் இல்லையே என்று மந்திரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் மன்னர் இருந்தால், அவரது அரசின் லட்சணம் நமக்குப் புரிந்துவிடுகிறது.
எல்லாவற்றுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளாக மாறியுள்ள பிரஜைகள், விதவிதமான போதைகளில் தட்டும் கைத்தட்டலில் அண்ட சராசரம் கிடுகிடுக்கிறதாம். மன்னர் காலத்தில் நடப்பதுபோல சொல்லப்பட்டிருக்கும் நிகழ்கால அரசியல் பகடி இது.
கன்னியர்கள் களிப்பேற
கற்பனையில் சொல்லெடுத்து
நாளெல்லாம் வீசுகின்றோம்
அது உன் வாள்வீச்சின்
சிறு அசைவுக்கு ஈடாமோ பெம்மானே
ஆளுவதும் உனக்கொரு விளையாட்டு
வினையாட்டும் மக்களது மனமாட்டும் மன்னா
விளையாட்டு வீரன் நீ என்று நான் சொன்னால்
மறுப்புண்டோ நானிலத்தில்
சிவமே
செழும் பொருளே
நான் உழல்கின்ற தென்மொழியின் தனிச்சிறப்பே
செயற்கரிய செயலெல்லாம் செந்ததாலே
உனக்குவமை நீயேதான்
என்றெல்லாம் சொல்லும்போது மரபின் சாரத்தோடு கூடிய அழகு நம்மை ஈர்க்கிறது. அதற்கிடையில் 'பெம்மானே' என்று ஒரு சொல்லைப் போடுகிறார். நான் அந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன்.
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெட
பேராது நின்ற பெருங் கருணைப் பேராறே
ஆராவமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதாருள்ளத் தொளிக்கும் ஒளியானே!
என்கிறார் மாணிக்கவாசகர்.
அவர் நாகேஸ்வரன் கோயில் அருகில் வாழ்ந்தவர். அவர் காதில் விழுந்த அல்லது படித்த அந்தப் பாடலில் வரும் சொல் எப்படி கவிதைக்குள் வந்து பொருத்தமாய் அமர்ந்துகொண்டுவிட்டது பாருங்கள்.
உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களின் தந்தையாரும், நவீனக் கவிதைகளுக்கென 'பொருளின் பொருள் கவிதை' என்று தனி இலக்கண நூல் எழுதியவருமான முதுபெரும் எழுத்தாளர். மா.
அரங்கநாதன் இந்த ஒரு கவிதையைப் பற்றி மட்டுமே ஒரு தனிக்கட்டுரை எழுதியுள்ளார் என்றால், இதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
கவிதைகளைத் தவிர, இவர் நவநவமான ஆவணப்படங்கள் ஏராளமாக எடுத்துள்ளார். அற்புதமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய கவிதைத் தொகுதிகள் மிகச் சிறப்பானவைதான்; ஆனாலும் இவர் எழுதிய சில கட்டுரைகள் கவிதைகளையும் விஞ்சி நிற்கின்றன.
கரோனா காலகட்டத்தையும் இவரது சில கவிதைகள் பதிவு செய்துள்ளன. அதில் ரொம்ப அற்புதமான ஒரு கவிதை சுநாதத்தால் கிறக்கியவன்''.
கோவில்களும் திறக்காமல்
உலக இயக்கம் ஸ்தம்பித்து
சப்தங்களும் ஒடுங்கியிருந்த காலத்தில்
சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து
நாகஸ்வரக் கலைஞன்
நாத ஆலாபனையில் உருக்கினான்
பச்சைக்கிளிகளும் புறாக்களும்
ராக வழி திரிந்தலைந்து
கோபுரங்களுக்குப் பறந்தன
தீர்த்தக்குளத்தின் சொற்ப நீரில்
மீன்கள் சிலிர்த்து
வான் நோக்கி இதழ் குவித்தன
கோசாலைப் பசுக்கள் மேயாது வெறிக்க
நாக மண்டபத்து உயிரினங்கள் சுருண்டுகிடக்க
கடவுளும் மெல்ல நடந்து
திட்டிவாசலை நெருங்கி இருந்தார்
அப்பிராந்தியத்தையே
சுநாதத்தால் நிரப்பிக்கொண்டிருந்தவன்
வாசிப்பை நிறுத்தவேண்டியிருந்தது
ஊழியின் சலுகையைப் பெறும் வரிசையில் நின்று வயிற்றையும் நிரப்ப வேண்டி.
இந்தக் கவிதைக்கு பெரிய விளக்கம் ஏதும் தேவையில்லை என்றே எண்ணுகிறேன். ஒரே ஒரு வரியில் சொல்லி முடிக்கிறேன். அதோ அதில்வரும் அந்த நாதஸ்வரக் கலைஞன்தான் ரவிசுப்பிரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.